Published:Updated:

வாரணமும் தோரணமும்

வாரணமும் தோரணமும்
பிரீமியம் ஸ்டோரி
வாரணமும் தோரணமும்

சித்தர்கள் வழியில் இறையைத் தேடி இனிய பயணம்!

வாரணமும் தோரணமும்

சித்தர்கள் வழியில் இறையைத் தேடி இனிய பயணம்!

Published:Updated:
வாரணமும் தோரணமும்
பிரீமியம் ஸ்டோரி
வாரணமும் தோரணமும்

மலைகள் மகத்துவம் வாய்ந்தவை. அவை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் அற்புதங்கள் இந்த உலகுக்கான வரப்பிரசாதங்கள். தோரணமலையும் மூலிகைகள், சுனைகள், குகைகள், தெய்வச் சாந்நித்தியம் நிறைந்த இடங்கள் என பல அற்புதங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றுக்கெல்லாம் தலைவனாக, அற்புதங்களை நிகழ்த்தும் அற்புதனாக இந்த மலையில் குடிகொண்டிருக்கிறார் முருகப்பெருமான்.

தோரணமலை
தோரணமலை


அகத்தியரும் தேரையரும் மருத்துவச்சாலை அமைத்து திருப் பணி செய்த தோரணமலையில், அவர்கள் வாழ்ந்த இடமும் மருத்துவப் பணி செய்ததற்கான சாட்சியங்களும் பிற்காலத்தில் மறைந்துபோயின. `முருகப்பெருமான் அருளாட்சி செய்த இடம் இது’ என்ற தகவலே மக்களுக்குத் தெரியாமல் போனது.

காலம் சுழன்றது. கலியுகத்தில் மக்களை ரட்சிக்க மீண்டும் இங்கே தன் ராஜ்ஜியத்தை உருவாக்க தோரணமலை முருகன் சித்தம் கொண்டார் போலும். அதற்கான அருளாடலைத் தொடங்கினார்.

இந்தப் பகுதியில், பாவூர்சத்திரம் அருகில் முத்துமாலைபுரம் என்ற ஊர் இருந்தது. அங்கு வாழ்ந்த அன்பர் ஒருவரின் கனவில் முருகப்பெருமான் தோன்றினார்.

அன்பனே! தோரணமலையின் உச்சியில் ஒரு சுனைக்குள் நான் சிலா ரூபமாக அருள்பாலிக்கிறேன். எனது திருமேனியை வெளியே எடுத்து வழிபடுங்கள்; உங்கள் குடும்பமும் ஊரும் செழிக்க அருள்பாலிப்பேன்’’ என்று அருள்புரிந்தார்.

அந்த அன்பர் திடுக்கிட்டு விழித்தார். நல்ல கனவு கண்டால் தூங்கக் கூடாது என்கின்றன ஞானநூல்கள். அவரும் விடியும் வரை காத்திருந்தார். விடிந்ததும் ஊராரிடம் விவரம் பகிர்ந்தார். ஊரே மகிழ்ந்தது. மக்கள் அனைவரும் தோரணமலையின் மீது ஏறினார்கள். சுனையைக் கண்டார்கள். அதிலுள்ள நீரை இறைத்து வெளியேற்றினர். பத்து நாள்களுக்கு மேலாக இந்தப் பணி நடந்த தாம். பக்திக்கு அடிப்படை சிரத்தை என்பார்கள் பெரியோர்கள்.

அவ்வகையில் அந்த எளிய அக்களின் சிரத்தைக்கும் அன்புக்கும் பலன் கிடைத்தது. சுனைக்குள் அழகன் முருகன் காட்சி தந்தான். எல்லோரும் மகிழ்ந்தனர். முருகப்பெருமானுக்கு வழிபாடுகள் ஆரம்பித்தன. மலையின் மீது தோரணமலையான் அழகுற கோயில் கொண்டான். கனவில் தோரணமலை முருகப்பெருமான் வாக்க ளித்தபடியே ஊர் செழித்தது; மக்களின் வாழ்வு வளம் பெற்றது.

இங்ஙனம் முருகப் பெருமான் சுனையிலிருந்து வெளிப்பட்ட நிலையில், பெண் துறவி ஒருவர் இங்கு வந்தாராம். நாட்டார்பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவர் என்கிறார்கள். எப்படி, முத்துமாலைபுரம் அன்பரின் கனவில் முருகன் தோன்றி அருள்பாலித்தாரோ, அதுபோலவே இந்தப் பெண் துறவியின் கனவிலும் தோன்றி தினமும் தனக்கு பூஜைகள் நடத்தும்படி பணித்தாராம் தோரண மலையான். அவ்வண்ணமே அனுதினமும் கரடுமுரடான மலைப்பாதையில் ஏறிச் சென்று முருகப்பெருமானுக்குப் பூஜைகள் நடத்தினாராம் அந்தப் பெண் துறவி!

தோரண மலை
தோரண மலை


``இங்கு நடப்பவை எல்லாமும் தோரணமலையானின் சித்தப் படியே நடைபெறுகின்றன. சிறு பூஜையோ, பெரும் வழிபாடுகளோ கொண்டாட்டங்களோ அனைத்தும் முருகனின் திருவுளப்படியே நடக்கும்’’ என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். மட்டுமன்றி, ``திருக் கயிலையில் ஆறுமுகப் பெருமான் தாமரை மலர்களில் தவழ்ந்ததால் சரவணப் பொய்கை புனிதம் பெற்றது. அதேபோன்று, எங்கள் தோரண மலையில் முருகப்பெருமான் சுனையில் தன்னை வெளிப் படுத்திக் கொண்டதால், இங்குள்ள ஓவ்வொரு சுனையையும் சரவணப் பொய்கைக்கு நிகராகப் போற்றுகிறார்கள்’’ என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

பக்தர்களின் இந்த நம்பிக்கையை மெய்ப்பிப்பது போலவே திகழ்கின்றன இங்குள்ள சுனைகள். ஒரு காலத்தில் முருகனின் சந்நிதானத்தில் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்குமாம். அதுவும் மலையில் சந்நிதிக்கு அருகிலுள்ள ஏதோவொரு சுனையின் நீராகவே இருக்க வேண்டும் என்பது பக்தர்களின் யூகம்.

இங்கு 64 சுனைகள் உண்டு என்று அறிந்தோம். எல்லா சுனை களுக்கும் செல்ல இயலாவிடினும், மலைக்குமேல் உள்ள முருகன் சந்நிதிக்குச் செல்லும் படிக்கட்டுப் பாதை வழியில், எளிதில் அணுகும் அளவில் ஒரு சுனை உள்ளது. தோரணமலையானை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் அவசியம் அந்தச் சுனையில் நீராடிவிட்டே செல்கிறார்கள்.

அந்தச் சுனையின் நீர் மேனியில் பட்டதுமே புத்துணர்ச்சி மேலிடுகிறது நமக்குள். மலையேறி வந்த களைப்பும் நீங்கிவிடுகிறது. இப்படி, இங்கு அமைந்திருக்கும் சுனைகளின் நீர் பிணிகளுக்கெல்லாம் அருமருந்து என்கிறார்கள் பக்தர்கள்.

மலைப்புறத்தில் அமைந்திருக்கும் சுனை நீருக்கு மருத்துவக் குணம் வாய்க்கக் காரணம், அதன் சுற்றுப் பகுதியில் வளர்ந்து நிற்கும் மூலிகைகளே. அவற்றின் வேர்மூலம் சுனைகளுக்கு மருத்துவக் குணத்தை அளிக்குமாம். சில சுனைகள் உண்டு... அதன் நீரைச் சித்த புருஷர்கள் ஒளஷதங்கள் தயாரிப்பதற்கென்றே பயன் படுத்துவார்களாம்.

இப்படி தோரணமலையில் இருக்கும் அநேக சுனைகளில் குறிப்பிடத் தக்கது, தாமரைச்சுனை. அந்தச் சுனைக்குச் செல்வது எளிதல்ல. மிக மிகக் கடினம் என்கிறார்கள், கோயிலைச் சார்ந்த வர்கள். ஆபத்தான பாதையில் வழுக்குப் பாறையில் மிகக் கவன மாக ஏறிச் செல்லவேண்டுமாம். அந்தச் சுனை அருகில்தான் சித்தர் பெருமான் தேரையில் ஐக்கியமாகியிருக்கிறார் என்கிறார்கள்.

அண்மையில் அந்தச் சுனைக்குச் சென்று மீண்ட அன்பர் ஒருவர் தன் அனுபவத்தைச் சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார்.

``கரணம் தப்பினால் மரணம் என்பார்களே... அப்படியான பயணம்தான் அது. ஆனால், இங்கேயே வசிக்கும் பாதை பழகிய அன்பர்கள் எளிதில் மேலே ஏறிவிடுகிறார்கள். அவர்களில் ஒருவ ரின் துணையுடன்தான் நாங்களும் சென்று வந்தோம்.

எல்லாவற் றுக்கும் மேலாக அந்த இறைவனின் திருவருள் துணை யிருக்க வேண்டும். வழியிலும் குகைகளைப் பார்க்க முடிகிறது. இன்றும் அந்தக் குகைகளில் அல்லது குகையின் அமைப்பில் உள்ள பாறை இடுக்குகளில் சித்தர் பெருமக்கள் சூட்சுமமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்’’ என்று வியப்பு மேலிடச் சொல்கிறார் அந்த அன்பர்.

தொரணமலை யாத்திரை சென்று வந்த, அன்பர் மு.அரியின் அனுபவம் வேறுவிதமானது. ``பொதுவாக சுனைகளில் தடாகங்களில் தாமரை ஒன்று மலர்ந்தால் அடுத்தடுத்து வளர்ந்து நீர்ப்பரப்பை மறைக்கும்படி நிறைந்துவிடும். ஆனால், தோரணமலையின் தாமரைச் சுனை தெய்வச் சாந்நித்தியம் நிறைந்தது. சித்தர் பெருமானின் திருவருள் சூழ்ந்த இடம் அது’’ என்கிறார்!

அதற்குக் காரணமாக அவர் சொன்ன விஷயம், பெரிதும் சிலிர்ப்பைத் தருவது.

- தரிசிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism