தபோவனர்களின் தாயகம் என்று திருவண்ணாமலையைக் கூறுவார்கள். இந்தப் புனித மலைக்குப் புகழ் சேர்த்த சில ஞானியர்களைப் பற்றி சில சுவாரஸ்ய செய்திகளைப் பார்ப்போம்.
‘தங்க கை’ சேஷாத்ரி சுவாமிகள், சக்தி தேவியின் அம்சமானவர் என்று அவருடைய பக்தர்களால் போற்றப்படுபவர். தன் பக்தர்களை அவர் மனதார நேசித்தார். அவர்களாலேயே தனக்கு மரணம் வரும் என்பதை அவர் அறிந்திருந்தும் அதை இன்முகத்தோடு வரவேற்றார்.
சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்து புகைப்படம் எடுக்கவேண்டும் என்று சில பக்தர்களுக்கு ஆசை உண்டானது. சுவாமிகள் தடுத்தும் கேளாமல் கிணற்றடியில் அமரவைத்து திருவண்ணாமலை சிவகங்கை தீர்த்தத்தை குடம் குடமாக அவர் தலையில் கொட்டினார்கள். பல நிமிடங்கள் தொடர்ந்த இந்த அபிஷேகத்தால் சுவாமிகளுக்குக் கடுமையான குளிர் ஜுரம் உண்டானது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபக்தர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து வைத்தியம் மேற்கொள்ள சொன்னபோதும் சுவாமிகள் மறுத்துவிட்டார். அன்ன ஆகாரம் மறுத்து இறைவன் சிந்தனையிலேயே லயித்திருந்து, பூத உடலைத்துறந்து விண்ணுலகம் ஏகினார். இவரது இறுதி சடங்குகள் யாவும் ரமண மகரிஷிகளின் மேற்பார்வையிலேயே நடைபெற்றன.

தாயை இழந்த அந்தச் சிறுவன் திருவண்ணாமலை நோக்கி பயணப்பட்டான். ‘அருணாசலம்... அருணாசலம்...” என்ற மந்திரத்தை உச்சரித்தவாறே விழுப்புரத்தில் ரயிலேறி மாம்பழப்பட்டு வந்து இறங்கினான். அங்கிருந்து நடந்து அறையணிநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தான்.
அந்த ஆலயத்தின் தென்பிராகாரத்திலிருக்கும் நான்கடி உயரமிருக்கும் ஒரு பீடத்தின் அருகே நின்று தூர தரிசனத்தில் திருவண்ணாமலையை தரிசித்தான். ஆம், முதன்முதலாக திருவண்ணாமலையை அந்தச் சிறுவன் தரிசித்தது அந்த பீடத்தின் அருகிலிருந்துதான். அந்தப் பீடம் மகத்துவம் நிறைந்த மகாமேருவுக்கு நிகரானது. ஆளுடையப்பிள்ளை என்று அழைக்கப்பட்ட முருகப்பெருமானின் அம்சமான திருஞானசம்பந்தர் அந்தப் பீடத்தின் மீதிருத்துதான் முதன்முதலில் திருவண்ணாமலையை தரிசித்தார். இதென்ன மலை, இதைப் பார்த்ததும் ஏன் இந்த பரவசம் என்று கேட்டு, அது திருவண்ணாமலை என்றதும் அங்கிருந்தவாறே தொழுது ‘உண்ணாமுலை உமையாளோடும்’ என்ற பதிகத்தைப் பாடி பரவசப்பட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவர் நின்று தரிசித்த பீடம் `சம்பந்தர் பாதம்' என்றே இன்றும் பக்தர்களால் தொழப்படுகிறது. அதே இடத்திலிருந்து அந்தச் சிறுவனும் முதன்முதலாக திருவண்ணாமலையை தரிசித்தான். பிந்தைய நாள்களில் திருவண்ணாமலையின் மாபெரும் யோகியாகத் திகழ்ந்தான். ஆம், அவரே ரமண மகரிஷி என்றானார். ரமணர், திருஞானசம்பந்தர் தரிசித்த இடத்தில் நின்று முதன்முதலாக அருணையை தரிசித்த சம்பவம் சிலிர்ப்பூட்டக்கூடியது இல்லையா!
