திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

பரமனைப் போற்றும் அறுவடைத் திருவிழா!

அருள்மிகு நீள்நெறிநாதர்
பிரீமியம் ஸ்டோரி
News
அருள்மிகு நீள்நெறிநாதர்

தண்டலச்சேரி - தை திருவாதிரை விசேஷம்!

திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 4 கி.மீ தொலைவில் உள்ளது தண்டலச்சேரி.கோச்செங்கட்சோழன் கட்டமைத்த மாடக் கோயில்களில் ஒன்று அமைந்த க்ஷேத்திரம். அந்த மன்னனுக்கு ஏற்பட்ட வயிற்றுவலி நீங்கிட இறையருள் கிடைத்த தலமும்கூட. இங்கே கல்மாடு புல் தின்ற அற்புதமும் நிகழ்ந்தேறியதாம்.

பரமனைப் போற்றும் 
அறுவடைத் திருவிழா!

திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் திருத்தலம், படிக்காசுப் புலவரால் தண்டலையார் சதகம் மூலம் சிறப்பிக்கப்பட்டமை ஆகிய பெருமைகளும் இந்த ஊருக்கு உண்டு. ஞானாம்பிகையோடு நீள்நெறிநாதர் கோயில் கொண்டிருக்கும் இந்த ஊரில் தை மாதம் திருவாதிரைத் திருநாள் மிகவும் விசேஷம். ஏன் தெரியுமா?

தண்டலச்சேரிக்குக் கிழக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள கண்ணமங்கலத்தில் (கண்ணந்தங்குடி) வாழ்ந்த தாயனார் என்ற அடியார் சிவபக்தி மிகுந்தவர். தண்டலச்சேரி இறைவனுக்கு தினமும் சம்பா அரிசியில் உணவும், செங்கீரையும், மாவடுவும் நைவேத்தியம் செய்து வழிபடுவது அவர் வழக்கம்.

விதிவசத்தால் வறுமையால் பீடிக்கப்பட்டார் தாயனார். கூலி வேலைக்குச் செல்லும் நிலை; வீட்டில் கீரையே உணவு. அந்த நிலையிலும் திருப்பணியைத் தொடர்ந்து செய்துவந்தார்.

ஒருநாள், இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதற்காகச் செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றைக் கூடையில் சுமந்துகொண்டு புறப்பட்டார் தாயனார். பசிமயக்கம் அவரை வாட்டியது. கீழே சரிய இருந்தவரை மனைவி தாங்கிப் பிடித்துக்கொண்டார். ஆனால் கூடையில் இருந்த நைவேத்திய அமுதுப்பொருள்கள், தரையில் விழுந்து சிதறின.

பரமனைப் போற்றும் 
அறுவடைத் திருவிழா!

தாயனார் மனம் கலங்கினார். நைவேத்தியம் வீணானதால், அவருக்கு உயிர் வாழவே விருப்பமில்லை. எனவே, நெல் அறுக்க வைத்திருந்த அரிவாளை எடுத்துத் தன் கழுத்தை அறுத்துக் கொள்ள துணிந்தார்.

அவரின் மனைவி பதைபதைப்போடு இறைவனை வேண்ட, தரையில் நைவேத்தியப் பொருள் விழுந்த வெடிப்பிலிருந்து ருத்ராட்ச மாலையும், திருநீறும் அணியப்பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டு, தாயனாரின் கையைப் பற்றியது. மாவடுவைக் கடித்துச் சாப்பிடும் சத்தமும் கேட்டது. மெய்ம்மறந்தார் தாயனார். அவருக்கு உமையுடன் காட்சி தந்து அருள்பாலித்தார் இறைவன். அரிவாளால் தம் கழுத்தை அறுக்க துணிந்தமையால், தாயனாருக்கு ‘அரிவாட்ட நாயனார்’ என்ற பெயர் ஏற்பட்டது என்கிறது தல வரலாறு.

பரமனைப் போற்றும் 
அறுவடைத் திருவிழா!

ஈசன், தாயனாருக்கு முதலில் நடராஜராகவும் பின்னர் ரிஷபாரூட ராகவும் காட்சி கொடுத்ததாக ஐதிகம். இது உச்சிக்கால வேளையில், ஒரு தை மாதத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் நடைபெற்றதாம்.

நடராஜப் பெருமான் இங்கு எழுந்தருளிய காரணத்தால் தை மாதம் திருவாதிரை நாளில் தில்லையில் நடராஜருக்கு உச்சிக்கால பூஜை இன்றைக்கும் நிகழ்த்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயிலில் அரிவாட்ட நாயனார் குருபூஜை தினமானது ஆண்டுதோறும் ‘தை - திருவாதிரை’ அன்று அறுவடைத் திருவிழாவாக நடைபெறுகிறது. இந்த வருடம் வரும் தை மாதம் 3-ம் நாள் (16.01.2022) அறுவடைத் திருவிழா. முந்தைய நாளன்று (தை-2) காலை விக்னேஸ்வரர் பூஜை நடக்கும். தொடர்ந்து நடராஜர் உள்பட பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளை நடைபெற்றதும் வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார்கள்.

தை - 3 திருவாதிரை நட்சத்திரத்தன்று பகல் 11 மணியளவில் அரிவட்டாய நாயனார் அருள்பெற்ற ஐதிக விழா நடைபெறும். அப்போது இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், தங்களின் நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை ஈசனுக்குச் சமர்ப்பிப்பார்கள். இந்த வைபவத்தை தரிசிக்கவும் இறைவனை வழிபடவும் எண்ணற்ற பக்தர்கள் திரள்வார்கள். இதனால் வருடம் முழுவதும் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. மட்டுமன்றி, ஸ்வாமி இங்கு அன்னப்பிரியர் என்பதால் பக்தர்களுக்குப் பசி அண்டாது காப்பார் நிறைவான வாழ்வு தருவார் என்கிறார்கள்!