Published:Updated:

'புத்தகப் பிள்ளையார்'

சோமசுந்தர விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
சோமசுந்தர விநாயகர்

சரணம் கணேசா...

'புத்தகப் பிள்ளையார்'

சரணம் கணேசா...

Published:Updated:
சோமசுந்தர விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
சோமசுந்தர விநாயகர்

செல்வ விநாயகர், ஐஸ்வர்ய விநாயகர், கற்பக விநாயகர், வரசித்தி விநாயகர், வரம் தரும் விநாயகர், நலம் தரும் விநாயகர், சுகம் தரும் விநாயகர் என்று விதவிதமான திருப்பெயருடன் அருளும் பிள்ளையார்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ‘புத்தகம் தரும் விநாயகர்’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள பேப்பனையம்பட்டி என்ற கிராமத்தில் கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு சோமசுந்தர விநாயகரே, புத்தகம் தரும் விநாயகராக அருள்புரிகிறார்.

'புத்தகப் பிள்ளையார்'

பேப்பனையம்பட்டி பின்தங்கிய கிராமம். பேருந்து நிறுத்தம் செல்ல வேண்டும் என்றாலும் 9 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இங்கே வயல்களுக்கு நடுவே சிறு கோயிலில் அருள்கிறார் இந்தப் பிள்ளையார். இங்கு இவர் குடிகொண்ட வரலாறை அறிய, சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் பயணிக்க வேண்டும்.

1900-ம் ஆண்டு முற்பகுதியில், தொழில் நிமித்தம் மியான்மர் நாட்டுக்குச் சென்று, அங்கே மாண்டலே பகுதியிலுள்ள அவ்போ என்ற இடத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர் பெரி.சோமசுந்தரம் செட்டியார். சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையைச் சேர்ந்த இவர், இக்கிராமத்தில் விவசாய நிலங்களை வாங்கிப் போட்டார்.

'புத்தகப் பிள்ளையார்'

இவருடைய மூன்று மகன்களில் இளையவர்தான், ‘உலகம் சுற்றிய தமிழர்’ என்று போற்றப்படும் தமிழறிஞர் `சோமலெ’ என்கிற சோம.லெட்சுமணன். அவர் இந்தக் கிராமத்தில், தன் பங்கு நிலத்தில் சிறு விநாயகர் கோயிலைக் கட்டினார் (1964-ல்). தந்தையின் நினைவாக பிள்ளையாருக்கு ‘சோம சுந்தர விநாயகர்’ என்று திருப்பெயர் சூட்டினார்.

இவரின் காலத்துக்குப் பிறகு, 2000-ம் ஆண்டு இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் சோம.லெட்சுமணனின் மகன் சோமசுந்தரம், 2020-ல் மூன்றாவது குடமுழுக்கை விமர்சையாக நடத்தினார்.

'புத்தகப் பிள்ளையார்'

அப்போது கும்பாபிஷேகத்தை நடத்திவைத்த மேலூர் தட்சிணாமூர்த்தி குருக்கள், ‘`அஞ்சு வருஷங்களுக்கு முன், இந்தக் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டைத் தொடங்கினோம். அப்ப, இந்தப் பிள்ளையாருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்ய அர்ச்சகரே கிடைக்கல. ‘இந்த வயக்காட்டுக்குள்ள யாரு வருவா’ன்னு எல்லாரும் பின்வாங்கிட்டாங்க. சதுர்த்தி பூஜைக்கும் சாமி கும்பிட ஆள் இருக்காது. நானும் கோயில் கட்டுன ஆரம்பத்துல இருந்து இங்கே பூசாரியா இருக்கும் எழுவனும் மட்டுமே அபிஷேகம் பண்ணிட்டுப் போவோம். யாரும் வரலேன்னாலும் நாங்க பூஜையை நிறுத்தவே இல்லை... இப்ப நிலைமை மாறியிருக்கு’’ என்றார்.

‘`எங்களோட அஞ்சு வருஷ முயற்சி வீண் போகலை. இப்ப, சுத்தியிருக்கிற கிராமத்து மக்கள் நிறையபேர் வந்து பிள்ளையாரைக் கும்பிடறாங்க. மனசுக்கு நிறைவா இருக்கு’’ என்கிறார், இக்கோயிலின் வளர்ச்சிக்காகத் தன் குடும்பத்தையே அர்ப்பணித்துள்ள மேலூர் கணேசன்.

'புத்தகப் பிள்ளையார்'

இந்தப் பிள்ளையார் கோயிலின் தனிச் சிறப்பம்சம்... ஞாயிறுதோறும் நடைபெறும் அன்னதானமும் புத்தக தானமும்தான். அதுபற்றிய விவரங்களைப் பகிர்கிறார் மேலூர் கணேசன்.

‘`சுத்துப்பட்டு கிராம மக்களைக் கோயிலுக்கு வரவைக்கணும்கிற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் அன்னதானம். ஆனால், பல கி.மீ தூரம் நடந்து வரணும்கிறதால, ஆரம்பத்தில் ஒருசிலர்தான் வந்தாங்க.

'புத்தகப் பிள்ளையார்'

அன்னதானம் எல்லா கோயில்களிலும் கொடுப்பது வழக்கம்தான். ஆனால், இங்கு மட்டும் சின்ன வித்தியாசம்... அன்னதானத்தோடு, அறிவு தானமும் வழங்கப்படுது. ஆமாங்க... கோயிலுக்கு வர்ற பிள்ளைகளுக்கு தலா ஒரு புத்தகம் கொடுக் கிறோம். மெள்ள... மெள்ள... இந்தப் பிள்ளையாரின் சக்தியையும், அன்னதானம் அறிவு தானம் பற்றியும் தெரிஞ்சுகிட்ட சுத்துப்பட்டு கிராமமக்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகமா வரத் தொடங்கியிருக்காங்க. இப்போது, பிள்ளைங்க இவரைப் ‘புத்தகப் பிள்ளையார்’னு சொல்றாங்கன்னா பார்த்துக்குங்களேன்’’ என்றார் கணேசன்.

பேப்பனையம்பட்டி கிராமத்துக்கு அருகில் உள்ள பாப்பாக்குடிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ், ‘`கொரோனா கட்டுப்பாடுகளால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் பிள்ளைகள் இந்தக் கோயிலுக்கு வந்து சாமி கும்பிடுவதோடு, புத்தகம் வாங்கிப் படிப்பதில் ரொம்ப ஆர்வம் காட்டுறாங்க’’ என்கிறார்.

'புத்தகப் பிள்ளையார்'

அமெரிக்காவில் வசிக்கும், காட்பாடியைச் சேர்ந்த பத்மா மோஹனம் என்ற 80 வயது மூதாட்டிதான் இந்தப் புத்தகங்களை எல்லாம், ‘தமிழ்நாடு அறக்கட்டளை’ மூலமாக நன்கொடையாக வழங்கி வருகிறாராம்.

அன்னதானம் தடையில்லாமல் நடைபெறும் வகையில் கோயில் அருகிலேயே மடைப்பள்ளி ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. ‘`இப்ப கோயிலுக்கு நல்லதொரு அர்ச்சகரும் கிடைச்சுட்டார்’’ என மகிழ்கின்றனர் கிராம மக்கள். பிள்ளையார்பட்டி வேத பாடசாலையில் வேதம் பயின்றவர் அர்ச்சகர் அமலன். கோயில் அருகிலேயே தங்கி, அனைத்து வழிபாடுகளையும் ஆத்மார்த்தமாகச் செய்து வருகிறார்.

இந்தக் கிராமத்து மக்கள் மட்டுமன்றி உலகில் உள்ள அனைவரும் இந்த விநாயகரின் அருள் கடாட்சத்தைத் தினமும் பெற்று மகிழும் வகையில், நூதனமான ஒரு சேவையைச் செய்து வருகிறார் அமலன்.

தினமும் காலையில் 9 மணிக்கு முன்னதாகவே, முன்பதிவு செய்த ஒரு குடும்பத்தை வாட்ஸ்ஆப் மூலம் அழைத்து, அவர்களின் பெயர் - நட்சத்திரம் சொல்லி சங்கல்பித்து விநாயகருக்கு ஆராதனை செய்து, வீடியோ மூலம் தரிசனம் செய்ய வைக்கிறார். இதற்கு நல்ல வரவேற்பாம்.

'புத்தகப் பிள்ளையார்'
'புத்தகப் பிள்ளையார்'

வெளி மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் வாட்ஸ்அப் மூலமாக இந்த விநாயகரை தரிசித்து மகிழ்கிறார்கள். பிளையார் தரிசனத்தோடு அருகிலுள்ள வயல்வெளிகள், மரங்களில் இருக்கும் பறவைகள் என நம்ம ஊர் இயற்கையையும் காட்டுகிறார் அர்ச்சகர். அத்துடன் எளிய மந்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறார்.

``இறை தரிசனத்துடன் இயற்கையின் அழகையும் ரசிக்கக் கிடைக்கும் இந்த அனுபவம் பரவசமானது’’ என்கிறார்கள், அமெரிக்காவில் இருந்து வந்து அண்மையில் பூஜையில் பங்கேற்ற கல்பனா, ஹரிஹரன் தம்பதியினர்.

கலிஃபோர்னியாவிலேயே பிறந்து வளரும் தியா, தனது 16-வது பிறந்த நாளை, பிள்ளையார் கோயிலுக்கு வந்திருந்த பேப்பனையம்பட்டி கிராமத்துக் குழந்தைகளுடன், வாட்ஸ்ஆப் வீடியோ மூலம் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார்!

கனடாவிலிருந்து தன் குழந்தைகளுடன் தாயகம் வந்த சிந்து, கோயில் அன்னதானத்தில் நேரடியாகக் கலந்துகொண்டாராம். ‘

`கிராமத்துக் குழந்தைகளுக்குப் பரிமாறியதும், அவர்கள் பசியாறியதும் மனசுக்கு பெரிய நிறைவைக் கொடுத்த விஷயங்கள்... கோடி கொடுத்தாலும் இந்த மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்காது. என் குழந்தைகளுக்கு இது புது அனுபவம்’’ என்கிறார் நெகிழ்ச்சியாக.

‘`கடந்த ஆடி வெள்ளிக்கிழமை இங்கே முதல் முறையாக விளக்கு பூஜை நடத்தினோம்.கிராமத்துப் பெண்கள் ரொம்ப உற்சாகமாகக் கலந்துக்கிட்டாங்க. பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்குக் கோயில் சார்பாக குத்துவிளக்கு அன்பளிப்பாகக் கொடுத்தோம். அதேபோல தை மாசம் விநாயகருக்கு பொங்கல் வெச்ச கிராமத் தினருக்குப் பொங்கல் பானை கொடுத்தோம்’’ என்றார் அர்ச்சகர்.

கேட்டதை எல்லாம் கொடுக்கும் முந்தி முதற் கடவுள், இந்தக் கிராமத்தில் பக்தர்களுக்கு அருளை வழங்குவதோடு அன்னத்தையும் அறிவையும் வழங்குவது போற்றுதற்குரியது!

`மக்களின் விநாயகர்!’

இந்தக் கோயிலை மையமாக வைத்து, இதைச் சுற்றியுள்ள பின் தங்கிய பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் நோக்கில், ‘சமூக தொழில் முனையும்’ திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளார் சோமலெ. சோமசுந்தரம். ஆன்மிக வளர்ச்சி மட்டுமன்றி, கிராமப்புற வளர்ச்சிக்கும் வித்திட்டுள்ள இந்த விநாயகரை ‘மக்களின் விநாயகர்’ என்று வர்ணித் திருக்கிறார், இக்கோயிலின் கும்பாபி ஷேகத்தைச் சிறப்பித்த குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார்.

அருகே உள்ள கொடுக்கம்பட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியைகளுக்கே கழிவறை இல்லாத நிலை குறித்து, கோயில் கும்பாபிஷேகத்துக்கு வந்திருந்த முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்களாம் ஆசிரியைகள். தற்போது கட்டட வேலைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாம். இது, கிராம மக்களுக்கு இந்தப் பிள்ளையாரால் கிடைத்த பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism