Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

Published:Updated:
வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

கண்ணாடி ஒன்றைச் சித்தய்யாவிடம் காட்டிய ஸ்வாமி வீரபிரம்மேந்திரர், அதை உற்றுநோக்கும்படி அந்த உத்தம சீடனைப் பணித்தார். அதன்படியே சித்தய்யா கண்ணாடியை உற்று நோக்கினார். கண்ணாடிக் காட்சியில், அளவில்லாத ஆற்றலை உடைய ஆத்மாவின் பிரகாசமான ஒளியைக் காட்டினார் வீரபிரம்மேந்திரர்!

வீரபிரம்மேந்திரர்
வீரபிரம்மேந்திரர்


அதைக் கண்டதும் சித்தய்யா சில கணங்கள் தன்னையே மறந்தார் என்றே சொல்ல வேண்டும். அப்படியொரு தெய்விகக் காட்சியைக் காணச் செய்த குருதேவரைப் போற்றிப் பணிந்தார். வீரபிரம்மேந்திரர் அவரிடம், ``குழந்தாய்! இந்த உலகில் வாழும் ஒருவர், இறைத்தன்மையை உணர்ந்து எவ்வாறு ஆன்மிகத்தில் ஈடுபடவேண்டும் என்பதைப் பற்றி விளக்குகிறேன்...’’ என்று கூறி தன் சீடருக்கு அருள் உபதேசங்களை வழங்கினார்.

``இன்பமோ, துன்பமோ நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளால் நமக்குப் பாதிப்பு ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை சாட்சியாக நின்று காணலாம் தவிர, அவற்றால் கவரப் படக்கூடாது. இயன்ற உதவிகளைத் தேவையான நேரத்தில் எல்லோருக்கும் வழங்கவேண்டும். அதன்பொருட்டு கர்வமோ, பெருமிதமோ கொள்ளக்கூடாது. குரு சேவையில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அப்போது இறையின் பரிபூரண அருள் கிடைக்கும்.

முழுமையான பக்தியோடு குரு சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் அடியவர் பாகவத உத்தமர் எனப் போற்றப்படுகிறார். சாத்வீக குணம் உடைய அவர்கள் எல்லா உயிரிடத்தும் அன்பைப் பொழிவார்கள். அவர்களின் சிந்தனை எப்போதும் இறையைப் பற்றியதாகவே இருக்கும். இதுவொரு வைராக்கிய நிலையாகும்...’’ என்று உபதேச மொழிகள் கூறி, சீடன் சித்தய்யாவை ஆசீர்வதித்தார் வீரபிரம்மேந்திரர்.

தொடர்ந்து, கண்டிமல்லய்யா மடத்துக்குத் தினமும் வரும் அனைவரின் சந்தேகங்களையும் தீர்த்துவைத்தார். ஒருநாள் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவரை தரிசிக்க வந்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்களுக்கும் எதிர்கால நிகழ்வுகளை விளக்கிக் கூறினார்.

``நீங்கள் நீராடும் புனித நதியான கிருஷ்ணா நதியானது, விஜய வாடா - இந்திரகீலாதரி மலைக்குன்றில் இருக்கும் கனக துர்கை ஆலயம் மூழ்கும் வண்ணம் பொங்கிப்பெருகும். அதன் நீர்மட்டம் கனக துர்கையின் நாசியைத்தொடும். எனது இந்த மடம் ஏழு முறை கொள்ளையர்களால் தாக்கப்படும்.

பலநூற்றாண்டுகள் கழித்து, வடமேற்கில் காந்தி என்ற பெயரைக் கொண்ட உத்தமர் பிறப்பார். அவர் வன்முறையை ஒருபோதும் விரும்பமாட்டார். பொட்டல்காடாகத் திகழும் கிராமங்கள் பலவும் ஞானியர் வருகையால் மிகப்பெரிய நகரங்களாகும்.’’

