Published:Updated:

கவலைகள் தீர்க்கும் கண்ணன் தலங்கள்... கோகுலாஷ்டமி தரிசனம்!

கோகுலாஷ்டமி நாளில் கண்ணபிரான் மாறுபட்ட திருக்கோலங்களில் அருள்புரியும் திருத்தலங்கள் தரிசனம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கண்ணன், தன் அவதாரத்தில் பல்வேறு லீலைகளைச் செய்தான். குழந்தையாகக் குறும்பு செய்தான்; வீரனாகப் போர்புரிந்தான்; அசுர சம்ஹாரம் செய்து ரட்சகனானான்; தர்மத்தை நிலைநாட்டிட யுத்தத்தில் வழிகாட்டினான். இவ்வாறு அவன் செய்த அற்புதங்கள் அநேகம்.

கண்ணனின் லீலைகளுக்கு ஏற்பத் திருமேனிகளை உருவாக்கி நம் முன்னோர்கள் கோயில்களில் வழிபாடு செய்தனர். இந்தக் கோகுலாஷ்டமி நாளில் அப்படிக் கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் சில விசேஷத் திருத்தலங்களையும் அங்குள்ள திருமேனிகளின் சிறப்புகளையும் இந்தக் கட்டுரையில் காணலாம். பெருந்தொற்றுக் காலம் என்பதால் இப்போது ஆலயங்களுக்கு நேரில் செல்வது இயலாத ஒன்றாகிவிட்டது. அதனாலென்ன? கண்ணனை நம் மனத்தில் நிறுத்தி அவன் அருளைப் பெறுவோம்.

காதில் தோடு... கண்ணனின் விசேஷ அலங்காரம்!

மன்னார்குடி ஸ்ரீவித்யா ராஜகோபாலன்
மன்னார்குடி ஸ்ரீவித்யா ராஜகோபாலன்

தஞ்சாவூரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது மன்னார்குடி. ஊரின் மையப்பகுதியில், பிரமாண்டமாகத் திகழ்கிறது ஸ்ரீராஜகோபால ஸ்வாமி திருக்கோயில்.

இதனால் இங்கேயுள்ள மூலவருக்கு, ஸ்ரீவித்யா ராஜகோபாலன் என்று திருப்பெயர். இவர் ஒரு காதில் குண்டலம், மறு காதில் தோடு, இடுப்பில் கச்சம், தலையில் முண்டாசு, கையில் பொன்னாலான சாட்டை... என விசேஷ கோலத்தில் அருள்கிறார். மனதில் என்ன குறை இருந்தாலும், இவரை மனதாரப் பிரார்த்தித்துக்கொண்டால், உடனே அவற்றை நிறைவேற்றி வைத்துக் காப்பார் என்பது நம்பிக்கை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தை வரம் அருளும் சிறப்புப் பிரார்த்தனை!

சந்தான கோபாலன்
சந்தான கோபாலன்

மன்னார்குடியில் குழந்தை வடிவில் காட்சி தரும் ஸ்ரீசந்தான கோபாலனை, கைகளில் நாமே ஏந்திக்கொண்டு பிரார்த்தித்தால், கோபாலனைப் போலவே, அழகும் அறிவும் நிரம்பிய பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர்!

கிருஷ்ணன் சந்நிதியில் வளைகாப்புப் பிரார்த்தனை!

கரந்தை ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி யாதவக் கண்ணன்
கரந்தை ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி யாதவக் கண்ணன்

தஞ்சாவூரில் உள்ள கரந்தை எனும் பகுதியில் கோயில் கொண்டு, வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களைத் தந்தருள்கிறார் ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமி யாதவக் கண்ணன்.

பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும் நாளில், கரந்தை யாதவக் கிருஷ்ணன் ஆலயத்துக்கு வந்து, வளைகாப்பு சீர் வரிசைப் பொருள்களை சந்நிதியில் வைத்துப் பிரார்த்தனை செய்துவிட்டு, வளைகாப்பு விழாவை சீரும் சிறப்புமாக நடத்துவது, தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்க்காரர்களின் வழக்கம். இதனால், ஒரு குறையுமின்றி சுகப்பிரசவம் நடைபெறுவதுடன், குழந்தையும் ஆரோக்கியமாகப் பிறக்கும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.

கோபிநாத மலையும் குழலூதும் கண்ணனும்!

கோபிநாத மலை
கோபிநாத மலை

திண்டுக்கல் - பழநி சாலையில் உள்ளது ரெட்டியார் சத்திரம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது கோபிநாத மலை. குழலூதும் கண்ணன் இங்கே கோயில் கொண்டிருப்பதால், இறைவனின் பெயரே மலையின் பெயராகிவிட்டது!

மலைக்கோயிலுக்குச் சென்று கோபிநாத ஸ்வாமியைத் தரிசித்து, அத்திமரத்தில் தொட்டில் கட்டிப் பிரார்த்தித்தால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை!

குழந்தைகள் இசைத்துறையில் ஜொலிக்க...

ஊத்துக்காடு
ஊத்துக்காடு

கும்பகோணத்தில் இருந்து தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் மற்றும் ஸ்ரீவீர பத்திரர் கோயில், ஆவூர் ஸ்ரீபசுபதீஸ்வரர், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கை ஆலயம் ஆகியவற்றைக் கடந்து சென்றால், சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ள ஊத்துக்காடு ஸ்ரீகாளிங்கநர்த்தனர் கோயிலை அடையலாம். காமதேனு வழிபட்டு அருள்பெற்ற தலம் இது. ஊத்துக்காடு வேங்கடசுப்பய்யர் போற்றிய கண்ணன் இவர்.

ரோகிணி நட்சத்திர நாளில் இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். தங்கள் குழந்தைகள் இசைத் துறையில் வல்லுநராக வேண்டும் என விரும்புபவர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து ஸ்ரீகாளிங்க நர்த்தனரை பிரார்த்தித்துச் செல்ல... நினைத்த காரியம் இனிதே நடந்தேறும்.

உத்ஸவரின் திருப்பாதத்துக்கு கொலுசு சார்த்தி வழிபடுவது சிறப்பு. சர்ப்பத்தின் மேல் நின்றபடி ஆடினாலும், சர்ப்பத்துக்கும் ஸ்ரீகண்ணனுக்கும் மெல்லிய, நூலிழை அளவுக்கு இடைவெளியுடன் திகழ்கிற விக்கிரகத் திருமேனி, வியப்பின் உச்சம்!

ரோகிணி நட்சத்திரத்தில்...

வேப்பங்கொண்டப்பாளையம்
வேப்பங்கொண்டப்பாளையம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும் உள்ளது வேப்பங்கொண்ட பாளையம். ஒருகாலத்தில், வேணுகோபாலபுரம் என அழைக்கப்பட்ட இந்த ஊரின் சாலையோரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகிருஷ்ணன் கோயில் (எஸ்.வி.ஜி.புரம் என்றும் சொல்வர்). திருத்தணி - சோளிங்கர் வழி செல்லும் தனியார் பேருந்துகள் அனைத்தும் இந்த ஊரில் நின்று செல்கின்றன.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மாதம்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று இங்கு வந்து திருமஞ்சனம் செய்து பிரார்த்தித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்; சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறுவர் என்கின்றனர், இந்த ஊர்க்காரர்கள்.

வியாபாரம் செழிக்க வெண்ணெய் சமர்ப்பணம்!

வேலம்பாளையம் கிருஷ்ணபெருமாள்
வேலம்பாளையம் கிருஷ்ணபெருமாள்

ஈரோடு மாவட்டம், ஈரோடு - சென்னிமலை சாலையில் உள்ளது மயிலாடி. இந்த ஊருக்கு அருகில் உள்ள வேலம்பாளையத்தில் கோயில்கொண்டு, அனைவருக்கும் அருளையும் பொருளையும் அள்ளித் தருகிறார், ஸ்ரீகிருஷ்ண பெருமாள் ஸ்வாமி!

ஸ்ரீகிருஷ்ணபெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல், பால், வெண்ணெய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் யாவும் விரைவில் நடந்தேறும். ஸ்ரீகிருஷ்ண பெருமாளை வணங்கிவிட்டுத் தொழிலைத் தொடக்கினால், வியாபாரம் சீரும் சிறப்புமாக நடைபெறும்; லாபம் கொழிக்கும் என்கின்றனர் ஊர்க்காரர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு