Published:Updated:

வேல் வாங்கியதும் முருகனின் திருமேனி வியர்க்கும் அதிசயம்... சிக்கலில் களைகட்டும் கந்தசஷ்டி விழா!

நாகை அருகேயுள்ள சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாகத் தொடங்கியது. இங்கு, அம்பிகையிடம் வேல் வாங்கியதும் சிங்காரவேலரின் திருமேனி வியர்க்கும் அதிசயம் கண்கொள்ளாக் காட்சியாகும்.

சிக்கல் சிங்காரவேலவர்
சிக்கல் சிங்காரவேலவர்

நாகை அருகேயுள்ள சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாகத் தொடங்கியது.

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இத்தலத்திலுள்ள அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் முருகப்பெருமான் வேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

சிக்கல் சிங்காரவேலவர்
சிக்கல் சிங்காரவேலவர்

அன்னையிடம் வேல் வாங்கியவுடன் சிங்காரவேலவர் திருமேனியிலிருந்து வியர்வை சிந்தும் காட்சி வேறெங்கும் காண முடியாத அற்புதமாகும். இத்திருத்தலத்தில், ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா, சுந்தர கணபதிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கி, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (அக்.29) காலை நாகாபரண காட்சியும், இரவு பவள ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.

சிக்கல் சிங்காரவேலவர் கோயில்
சிக்கல் சிங்காரவேலவர் கோயில்

30 - ம் தேதி காலை மோகனாவதாரக் காட்சியும், இரவு தங்கமயில் வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறும். 31 - ம் தேதி காலை வேணுகோபால் அவதார காட்சியும், இரவு வெள்ளிரிஷப வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெறும்.

நவ.1- ம் தேதி, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் இரவு, அன்னையிடம் வேலவர் சக்திவேல் வாங்கும்போது வியர்வை சிந்தும் அற்புத தரிசனமும் நடைபெறும். 2-ம் தேதி காலை சண்முகார்ச்சனை, மதியம் சஷ்டி மகாபிஷேகம், இரவு சிங்காரவேலவர் தங்க ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சம்ஹாரம் மற்றும் வீதியுலாவும் நடைபெறும். அப்போது, கண்ணைக் கவரும் வண்ண வாணவேடிக்கைகள் நடைபெறும்.

சிக்கல் சிங்காரவேலவர் கோயில்
சிக்கல் சிங்காரவேலவர் கோயில்

3 -ம் தேதி தீர்த்தவாரி, தெய்வசேனை திருக்கல்யாணம், 4 - ம் தேதி வள்ளி திருக்கல்யணம், 5 -ம் தேதி சயனதிருக்காட்சி மற்றும் விடையாற்றியுடன் விழா இனிதே நிறைவுபெறும். இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வதால், கோயில் நிர்வாகத்தின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.