Published:Updated:

ஆண்டாள் கிளியும் அம்மன் வளையலும்!

V.I.P பூஜை அறை
பிரீமியம் ஸ்டோரி
V.I.P பூஜை அறை

பிரேமா நாராயணன்

ஆண்டாள் கிளியும் அம்மன் வளையலும்!

பிரேமா நாராயணன்

Published:Updated:
V.I.P பூஜை அறை
பிரீமியம் ஸ்டோரி
V.I.P பூஜை அறை

“வாங்க.. இதுதான் எங்கள் பூஜை அறை!” என்று நம்மை மாடிக்கு அழைத்துச் சென்று அந்த முக்கிய பிரமுகர் காட்டிய இடம்... பூஜை அறை அல்ல பூஜை கூடம் (ஹால்) என்றே சொல்லலாம். ஒரு 40, 50 பேர் அமர்ந்து பஜன் பாடும் அளவுக்கு விசாலமாக இருந்தது.

சவுமியா அன்புமணி
சவுமியா அன்புமணி


முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாசின் மகனுமான டாக்டர் அன்புமணியின் இல்லம் அது. அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி, தெய்வ நம்பிக்கையும் மிகுந்தபக்தியும் கொண்டவர். அப்போதுதான் காலை பூஜையை முடித்திருந்தார். இரு பக்கமும் தூண்களுடன், மேலே வளையல் தோரணம் அலங்கரிக்க, மிக எழிலாகக் காட்சி தந்தது மரத்தாலான அந்தப் பூஜை மாடம்.

“தினம் குறைந்தது பத்து நிமிடங்களாவது இங்கே உட்கார்ந்து, ஏதாவது ஒரு சுவாமி பாட்டு, ஸ்லோகம் அல்லது 108 போற்றி கண்டிப்பாகச் சொல்லிவிடுவேன். அது ஒரு தியானம் மாதிரி மனதுக்கு அமைதியைத் தரும். அதுதான் என்னைக் காப்பாற்றுகிறது என்று மனதார நினைக்கிறேன். வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம், நைவேத்தியம் செய்வதால் 2 மணி நேரம் ஆகிவிடும். இங்கேயிருக்கும் சிலைகளில் சில, நான் திருமணமாகி வரும்போது என் அம்மா எனக்குச் சீராகக் கொடுத்தவை. நடுநாயகமாக இருக்கும் வேங்கடாசலபதி படம் மிகப் பழைமையானது.

சவுமியா அன்புமணி
சவுமியா அன்புமணி

எங்கள் தைலாவரம் தோட்ட இல்லம் கட்டும்போது, செட்டிநாடு ஸ்டைலில் கட்ட வேண்டுமென்று என் மாமியார் காரைக்குடிக்குப் போய் சில தூண்கள், நிலைக்கதவு எல்லாம் வாங்கினார். நானும் போயிருந்தேன். அப்போது அங்கேதான் இந்தப் பெருமாள் படத்தைப் பார்த்து, மிகவும் பிடித்துப்போய் வாங்கி வந்தேன். அப்போதிலிருந்து இருக்கும் இவர், எனக்கு மிகவும் பிடித்தமானவர்.

ஆண்டாள் என்றால் கொள்ளை பிரியம். என் தாய் வீடு திருவல்லிக்கேணியில் இருந்த போது, என் தாயாரும் என் தாய்மாமா மனைவி தேவி மாமியும் என்னை பார்த்தசாரதி கோயிலில் இருக்கும் ஆண்டாள் சந்நிதிக்கு அழைத்துச் சென்று, அர்ச்சனை செய்து ‘நல்ல கணவன் அமைய வேண்டும் சவுமியாவுக்கு’ என்று வேண்டிக்கொள்வார்கள். அதுபோலவே எனக்கு மிக நல்ல கணவன் வாய்த்தார். அதனால் ஆண்டாள்மீது பக்தி அதிகம்.

எங்களுக்கு மூன்று மகள்கள். அவர்களின் திருமணத்துக்காகவும் நான் ஆண்டாளிடம் வேண்டிக்கொண்டேன். அது என்ன ‘மேஜிக்’ என்று தெரியவில்லை, ஒவ்வொரு மகள் திருமணத்துக்கு முன்பும் வில்லிபுத்தூர் கோயிலிலிருந்து யார் மூலமாவது கிளி வரும். முதல் கிளி வந்த போது, அதை பூஜையில் வைத்துக் கும்பிட்டேன். பெரிய பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை அமைந்து, திருமணம் முடிந்தது. அடுத்து ஒரு கிளி கொடுத்தார்கள். அதையும் சுவாமி மாடத்தில் வைத்து வேண்டிய போது, நல்ல வரன் வந்தது. என்ன அதிசயம் பாருங்கள்... கடந்த மாதம் அதே தேவி மாமி மூலமாக மூன்றாவதாக வில்லிபுத்தூரில் இருந்து ஒரு கிளி வந்திருக்கிறது. எல்லாம் அந்த ஆண்டாளின் அனுக்கிரகம்!” – கைகளைக் கூப்பி வணங்கியபடி கூறினார்.

“யோக ஆஞ்சநேயர் விக்கிரகம் இருக்கிறதே... மிகவும் அரிதானது அல்லவா?”

பூஜை அறை
பூஜை அறை

“ஆமாம்.. ஆஞ்சநேயர் என் தந்தையின் குடும்பத்தில் குலதெய்வம். என்னுடைய இஷ்ட தெய்வமும் அவர்தான். மயிலாப்பூரில் சாயி பாபா கோயிலுக்குப் பின்புறமுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு நானே என் கையால் வெற்றிலை மாலை கட்டி எடுத்துக்கொண்டு அடிக்கடி போவேன். காஞ்சிப் பெரியவர் நிறுவிய கோயில் அது. சேலம் பக்கம் போனால் நாமக் கல் அனுமனைத் தரிசிக்காமல் வருவதில்லை.

திண்டிவனம் – சென்னை சாலையில் தொழுப்பேடு என்ற இடத்தில் ஹைவேஸிலேயே ஓர் அனுமார் கோயில் இருக்கிறது. சாலையில் போகும்போதே கம்பீரமாகத் தெரிவார். வழித் துணைக்கு அவர்தான். எங்கள் வீட்டில் எல்லோருமே கட்சி, படிப்பு, வேலை என்று அதிகம் பயணம் செய்பவர்கள். யார் எங்கு போனாலும் நான் அவரை வேண்டிக் கொள்வேன் ‘எல்லாரும் பத்திரமாக வீடு வந்து சேரணும்’ என்று. எப்போது போனாலும் அந்த இடத்தில் நிறுத்தி வணங்காமல் செல்வதில்லை..

குலதெய்வ வழிபாடு..?

குலதெய்வ வழிபாடு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நம் குலம் தழைக்க கண்டிப்பாக குலதெய்வத்தை வணங்க வேண்டும். தாய், தந்தை இருவரின் வழி குல தெய்வங்களையும் வணங்க வேண்டும். என் புகுந்த வீட்டில் குலதெய்வம் நல்லாவூர் ஐயனாரப்பன். வருடா வருடம் அந்தக் கோயிலுக்குப் போய் பொங்கல் வைத்து எடுத்து வருவேன்.

அதில் முக்கியமான விஷயம், கோயில் இருக்கும் நல்லாவூரிலிருந்து திண்டிவனம் வீடு வரைக்கும் பொங்கலை எடுத்து வரும்போது அதனுடன் நெய் விளக்கையும் அணையாமல் கொண்டு வரவேண்டும். வீட்டுக்கு வந்து சாமி அறையில் வைக்கும் வரை ரொம்ப டென்ஷனாக இருக்கும். பயந்துகொண்டே எடுத்து வருவேன்.. ஆனால் இதுவரை ஒரு முறைகூட அணைந்ததில்லை”.

“தெய்வம் உங்களுக்கு பிரத்யட்சமாக அருளிய அதிசயம் ஏதேனும் நடந்திருக்கிறதா?”

“மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் எனக்குப் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கி றாள். எனக்குத் திருமணமான அன்றே என்னை மாமியார் அங்கேதான் அழைத்துச் சென்றார். சென்னையில் திருமணம் முடித்து, திண்டிவனம் போகும் வழியில் முதன்முதலில் அந்த அன்னையை தரிசித்த பின்னர்தான் வாழ்க்கை தொடங்கியது. என் கணவர் பெயருக்கு ஏற்றாற்போல மிகவும் அன்பானவர். நல்ல கணவர்; சிறந்த தந்தை. மேல்மருவத்தூர் அம்மாதான் இவரைக் கொடுத்தது என்று எனக்கு அழுத்தமான நம்பிக்கை. அதேபோல், என் மகள்களுக்காகவும் அம்மாவிடம் வேண்டிக் கொண்டேன். பிரத்யட்சமாக நடத்திக் காண்பித்து விட்டார் அந்த அம்மா! என் ஜாதகத்திலேயே ஒரு குருவை ஏற்று, அவரை வணங்குவதற்கான அம்சம் இருப்பதாகச் சொல்வார்கள். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்தான் என்னுடைய குரு. என்ன கோரிக்கை வைத்தாலும் நடத்திக் கொடுப்பார்.

ராமேஸ்வரம் பக்கத்தில் இருக்கும் நம்பு நாயகி அம்மன் கோயில் குழந்தை வரம் தரும் தலம். அங்கே அம்மிக்கல் கிடக்கும். மஞ்சள் வாங்கி நாமே அரைத்து, அம்மனுக்குச் சார்த்த வேண்டும். திருமணம், குழந்தை என எல்லா வரங்களையும் அருள்வாள் நம்பு நாயகி. எங்கள் குடும்பத்தில் திருமணம் ஆன பிள்ளைகளை எல்லாம் அங்கே அழைத்துச் சென்றிருந்தோம். அடுத்த வருடமே அனைவருக்கும் குழந்தை பிறந்தது. இது நிச்சயம் அம்மனின் அற்புதம்தான்!”

“உங்கள் பூஜை மாடத்தைச் சுற்றிலும் சரம் சரமாக வளையல் கள் தொங்குவதில் எதுவும் விசேஷம் உண்டா?”

“பூத்தோரணத்தைப் போல நான் கட்டியிருக்கும் வளையல் தோரணம். அம்மன் அனுப்பியது! நான் எந்த அம்மன் கோயிலுக்குப் போனாலும் மாலை வாங்குவது போல அம்மனுக்குப் பூச்சடையும் வளையலும் வாங்கிக் கொடுப்பேன். அந்த வளையலை எல்லோருக்கும் கொடுத்தது போக, எனக்கும் கொடுப்பார்கள். என்னுடைய தாயாரும் மயிலாப்பூர் பச்சை அம்மன் கோயிலில் இருந்து பச்சை வளையல்கள் வாங்கி வந்து கொடுப்பார்கள்.

ஆறேழு வருடங்களுக்கு முன் ஒரு மே மாதம் அம்மா காலமாகிவிட்டார். அந்த ஆடி மாதம், பச்சை அம்மன் கோயிலில் இருந்து திடீரென பூசாரி வளையல் அனுப்பியிருந்தார். என்ன என்று கேட்டபோது, ‘அம்மா கனவுல வந்தாங்கம்மா.. உங்களுக்கு இந்த வளையல் கொடுக்கச் சொன்னாங்க’ என்று சொன்னார். அன்று எங்கள் 25-வது திருமண நாள். எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இப்படி வருடம்தோறும் வரும் வளையல்கள்தான் இந்தத் தோரணம்!”

“கோயில்கள்..?”

“காசி, ராமேஸ்வரம், அலகாபாத்தில் தொடங்கி, இங்கே பிள்ளையார்பட்டி வரை எக்கச்சக்கமான கோயில்களுக்குப் போயிருக்கிறேன். ஆண்டுதோறும் எங்கள் திருமண நாள் திருப்பதியில்தான். நான் மறந்தாலும் என் கணவர் கனவில் பெருமாள் வந்து அழைத்துவிடுவார். டெல்லியில் இருக்கும்போது, அங்கே தமிழர்கள் அதிகம் வரும் மலை மந்திர் முருகன் கோயிலுக்குப் போய்விடுவேன்.

நம் நாட்டைப் பொறுத்த வரை கோயில் என்பது வழிபாட்டு தலம் மட்டுமல்ல; நம் பெண்களுக்கு, மனதின் காயங்களுக்கு மருந்து போடும் சிகிச்சை நிலையம். மன அழுத்தம் மிகும் போது அங்கே போய் நின்று, நம் குறையைச் சொல்லி, இரண்டு சொட்டு கண்ணீர் விட்டால் நம் பாரம் குறையும். குறையைச் சொல்வதற்கு மட்டுமல்ல, நமக்குக் கடவுள் தந்திருக்கும் நல்ல விஷயங் களுக்காக நன்றி சொல்வதற்கும்தான் ஆலயங்கள். மொத்தத்தில் ஆன்மிகம் நமக்கு சிகிச்சை; அதுதான் நமது வாழ்க்கை!” பளிச்சென்று வருகிறது சவுமியாவின் பதில்.

நிதர்சனமான வார்த்தைகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism