Published:Updated:

சித்தர்கள் வழிபடும் பைரவ பூமி!

பைரவ பூமி
பிரீமியம் ஸ்டோரி
பைரவ பூமி

பைரவ பூமி

சித்தர்கள் வழிபடும் பைரவ பூமி!

பைரவ பூமி

Published:Updated:
பைரவ பூமி
பிரீமியம் ஸ்டோரி
பைரவ பூமிசிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச்சிறப்பாகப் போற்றப்படுவது பைரவ மூர்த்தம். பைரவர் என்றால் பயங்கரமானவர் என்று பொருள். அன்பர்களுக்குக் காவலாக இருந்து தர்மத்தைக் காப்பதால் இவர் பைரவர் என்று போற்றப்படுகிறார் என்பார்கள் அடியார்கள்.

சிவபெருமான்
சிவபெருமான்
பைரவேஸ்வரி
பைரவேஸ்வரி


எல்லா உலகுக்கும் தந்தையாய் திகழும் சிவபெருமான், உலகமும் உயிர்களும் துன்பப்படும் காலங்களில் அனைவரையும் காக்கும் பொருட்டு எடுத்துவரும் திருக்கோலமே பைரவ வடிவம் என்கின்றன ஞானநூல்கள்.

பைரவர் என்பது மருவி வைரவர் என்றானதாகவும் சொல்வர். வைரம் போல் திடமான தேகம் கொண்டவர்; பக்தர்களுக்கு வைரம் போன்ற உறுதியான கோட்டையாக இருந்து காவல் தெய்வமாக விளங்குபவர். ஆகவே இவருக்கு வைரவர் என்று திருப்பெயர் என்பார்கள் ஆன்றோர்கள். வேதமே நாய் வடிவம் கொண்டு பைரவருக்கு வாகனமாக உள்ளது என்றும் சொல்கின்றனர்.

சிவனாரின் திருமேனியிலிருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றியதாக கூறுவர். அஸிதாங்கர், ருரு, சண்டர், உன்மத்தர், கபாலர், பீஷணர், க்ரோதனர், சம்ஹாரர். பைரவரின் இந்தத் திருவடிவங்கள் எட்டும் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் நீக்கமற நிறைந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றனவாம்.

இந்த எட்டு திருக்கோலங்களுக்கு எல்லாம் மூலம் என்று ஆதி மகாபைரவ மூர்த்தியைப் போற்றுகின்றன ஞானநூல்கள். இந்த ஆதி மூர்த்தி அவதரித்த தலம்தான் சோழபுரம் என்கிறது தலபுராணம். பைரவபுரி, வயிரவபுரி என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் இந்த ஊர், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது.

பைரவ பூமி
பைரவ பூமி
சோழபுரம்
சோழபுரம்
பைரவேஸ்வரர் சந்நிதி
பைரவேஸ்வரர் சந்நிதி


ஆதிமகாபைரவர் இந்தப் பூவுலகில் தமது திருவடிகளை முதன் முதலாக பதித்த புண்ணிய தலம் சோழபுரம். மட்டுமன்றி அஷ்ட பைரவரும் சிவபெருமானை பூஜித்த தலமும் இது மட்டும்தான் என்கிறார்கள். ஆகவே இங்கு அருள்பாலிக்கும் ஈசனுக்கு பைரவேஸ்வரர் என்று திருப்பெயர்; அம்பாள் பைரவேஸ்வரி.

திதிகளில் அஷ்டமியும் கிழமைகளில் ஞாயிறும் பைரவருக்கு உகந்தவை என்கின்றன ஞானநூல்கள். எட்டாவது திதியான அஷ்டமி பிறந்த தலமும் சோழபுரம்தான். அதேபோல் அம்பிகைக்கு மிக உகந்த பைரவி ராகம் பிறந்ததும் இந்த க்ஷேத்திரத்தில்தானாம்!

கலி யுகத்தின் தொடக்கத்தில் இந்தத் தலத்துக்கு வந்தார் அகத்திய மாமுனிவர். அவர் இவ்வூர் ஈசனை `பைரவி துணைவா’ என்று போற்றி வழிபட்டாராம். அதைச் செவிமடுத்த நொடியில் அம்பாள் பைரவேஸ்வரியின் (விக்கிரகத் திருமேனியில்) கண்மலர்களில் பேரானந்தக் கண்ணீர் துளிர்த்ததாம்.

