திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

கல்யாண வரமருளும் கல்யாண ஸ்ரீநிவாசர்!

கல்யாண ஸ்ரீநிவாசர்
பிரீமியம் ஸ்டோரி
News
கல்யாண ஸ்ரீநிவாசர்

சந்நியாசி நல்லூரில் அருள்பாலிக்கும் திருமால், திருப்பதி வேங்கடாசலபதியின் திருக்கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்.

பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணு, தன் பக்தர்களின் துயர்துடைக்க பூலோகத்தில் பல்வேறு அவதாரங்களை நிகழ்த்தியிருக்கிறார். அவற்றுள் புகழ்பெற்றவை தசாவதாரங்கள். இவை தவிர, வேறு சில அற்புதங்களையும் தன் பக்தர்களுக் காக நிகழ்த்தியுள்ளார் எம்பெருமான்.

அப்படி ஒருமுறை, புராணப்பெருமை வாய்ந்த தண்பொருணையாகிய தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் நெல்லைச் சீமையில் மானுட வடிவில் எழுந்தருளினார் பெருமாள். அங்கிருந்தபடியே பக்தர்கள், சித்தர்கள், முனிவர்கள் என்று அனைவருக் கும் அருள்பாலித்து அவர்களின் துயரங்களைப் போக்கியருளினார்.

அவர் வந்த நோக்கம் நிறைவேறியதும் பூலோகப் பணியை முடித்துவிட்டு வைகுண்டம் திரும்ப ஆயத்தமானார். இதையறிந்த சந்நியாசி ஒருவர், “ஸ்ரீநிவாசனே... தாங்கள் வைகுண்டம் சென்று விட்டால் கலியுகத்தில் மனிதகுலத்தை யார் காப்பது...” என்று வருந்தினார். அத்துடன், “தாங்கள் இங்கேயே இருந்து அனைவரையும் காத்தருள வேண்டும்” என்றும் வேண்டிக்கொண்டார்.

கல்யாண ஸ்ரீநிவாசர் கோயில்
கல்யாண ஸ்ரீநிவாசர் கோயில்

சந்நியாசியின் கோரிக்கையை ஏற்ற திருமால் அதே இடத்திலேயே ஸ்ரீநிவாசனாகக் கோயில்கொண்டார். அந்த இடம் சந்நியாசியின் பெயராலேயே ‘சந்நியாசி நல்லூர்’ என்று அழைக்கப்பட்டது.

தென் திருப்பதி சந்நியாசி நல்லூர்

சந்நியாசி நல்லூரில் அருள்பாலிக்கும் திருமால், திருப்பதி வேங்கடாசலபதியின் திருக்கோலத்திலேயே அருள்பாலிக்கிறார். ஆகவே, இந்தத் தலம் ‘தென் திருப்பதி’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. வலது மார்பில் ஸ்ரீதேவியையும் இடது மார்பில் பூதேவியையும் தாங்கியபடி, கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சியளிக்கிறார் மூலவர் வேங்கடாசலபதி.

உற்சவராக கல்யாண ஸ்ரீநிவாசர், ஸ்ரீதேவி பூமிதேவியுடன் அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டபத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்கிறார். வராகர், கருடர், நரசிம்மர், ஹயக்ரீவர் ஆகிய திருமுகங்களுடன் தனது திருமுகமும் கொண்டு அருள்பாலிக்கும் இந்த பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட்டால், வினைகள் அனைத்தும் தீரும்.

நீராஞ்சன தீபம்... கல்யாணம் வரம்!

திருப்பதி திருக்கோயிலில் துலாபாரம், முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டவர்கள், அங்கே செல்ல முடியாத நிலையில், இந்தத் தலத்துக்கு வந்து தங்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றிச் செல்கிறார்கள். திருமணத் தடை உள்ளவர்கள், 48 நாள்கள் தொடர்ந்து தினமும் காலை வேளையில் (பச்சரிசி பரப்பி அதன்மீது தேங்காய் முறியில்) நீராஞ்சன தீபம் ஏற்றி, துளசி அர்ச்சனை செய்து, கல்யாண ஸ்ரீநிவாசரை வழிபட்டால், தடைகள் யாவும் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

கல்யாண ஸ்ரீநிவாசர்
கல்யாண ஸ்ரீநிவாசர்

குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், தொடர்ந்து 11 வியாழக்கிழமைகள், இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளுக்கு மல்லிகைப்பூ மாலை சாற்றி, `பால் பாயசம்’ நிவேதனம் செய்து, அந்தப் பிரசாதத்தை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இதன் பலனாக விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம். அதேபோல், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றி வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

புரட்டாசி கருடசேவையும், ஐப்பசி மாதம் தொடங்கி 41 நாள்கள் நடைபெறும் ஊஞ்சல் உற்சவமும், தை மாத வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவமும் இத்தலத்தின் முக்கிய விழாக்களாகும்.

எப்படிச் செல்வது?: நெல்லைச் சந்திப்பு பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில், சந்நியாசி நல்லூர் கிராமத்தில் உள்ளது இந்தத் திருக்கோயில். (தொடர்புக்கு - சுந்தரராஜ பட்டாசார்யர்: 94432 26861).

நடை திறந்திருக்கும் நேரம் : காலை 7: 30 முதல் 11 மணி வரை; மாலை 5.30 முதல் 9 மணி வரை.