Published:Updated:

எனக்கு வழிகாட்டி அருள்வது மூவர்

ரேவதி சங்கரன்
பிரீமியம் ஸ்டோரி
ரேவதி சங்கரன்

நம்நாட்டில் ஆன்மிகம் என்பது பிறக்கும்போதே நமது ரத்தத்தில், உணர்வில் ஊறிய ஒன்று

எனக்கு வழிகாட்டி அருள்வது மூவர்

நம்நாட்டில் ஆன்மிகம் என்பது பிறக்கும்போதே நமது ரத்தத்தில், உணர்வில் ஊறிய ஒன்று

Published:Updated:
ரேவதி சங்கரன்
பிரீமியம் ஸ்டோரி
ரேவதி சங்கரன்

அந்த கணீர் குரல்... எப்போதும் சிரிப்பைத் தாங்கிய முகம்... அன்பை அள்ளித் தருகிற குணம்... ஒரு பிரபலம் என்ற பந்தா எல்லாம் இல்லாமல், தாய் போன்ற வாஞ்சையோடு அனைவரிடமும் பழகும் எளிய பண்பு... எதைக் கேட்டாலும் கணமும் யோசிக்காமல் சட்டென அருவி மாதிரி கொட்டும் பதில்கள்... இதுதான் சகலகலாவல்லி ரேவதி சங்கரன். அழைப்பவர் அனைவருக்கும் ‘ரேவதி அம்மா’. அவரோடு ஓர் ஆன்மிக உரையாடல்!

காஞ்சி மஹா ஸ்வாமிகள்
காஞ்சி மஹா ஸ்வாமிகள்


? உங்களுக்கு ஆன்மிக ஈடுபாடு வந்தது எந்த வயதில்? எப்படி?

நம்நாட்டில் ஆன்மிகம் என்பது பிறக்கும்போதே நமது ரத்தத்தில், உணர்வில் ஊறிய ஒன்று. கருவில் இருக்கும்போதே அம்மா சொன்ன கந்த சஷ்டிக் கவசத்தையோ அல்லது லலிதாஸஹஸ்ர நாமத்தையோ கேட்டிருந்தால், அது டி.என்.ஏ.வில் பதிவாகியிருக்கும்.

பிறந்ததும் வீட்டில் கேட்ட தெய்விக ஸ்லோகங்கள் மற்றும் பாடல்கள், இன்னும் ஆழமாக பக்தி எனும் உணர்வை ஊட்டும். முதன் முதலில் பள்ளியில் படிக்கப்போகும்போது நெற்றியில் திருநீறு இட்டு ‘சாமியை வேண்டிக்கோ நல்லா படிப்புவரணும்னு’- என்ற மூத்தோரின் வார்த்தைகள், ‘நமக்கு பெரிய துணை கடவுள்தான்’ என்ற நம்பிக்கைத் தணலை விசிறிவிடும்.

4 - 5 வயதில் என்னை அமரவைத்து கன்யா பூஜை செய்த நினைவு பசுமையாக இருக்கிறது. எனக்குப் பட்டாடை அணிவித்து, சந்தனம் குங்குமம் இட்டு, மாலை சூட்டி, தாம்பூலம் தந்து, பெண்கள் கன்யாவாக வரித்து என்னை வணங்கியபோது ஏற்பட்டது குழப்பம்.

பாட்டி விளக்கினார். ‘உன்னை வணங்கவில்லை. உன்னை அம்மனாக நினைத்து நமஸ்கரித்தார்கள். நீ அந்த படிக்கு உயர வேண்டும். உன்னைத் தகுதியாக்கிக் கொள்ளவேண்டும்’ என்றார்.

இப்படித்தான் எனக்கு ஆன்மிக உணர்வு முளைவிட்டு வளர ஆரம்பித் தது. அது செடியாகி, மரமாவது குடும்பச் சூழலைப் பொறுத்துதான். நல்லவேளையாக உரமூட்டும் பாட்டியின் பூஜைகள், அவருடன் சென்று கதைகள், உபன்யாசம் கேட்ட பதிவுகள், அம்மாவின் ஆழ்ந்த தெய்வீகச் சிந்தனைகள்... அதன் பிறகு படித்தது கிறிஸ்தவக் கல்லூரியானாலும் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடும் சுதந்திரம்... எல்லாமுமாகச் சேர்ந்து நம் இந்து கடவுளர் அனைவரையும் மகிழ்வுடன் வணங்க ஒரு நல்ல களத்தை ஏற்படுத்தின. திருமணம் செய்த பிறகு இவருக்கும் பூஜை, புனஸ்காரங்களில் இருந்த நம்பிக்கை என்னுடைய இறை நம்பிக்கைக்கு நீரூற்றி வளரச்செய்தது!’’

எனக்கு வழிகாட்டி அருள்வது மூவர்
ரேவதி சங்கரன்


? உங்கள் கடவுள் வழிபாடு பற்றிச் சொல்லுங்களேன்... நித்திய பூஜை செய்பவரா?’’

‘`செய்பவரா என்பதைக் கொஞ்சம் மாற்றி, ‘செய்தவரா’ என்று கேளுங்கள். ஒரு காலத்தில் நித்ய வழிபாடுகள் முறையாகச் செய்தவள்தான். பின் பணிச் சூழலால் நீண்ட நேரம் உட்கார்ந்து அபிஷேகம், அலங்காரம் என்று செய்யமுடியாமல் போனது. ஸ்லோகங்களை மட்டும் முணுமுணுத்தபடி அன்றாட அலுவல்கள் நடக்கும். இப்போது எல்லாம் இறையுணர்வு மூச்சுடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது என்னுடைய பரிணாம வளர்ச்சி. கடைசிநேரத்தில் இறை உணர்வும் நினைவும் இருந்தால் போதும். அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் எனலாம்!’’

? மனதுக்குப் பிடித்த கோயில் எது? மனசு சரியில்லாதபோதோ, அமைதியை நாடும்போதோ செல்லும் ஆலயம் எது?

என் உள்ளக்கோயில் என்றால் அது ஆலவாய் ஈசனும் அங்கயற் கண்ணியும் உறையும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்தான்.

சிறு வயதில் பாட்டியுடனும் அம்மாவுடனும் கையைப் பிடித்துக் கொண்டு சென்றதும், பருவ வயதில் தாவணி போட்ட பிறகு, கைநிறைய கண்ணாடி வளையல்களைப் போட்டுக்கொண்டு கையை வீசிக்கொண்டு சென்றதும், எல்லா சந்நிதிகளிலும் தெரிந்ததைப் பாடியதும், மாலை வேளையில் பொற்றாமரைக் குளத்துப் படிகளில் அமர்ந்து, சாயரட்சை மணியோசை கேட்டு தீபாராதனைக்கு உள்ளே ஓடிச்சென்று தரிசித்ததும்... அது ஒரு கனாக்காலம்...

அன்று மனதில் பதிந்த சித்திரங்களும் நினைவுகளும், இன்று தனிமையில் உட்கார்ந்து மாலை வேளையில் விளக்கேற்றியதும் கமழும் ஊதுவத்தி புகை என்முன்னே விரிவதுபோல விரியும்போது... அதில் மூழ்கும்போது ஓர் ஆனந்தம். அப்போது அந்தநாள் ஞாபகம் மெல்லிய கண்ணீர்ப் படலமாக இமைகளில் துளிர்க்கும். அது போதும் இந்தப் பிறவிக்கு!

சிறுமியாக பாட்டியுடன் சென்று, ஒவ்வொரு சந்நிதியிலும் பாடி நின்ற மற்றோரு கோயில் தி நகர் அகஸ்தியர் கோயில். அங்குள்ள இறையுருவங்கள் பேரழகு. கண்ணை மூடினாலும் உள்ளே தெரியும் உணர்வு. நவகிரகங்களைச் சுற்றிச் சுற்றி வந்து அழகை ரசிப்பேன். முன்பெல்லாம் சனி, ஞாயிறு குடும்பத்துடன் சென்னையைச் சுற்றியுள்ள ஆலயங்களுக்குப் போவது வழக்கம்!

மனதில் சிறிது கலக்கம் உண்டானாலும் என் பூஜை அறைதான் எனக்குச் சரணாலயம். முறையிட்டு இறைஞ்சிடவும், மனம்விட்டு அழுதிடவும், பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்கவும், வழி பிறந்தால் நன்றி சொல்லவும் நான் நாடும் கோயில் என் பூஜை அறைதான்.

? குல தெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தோடு சென்று வரும் அனுபவம் பற்றி...

குலதெய்வம் பிறந்த வீட்டில் திருப்பதி பாலாஜி, மிளகனூர் சாஸ்தா. புகுந்த வீட்டிலும் திருமலை பெருமாள்தான். குலதெய்வக் கோயிலுக்கெல்லாம் குடும்பத்தோடு சென்று பலவருடங்கள் ஆகி விட்டன. புளியம்பழம் பழுத்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். புளியம்பழம் அதன் தோட்டைவிட்டு விலகவேண்டும். அதுதான் பழுத்த இறையுணர்வு.

? ஒவ்வொரு பணியைத் தொடங்கும் முன்னரும் ஏதேனும் கடவுளைக் கும்பிடும் சென்டிமென்ட் உண்டா?

எது செய்வதானாலும் இன் இஷ்டதேவதை புவனேஸ்வரி, மஹா ஸ்வாமிகள் மற்றும் சிவன் சார் மூவரையும் நினைத்துத் தொடங்குவேன். சிறப்பாக நடத்திச்செல்வது அவர்கள் அருள்.

? தாங்கள் விரும்பி வணங்கும் குரு யார்? அவர் உங்கள் வாழ்வில் நிகழ்த்திய சில அற்புதங்கள்...

அருட்ஜோதி தெய்வம் காஞ்சி மஹா ஸ்வாமிகள்! சிறுவயது முதற்கொண்டே பாட்டியுடன் மடத்துக்குப் போய்ப் பார்த்து வணங்கி, பாடி பரிசுகள் பெற்ற பாக்கியம் கிடைத்திருக்கிறது.

‘போய் மைக்கில் பாடு’ என்பார் என்பார் ஸ்வாமிகள்.

‘பசிக்கிறது’ என்பேன். பாட்டி தொடையில் நிமிட்டாம்பழம் தருவார். மைக்கில் பாடிவிட்டு வருவேன். பிறகு பாட்டி சொல்வார்... ‘உன் குரல் உலகம் எல்லாம் ஒலிக்கணும்னு பெரியவா ஆசீர்வாதம் பண்ணி மைக்கில் பாடச் சொல்றார்’’ என்பார்கள். இன்று ‘மதுரம் மதுரம் மஹாஸ்வாமி சரிதம்’ என்று நான் செய்த ஹரி கதை ஊடகத்தில் உலகெங்கும் ஒலிக்கிறது என்பதே அதற்கான சான்று!

அதெல்லாம் புரிகிற வயசா அப்போது? ஏதோ ராக்கோடி, ஜடைபில்லை, ஜிமிக்கி. தங்கக் குஞ்சலம்... இதெல்லாம்தான் பெரிய பரிசு என்று பறந்த பட்டாம்பூச்சிப் பருவம் அது... அவர் அருள் இன்றும் என்னைத் தொடர்வதில் சந்தேகம் இல்லை!

சிவன் சார்
சிவன் சார்


மஹா ஸ்வாமி யின் தம்பி சிவன் சார் அற்புதச் சித்தர்... மஹான்... என்னை ஆட்கொண்டதெய்வம். சிவன் சார் என் ஆப்த நண்பர், குரு, வழிகாட்டி, உற்ற துணை... அவர் அருளிய அற்புதங்கள் எனக்கு மட்டுமே! பேழையைத் திறந்தால் மணம் போய்விடும். அதிசயங்கள், ஆச்சரியமான நிகழ்வுகள் அனைத்தையும் மூடிவைத்துக் காக்கும் அற்புதப்பெட்டகம் என் மனது!

? கடவுள் உண்டு என்று உங்களுக்கு உணர்த்திய சில தருணங்கள்...

எத்தனையோ உண்டு! எல்லாமே திட்டவட்டமாகத் தீட்டப்பட்டு என் வாழ்வில் நடப்பதைக் காண்கிறேன். ‘அடடா இது அப்பவே நடந்திருக்கலாமே’ என்று ஏற்பட்டதில்லை அவை.

எதோ ஒன்றை மனப்பாடம் செய்வேன். சரியாக அந்தத் தலைப்பில் ஒப்பிக்கும் போட்டியில் கலந்துகொள்ள நேரிடும். பரிசும் எனக்கே! இன்றுவரை எனக்குத் தெரியாததை யாரும் கேட்காத அளவுக்குக் காத்து நிற்பது இறையருள்தான்.

? போக நினைத்து, இன்னும் போக முடியாத கோயில்கள் அல்லது தலங்கள்...?

எண்ணற்ற கோயில்கள், தலங்கள் உண்டு... போனதில்லை... இப்போது போகவேண்டும் என்ற ஆசையும் இல்லை. யதார்த்தம் இப்படித்தான்.

? புண்ணிய யாத்திரை, பாத யாத்திரை போயிருக்கிறீர்களா?

சுவாமி மலையில் காவடி எடுத்திருக்கிறேன். சோளிங்கர் மலைக்கு பலமுறை சென்றிருக்கிறேன். தருமபுரம் அஷ்டாதசபுஜ மகாலட்சுமி ஆலயத்தில் மனம் உருகி லயித்திருக்கிறேன். நானாக அங்கு போகவேண்டும் இங்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை.

புவனேஸ்வரி
புவனேஸ்வரி


? உங்கள் பூஜை அறையில் நீங்கள் பொக்கிஷமாகப் பாதுகாக்கும் பொருள்..?

எனக்கு மந்த்ரோபதேசம் ஆனதும் என் அன்னையார் தந்த புவனேஸ்வரி! அமர்ந்த திருக்கோலப் பஞ்சலோக சிலை. அது இம்மைக்கும் மறுமைக்குமான என் சொத்து. இம்மையில் அம்மை என் பூஜை அறையில். மறுமையில்... என் ஆன்மா அவளுடைய பாதகமலங்களில்!

அம்மாவின் யதார்த்தம் நிறைந்த பதில்கள்... அர்த்தம் பொதிந்த அந்த நிறைவான வரிகள்... மனம் கசிய விடைபெற்றோம்.

வீடியோ வடிவில் காண...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism