திருக்கதைகள்
Published:Updated:

'சிவ சாகரத்தில் கிடைத்த பாக்கியம்!'

சிவன் சார்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவன் சார்

சிவன் சார் அற்புதங்கள்

அரசு அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கும் பெண் அதிகாரி அவர். ‘சர்வமும் சார் மயம்’ என்று சிவன் சார் மீது ஆழமான பக்தியில் திளைத்திருப் பவர். அவருடைய வாழ்வில் சிவன் சார் நிகழ்த்திய அற்புதங்கள் அளவற்றவை. அதுபற்றி அவரே விவரித்தார்...

சிவன் சார்
சிவன் சார்

“ராயப்பேட்டையில் நாங்க இருந்த காலனி பிள்ளையார் கோயிலில் தினமும் காலையில் பெருக்கி, தண்ணீர் தெளிச்சு, விளக்கு ஏற்றிக் கும்பிடுவேன். ஒரு ரெண்டு வருஷம் இதே மாதிரி செய்துட்டிருந்தேன். ஒரு நாள் யாரோ அங்கே சின்னதாக ஒரு ஷீர்டி பாபா சிலையைக் கொண்டு வந்து வச்சிருந்தாங்க. அடுத்த சில நாட்களில் மகா பெரியவாளின் சின்ன போட்டோவை கோயிலுக்குள் வச்சிருந்தாங்க.

கோயிலில் பூஜை செய்ய வரும் குருக்களிடம் கேட்டபோது, ‘நான்தான்மா வச்சேன்’ என்றார். எனக்கு அதுவரை பெரியவா பற்றிப் பெருசா எதுவும் தெரியாது. குருக்களிடமே கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனாலும் பெரிய ஈர்ப்பு இல்லை. கோயிலில் வழக்கமான பணிவிடைகள் தொடர்ந்தன.

வீட்டில் சமையல் செய்யும்போது, யூடியூபில் ஏதாவது ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்டுக்கிட்டே சமைக்கிறது என் பழக்கம். அப்படி ஒர் நாள், கணேச சர்மாவின் பேச்சைக்கேட்டேன். அப்போதுதான் மகா பெரியவாளைப் பற்றிக் கேட்கும் பெரும் பாக்கியம் கிடைச்சுது. அதிலிருந்து மனசுக்குள்ள அவர் உட்கார்ந்துட்டார். அதுக்கப்புறம் கணேச சர்மாவின் பேச்சைத் தேடித் தேடிக் கேட்க ஆரம்பிச்சேன். மகா பெரியவா மீது அதீத ஈர்ப்பு வந்தது. 2017 வாக்கில் ஆரம்பித்த விஷயம் இது.

அதன் பிறகு, பெரியவா கோயில் எங்கே இருக்குன்னு தேடிப் போய் தரிசனம் செய்ய ஆரம்பிச்சேன். மயிலாப்பூரில் இருக்கும் கோயிலுக்கு ரெகுலரா போனேன். காஞ்சிபுரம், ஓரிக்கை மணி மண்டபம்னு பெரியவாளை விடாம, அவர் பின்னாலேயே அலைஞ்சேன்னு சொல்லலாம்.

இந்த நிலையில் (2019) எனக்கு தென் மாவட்டம் ஒன்றுக்குப் பணி மாறுதல் வந்தது. மாவட்ட நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அலுவலர்களுடன் நானும் ஒரு முக்கியஅலுவலராக சேர்ந்தேன். குவார்ட்டர்ஸ் கொடுத்திருந்தாங்க. அங்கே எனக்கு பெரியவாளை தரிசனம் செய்ய கோயில் இல்லை, தீபம் போட அருகில் பிள்ளையார் கோயில் இல்லைங்கிறதுதான் பெரிய குறை பாடாக இருந்தது.

நான் வகித்தது, மாவட்டத்தில் மிக முக்கியமான பதவி என்பதால், பிள்ளையார் கோயில் இருந்தாலுமே பெருக்கி, கோலம் எல்லாம் போட முடியுமான்னு தெரியல. எல்லாரும் பார்த்தால் விமர்சனத்துக்கு உள்ளாகும்னு தோணியதால், அந்த ஆசையை விட்டுட்டேன். ஆனால் பெரியவாளை தரிசனம் செய்ய முடியலையேன்னு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

ரெண்டு நாள் போராடினேன். மூணாவது நாள்... கணேச சர்மா ஒரு வீடியோவில் கும்பகோணத்தில் மடம் இருக்குன்னு சொல்லி யிருந்தது ஞாபகத் துக்கு வந்தது. உடனே கும்பகோணத்துக்கு ஓடி மடத்தைத் தேடிக் கண்டுபிடிச்சேன். ஏகாந்தமான தரிசனம்! அதிலிருந்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அங்கு போய்ட் டிருந்தேன்.

அப்போ ஒரு தேர்தல் வந்தது. அதன்பின் என் உயரதிகாரி மாற்றப் பட்டு, வேறு ஒருவர் அந்த பணியிடத்துக்கு வந்தார். புதிதாக வந்த உயரதிகாரிக்கும் எனக்கும்  ஒத்துப் போகவில்லை. பல உரசல்கள். பிரச்னைகள். தினம் தினம் போராட்டமாக இருந்தது. என்னால் சமாளிக்க முடியாத அளவுக்கு போனதால், பெரியவாளிடம் முறையிட்டு `இதிலிருந்து என்னைக் காப்பாத்துங்க’ன்னு வேண்டி னேன். இதுக்காகவே கும்பகோணம் போவேன். அழுதுக்கிட்டே நிற்பேன் பெரியவா முன்னாடி!

அங்கே இருக்கும் பலருக்கும் என்னைத் தெரியும். ‘இந்தம்மா வந்தா அழுதுட்டேதான் இருக்கும்’ என்னும் அளவுக்கு என் முறையீடு இருந்தது. ஒருநாள் அப்படி அழுதபடியே நின்னுட்டிருந்தப்போ, அங்கே வந்த ஒரு பக்தை... தேவின்னு பேரு... என்னிடம் வந்து `ஏன் அழறீங்க?’ ன்னு கேட்டாங்க. ‘என்ன கஷ்டமாக இருந்தாலும் பெரியவா அஷ்டோத்திரம் சொல்லுங்க. வியாழன் தோறும் பெரியவாளுக்கு அக்ஷ்டோத்திரம் சொல்லி பூப்போட்டு அர்ச்சனை பண்ணுங்க”ன்னு சொன்னாங்க.

மேலும், `பெரியவாளின் பாட்டி (அம்மாவுக்கு அம்மா) வீடு ஈச்சங்குடியில் இருக்கு. அங்கே போய் மனம் ஒன்றி வழிபட்டால் மனம் அமைதியாகும். அங்கே ஒரு தடவை போய்ட்டு வாங்க’ன்னும் சொன்னாங்க. பெரியவா சந்நிதியில் வைத்துச் சொன்னதால், மகா பெரியவாளே சொன்னதாக எடுத்துக்கிட்டேன். கணேச சர்மாவிடம் பெரியவா அஷ்டோத்திரத்தை வாட்சப்பில் கேட்டுப் பெற்றுப் படித்தேன். ஈச்சங்குடிக்கும் போய் தரிசித்தேன்.

இதற்கிடையில் எனக்கும் உயரதிகாரிக்கு மான பனிப்போர் பெரிசாயிட்டேதான் போச்சு. ஒரு அனுஷ பூஜை அன்னிக்கு ஈச்சங் குடிக்குப் போய் பெரியவாகிட்டே ரொம்ப அழுதேன்.

`தினமும் நான் உங்ககிட்ட அழுது புலம்பறேன். என்னை இந்தப் பிரச்னையிலிருந்து காப்பாற்றி விடுங்கன்னு... இன்னிக்கு நீங்க இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு சொல்லாம, நான் போக மாட்டேன்’னு அழுதேன். ரொம்ப நேரம் இருந்துட்டு ‘என்னை ஏமாத்திட்டீங்க’ன்னு சொல்லிட்டு ஆபீஸ் கிளம்பிட்டேன்.

ஈச்சங்குடியில் எப்போது தரிசனத்துக்குப் போனாலும், கிளம்பும் போது பிரசாதத்துடன் பெரியவா போட்டோவும் கொடுப்பாங்க. ஆனால் அன்னிக்குக் கொடுத்த போட்டோவில் பெரியவா இல்லை. புதுசா யாரோ பெரியவர் இருந்தார். ‘இது யாருங்கய்யா?’ என்று அதைத் தந்த அம்பி ஐயரிடம் கேட்டேன். 

`இவர்தான் சிவன் சார்’ என்றார் அவர்.

ஈச்சங்குடியில் பெரியவாளின் பாட்டி வீட்டில் இவரின் படம் உண்டு. நானும் ஏற்கெனவே இவரின் போட்டோவைப் பார்த் திருக்கிறேன். ‘இவர்தான் பெரியவாளின் தம்பி’ன்னும் சொன்னாங்க. ஆனால் அது அப்போ என் மனசில் பதியலை. இப்போதும் பெரிய ஈடுபாடு எதுவும் இல்லாமல்தான் கிளம்பினேன்.

பெரியவா என் பிரச்னைக்கான தீர்வையே இப்படி போட்டோ வடிவில் கொடுத்திருக்கார் என்பதுகூட எனக்குத் தெரியலை. அலுவலகத் துக்கு வந்து என் டேபிள் மேல பெரியவா படத்துக்குப் பக்கத்தில் சிவன் சார் படத்தையும் வச்சேன். தினமும் பூப்போட ஆரம்பிச்சேன்.

உயரதிகாரியின் மரியாதைக்குறைவான வார்த்தைகளும், வசவுகளும் எல்லை மீறிப் போய்ட்டிருந்தது. எப்போதெல்லாம் அவரை நேருக்குநேர் பார்க்கவேண்டிய சூழல் வருதோ, அப்போ தெல்லாம் `இந்த நிமிஷத்தில் என்கூட இருங்க... எனக்கு மன தைரியத்தைக் கொடுங்க’ன்னு பெரியவாகிட்டயும் சார்கிட்டேயும் சொல்லிட்டுப் போவேன். அப்படித்தான் தினமும் சிவன் சாரிடம் பேச ஆரம்பிச்சேன்.

அந்தக் காலகட்டத்தில்தான் கொரொனா வந்தது. முதல் அலை உச்சத்தில் இருந்த நேரம். சிவன் சார் வந்ததுக்குப் பிறகு, என்னை எப்படி மோல்டு பண்ணினார் என்பதற்கு உதாரணமான காலம் அது என்றே சொல்லலாம்.

சிவன் சார்
சிவன் சார்
Jerome K

முழுக்க முழுக்க ரிப்போர்ட்ஸ் தயாரிப்பது, மீட்டிங்குக்குத் தயாராவது. இன்னும் என்னென்ன வேலை செய்யணுமோ எல்லாம் குழுவோடு சேர்ந்து இரவு பகல் பாராமல் செய்வது... என பணிகளில் ஆழ்ந்தேன். நள்ளிரவுக்கு மேலும் வேலை பார்த்துவிட்டு, அதிகாலையில் வீட்டுக்குத் திரும்பும் நாள்கள் எல்லாம் உண்டு.

இப்படியே மூன்று மாதகாலம் நகர்ந்தது. ஆனால் அதன் வலி எனக்குத் தெரியல. ஏன்னா உயரதிகாரியின் குறுக்கீடு இல்லை.

குடும்பத்தில் குழந்தைகளை என் மாமியார் பார்த்துக்கிட்டாங்க. என்ன வேலைன்னாலும் காலையில் பூஜை செய்துட்டுத்தான் போவேன். இந்தக் கொரோனா தருணத்தில் சிவன்சார் மீதான பக்தி மேலும் அதிகமானது. அவரே என் குரு என்கிற மனநிலைக்கே வந்துட்டேன்.

ஆனால், எதையும் அவர் மேஜிக்கலா செய்யவே இல்லை. இதுக்கிடையில் அங்கே ஒரு பிள்ளையார் கோயிலையும் கண்டுபிடிச்சு, அங்கே தினமும் சிதறு தேங்காய் உடைச்சிட்டு, பூ போட்டுட்டுப் போவதை வழக்கமாக்கினேன்.

கொரோனா முடிந்தது. என் உயரதிகாரி கொஞ்ச நாள் என்கூட நல்லபடியா பேசினார். `லாக் டவுன் நேரத்தில் நல்லா வொர்க் பண்ணினீங்க’ன்னும் பாராட்டினார். எனக்கு ஆச்சர்யமா இருந்தது. ஆனா அது கொஞ்ச நாள்தான். திரும்ப பழையபடி வசவுகள் ஆரம்பித்தன. இதுக்கு மேல இங்கே இருக்க முடியாது என்கிற நிலைமைக்கு வந்துட்டேன்.

இந்த மாதிரி மன உளைச்சல்கள் வரும்போதெல்லாம் நான் கணேசசர்மாவுக்கு மெசேஜ் போட்டுப் புலம்பு வேன். சிவசாகரம் சிவராமன் சாரிடமும் அழாத நாள் இல்லை. அவரும் எனக்குச் சொல்லாத தைரியம் இல்லை.

2020 ஜூலை 1-ம் தேதி... என்னால் மறக்க முடியாத நாள். பணியிட மாறுதல் வேண்டி விண்ணப்பத்தை தலைமைச் செயலகத்தில் கொடுக்க சென்னைக்கு வந்தேன். அப்போதும் கொரொனா பீரியட் என்பதா லும், நான் வகிப்பது முக்கிய பொறுப்பு என்பதாலும், எனக்குப் பதிலாக அந்த இடத்துக்கு வேறு யாரைப் போடலாம் என்ற கேள்வி வரும் என்பதாலும் மாற்றல் அவ்வளவு சீக்கிரம் நடக்காது என்று தெரியும். இருந் தாலும் ஓர் ஆதங்கம்... முயற்சி செய்வோமே என்று.

அப்போதுதான் முதல் முறையாக சிவசாகரத்துக்கும் சென்றேன். நான் இருந்த ஊரிலிருந்து என் அலுவலக ஜீப்பிலேயே சென்னைக்கு வந்தோம். சிவன் சார் திருவடிகளில் ட்ரான்ஸ்ஃபர் அப்ளிகேஷனை வைத்துக் கும்பிட்டுட்டு, பிறகு கொண்டு போய்க் கொடுக்கிற மாதிரி பிளான். அதேநேரம், `முதன் முதலில் குருநாதரை தரிசிக்கப் போறோம். ஒரு பூவோ, பழமோ கொண்டு போற கொடுப்பினை கூட இல்லையே’ன்னு நினைச்சுக்கிட்டே ஜீப்பில் பயணித்தேன்.

கொரோனா காலம் அல்லவா? ஆள்நடமாட்டம், வாகனப் போக்குவரத்து எதுவுமே இல்லை. டிரைவரிடம் புலம்பிக்கிட்டே வந்தேன். தாங்க முடியாத என் வருத்தத்தை சார் புரிந்துகொண்டார் போலும். செங்கல்பட்டு தாண்டியதும், வண்டி ஒன்று எங்களைத் தாண்டிச் சென்றது.

அப்போதெல்லாம் காய்கறி, பழங்கள் எல்லாம் வேனில்தானே வந்து வித்தாங்க. என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. நாங்க அந்த வண்டியை விரட்டிப் பிடிச்சோம். மனம் முழுக்க சந்தோஷத்தோடு பழங்களை வாங்கிக்கிட்டு சிவசாகரம் வந்து சேர்ந்தேன்.

இந்தச் சம்பவமே எனக்கு ‘பாஸிட்டிவ்’ அறிகுறியாகத் தெரிஞ்சுது. சிவராமன் சாரை அன்னிக்குதான் நேரில் சந்திச்சேன். சிவன் சார் அஷ்டோத்திரம்னு ஒண்ணு இருப்பதும் அன்றுதான் தெரிய வந்தது. அஷ்டோத்திரம் சொல்ற பெரும் பாக்கியத்தைக் கொடுத்தார் சிவன் சார். அதுவும் முதன் முதலில் சொல்லும்போது அதை சிவசாகரத்திலேயே சொன்னது பெரிய அனுக்ரஹம்.

அஷ்டோத்திரம் சொல்லியபடியே சிவன் சார் திருவடிகளில் பூவைப் போட்டு அர்ச்சனை செய்தேன். அது எவ்வளவு முக்கியமானது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

- சிலிர்ப்போம்...

வனதுர்கையம்மன்
வனதுர்கையம்மன்


மாங்கல்ய தோஷம் நீக்கும் குங்கும அர்ச்சனை!

கும்பகோணத்திலிருந்து சுமார் 26 கி.மீ. தூரத்தில் உள்ளது கதிராமங்கலம் வனதுர்கையம்மன் ஆலயம். இங்குள்ள துர்கை, குலதெய்வம் ஏதென்று அறியாத வர்களுக்குக் குலதெய்வமாகவே அருள்புரியும் அன்னையாம்.

சத்ரு பயம் நீங்கவும், மனநிம்மதி வாய்க்கவும், கல்யாணத் தடை நீங்கவும் வரம் தருகிறாள் இந்த துர்கை. இந்த அம்பிகை தினமும் காசிக்குச் சென்று வழிபட்டு வருவதாக ஐதிகம். மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு அதிதேவதை, இந்த தேவி என்கிறார்கள். மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமைதோறும் விரதமிருந்து, இந்த அம்மனுக்குப் பால் அபிஷேகம் செய்து, குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

- சி.குமரகுரு, சுவாமிமலை