Published:Updated:

முதல்முறையாக ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்!

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முதல்முறையாக 1,00,008 வெற்றிலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

வெற்றிலை அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்
வெற்றிலை அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

பிரசித்திபெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமியின் சிலை 18 அடி உயரம் கொண்டது. நாமக்கல் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டையின் மேற்குப் பகுதியில் கோயில் அமைந்துள்ளது. நின்றகோலத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

நாமக்கல் ஆஞ்சநேயர்
நாமக்கல் ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயருக்குப் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டாலும் இதுவரை வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டதில்லை. இந்தநிலையில், திருச்சியைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் வெற்றிலை அலங்காரம் செய்ய முன்வந்தார். இதற்காக பிரத்யேக வடிவமைப்பில் கோக்கப்பட்ட 1.08 லட்சம் வெற்றிலைகள், குளிரூட்டப்பட்ட வாகனம் மூலம் திருச்சியில் இருந்து நாமக்கல் கொண்டு வரப்பட்டது.

பின்னர், அர்ச்சகர்கள் நேற்று நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை ஆஞ்சநேயரை அலங்காரம் செய்தனர். பின்னர், ஆஞ்சநேயர், வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். முதன்முறையாக வெற்றிலை அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

பக்தர்கள் தரிசனம்
பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் நாள்தோறும் கட்டளைதாரர்கள்  சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்ககவசம், வெள்ளி கவசம், முத்தங்கி, சந்தனம் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். இன்று அலங்காரம் செய்யப்படுவதற்கு முன்னதாகப் பால், தயிர், மஞ்சள் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 1,00,008 வெற்றிலைகள் கொண்டு, முதன்முறையாக வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யயப்பட்டன. பாக்குமட்டைகளைப் பொருத்தி வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், வெற்றிலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் இன்று (15.9.2019) காலை 9 மணிவரை பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறார்.

முதல்முறையாக வெற்றிலை அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயரை ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் முதல் பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்துச் செல்கின்றனர்.