Published:Updated:

மும்மூர்த்திகளாய் அருளும் ஷண்முகர்... திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவின் அற்புதத் தருணங்கள்!

பச்சை சாத்தியில் ஷண்முகர்
பச்சை சாத்தியில் ஷண்முகர்

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா, மாசித்திருவிழா என இரண்டு பிரமோற்சவத் திருவிழாக்கள் நடைபெறும். முன்காலத்தில் இப்பகுதியை ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தான ராஜா, உள்ளூர் மக்களின் தரிசனத்திற்காக நடத்தப்பட்ட மூலத்திருவிழாதான் ஆவணித் திருவிழா.

லாக்டௌன் தளர்வுகள் ஜூன் மாதம் முதலே அறிவிக்கப்பட்டு வந்தபோதும் செப்டம்பர் 1 வரை தவிப்போடு காத்திருந்தவர்கள் ஆன்மிக அன்பர்கள் மட்டுமே. அதிலும் திருச்செந்தூர் செந்திலாண்டவரின் பக்தர்கள், மழையின்றி வாடிய பயிர்களைப்போல அவன் தரிசனம் இன்றி வாடிப்போயினர். அதுவும் ஆவணித் திருவிழா நடைபெறும் காலகட்டங்களில் அவர்களின் உற்சாகம் கரைபுரண்டோடும். இங்கு ஷண்முகர், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் அதாவது படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும் புரியும் பிரம்மா, விஷ்ணு ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாய் அருள்பாலிப்பவர். அவரை அந்த வடிவத்திலேயே வழிபடும் அற்புதத் திருவிழா ஆவணித் திருவிழா. அந்த ஆவணித் திருவிழாவில் அவனை தரிசிக்க ஓர் அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. சொற்களில் வடிக்கமுடியாத அந்த அற்புதக் காட்சியை, நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படும் வெளிப் பிராகாரம்
பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படும் வெளிப் பிராகாரம்

எப்போதும் கடலென பெருங்கூட்டம் முருகனின் தரிசனத்துக்காகத் திரளும் புண்ணிய பூமி திருச்செந்தூர். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசின் வழிகாட்டுதலின்படி தற்போது நாள் ஒன்றுக்கு 2,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதுவும் திருவிழா உற்சவங்களில் பக்தர்கள் கலந்துகொள்ளத் தடை நீடிக்கிறது. சுப்பிரமணியர் மற்றும் சண்முகர் சந்நிதிகளில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கடற்கரை, நாழிக்கிணறுகளில் நீராடவும், முடிக்காணிக்கை செலுத்தவும், காதுகுத்தவும் அனுமதியில்லை என்பதால் பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

ஆனால் அவன் திருமுக தரிசனம் ஒன்றே போதும் புத்துணர்வு கொள்ள என்று பக்தர்கள் சிரத்தையோடு முன்பதிவு செய்து தரிசனம் செய்துவருகிறார்கள். இதற்கிடையே ஆவணித் திருவிழாவும் எந்தக் குறைவும் இன்றி நடைபெற்றது

ஆவணித் திருவிழா... முருகனின் மூன்று திருக்கோலம்!

கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆவணித் திருவிழா. ஆவணித் திருவிழாவில் முக்கியமானது 7ம் திருநாளும் 8ம் திருநாளும். இந்த நாள்களில்தான் இறைவன் வெள்ளை சாத்தி, சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி என்னும் திருக்கோலத்தில் காட்சி தருவார். இதுதான் இந்தத் திருவிழாவின் சிறப்பு அம்சம். ஷண்முகர் இங்கே மும்மூர்த்தியின் அம்சமாய் அமர்ந்திருக்கிறார் என்று சொன்னோம் அல்லவா, அதைத் திருக்கோல தரிசனமாய் வழங்கும் உற்சவம் இது. ஷண்முகர் முழுக்க இந்த நிறங்களை ஒவ்வொன்றாகத் தாங்கி பிரம்மா, விஷ்ணு, சிவனாகக் காட்சி அருள்வதாக ஐதிகம்.

12-ம் தேதி, 7 ம் திருநாள். அதிகாலை 5 மணிக்குத் திருக்கோயில் 108 மகாதேவர் சந்நிதி முன்பு உருகுசட்டசேவையும், சுவாமி ஷண்முகர், வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளலும் நடைபெற்றது.

மாலையில் ஷண்முகர் சிவப்பு சாத்தி எழுந்தருளினார். சிவப்பு மலர்களும் சிவப்பு நிற வஸ்திரமும் அலங்கரிக்கப்பட்டு தரிசனம் தந்த ஷண்முகரின் எழில்கோலம் மனத்தை விட்டு நீங்காத திருக்கோலம்!

மறுநாள் 13-ம் தேதி காலை 8 மணிக்கு சுவாமி ஷண்முகர், வெள்ளை சாத்தி எழுந்தருளலும், 11.30 மணிக்கு பச்சைசாத்தியிலும் எழுந்தருளி உட்பிராகாரத்தில் உலா வருதல் நடைபெற்றன. உள் பிராகாரத்திலேயே உலாக்கள் நடைபெற்றன. வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஷண்முகர் அருள்பாலித்தார். அதேபோன்று, காக்கும் கடவுளான விஷ்ணுவின் திருவண்ணக் கோலத்தில் பச்சை சாத்தியில் எழுந்தருளிய திருக்காட்சியை தரிசனம் செய்தால், வேண்டும் வரமெல்லாம் கிடைக்கும் என்பது அன்பர்களின் நம்பிக்கை. அந்தத் திருமுக தரிசனத்தைப் பதிவு செய்து உங்களுக்காகத் தருகிறோம். வழக்கமாக 10-ம் நாள் திருவிழாவன்று நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெட்டிவேர் சப்பரம்!

ஆவணித்திருவிழாவின் சிறப்பு குறித்து திருக்கோயில் வித்யாகர்த்தா, சிவசாமி சாஸ்திரியிடம் பேசினோம்,

“திருச்செந்தூரில் ஆவணி திருவிழா, மாசித்திருவிழா என இரண்டு பிரமோற்சவத் திருவிழாக்கள் நடைபெறும். முன்காலத்தில் இப்பகுதியை ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தான ராஜா, உள்ளூர் மக்களின் தரிசனத்திற்காக நடத்தப்பட்ட மூலத்திருவிழாதான் ஆவணித் திருவிழா. மாசித்திருவிழாவைப்போல ஆவணத்திருவிழாவும் 12 நாள்கள் நடைபெறும். ஆனால், குமரவிடங்கப்பெருமான் பெரியதேரில் வலம்வருதலுக்குப் பதிலாக சிறியதேரில் வலம் வருவார். தெப்ப உற்சவமும் நடைபெறாது. ஆவணித் திருவிழா தேய்பிறை நாள்களிலும், மாசித்திருவிழா வளர்பிறை நாள்களிலும் நடைபெறும்.

பச்சை சாத்தியில் சுவாமி சண்முகர்
பச்சை சாத்தியில் சுவாமி சண்முகர்

ஆவணித்திருவிழாவில் சிறிய தேரில் குமரவிடங்கப்பெருமானுடன் வள்ளியம்பிகையும், மாசித்திருவிழாவில் பெரிய தேரில் தெய்வானை அம்பிகையும் வலம் வருவார். இந்தத் திருவிழாக்களில் 7வது, 8வது நாள் திருவிழாக்கள்தான் மிகச் சிறப்பானவை. 7-ம் நாளில் வெட்டிவேர் சப்பரத்தில் கோயிலுக்குள் இருந்து புறப்படும் சண்முகர், 8-ம் நாள் திருவிழா முடிந்துதான் மீண்டும் கோயிலுக்குள் செல்வார். வெட்டிவேர் சப்பரத்தில் புறப்பட்டு வீதியுலாவிற்குப் பின்னர், தூண்டுகை விநாயகர் கோயில் அருகிலுள்ள பிள்ளையமனை கட்டளை மண்டபத்தில் இறங்குவார்.

பச்சிலை சமர்ப்பித்தால்...

அங்கு மாலையில் அபிஷேகங்கள் நடைபெற்று சிவப்புசாத்தித் திருக்கோலத்தில் எழுந்தருளி உள்மாடவீதி, வெளிமாட வீதிகளிலுள்ள 8 சந்திகள் வழியாக வீதியுலா செல்வார்.

பின்னர், பந்தல் மண்டபத்தில் உள்ள மடத்தில் வெள்ளைசாத்தித் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதியுலாவிற்குப் பிறகு மீண்டும் அந்த மடத்தில் இறங்கி, அபிஷேகங்களுக்குப் பிறகு பச்சைசாத்தியில் எழுந்தருளி 8 சந்திகள் வழியாக வீதியுலா சென்று பின்னர்தான் கோயிலுக்குள் சென்று சேர்வார்.

உள் பிரகாரத்தில் ஷண்முகர் உலா
உள் பிரகாரத்தில் ஷண்முகர் உலா

கோயிலுக்குள் சென்றதும் மூலவர் சுப்பிரமணிய சுவாமி சந்நிதியில் ஷண்முகர் எதிர்சேவை புரிந்து தீபாராதனைக்குப் பிறகு சந்நிதிக்குச் செல்வார் ஷண்முகர். மறுநாள் பச்சைசாத்தியில் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக, காக்கும் அரசனாக வலம் வருவதால் அந்த திருக்கோலத்தை தரிசனம் செய்வார்கள். பச்சைசாத்தித் திருவிழாவைக் காணத்தான் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். வருடத்திலேயே ஆவணி, மாசித் திருவிழாக்களில் இந்த இரண்டு நாள் திருவிழாக்களில் மட்டும்தான் ஷண்முகர் உலா வருவார் என்பது மிக விசேசமாக பார்க்கப்படுகிறது. மரிக்கொழுந்து, பச்சையிலை, திருநீற்றுப்பச்சிலை என பச்சைசாத்தியில் ஷண்முகருக்குச் சாற்றி மனமுருகினால் வேண்டிய வரம் கிடைக்கும்” என்றார் சிவகாமி சாஸ்திரிகள்.

அடுத்த கட்டுரைக்கு