இவ்வாறு விவரித்த சுவாமி வீரபிரம்மேந்திரர், அன்னதானத்தின் சிறப்பு குறித்தும் விவரித்தார்: ``உத்தம தர்மம் என்று அழைக்கப்படுவது யாதெனில், தாம் உணவை உண்ணுமுன் எவருக்காவது உணவு அளித்துவிட்டு உண்பது ஆகும். மத்ய தர்மம் என்பது, உணவு உண்ட பிறகு பிறருக்கு வழங்குவது. அதர்மம் என்பது, பசியுடன் இருப்பவருக்குச் சிறிதளவு உணவு மட்டுமே அளித்து, அரைவயிற்றுடன் அனுப்புவதாகும். இது மிகவும் கொடிய செயலாகும்.

குழந்தைகளே! அன்னதானம் என்பது எவர் ஒருவர் நீரும் உணவும் இல்லாமல் இருக்கிறாரோ, அவற்றுக்காக ஏங்கித் தவிக்கிறார்களோ, அவர்களுக்கு உணவு அளிப்பதே ஆகும். வசதியானவர்களுக்கு அளிக்கப்படுவது அன்னதானம் அல்ல; அதன் பெயர் விருந்து. ஆலயங்களில் வழங்கப்படும் உணவை பிரசாதம் என்றே அழைக்கவேண்டும்.’’

இவ்வாறு விவரித்தவர், ``இன்னும் சில நாள்களில் நான் ஜீவ சமாதி அடையப் போகிறேன். சமாதி நிலையில் இருந்து கொண்டே என் பக்தர்களை நிச்சயம் காப்பேன். ஆகவே, எனது புறப்பாடு நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து, பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்’’ என்றும் கூறினார்.

இதைக்கேட்டுக்கொண்டிருந்த அந்த அன்பர்கள், ``ஸ்வாமி! தாங்கள் ஜீவசமாதி அடையப்போகும் நாளை, ஒரு நாள் முன்ன தாகவே தெரிவிக்கவேண்டும். தங்களின் ஜீவ சமாதிக்கு முன், நாங்கள் எல்லோரும் உங்களிடம் ஆசிபெற வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டனர்.

இப்படி வேண்டுதலை வைத்தபிறகுதான், அவர்களுக்கு ஒரு விஷயம் புத்தியில் உறைத்தது. `எல்லோருக்கும் வழிகாட்டும் ஸ்வாமியின் ஜீவ சமாதியை நாம் எவ்வாறு ஏற்க முடியும்? அவர் நீண்ட நெடுநாள் நம்முடன் இருந்து அனுக்கிரகம் செய்யவேண்டுமே’ என்ற எண்ணம் தோன்றியது. ஆகவே, தாங்கள் ஸ்வாமியிடம் அவ்வாறு கேட்டுக்கொண்டதற்காக மன்னிப்பு வேண்டினார்கள்.

ஸ்வாமி வீரபிரம்மேந்திரர் புன்னகையோடு ``நிச்சயமாக என் நிலையைக் கூறுவேன். மேலும், நீங்கள் வருந்த வேண்டிய அவசியம் இல்லை. மண்ணில் பிறக்கும் எல்லோருமே மீண்டும் மண்ணுக்குள் சென்றாக வேண்டும் என்பது இயற்கையின் நியதி. அதற்கு நான் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்? ஆகையால் கவலையை விடுங்கள்!’’ என்றார்.

ஸ்வாமி வீரபிரம்மேந்திரர் தன் சீடர்களுடன் பல்வேறு ஊர்களுக்குச் சென்று வந்தார் அல்லவா. அவர் சென்ற இடங்களில் எல்லாம் செல்வந்தர்களும் நவாபுகளும் ஜமீன்களும் விலைமதிப்பற்ற நிறைய பரிசுப்பொருள்களை அவருக்குச் சமர்ப்பணம் செய்திருந்தனர். ஸ்வாமியோ அவற்றைத் தீண்டவும் இல்லை. ஆனால் பக்தர்களின் வற்புறுத்தல் பேரிலும் அவர்களின் மனம் வருந்தும் என்ற காரணத்தாலும், அந்தப் பொருள்களின் பொருட்டு தன் சீடர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை. அதேநேரம் `இந்த மடம் ஏழு முறை கொள்ளையர்களால் தாக்கப்படும்’ என்று எச்சரித்திருந்தார். ஸ்வாமியின் வாக்கு எவ்வாறு பொய்க்கும்?!

அன்று அமாவாசை தினம். அவ்வூரில் அனைத்துத் திருடர்களும் பாழடைந்த மண்டபம் ஒன்றில் கூடியிருந்தனர். அவர்களின் தலைவன் ``இங்குள்ள ஸ்வாமியின் மடத்தில் ஏராளமான விலை யுயர்ந்த பொருள்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஸ்வாமியும் சீடர்களும் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். அப்படி அவர்கள் இல்லாத தருணத்தில் கொள்ளை நிகழ்த்தலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போதெல்லாம் அவர்கள் யாத்திரை மேற்கொள்வது இல்லையாம்.

ஆகவே, வேறு வழியில்லை! இன்று அமாவாசை. இருள் சூழ்ந்திருக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வோம். நம் முயற்சிக்கு இறைவன் அருள்புரிவார்’’ என்று கூறிவிட்டு, கொள்ளைத் திட்டத்தையும் விவரித்து முடித்தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால், பாவக் காரியத்துக்கு இறைவனைத் துணைக்கு அழைத்ததுதான்!

ஸ்வாமி வீரபிரம்மேந்திரர் முக்காலமும் அறிந்தவராயிற்றே. அவர் அமைதியாக தன் ஆசனத்தில் அமர்ந்து அடியார்களின் சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டிருந்தார். பக்தர்கள் கூட்டத்தில் கொள்ளையரும் கலந்திருந்தனர். உபதேசத்தைக் கேட்பதுபோல் நடித்துக்கொண்டிருந்தனர்.

அவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ஸ்வாமி பக்தர்களிடம், ``குழந்தைகளே! இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. எல்லோரும் உறங்கச் செல்லுங்கள். இன்று இரவில் இறைவனைச் சாட்சியாக வைத்து சில சுவாரஸ்யமான காரியங்கள் இந்த மடத்தில் நிகழப் போகின்றன’’ என்றார்.

சீடர்களும் பக்தர்களும் அவர் கூறிய வார்த்தைகளுக்குப் பொருள் தெரியாமல் விழித்தனர். ஸ்வாமியோ ``நடக்கப்போகும் விசித்திர சம்பவங்களை நாளை காலையில் உணர்ந்துகொள்வீர்கள். எல்லோரும் சென்று ஓய்வெடுங்கள்’’ என்றார்.

எல்லோரும் பிரிந்துசென்றனர். கதவுகள் அடைக்கப்பட்டன. நடுநிசியில், கொள்ளையர்கள் தங்களின் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள். பொருள்களைக் கொள்ளையடித்துவிட்டு, மடத்திலிருந்து அவர்கள் வெளியேற முயன்றபோதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!

- தரிசிப்போம்...

விசேஷ கோலங்களில் கந்தன்!

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்


கரூர் மாவட்டம் வெங்கமேடு ஆலயத்தில் வேலாயுதமும், தேவியர் இருவரும் இன்றி தனித்து அருளும் முருகப்பெருமானை தரிசிக்கலாம்.

வஜ்ராயுதம் ஏந்திய முருகனை சுவாமிமலை மற்றும் திருவிடைக் கழி தலங்களில் தரிசிக்கலாம்.

மானாமதுரையில் உள்ள சிவன் கோயிலில், ஐந்து தலை நாகத்துடன் முருகன் காட்சியளிக்கிறார்.

கையில் தாமரை ஏந்திய முருகனை ஆவூர் தலத்தில் காணலாம்.

திருவிடைக்கழி, திருமயிலாடி, அனந்தமங்கலம், வில்லுடையான் பட்டு, சாயக்காடு, திருக்கடவூர் மயானம் ஆகிய தலங்களில் வில்லுடன் காட்சி தருகிறார் முருகப் பெருமான்.

வில்-அம்பு ஏந்தி, வேட்டைக்குச் செல்வது போல் முருகப் பெருமான் காட்சி தரும் தலம் திருவையாறு.

செம்பனார்கோவிலில், ஜடா மகுடத்துடன்-தவக் கோலத்தில் அருள்புரிகிறார் முருகப்பெருமான்.

- எம்.ராமு,வேலூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism