Published:Updated:

பிரதோஷ பதிகங்கள்

நந்திதேவர்
பிரீமியம் ஸ்டோரி
நந்திதேவர்

சிவனடியார்களாகிய நாம் நந்த வனம்-சோலைகள் அமைத்தும் குளங்கள் பல தொண்டியும் பல அறப்பணிகள் செய்வோம்.

பிரதோஷ பதிகங்கள்

சிவனடியார்களாகிய நாம் நந்த வனம்-சோலைகள் அமைத்தும் குளங்கள் பல தொண்டியும் பல அறப்பணிகள் செய்வோம்.

Published:Updated:
நந்திதேவர்
பிரீமியம் ஸ்டோரி
நந்திதேவர்

தோஷம் தீர்க்கும் பிரதோஷம்!

பரமேசுவரன், பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை, உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு தாமே அருந்தினார். பின்னர் அனைவரும் மகிழும் பொருட்டு, ரிஷபத்தின் பிரணவ வடிவ கொம்புகளின் நடுவில் ஆனந்தத் தாண்டவம் ஆடினார். அந்தக் காலமே பிரதோஷ வேளை.

பரமேஸ்வரன் உலக சக்தி முழுவதையும் தன் வசம் ஒடுக்கிக்கொண்டு நர்த்தனம் செய் யும் பிரதோஷ வேளையில், உரிய பதிகங்கள் பாடி அவரை வழிபடுவதால், சகல தோஷங் களும் மனச் சஞ்சலமும் விலகும். அவ்வகையில், திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகத்தில் சில பாடல்கள், அப்பர் பெருமான் அருளிய பதிகங்கள், நந்தி போற்றித் துதிகள் உங்களுக்காக...

பிரதோஷ பதிகங்கள்

திருநீலகண்ட பதிகம்!

அவ்வினைக்கு இவ்வினை ஆம்

என்று சொல்லும் அஃது அறிவீர்!

உய்வினை நாடாது இருப்பதும்

உம்தமக்கு ஊனம் அன்றே?

கைவினை செய்து எம்பிரான் கழல்

போற்றுதும் நாம் அடியோம்

செய்வினை வந்து எமைத்

தீண்டப்பெறா திருநீலகண்டம்.

கருத்து: முற்பிறவியிலும் இப்பிறவியிலும் செய்த வினைகளுக்கேற்ற பலன்களை அனுபவிக்கிறோம். அந்த வினைகளிலிருந்து விடுபடும் வழியை அறியாதது நமது குறை. எண்ணம்-சொல்-செயலால் சிவச் சிந்தையில் மூழ்கி, அவரின் திருவடியைப் பணிந்தால் வினைகள் நம்மைத் தீண்டாது. இது திருநீல கண்டராகிய சிவனாரின் மீது ஆணை!

காவினை இட்டும் குளம்பல

தொட்டும் கனி மனத்தால்

ஏவினையால் எயில் மூன்று

எரித்தீர் என்று இருபொழுதும்

பூவினைக் கொய்து மலரடி

போற்றுதும் நாம் அடியோம்

தீவினை வந்து எமைத்

தீண்டப்பெறா திருநீலகண்டம்.

கருத்து: சிவனடியார்களாகிய நாம் நந்த வனம்-சோலைகள் அமைத்தும் குளங்கள் பல தொண்டியும் பல அறப்பணிகள் செய்வோம். கனிந்த மனதோடு பூக்கள் பறித்துச் சமர்ப்பித்து, முப்புரம் எரித்த விரிசடைக் கடவுளை காலையும் மாலையும் வழிபடு வோம். அப்போது கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டாது. இது திருநீல கண்டராகிய சிவனாரின் மீது ஆணை!

விண்ணுலகு ஆள்கின்ற

விச்சா தரர்களும் வேதியரும்

புண்ணியர் என்று இரு போதும்

தொழப்படும் புண்ணியரே!

கண் இமையாதன மூன்று உடையீர்!

உம் கழல் அடைந்தோம்;

திண்ணிய தீவினை தீண்டப்பெறா

திருநீலகண்டம்

கருத்து: விண்ணுலகம் ஆளும் வித்யா தரரும் வேதியரும் `புண்ணிய வடிவமானவர்’ என காலையும் மாலையும் போற்றுத் தொழும் ஈசனே, முக்கண்களை உடையவரே, உம் திருவடிகளைப் புகலாக அடைந்தோம் என்று சிவபெருமானை வழிபடுவோம். அப்போது வலிய தீவினைகள் நம்மை அணுகாது.

மற்றிணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்

கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ?

சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்

செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

கருத்து: `ஒப்பற்ற மலை போன்று திண் தோள்களை உடையவரே, பெரும் வலிமையால் எம்மை ஆட்கொண்ட பெருமானே, எமது குறையைச் சிறிதளவேனும் செவிமடுத்து அருளுங்கள். போகங்களை மறந்து உம் திருவடிகளைச் சரணடைந்தோம்’ என ஈசனை வழிபடுவோம்; தீவினைகள் நம்மை வாட்டாது.

மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்

பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்

பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்

சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.

கருத்து: மறக்கும் இயல்பை உடையது மனம். அதன் இயல்பை மாற்றி, பிறப்பற்ற பெருமானாகிய சிவனாரின் திருவடியில் நம் மனத்தை நிறுத்தி, புதிதாக பறித்த மலர்களால் பூஜித்து, `நாங்கள் உம்மை ஏத்தும் பணியை உடையவர்கள்’ எனக் கூறி, வழிபட்டால், பழைய வினைகள் நம்மை அண்டாது.

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே

உருகி மலர்கொடு வந்துமை ஏத்துதும், நாம் அடியோம்;

செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே

திருவிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

கருத்து: சிவனடியார்கள் நாம். பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து, ஈசனின் திருவடிகளை மலர் களால் அர்ச்சித்து, `ராவணனின் செருக்கை அழித்து ஆட் கொண்ட இறைவனே’ எனப் போற்றி சிவபெருமானை வழிபடுவோம். அவரின் திருவருளால் தீவினைகள் நம்மை அண்டாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரதோஷ பதிகங்கள்

அப்பர் அருளிய பதிகங்கள்...

பிரதோஷ வேளையில் சிவனாரின் ஆனந்தத் தாண்டவத்தை மனத்தால் தியானித்தபடி, நந்தியின் பின்னால் நின்று அவரின் கொம்புகளுக்கு இடையே, சிவ மூர்த்தியை தரிசிப்பது பெரும்புண்ணியம்.

அப்போது, ஆடலரசனைப் போற்றி அப்பர் பெருமான் அருளிய பின்வரும் பதிகங்களைப் பாடி வழிபட்டால், நன்மைகள் யாவும் கைகூடும். கோயிலுக்குச் செல்ல இயலாத அன்பர்கள், பிரதோஷ நாளில் மட்டுமன்றி, அனுதினமும் மாலைச் சந்தியா காலத்தில் இந்தப் பதிகங்களைப் பாடி வழிபட்டு சிவனருள் பெறலாம்.

தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை

மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்

பார்த்த னுக்கருள் செய்தசிற் றம்பலக்

கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.

கருத்து: அநாதியே பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயனை, பேரின்ப வடிவினனை, சிவலோக நாயகனை, ஞான உருவினனை, உலகத்தோற்றத்தின் முன் அதற்கு மூலமாய் முன்னின்ற ஒருவனை, அருச்சுனனுக்கு வேடனாய்த்தோன்றியும், பாசுபதமீந்தும் அருள்செய்த சிற்றம்பலத்துக் கூத்தப்பிரானைக் கொடியேனாகிய யான் மறந்து வாழ்வேனோ? மறவேன்!

குனித்த புருவமும் கொவ்வைச்

செவ்வாயில் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும், பவளம் போல்

மேனியில் பால் வெண் நீறும்,

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும்

காணப் பெற்றால்

மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே

இந்த மா நிலத்தே!

கருத்து: வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே மலர்ந்த புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்ற வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் பேறு கிடைத்தால், மனிதப் பிறப்பும் விரும்பத் தக்கதே!

நந்தியைப் போற்றுவோம்!

ந்திதேவர் சிவபெருமானிடம் உபதேசம் பெற்றவர். நந்திதேவரைக் குருவாகக் கொண்டு அவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தெரிசனிகளும், சத்தியஞான தெரிசனிகளிடமிருந்து மெய்க்கண்டாரும் உபதேசம் பெற்றனர். இது குரு பரம்பரை அல்லது திருக்கயிலாய பரம்பரை எனக் கூறப்படும். ஆக நந்தியை வழிபடுவதால் சிவனருளும் குருவருளும் சேர்ந்து கிடைக்கும். பிரதோஷ வேளையில் கீழ்க்காணும் நந்திபகவானின் 11 திருநாமப் போற்றி களைக் கூறி வழிபடுவதால் விசேஷ பலன்கள் கைகூடும்.

ஓம் தூயவனே போற்றி

ஓம் தர்ம ரூபணே போற்றி

ஓம் சைலாதி மூர்த்தி போற்றி

ஓம் மிருதங்க வாத்ய பிரியனே போற்றி

ஓம் சிவவாகனனே போற்றி

ஓம் அக்னி ரூபனே போற்றி

ஓம் கருணாகர மூர்த்தியே போற்றி

ஓம் வீர மூர்த்தியே போற்றி

ஓம் தனப்ரியனே போற்றி

ஓம் கனகப்ரியனே போற்றி

ஓம் சிவப்ரியனே போற்றி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism