Published:Updated:

பாவங்கள் போக்கும் பாபாங்குச ஏகாதசி... நாளை துவாதசி விரதம் கடைப்பிடிப்பது எப்படி?

ஏகாதசி
ஏகாதசி

பெருமாளை வழிபட உகந்த தினங்களுள் ஏகாதசி திதி மிகவும் முக்கியமான தினம். இன்று பாபாங்குச ஏகாதசி

பெருமாளுக்கு உகந்த விரதங்களில் ஏகாதசி விரதம் முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் ஏகாதசி வரும். அவ்வாறு ஓர் ஆண்டில் 24 ஏகாதசிகள் வருவதுண்டு. சில ஆண்டுகளில் 25 ஏகாதசிகளும் வரலாம். ஒவ்வொரு ஏகாதசிக்கும் தனித்துவமான பெயர் உண்டு. பெயர் மட்டுமன்றி விரத பலன்களும் தனித்துவமானவை. அவ்வாறு இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏகாதசிக்கு பாபாங்குச ஏகாதசி என்று பெயர்.

பெருமாள்
பெருமாள்

பாவம் என்னும் யானையை அங்குசம் போல அடக்கும் ஏகாதசி என்பது இதன் பொருள். ஏகாதசி மஹாத்மியம் என்னும் நூல் இந்த ஏகாதசியின் சிறப்புகளை விளக்கிப் போற்றுகிறது. ஏகாதசி விரதத்துக்கு நிகரான ஒரு விரதம் இந்த உலகில் இல்லை என்பதாக பகவான் கிருஷ்ணர் யுதிஷ்ட்டிரனிடம் சொல்கிறார்.

"ஓ ராஜனே! கங்கை, கயா, காசி, புஷ்கரம் ஆகிய மேலான புண்ணியத்தலங்களில் சென்று தீர்த்தமாடி அங்குள்ள இறைவனை வணங்குவதால் உண்டாகும் புண்ணியத்தைவிட அதிகமான புண்ணியம் பாபாங்குச ஏகாதசி விரதம் இருப்பதால் ஏற்படும். உபவாசத்துடன் கண்விழித்து விஷ்ணு நாமத்தை ஜபம் செய்து புராணம் முதலான புண்ணிய நூல்களைப் படித்து பெருமாளை வழிபாடு செய்பவர்கள் மரணத்துக்குப் பின் விஷ்ணுலோகத்தை அடைவார்கள். விரதமிருப்பவர் மட்டுமல்லாது அவரது தாய், தந்தை, மனைவி எனப் பத்து தலைமுறை முன்னோர்களும் தங்கள் பாவங்கள் தீர்ந்து விஷ்ணுலோகத்தை அடைவார்கள்" என்று கிருஷ்ணர் கூறிவதாக ஏகாதசி மஹாத்மியம் கூறுகிறது.

பெருமாள்
பெருமாள்
Vikatan

இந்த நாளில் உபவாசமிருந்து வழிபடுவது போலவே தானங்கள் செய்வதும் சிறப்புவாய்ந்தது. இந்த நாளில் அவரவர் வசதிக்கு ஏற்ப பொருள்களை ஏழைகளுக்கு தானம் செய்வதன் மூலம் யமதர்மனின் தண்டனைகளிலிருந்து தப்புவர். இவைதவிர வாழும் காலத்திலேயே முன்வினைப் பயன்களால் உண்டாகும் நோய், வறுமை, மனக்கஷ்டம் ஆகியனவும் தீரும் என்று பிரம்ம வைவர்த்த புராணம், பாபாங்குச ஏகாதசியின் மகிமைகளை விரிவாக உரைக்கிறது.

பொதுவாக ஏகாதசி விரதம் என்பது மூன்று திதிகளும் சேர்ந்த ஒரு விரத வழிபாடு. ஏகாதசியில் உபவாசத்தின்போது நாம் உட்கொள்ளத்தக்கது துளசி இலை மட்டுமே. அந்த துளசியிலையை ஏகாதசி அன்று பறிக்கக்கூடாது என்பது ஐதிகம். எனவே தசமி அன்றே துளசி இலைகளை பறித்துவைத்துக் கொள்ளவேண்டும். ஏகாதசி நாள் முழுவதும் ஏழுமுறை துளசி இலைகளை உட்கொள்ளலாம். பின்பு மறுநாள் துவாதசியோடு விடியும் காலையில் பாரணை செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

Vikatan
பாபாங்குச ஏகாதசி
பாபாங்குச ஏகாதசி

ஏகாதசி விரதத்தின் சிறப்பைப் போலவே துவாதசி திதியின் மகிமையும் அற்புதமானது. ஒரு துவாதசி திதி அன்றுதான் தன் இல்லத்துக்கு யாசகம் கேட்டுவந்த சிறுவனான ஆதிசங்கரருக்கு கைவசம் இருந்த நெல்லிக்கனியை தானம் செய்தாள் வறியவள் ஒருத்தி. அவளது தயாள உள்ளத்தில் மகிழ்ந்த சங்கரர் சௌந்தர்யலஹரி பாட தங்க மழை பொழிந்தது.

இது துவாதசி அன்று செய்யும் தானத்தின் மகிமையைச் சொல்லும் நிகழ்வு. எனவே, துவாதசி அன்று தவறாமல் தானம் செய்வது அவசியம். சிறிய தானமும் பெரிய பலன்களைக் கொண்டுவந்து சேர்க்கும்.

வேங்கடேசப் பெருமாள்
வேங்கடேசப் பெருமாள்

இன்று ஏகாதசி விரதம் இருக்க இயலாதவர்கள் மாலையில் தவறாது கோயிலுக்குச் சென்று பெருமாளை வழிபடுவது சிறப்பு. விரதமிருப்பவர்கள் நாளை காலை துவாதசி பாரணை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

நாளை பாரணை நேரம் : காலை 5.45 முதல் 6.45 வரை.

துவாதசி அன்று விரதம் முடிந்து உண்ணும் உணவில் 21 வகையான காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். குறைந்தபட்சம் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியனவற்றைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். மசாலா, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அடுத்த கட்டுரைக்கு