
ஸ்காந்த புராணக் கீர்த்தனைகள்
இறையைப் போற்றும் தெய்வக் கீர்த்தனைகள் தமிழில் அதிகம் கிடையாது என்பார்கள் சிலர். இது தவறான கருத்து. தமிழில் ஏராளமான கீர்த்தனைகள் உண்டு. அவை தனிக் கீர்த்தனைகளாகவும், ஒரே தலைப் பிலான முழு நூலாகவும்கூட உள்ளன. உதாரணம்: நந்தனார் சரித்திரக் கீர்த்தனை; ராம நாடகக் கீர்த்தனை.
இந்த வரிசையில் முழு நூலாகவே - கந்த புராணம் முழுவதையும் கீர்த்தனைகளாகவே கொண்ட அபூர்வமான நூல் ‘ஸ்காந்த புராணக் கீர்த்தனை’. இது 108 ஆண்டுகளுக்கு முன் வெளியான நூல். தமிழ் ஆர்வம் கொண்டவர்கள், பேச்சாளர்கள், பாடகர்கள், நாட்டியக்காரர்கள் - என அனைவராலும் ஏற்கப்படும்... ஏற்கவேண்டிய அமைப்பு கொண்ட அரும்பெரும் நூல்!
பேச்சாளர்கள் இந்நூலில் உள்ள பாடல்களை அப்படியே ஏற்ற இறக்கங் களுடன் சொன்னால், அவர்களின் சொற்பொழிவுக்கு நிச்சயம் பெரும் பாராட்டு கிடைக்கும். பாடகர்கள் பாடினால் ரசிகர்கள் மெய்ம்மறப்பார்கள். நாட்டிய மேடைகளிலோ... இந்தக் கீர்த்தனைகளுக்கான அபிநயங்களும் அசைவுகளும் ஆறுமுகனை அப்படியே அரங்கத்தில் கண்முன்னே காட்டும்!

அற்புதமான இந்த நூலின் முதல் பாடலே, ‘பொன் பூத்த’ என்று மங்கலகரமாக - உயர்வாகத் தொடங்குகிறது. மட்டுமன்றி கீர்த்தனைகளின் பொருட்சுவையும் சொற்சுவையும் நம்மைப் பெரிதும் மகிழ்விப்பவை. வாருங்கள்... முதலில் அவற்றில் சில கீர்த்தனைகளை ரசிப்போம்; தொடர்ந்து இந்த நூலைப் பற்றிய மேலான தகவல்களையும் அறியலாம்.
சிவன் கொண்ட திருக்கோலம்!
சிவபெருமானை அடைவதற்காகத் தவம்செய்து கொண்டிருந்த பார்வதியிடம், சிவபெருமான் வடிவம் மாறிச் செல்கிறார். அப்போது அவர் கொண்ட கோலத்தை விரிவாகச் சொல்கிறது இந்நூல். அந்தப் பாடலில் இருந்து சிறு பகுதி:
இந்து நுதலில் வெண்ணீ றிலங்கத் திலதப் பொட்டு
மிசையச் செவி அதனில் அசை சங்கக் குழையிட்டு
கந்தரந்தனின் மணிக்கண்டிகை மாலை தொட்டு
கட்டங்கந் தாங்கி யோகப்பட்டிகை தொங்கவிட்டு
கருணை பெருகிய சிறுநகையுங் காட்டி
கதிக்கும் அன்பர்கள் தம் மதிக்குள் இன்ப மூட்டி
வரமணி மார்பினிற் புரிமுந்நூலு மாட்டி
மறையெனும் பாதுகை குரைகழலிற்சூட்டி...
ஆஹா... அற்புதம் அல்லவா?! பொட்டு, இட்டு, தொட்டு, விட்டு - எனத் தமிழ்ச் சொற்களின் அடுக்கல்-தொடுக்கல் மட்டுமல்ல; தமிழ்ச் சொற்களின் ஆளுமையும் இப்பாடலில் வெளிப்படுகின்றன.

பார்வதியின் மணக் கோலம்!
அடுத்து ஒரு பாட்டு அம்பிகையின் கல்யாண நிகழ்வை விவரிக்கிறது. பார்வதிதேவி கல்யாணக்கோலம் கொண்டு எழுந்தருளினார். அலைமகளும் கலைமகளும் பார்வதிதேவிக்குக் ‘கைலாகு’ கொடுத்து அழைத்து வந்தார்கள்; மங்கல மங்கையர் ஆரத்தி எடுத்தார்கள் என்றெல்லாம் சொல்லி, `அன்பர் அனைவரின் துயரம் நீங்க அம்பிகை எழுந்தருளினார்’ எனப் பாடல் முடிகிறது. இதோ அந்தக் கீர்த்தனை...
திருவுங் கலைமகளும் இருமருங்கு மடுக்க
செய்ய மலர்க்கை பற்றிக் கைலாகு கொடுக்க
வருண் மங்கல மங்கையர் ஆலாத்தி எடுக்க
அருந்தவஞ் செய்பவன் விரைந்தன்று பலிக்க
வருந்தும் அன்பர் அனைவரும் துன்பம் விடுக்க
-அம்பிகை எழுந்தருளினாராம். இந்தப் பாடல் சொல்லும் காட்சியை மனக் கண்ணில் நிறுத்தினாலே, அன்பர்களின் துயரம் தானே நீங்கிவிடுமே.
பூதப் படைகள்!
அடுத்து முருகனின் அவதாரச் சிறப்புகளைச் சொல்லும் கீர்த்தனைகளைப் பார்க்கலாம்.
வேத மறையோர் பாட
மெய்யன்பர்கள் கூத்தாட
பூதலத்தோர் கொண்டாட
புலவர் பாமாலை சூட - முருகன் திருஅவதாரம் செய்தார் என்கிறது ஒரு பாடல். இப்படியே கந்தபுராணத்தைச் சிறப்புற போற்றுகின்றன கீர்த்தனைகள். முருகன் தேரில் ஏறி அமர்கிறார். வாயு பகவான் தேரோட்ட, பூதப்படைகள் கூடச் சென்றார்கள். அந்தப் பூதப் படைகளை கீழ்க்காணும்படி வர்ணிக்கிறது ஒரு கீர்த்தனை.
செக்கர் வானிறம் போலே சிவந்த மணிச்சடையர்
திரண்ட சந்துருள் போலச் சுருண்ட குழல்உடையர்
அக்கும் பவழமும் கோத்தணிந்த கண்டித்தொடையர்
ஆலகாலம் போல் ஔி காலமழுப்படையர்...
அதாவது, `சிவந்த மணிகள் கொண்டவ சடையர், அடர்ந்த இருளைப்போலக் கறுமை யான சுருண்ட தலைமுடி உடையர்; ருத்திராட் சத்தையும் பவழத்தையும் கோத்து மாலையாக அணிந்த தொடையர்; ஆலகால விஷம் போன்ற, ஔி வீசும் மழு ஆயுதங்களைப் படை யாகத் தாங்கிய படையர்... என்றெல்லாம் அழகுபட விவரிக்கிறது.
மயக்க வருகிறாள் மாயை!
சூரபத்மனின் வரலாற்றைக் கூறத் தொடங்கும் பகுதியில்... காசிப முனிவரை மயக்க வருகிறாள் மாயை. அவளின் அழகு, வசப்படுத்தும் பேச்சு, வசீகரிக்கும் புன்னகை ஆகியவற்றை விவரிக்கும் பாடல், அவள் வந்ததற்கான காரணத்தையும் விவரிக்கிறது.
தட்ச யாகத்தில் கலந்துகொண்டு தவறு செய்ததால், நந்திதேவரின் சாபத்தைப் பெற்றார்கள் தேவர்கள். அந்தச் சாபத்தின்படி தேவர்களைத் துன்பம் செய்து அலைக்க, சூறைக்காற்றில் அகப்பட்ட பஞ்சுக்குவியல் போல் பாடு படும்படி தேவர்களைக் குலைக்க, தேவ உலகான அமராவதியில் இருந்த தேவர்கள் அனைவரையும் கலைக்க, அவர்கள் தங்களின் விதியை நொந்து `எப்படித் தப்பிப்போம்?’ என்று மலைக்க - மாயை காசிபரைத்தேடி வந்தாளாம். சொற்சுவையும் பொருட்சுவையும் எப்படிப் போட்டி போட்டுக் கொண்டு வெளிப்பட்டிருக்கின்றன பார்த்தீர்களா?
இந்த நூல் பல பாடல்களில் மார்க்கண்டேய சரித்திரத்தையும் விவரிக்கிறது. மார்க்கண்டேயர் செய்த சிவஸ்துதி கீர்த்தனைகள், பக்தியைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளன.
வீரபாகுவின் திருக்குறள் உபதேசம்
இந்நூலின் பல சிறப்பசங்களில் குறிப்பிடத் தக்கது, தூது செல்லும் வீரபாகு சூரபத்மனுக்கு அறிவுரை சொல்லும் விவரத்தைப் பகிரும் கீர்த்தனை. இதில் ‘திருக்குறள்’ அப்படியே இடம்பெற்றுள்ளது விசேஷ அம்சமாகும்!
உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம்.
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கை பிழையாதற்று (திருக்குறள்-307)
கருத்து: சினத்தைப் பொருளாகக் கொண்ட வன் கெடுவான்; தப்ப முடியாது. எதுபோல என்றால், தரையில் கையால் அடித்தவனின் கை, பாதிப்பு அடைகிறதல்லவா அதுபோலவாம்!
இந்தத் திருக்குறளின் தொடக்கத்தை அப்படியே சொன்ன வீரபாகு, இதையொட்டியே சூரபத்மன் செயல்பட வேண்டிய முறைகளையும் சொல்வதாக அமைந்த ஸ்காந்த புராணக் கீர்த்தனையைப் பாருங்கள்...
சினத்தைப் பொருளென்றுகொள்ளாமல் - வளர்
செல்வத்தை உதைந்து தள்ளாமல் - மிக
மனக் கருவங் கொண்டு துள்ளாமல் - எனது
வார்த்தையை இகழ்ந்துவிள்ளாமல்
பிழைக்கும் புத்தியைக் கேளடா!
இப்பாடல், கருத்துக்கும் கவனத்துக்கும் விருந்தாக அமைந்துள்ளது அல்லவா? ஆம், தமிழில் அமைந்த ஞானப்பொக்கிஷங்களில் ஒன்று ‘ஸ்காந்த புராணக் கீர்த்தனை’.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் வரலாற்றைச் சொல்லும் இத்தமிழ்க் கீர்த்தனை நூலை எழுதியவர் ‘பெருங்கரை பிரும்ஹகவிகுஞ்சர பாரதி’. சங்கீதத்தில் மட்டுமல்லாமல், சரவணபவனிடம் பக்தியிலும் ஆழமாக ஈடுபட்ட இவருடைய வரலாறு; இந்நூல் உருவான வரலாறு எல்லாம் நூலின் தொடக் கத்தில் இடம்பெற்றுள்ளன.
108 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான இந்நூலின் பழம்பிரதி, ஆன்மிக எழுத்தாளரும் முருகப்பெருமானின் பக்தருமான திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் அவர்களிடம் எப்படியோ அகப்பட்டது.
இந்நூலின் அருமைபெருமைகளை உணர்ந்த வலையப்பேட்டை, இதை மறுபதிப்பு செய்ய முனைந்தார். பிரச்னை முளைத்தது. அவரிடம் கிடைத்த பிரதி மிகமிகப் பழைய நூல் என்பதால், நூலின் பக்கங்கள் கொஞ்சம் அசந்தாலும் ஒடிந்து, தூள்தூளாகிப் போயின. எனினும் முருகனருளால் விடாமுயற்சியுடன் 450-பக்கங்கள் கொண்ட இந்நூலை, அப்படியே பொறுமையாகக் கையால் எழுதி, அதை அச்சுக்குக் கொடுத்து, படாதபாடு பட்டுப் பதிப்பித்திருக்கிறார்.
அருந்தமிழ்க் கீர்த்தனை நூல் ஒன்று அழியாமல், வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் அவர்களால் புத்துயிர் பெற்றிருக்கிறது. தமிழ்ப் பற்றாளர்களும் முருக பக்தர்களும் அவசியம் இந்த அற்புத நூலை வாங்கிப் படித்து மகிழவேண்டும்; மற்றவர்களுக்கும் இதன் சிறப்பை எடுத்துச் சொல்ல வேண்டும் (தொடர்புக்கு: 90032 32722).