திருவண்ணாமலையில் தங்கி பித்தராகத் திரிந்து பின் மாபெரும் ஞானியாகி, வந்தவருக் கெல்லாம் வரங்களை அள்ளித் தந்த மகான் விட்டோபா சுவாமிகள். இவர் தனது இறுதி நாள்களை போளூரில் கழித்து அங்கேயே ஜீவசமாதி ஆனார். அவர் திருமடமும் அங்கே உள்ளது. விட்டோபா சுவாமிகள் மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக்கொண்ட தையல் தொழிலாளி.
இவர் மயிலாப்பூரில் வசித்து வந்தபோது ஈசனால் ஈர்க்கப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்தார். ஒருமுறை போளூர் அடுத்த திருசூரில் அன்னதானத்தை வாங்க சுவாமி வரிசையில் நின்றிருந்தபோது கல்மனம் கொண்ட சில கயவர்கள், இவரை பேசவைக்கிறேன் பார் என்று கூறி சுவாமியின் வாயில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை வைத்து இழுத்துவிட்டார்கள். அப்போதும் பொறுமையாக ‘விட்டோபா, விட்டோபா’ என்று பாண்டுரங்கனின் திருநாமத்தைச் சொல்லி அந்த பாவிகளை மன்னிக்கச் சொல்லி வேண்டினாராம். அன்றிலிருந்து சுவாமிகள், ‘விட்டோபா சுவாமி' என்றானார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகிலுள்ள சென்னசமுத்திரத்தில் கோபால் - ஆயி தம்பதிக்கு 1735-ம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் ஜனித்தார். இயற்பெயர் அருள்மொழி எனப்படுகிறது. சிறு வயதிலேயே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். அவருக்குத் திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் விரும்பினார்கள்.
ஆனால், அம்மணி அம்மாள் அதை மறுத்து அந்த ஊருக்கு அருகிலிருந்த கோமுட்டி குளத்துக்குள் குதித்துவிட்டார். எல்லோரும் தேடியும் அம்மணி அம்மாளை அங்கு காணவில்லை. மூன்றாவது நாள் குளத்திலிருந்து வெளியே வந்த அம்மணி அம்மாள் சித்த புருஷராக மாறியிருந்தார். அப்போதே திருவண்ணாமலைக்கு விரைந்த அம்மையார் ஈசனின் கட்டளைப்படி திருவண்ணாமலைக் கோயிலின் வடக்கு கோபுரத்தைக் கட்டத் தொடங்கினார்.
பலவித சித்து விளையாட்டுகளைப் புரிந்த இந்த அம்மையாரின் கருணையால் பல மக்கள் நோய்நொடிகள் தீர்ந்து குணமடைந்தார்கள். இவரது ஆற்றலை அறிந்துகொண்ட மைசூர் மன்னனும் பலவித உதவிகள் செய்ய, ஏழு நிலைகள் வரை கோபுரப்பணியை முடித்தார். மீதமிருக்கும் நான்கு நிலைகளை ஈசனின் கருணையால் பணியாட்களுக்கு சம்பளத்துக்குப் பதில், அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக்கொடுக்க, அது அவரவர் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக மாறியது.
இப்படி, கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. 171 அடி உயர பிரமாண்ட கோபுரத் தைக் கட்டிய அம்மணி அம்மாள் தன்னுடைய 50-ம் வயதில் 1875-ம் ஆண்டு, தைப்பூச நாளில் பரிபூரணம் அடைந்து ஈசனோடு கலந்தார். இன்றும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இறுதியான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவ சமாதி திருக்கோயில் அமைந்துள்ளது.
சித்தப் பெண்மணியான இவரை வணங்கினால் சகல நோய்களும் விலகி எண்ணிய காரியம் ஈடேறும் என்கிறார்கள்.