Published:Updated:

கோகுலாஷ்டமி: கண்ணன் வெண்ணெய் பாத்திரத்தினுள் கைவிட்டது ஏன்? மெய்சிலிர்க்க வைக்கும் கிருஷ்ணன் கதைகள்!

கண்ணன் கதைகள்
கண்ணன் கதைகள்

கோகுலாஷ்டமி - இந்தச் சிறப்பான நாளன்று கண்ணனின் லீலைகளை - கதைகளைப் படிப்பதே பேரானந்த அனுபவம்! இதோ சில அபூர்வ கதைகள் உங்களுக்காக!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை’

கண்ணனைப் பாடிப் பாடிப் பரவசம் அடையும் நமக்கு, அவனது திரு அவதார தினம் என்றாலே கொண்டாட்டம்தான். அன்றைய தினம் கண்ணனின் லீலைகளை - கதைகளைப் படிப்பதே பேரானந்த அனுபவம் ஆகும். கண்ணன் குறித்த அபூர்வக் கதைகள் உங்களுக்காக...

உடுப்பி கிருஷ்ணன்
உடுப்பி கிருஷ்ணன்

பிரம்மனை குகையில் அடைத்தது ஏன்?

ருமுறை, பிரம்மாவுக்கும் கிருஷ்ணனுக்கும் போட்டி வந்தது. கோகுலத்திலுள்ள பசுக்களையும் - கோபாலர்களையும்... ஏன், கிருஷ்ணனையும் சேர்த்து ஒரு குகையில் அடைத்துவிட்டார் பிரம்மா. அப்போது கிருஷ்ணனே பல பசுக்களையும் - கோபாலர்களையும் சிருஷ்டி செய்து, பிரம்மனைப் போல் தன்னாலும் படைக்க முடியும் என்று காட்டி, பிரம்மனின் கர்வத்தை அடக்கினான்.

பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த கதைதான் இது. என்றாலும், நமக்குள் சில கேள்விகள் எழும்.

கிருஷ்ணன், விஷ்ணுவின் அவதாரம் என்பது பிரம்மாவுக்கே தெரியாதா? அவர் ஏன் கிருஷ்ணனுடன் மோத வேண்டும்? அப்படியே பிரம்மா மோதினாலும், சிருஷ்டிக்கும் தொழிலை கண்ணன் தன் கையில் எடுக்கலாமா? பிரம்மனையே தன் நாபியில் படைத்த நாராயணன், பிரம்மனோடு போட்டி போட்டது ஏன்? இப்படியெல்லாம் வாத, விவாதங்களும் எழலாம்.

ஆனால், சூட்சுமமான தத்துவ உண்மை ஒன்று இந்த லீலையில் உண்டு.

கோகுலத்தில் யசோதையின் மைந்தனாக வாழ்ந்தான் கண்ணன். நல்ல அழகு, துறுதுறுப்பான விழிகள், எப்போதும் குறும்பு, எத்தனையோ சாகசச் செயல்கள், பாசத்தாலும், பக்தியாலும் கட்டுண்டுவிடும் நிலை... இப்படியிருக்கும் கண்ணனைக் காணும்போது, ‘நம் வீட்டுக் குழந்தை கண்ணன் மாதிரி இருக்கக் கூடாதா?’ என்று யாருக்குத்தான் தோன்றாது. கோகுலத்தில் வாழ்ந்த பெண்கள் ஒவ்வொருவரும் அவ்வாறே ஆசைகொண்டனர். இன்னும் சிலர், ‘கண்ணன் என் வீட்டுக் குழந்தையாக இருக்கக் கூடாதா?’ என ஏங்கினார்களாம்.

இந்த ஜன்மத்தில்தான் அந்தக் கொடுப்பினை இல்லை; அடுத்த ஜன்மத்திலாவது கண்ணனை மகனாகப் பெறவேண்டும் என்று சிலர் பிரார்த்தித்துக் கொண்டார்களாம்.

கண்ணன்
கண்ணன்

அதுமட்டுமா? கண்ணன் கைப்பட்ட பசுவும் கன்றும் தெய்விகப் பொலிவுடன் திகழ்ந்ததைக் கண்டு, ‘நம் வீட்டுப் பசுவும் கன்றும் கூட கண்ணன் மேய்க்கும் பசுக்களாக இருக்கக் கூடாதா?’ என்று எண்ணினார்களாம். அனுதினமும் இப்படிக் கண்ணனையே நினைத்துக் கொண்டிருந்ததால், அவர்களின் விருப்பங்கள் ஏறக்குறைய ஒரு தவமாகவே ஆகிவிட்டதாம்.

பார்த்தான் கண்ணன். அவர்களது ஆசைகளை நிறைவேற்ற, தான் ஆசைப்பட்டான். பிரம்மதேவனை அழைத்தான். கோகுலத்தின் பசுக்களையும் - கோபாலர்களையும் படைத்தவனிடமே ஒப்படைத்தான்.

மீண்டும் தான் சொல்லும் வரையிலும் அவர்களைப் பேணிப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் பிரம்மனைப் பணித்தான். பிறகு, தன்னையே பல பசுக்களாகவும், கன்றுகளாகவும், கோபாலர்களாகவும் படைத்துக் கொண்டான்.

திடீரென கோகுலத்தில் புதிய பொலிவு. கோகுலத்தின் அன்னையர் ஒவ்வொருவரும் தத்தமது புதல்வர்களிடம் புதிய அழகையும், பொலிவையும் கண்டு பூரித்தனர். பசுக் கூட்டங்களும் செழித்து கோகுலத்தை மேலும் அழகுபடுத்தின. வீட்டுக்கொரு கிருஷ்ணனாக வந்து, சில காலம் தன் பக்தர்களை மகிழ்விக்கவே கண்ணன் இந்த லீலை புரிந்தான்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`வெண்ணெய் பாத்திரத்தில் கையை நுழைத்தது ஏன்?’

ருமுறை... கோபிகை ஒருத்தியின் வீட்டுக்குள், அவள் இல்லாத நேரம் பார்த்து, சகாக்களுடன் நுழைந்தான் கண்ணன். அவர்கள் பெரு முயற்சி செய்து பானையைக் கீழே இறக்கி, வெண்ணெயைப் பகிர்ந்துகொள்ளும் நேரத்தில் கோபிகை வந்துவிடுகிறாள்.

அவளைக் கண்டதும் மற்றவர்கள் எப்படியோ தப்பித்து ஓடிவிட, கண்ணன் மட்டும் அகப்பட்டுக் கொள்கிறான். அவளிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று பகவான் யோசிக்க... அந்தப் பெண், கண்ணனிடம் ‘நீ யார்?’ என்று கேட்கிறாள்.

பலராமனின் பெயரைச் சொல்லி அவனுடைய தம்பி என்றான் கண்ணன். ஏன் அப்படிச் சொல்லவேண்டும். ஊருக்குள் பலராமனுக்கு நல்ல பெயர். எனவே, அவன் பெயரைச் சொல்லித் தப்பித்துவிடலாம் என்கிற எண்ணம் கண்ணனுக்கு. ஆனால், அவள் விடுவதாக இல்லை. ‘இங்கு ஏன் வந்தாய்?’ என்று தனது இரண்டாவது கேள்வியைக் கேட்டாள்.

சற்றும் யோசிக்காமல்... ‘இந்த வீட்டை என்னுடைய வீடு என்று நினைத்து வந்துவிட்டேன்’ என்று பொய் சொன்னான் கண்ணன்.

ருக்மிணி, கிருஷ்ணா
ருக்மிணி, கிருஷ்ணா

உடனே அவள், ‘கண்ணா! உள்ளே நுழைந்தவுடனேயே இது உன் வீடு அல்ல என்று தெரிந்திருக்குமே..?’ என்று மடக்கினாள். கண்ணனும் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'தாயே! இது என் வீடல்ல என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன். எனவேதான், இதோ, இவ்வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டேன்’’ என்று நழுவப் பார்த்தான். கோபிகை விட்டுவிடுவாளா?!

"கண்ணா, நீ உன் வீடு என்று நினைத்து என் வீட்டுக்குள்ளே நுழைந்ததுகூடப் பரவாயில்லை. ஆனால், வெண்ணெய்ப் பாத்திரத்துக்குள்ளே நீ எதற்காக கைவிட்டாய்?’’ என்று கேட்டாள்.

என்ன பதில் சொல்வது என்ற குழம்பிய கண்ணன், ‘’அம்மா! என் கன்றுக்குட்டி ஒன்று தொலைந்துவிட்டது. ஒருவேளை, அது இந்த வெண்ணெய்ப் பாத்திரத்துக்குள் ஒளிந்துகொண்டு இருக்குமோ என்று பார்க்கத்தான் கலத்தினுள் கைவிட்டேன். கடைசியில் இங்குமில்லை. சரி, நான் வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு ஓடிப் போனான். கிருஷ்ணனின் லீலை எப்படி இருக்கிறது பாருங்கள்!

கிருஷ்ண தரிசனம்!

கண்ணனை ருக்மிணி தடுத்தது ஏன்?

ண்ணன் அருளால் குசேலன் குபேரனான கதை நமக்குத் தெரிந்ததே. இந்தக் கதையில் இரண்டு கேள்விகள் உண்டு.

குசேலனின் அவல் முடிப்பைப் பிரித்த கண்ணன், அவலில் ஒரு பிடி எடுத்து வாயில் போட்டதுமே குசேலரின் ஏழ்மை நீங்கியது. கண்ணன் இரண்டாவது பிடி அவலை உண்டதும் கல்விச் செல்வமும், பெயரும் புகழும் குசேலன் குடும்பத்துக்குக் கிடைத்தது. கண்ணன், மூன்றாவது பிடி அவலை சாப்பிடக் கையில் எடுத்தான். அப்போது ருக்மிணி அவன் கையைப் பிடித்து, வேண்டாமென சமிக்ஞை காட்டித் தடுத்துவிட்டாள்.

தொடர்ந்து குசேலருக்கு உபசாரங்கள் நடந்து முடிந்தன. ஆனால், தனது வறுமை நிலை நீங்கியது, அவனுக்குத் தெரியாது. கண்ணனின் கருணையால் பேரானந்தம் அடைந்திருந்த குசேலரின் மனம் நிர்மலமாக இருந்தது. அதில் எந்த ஆசாபாசமும் இல்லை. பரமார்த்த நிலையில் அவன், "போய் வருகிறேன், கண்ணா!’’ என்று கூறி விடைபெற்றார்.

கிருஷ்ணன், சுதாமனுக்குச் சகல சௌபாக்கியங்களையும் நிச்சயமாகத் தந்திருப்பான் என்று ருக்மிணி யூகித்தாள். இருந்தாலும், அவள் மனத்தில் ஒரு சந்தேகம் எழுந்தது.

"ஸ்வாமி, வறுமையால் வாடி வந்த உங்கள் அருமை நண்பருக்கு எத்தனையோ ஐஸ்வர்யங்களை நீங்கள் அளித்திருப்பீர்கள். அதைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரிவிக்காமல், அவர் திரும்பிக் போக எந்தவித சௌகர்யங்களும் செய்து தராமல், வந்தது போலவே மீண்டும் நடந்தே ஊர் திரும்பச் சொல்லிவிட்டீர்களே, ஏன்?’’ என்று கேட்டாள்.

கண்ணன் பதில் கூறினான். ‘’ருக்மிணி! குசேலன் வாழ்க்கையில் அமைதியும், ஆனந்தமும், திருப்தியும் நிறைந்திருக்கும் நேரம் இன்னும் சில நாழிகைகளே உள்ளன. என்னைத் தரிசித்த பேரானந்தத்துடன் அவன் சென்று கொண்டிருக்கிறான். வீட்டுக்குச் சென்று, குபேர செல்வத்தை தான் பெற்றதை அறிந்ததும், பிரச்னைகள் ஆரம்பித்துவிடும்.

செல்வத்தால் ஆசை, பாசம், பேராசை, கர்வம் மற்றும் செல்வத்தை மேலும் சேர்க்க வேண்டும் என்கிற பேரவா, அவற்றால் ஏற்படும் புதிய பிரச்னைகள் ஆகியவற்றில் சுதாமனது வாழ்க்கை முற்றிலும் சுழல ஆரம்பித்துவிடும். அப்போது அவனின் பரமானந்த நிலை மறைய ஆரம்பித்துவிடும். வாழ்க்கையில் அவன் அனுபவிக்கப் போகும் கடைசி நேர ஆனந்தத்தையும் சச்சிதானந்த நிலையையும் நான் அழிக்க விரும்பவில்லை. அதனால்தான் அவனை வந்தது போலவே திரும்பி வழி அனுப்பியிருக்கிறேன்’’ என்றான் கண்ணன்.

ருக்மிணி திகைத்தாள். கண்ணன் செய்யும் காரியங்களுக்கெல்லாம் ஒரு காரணம் உண்டு என்பது அவளுக்குத் தெரிந்ததுதானே!

இப்போது கண்ணன் தன் பங்குக்கு, ஒரு கேள்வியை ருக்மிணியிடம் கேட்டான். "குசேலன் கொண்டு வந்த அவலை மூன்றாவது பிடி எடுத்தபோது, நீ ஏன் தடுத்தாய்?’’ என்று கேட்டான்.

அதற்கு ருக்மிணி, "ஸ்வாமி, தங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் எந்தப் பொருளும் பிரசாதமாகிறது. குசேலன் அன்புடன் தந்த அவல், அனைத்தையும் தாங்களே சாப்பிட்டுவிட்டால், அந்தப் பிரசாதத்துக்காகக் காத்திருக்கும் எனக்கும், தங்களின் பரிவாரத்துக்கும் பிரசாதமில்லாமல் போய்விடுமே என்பதற்காகத்தான், ‘எங்களுக்கும் கொஞ்சம் மீதி இருக்கட்டும்’ என்ற பாவனையில் தங்கள் கைகளைப் பிடித்தேன்’’ என்றாள்.

ஆகவே, ருக்மிணி தடுத்தது தர்மத்தை அல்ல; தர்ம பலனை அனைவரும் பெறவே அவள் அப்படிச் செய்தாள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு