திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

சிவனருள் செல்வி!

உமாநந்தினி
பிரீமியம் ஸ்டோரி
News
உமாநந்தினி

திருமுறை சாதனையாளர் உமா நந்தினி

ஒவ்வோர் ஆன்மாவையும் முறைப்படுத்தக் கூடிய நூல் என்பதால், `திருமுறை' என்ற பெயரில் 27 தேவாசிரியர்களைக் கொண்டு 12 திரு முறைகளை வகுத்துக் கொடுத்துள்ளது சைவம். ஈசனாலேயே அடியெடுத் துக் கொடுக்கப்பட்டும் எழுதப்பட்டும் உருவான இந்தத் திருமுறைகளே சிவபக்தர்களின் திருமறைகளாகவும் விளங்குகின்றன.

ஈசனருளால் நமக்கு இதுவரை கிடைத்துள்ள திருமுறைகள், 76 நூல்களில் மொத்தமாக 18,326 பாடல்களைக் கொண்டவை. ஆழ்ந்து உணர்ந்து இந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடுவது என்பது மாபெரும் சாதனை என்றே சொல்லலாம். ஈசனின் விருப்பம் இல்லாமல், அவரின் துணை இல்லாமல் எவருமே திருமுறையில் அத்தனைப் பாடல்களையும் பாடிவிட முடியாது.

உமாநந்தினி
உமாநந்தினி

ஞானியர்களாலும் போற்றுதலுக்குரிய நாவலர்களாலும் மட்டுமே திருமுறைகள் முழுவதுமாக பாடப்படும் நிலையில், ஓர் இளம்பெண் இதுவரையிலும் 12,000 பாடல்களைத் தமிழ்ப் பண்ணில் ஆழ்ந்த இசைத் திறமையோடு பாடியிருக்கிறார். உரிய பண் இசையோடும் பக்தியோடும் தினமும் 4 பதிகங்கள் (சுமார் 40 பாடல்கள் வீதம்) என்று தொடர்ந்து பாடி வருகிறார். இதற்காக இந்திய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள் ளார் என்பதை அறிந்து வியந்தோம்.

யார் அவர், இளம் வயதில் இப்படியொரு பக்திச் சாதனைக்கு அவர் தயாரானது எப்படி?

`திருமுறைகளே வாழ்வுக்கான நல்ல நெறிமுறைகள்' என அரிய சாதனையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட திருமுறைச் செல்வியின் பெயர் உமாநந்தினி. 12-ம் வகுப்புப் படிக்கும் மாணவி. இவரின் தாய், தந்தை இருவருமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள். உடுமலைப்பேட்டையில் வசித்து வருகிறார்கள்.

சிறு வயது முதலே இசையிலும் தமிழிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட உமா நந்தினிக்கு ஈசனின் திருவருளும் கிட்டியது. ஆம்! ஒருமுறை இவர் உடுமலைப்பேட்டை அருகிலுள்ள கடத்தூர் ஸ்ரீஅர்ஜுனேஸ்வரர் ஆலயத்தில் பாடிக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த திருவாவடுதுறை ஆதீன அமைப்பாளர் கே.கே.ராணி, இவர் பாடுவதைக் கண்டார். கணீரென்ற குரலும் தெளிவான உச்சரிப்பும் கொண்ட உமாநந்தினியிடம், `திருவாவடுதுறை சைவ பண்ணிசை வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெறலாமே' என்று கூறியுள்ளார். அதனபடியே பண்ணிசை வகுப்பில் சேர்ந்து, ஜெய்சிங் லிங்கவாசகம் என்ற ஆதீனப் பேராசிரியரின் வழிகாட்டலில் பயின்று முடித்துள்ளார். அதன்பிறகு, தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாக சைவ சித்தாந்த பாடங்களையும் பயின்று முதல் மாணவியாக இருந்து வருகிறார் இந்தச் சிவனருள்செல்வி.

சிவனருள் செல்வி!

எண்ணற்ற விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று வரும் உமாநந்தினி 8,000-க்கும் அதிகமான திருமுறைப் பாடல்களைப் பாடியதற்காக, இந்திய சாதனை புத்தகத்தில் (இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு) இடம் பிடித்துள்ளார். பாடத் துவங்கிய 188 நாள்களில் 6,620 தேவாரப் பாடல்களைப் பாடியிருந்த தருணத்திலேயே இந்திய சாதனைப் புத்தகம் இவரை பெருமைப்படுத்தியதாம்.

சமீபத்தில் திருப்பூர் குன்றுதோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழு, அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம் ஆகிய அமைப்பினர் இணைந்து, இவருக்குப் பாராட்டு விழா நடத்திச் சிறப்பித்தார்கள்.

கடந்த ஊரடங்குக் காலத்திலும் பதிகம் பாடுவது தொடர்ந்தது. தற்போது வரையிலும் 12,000 பாடல் களைத் தாண்டி, பத்தாம் திருமுறையை பாடி வரு கிறார். பதிகங்களைப் பாடி வாட்ஸப் குழுக்களில் பகிர்ந்து வரும் உமாநந்தினி, `‘உலகமெலாம் சைவம் தழைக்க வேண்டும்; அதற்குத் திருமுறைகள் எங்கும் பரவ வேண்டும். அந்தப் பெருமைமிக்க பணியில் இந்த சிறியவளின் பங்கும் சிறிதேனும் இருக்க வேண்டும். அதுவே பிறப்பின் பொருளாக எண்ணுகிறேன் ஐயா’' என்கிறார்.

``பள்ளிப் பாடங்களைப் படிக்கவே அயர்ந்து போகும் இந்தக் காலகட்டத்தில் திருமுறை களைப் படித்து, பொருள் உணர்ந்து, இசை கூட்டி, மனனம் செய்து பாடுவது என்பது அசுர சாதனை ஆயிற்றே...'' என்றதும், மெள்ள புன்னகைத்தார்.

“எல்லாம் சிவனருள் ஐயா. மூன்று வயது குழந்தை... ஆளுடையப் பிள்ளையாய் அகிலம் வியக்கப் பாடவில்லையா. நாம் கருவிகள்; ஈசன் இயக்குகிறார்; நாம் இயங்குகிறோம். இதில் நம் பெருமை ஏதுமில்லை. உலகம் உவக்க உயர்ந்த விஷயங்களைச் செய்ய முற்படும்போது சிவனே துணையிருந்து செய்து முடிப்பார்'' என்கிறார் உமா நந்தினி.

உமாநந்தினியின் தந்தை பாலகிருஷ்ணன், தாயார் கண்ணம்மா, அண்ணன் பிரகதீஸ்வரன் ஆகிய மூவருமே இவரின் சேவைக்கு - சிவ கைங்கர்யத்தில் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

“திருமுறைகள் மீது ஏன் இவ்வளவு ஈர்ப்பு?''

- உமாநந்தினியிடம் கேட்டோம்.

சிவனருள் செல்வி!

`` ‘தோ’ (தோடுடைய) என்ற ஓம்கார எழுத்தில் தொடங்கி ‘ம்’ என்ற (உலகெலாம்) மமகார எழுத்தில் முடிவடைவது திருமுறைகள். அதனால் ஓம்-கார தத்துவத்தை எடுத்துச் சொல்லும் தமிழ் வேதங்களாக பன்னிரு திருமுறைகள் விளங்குகின்றன.

எது பரிபூரண ஞானவடிவை உடையதோ, எது எல்லாவற்றிற்கும் மேலானதோ, எது எப்போதும் ஒளிர்கிறதோ, எது தொடக் கமும் அழிவற்றதுமாய் உள்ளதோ, எது எங்கும் நிறைந்து உள்ளதோ... அதுவே ‘ஓம்’; அதுவே சிவம் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் பெரியோர்கள்.

அந்தச் சிவபெருமானை முழுமையாகக் கொண்டாடுவது திருமுறைகள். திருமுறை கள் செய்யாத அற்புதங்களே இல்லை. அது அடைத்த கதவைத் திறக்கும்; அழைத்த இடத்துக்குக் கயிலையைக் கொண்டு வரும். ஒருவர் திருமுறைகளைப் படித்தாலோ, கேட்டாலோ போதும். பிறந்த பயனை அடையலாம் என்பார் அம்மா. ஆகவே எனக்கும் திருமுறைகளில் அதிக விருப்பம்!'' என்றவர் தொடர்ந்து கூறினார்.

``தமிழிலேயே உயர்கல்வியைப் படிக்க வேண்டும்; ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று ஆட்சிப் பணியில் இயங்கவேண்டும். அதேநேரம் சைவ சமயத் திருப்பணியிலும் என்னால் இயன்ற பங்களிப்பைக் கொடுக்க வேண்டும். இதுவே என் ஆசை.''

உயர்ந்த விருப்பங்கள் நிறைவேற உமா நந்தினியை வாழ்த்தி விடைபெற்றோம்.

`நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ...'


- சந்திப்பின் ஊடே செவிக்கினிதாய் உமாநந்தினி பாடிய பதிகம் நம் செவிகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!