Published:Updated:

`திருச்செந்தூரின் கடலோரத்தில்...'- நவம்பர் 2-ம் தேதி சூரசம்ஹாரம்!

நவம்பர் 2, மாலை 4.30 மணிக்குமேல் செந்தூர்பெருமானின் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம்

திருச்செந்தூர், தெய்வானை சமேத ஜெயந்திநாதராய் முருகப்பெருமான் அருளிச்செய்கிற ஆறுபடை வீடுகளில் ஒன்று. இந்தத் திருத்தலத்தில் கந்த சஷ்டிப் பெருவிழா இந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி (ஐப்பசி மாதம் 11-ம் நாள்) கோலாகலமாகத் தொடங்குகிறது.

திருச்செந்தூர்
திருச்செந்தூர்

அன்று அதிகாலை தொடங்கி யாகசாலை பூஜைகள், தீபாராதனைகள், வேல்வகுப்பு வீரவாள்வகுப்புப் பாடல்கள், சண்முகவிலாசம் தேர்தல் என முதல் ஐந்து நாள்களும் விழா நடைபெறும். நவம்பர் 2 (ஐப்பசி 16-ம் நாள்) அன்று ஆறாம் திருநாள், சூரசம்ஹாரப் பெருவிழா சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

அன்று மாலை 4.30 மணிக்குமேல் செந்தூர்பெருமானின் சம்ஹார நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெறும். அவற்றைத் தொடர்ந்து மாலையில் சந்தோஷ மண்டபத்தில் காட்சி தருகிற ஜெயந்திநாதர் எனும் செந்தில் ஆண்டவர் இரவு கிரிப்பிராகாரத்தில் உலா வருகிறார்.

`மலைக்குப் பயணமாகும் வேல்!' - வேலெடுத்தல் திருவிழாவுக்குத் தயாராகும் திருப்பரங்குன்றம்
திருச்செந்தூர்
திருச்செந்தூர்

மறுநாள், நவம்பர் 3-ம் தேதி (ஐப்பசி 17) இரவு 11 மணிக்கு தெய்வானை - ஜெயந்திநாதர் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அடுத்தடுத்த நாள்களில் தெய்வானை சமேத குமரவிடங்கப்பெருமான், பட்டினப்பிரவேசக் காட்சியும் ஊஞ்சல் உற்சவக் காட்சியும் தந்தருள்வார். பன்னிரண்டாம் திருநாள் மஞ்சள் நீராடலோடு உற்சவம் நிறைவடைகிறது.

`மொகுமொகு என அதிரம் உதிர் அண்டம்பிளக்க நிமிர்அலகை கரணமிட உலகெங்கும் பிரமிக்க நடம்உடுகு பயிரவர் பவுரிகொண்டின் புறப்படு களத்தில் ஒருகோடி..' என அருணகிரிநாதர் பாடிப் பரவியதை உள்ளொழுக உணர்ந்து ஆனந்தம் பெறலாம், சஷ்டிவிரதம் இருந்து முக்தி பெறலாம். விரதங்களும் விழாக்களும் நெய்யும் திரியுமாக, பக்தி மெய்ச்சுடராய் ஞானம் விழியொளியாய் விளங்கட்டும்.. ஆறுமுகன் அருள் அடியாரை அடையட்டும்!