`பைரவி துணைவா என்று அகத்தியர் துதித்த திருநாம போற்றி தம்மைப் பெரிதும் மகிழ்வித்தது’ என்று பைரவி ராகத்திலேயே அம்பாள் தன்னுடைய அருள்வாக்காக மொழிந்தாளாம். ஆகவே, இங்கு அஷ்டமி தினங்களில் பைரவி ராகத்தால் ஆன பாடல்களைப் பாடி வழிபட்டால், அன்னையின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்; பெண்களுக்குச் சகல நலன்களும் மங்கலங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முருகப்பெருமான்
முருகப்பெருமான்
தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி
துர்கை
துர்கை


அம்பாளின் கண்களில் துளிர்த்த அமிர்தத்துளிகளே இந்தத் தலத்தில் பைரவ அமிர்த தீர்த்தமாகத் திகழ்கிறதாம். அதேபோல் இந்தக் கோயிலின் தலவிருட்சம் எட்டுத் தளங்களுடன்கூடிய வில்வம் ஆகும். புண்ணியபூமியான இந்தச் சோழபுரத்தில் எண் `8’-க்கு மிகவும் சிறப்புண்டு.

ஆம்! அஷ்ட பைரவர்கள் மட்டுமன்றி, அஷ்டதிக் பாலகர்களும் அஷ்ட வசுக்களும் பூஜித்த ஆலயம் இது. இன்றும் இவர்களுடன் சித்த புருஷர்களும் சூட்சும வடிவில் வந்து இறைவனையும் இறைவியையும் வழிபடுவதாக ஐதிகம்.

வீடு, நிலப் பிரச்னைகள் மற்றும் வாஸ்து குறைபாடுகளால் அவதிப் படும் அன்பர்கள், செவ்வாய்க் கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபட்டால், பிரச்னைகள் நீங்கி நலம்பெறலாம்.

அதேபோல் நவகிரகங்களில் சனிபகவானுக்கு பைரவமூர்த்தி கோலத்தில் சிவபெருமான் அருள்பாலித்த தலம் இது. சனிபகவானுக்கு அருளிய ஈசன், பைரவேஸ்வரர் கோயில் அருகிலேயே வேறொரு கோயிலில் அருள்மிகு கயிலாசநாதராக அருள்கிறார். அவரை தரிசித்து வழிபட்ட சனி கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி நலம் பெறலாம். ஆதிகாலத்தில் இவ்வூரில் அஷ்ட பைரவர் பூஜித்த அஷ்ட லிங்கங்களும் பீடங்களும் எட்டு திக்குகளிலும் இருந்தனவாம். காலப்போக்கில் சிதிலமுற்றுப் போயின என்கிறார்கள். மீண்டும் அஷ்ட திசைகளிலும் லிங்கத் திருமேனிகளைப் பிரதிஷ்டை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது பைரவேஸ்வரர் கோயில் மட்டுமே மிஞ்சியுள்ளது. எட்டு படிகளுடன் கூடிய மாடக்கோயிலாக இது விளங்குகிறது. கோஷ்ட தெய்வங்களுடன் கூடிய பைரவேஸ்வரர் சந்நிதி மட்டும் புனரமைக்கப் பட்டுள்ளது. கங்கா விசர்ஜனர், துர்கை, காலபைரவர் ஆகிய தெய்வத் திருமேனிகள் அழகு மிளிரத் திகழ்கின்றன. சுற்றுக் கோயில் பகுதியும் ஆன்மிக ஆர்வலர்களால் சீரமைக்கப்பட்டு வருகிறது. தற்போது நாம் தரிசிக்கும் அம்பிகையின் திருமேனியியும் சமீபகால பிரதிஷ்டை என்கிறார்கள். கார்த்திகை மாதம் காலபைரவ அஷ்டமி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

தலத்தின் சிறப்பு குறித்து இந்தக் கோயிலின் கார்த்திகேயன் குருக்களிடம் பேசினோம்.

“உலகிலேயே சிவபெருமான் பைரவராக வீற்றிருந்து அருள்வது இந்தத் தலத்தில்தான். யோக மார்க்கத்தில் சிறப்பான பலன்களைப் பெற விரும்புவோர் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறார்கள்; தியானம் மேற்கொள்கிறார்கள்.

மட்டுமன்றி இங்கு வந்து சுவாமியையும் அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்து வழிபட்டால், வீடு, நிலம், வாஸ்து தொடர்பான பிரச்னைகள் நீங்கும்; தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. சகல உயிர்களையும் காத்து பரிபாலிக்கும் பைரவ சக்தி நிறைந்த தலம் இது. ஆக, ஒருமுறை இங்குவந்து வழிபட்டால் போதும்; வாழ்வில் பல அற்புதங்களைச் சந்தித்து மகிழலாம்’’ என்றார் சிலிர்ப்புடன்.

எப்படிச் செல்வது?: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து அணைக்கரை செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சோழபுரம். கும்பகோணம், அணைக்கரை ஆகிய ஊர்களிலிருந்து செல்ல பேருந்து வசதிகள் உண்டு.

நரம்பியல் நோய் தீர்க்கும் பைரவ படி பூஜை!

பைரவ படி பூஜை
பைரவ படி பூஜை


அகத்தியர் `வாரணத் துதி’ எனப்படும் மிக அற்புதமான பாடலை இந்தத் தலத்து இறைவனைப் போற்றி அருளியுள்ளார். அந்தப் பாடலும் அட்ட கந்தம், எட்டு சந்தம் என்று எண் `8’-ன் சிறப்பை அடிப்படையாகக் கொண்டு திகழ்வது விசேஷம்.

`அட்டகந்த எட்டு சந்த...’ என்று தொடங்குகிறது அந்தத் துதிப் பாடல். அட்ட கந்தம் என்பது பெருமானுக்குச் சாத்துவதற்கு உகந்த எட்டுவித வாசனைத் திரவியங்கள் ஆகும். ‘எட்டு சந்தம்’ என்பது, ஆதியில் தோன்றிய எட்டுவிதமான ஒலியின் சக்தி மூலங்கள் ஆகும். இவையே பிரபஞ்சமொழிகள் அனைத்துக்கும் அடிப்படை. பிரபஞ்சம் அழிந்தபின்னும் எஞ்சிநிற்கும் தன்மை கொண்டவை.

அற்புதமான இந்த வாரணத் துதியைப் பாடி பைரவேஸ்வரரை தியானித்து வழிபட்டால், ஆழ்நிலை தியானம் எளிதில் கைகூடுமாம்.

வேறெங்கும் காண்பதற்கரிய ‘அட்ட முஃட்ட நிட்டைப் படிகள்’ எனப்படும் எட்டு பைரவப் படிகள் இத்தலத்துக்கே உரிய விசேஷ அம்சமாகும். அகத்தியரின் வாரணத் துதியில் ஒளிரும் அஷ்ட பைரவ சக்திகளே இப்படிகளில் உறைந்துள்ளதாக ஐதிகம்.

இந்தப் படிகளை நீரால் சுத்தம் செய்து, மாக்கோலம் இட்டு, எட்டு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் அளப்பரிய நன்மைகள் பெறலாம். குறிப்பாக நரம்பியல், மூளை பிரச்னைகள் உடைய அன்பர்கள் குணம் அடையும் பொருட்டு இந்தப் பைரவ படிபூஜையைச் செய்து பலன் பெறலாம்.

`அட்டகந்த எட்டுசந்த முஃட்டமேய நிட்டமாம்

எட்டு துறை படிதந்த பைரவா, பைரவா

தொட்டு வந்து காக்குமே காக்குமே - பைரவம்

கிட்ட நின்று காக்குமே காக்குமே காக்குமே’

என்ற பாடலைப் பாடியபடி இந்தப் படிகளை வணங்கிக் கடப்பது, அளப்பரிய நலன்களை அள்ளித்தரும் பிரார்த்தனையாக அகத்தியப் பெருமானால் அருளப்பெற்றுள்ளது.