Published:Updated:

ராகமாக மாறிய நாகம்!

ராக மகிமை
பிரீமியம் ஸ்டோரி
News
ராக மகிமை

சங்கராபரணம்

லிங்க சொரூபமாக அல்லாமல், பரமேஸ்வரனை தியானிப்பவர்களின், நினைப்ப வர்களின் மனதில் தென்படும் மறக்க முடியாத ஓர் ஆபரணம், அவர் கழுத்தில் நெளிந்து ஒளிரும் நாகம். ஆம், அவர் நாகபரணர். விஷ நாகத்தைக் கழுத்தில் மாலை யாகச் சூடிக்கொண்டவர். `பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்...’ என்று பாடுகிறார் மாணிக்கவாசகர்.

ராகமாக மாறிய நாகம்!

`உலகில் நாம் கடைசியில் ஆகப்போவது இப்படித்தான்...’என்பதைக் குறிப்பிடும் வகையில் சிவபெருமான் சாம்பலை உடலில் பூசிக்கொண்டார்; `பொருளாசைக்கு அடிமைப்படாதே... அது நாகம் போன்றது’ என்பதை உணர்த்த சர்ப்பத்தை ஆபரணமாக ஏற்றுக்கொண்டார் என்பது அதன் பொருள்.

கர்னாடக சங்கீதத்தில் `சங்கராபரணம்’ என்று ஒரு ராகம் உண்டு. `சங்கரன்’ என்றால் ஈசன். `ஆபரணம்’ என்றால் உடலில் சூடிக்கொள்ளும் நகையணி. இறைவன் அணிந்திருக்கும் ஆபரணம் என்பதன் பொருள்தான் `சங்கராபரணம்.’ இந்த ராகத்துக்கு இப்படிப் பெயர் வரக் காரணமே, இதில் மேற்கொள்ளப்படும் ஸ்வரப் பிரயோகங்கள்தான். `அவை நாகம் சீறுவதைப்போலவே ஒலிக்கும்' என்கிறார்கள் கர்னாடக இசை வல்லுநர்களும் பாடகர்களும். ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு நிறத்தை வகுத்து வைத்திருக்கிறார்கள் நம் இசை முன்னோர். அப்படி இந்த ராகத்துக்கு அவர்கள் வகுத்திருக்கும் நிறம் `நீலம்.’ இறைவனுக்கு `நீலகண்டன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. கண்டத்தில் விஷத்தைத் தாங்கியவன் ஈசன்.

72 மேளகர்த்தா ராகங்களில் 29-வது ராகமான `தீர சங்கராபரணம்’ ராகத்திலிருந்து உதித்த ஜன்ய ராகம்தான் `சங்கராபரணம்.’ தீர சங்கராபரணம் என்றால் `அஞ்சாத நாகம்’ என்றும் ஒரு பொருள் உண்டு.

மாலை நேரத்தில், சூரியன் அஸ்தமனமாகும் நேரத்தில் பாடத் தகுந்த ராகம் சங்கராபரணம் என்பார்கள். தமிழிசையில் இந்த ராகத்தை `பழம்பஞ்சரம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

இசை மும்மூர்த்திகளில் முக்கியமானவரான தியாகராஜ சுவாமிகள் இந்த ராகத்தில் இயற்றிய `ஏமி நேரமு நன்னு ப்ரோவ எந்த பாரமு நாவல்ல...’ என்ற கிருதி புகழ்பெற்றது. இந்தப் பாடலில், `தியாகராஜனால் புகழப் பெற்றோனே... என்மீது என்ன குற்றம்? என்னைக் காத்தல் அத்தனை சுமையா உனக்கு...’ என்று கேள்வி எழுப்பி ராம பிரானைத் தொழுவார் தியாகராஜ சுவாமிகள்.

கோபாலகிருஷ்ண பாரதியார் தீஞ்சுவைத் தமிழில், சங்கராபரண ராகத்தில் எழுதிய `ஆடியபாதா இருவர் நாடும் விநோதா...’ என்று தொடங்கும் கீர்த்தனை மிக முக்கியமானது. `வேத முனிவர்கள் பாடவும், சனகாதி யோகிகள் கூடவும், வெகு நாதமெங்கினும் மூடவும், திரளு நந்தி மத்தளம் போடவும், தகுந் தகுந் தகுந் தகுமென்று (ஆடியபாதா)’ என்கிற சரணம் வரும்போது நம் உடல் சிலிர்த்துவிடும்.

முத்துத் தாண்டவர் எழுதிய `ஆரார் ஆசைப்படார்...’ என்று சங்கராபரண ராகத்தில் தொடங்கும் பாடலோ வெகு அபாரம்! இவ்வளவு ஏன்... `சங்கராபரணம்’ என்ற பெயரில் வெளிவந்த தெலுங்குப் படமேகூட மறக்க முடியாத காவியம். அதில் வரும் `ஓங்கார நாதானு சந்தான...’ என்கிற பாடல் சங்கராபரண ராகத்தில் அமைந்ததுதான்.

`அறுபடைத் திருப்புகழ்’ என்கிற பெயரில் அருணகிரிநாத சுவாமிகளின் திருப்புகழ் பாடல்கள் சிலவற்றைப் பாடி ஆல்பமாக வெளியிட்டிருக்கிறார் இசைக்கலைஞர் கே.ஜே.யேசுதாஸ். அவற்றில் முக்கியமான பாடல், `மாலாசை கோபமோயாத நாளும் மாயா விகார வழியே செல்...’ என்பது.

இதுவும் சங்கராபரண ராகத்தில் அமைந்ததே. `மயக்கம், ஆசை, கோபம் இவை கொஞ்சம்கூட ஓய்வில்லாமல் ஒவ்வொரு நாளும் என்னைப் பற்றியிருக்க, மாய விகாரங்களுடைய மகாபாவி, துர்க்குணம் உள்ளவன் நான். ஆனாலும், நாதனே, நீதான் எனக்கு தாயும் தந்தையும் இனி...’ என்று முருகனிடம் இறைஞ்சுகிறார் அருணகிரிநாதர்! கேட்கக் கேட்க இனிமை, உள்ளத்தை உருகவைக்கும் பாவம் என மனதை வருடிக் கொடுக்கும் ராகம் சங்கராபரணம்.

அவசரத் தேவைக்கு நகை, வீடு முதலிய சொத்துகளை அடகுவைப்பதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், ஒரு ராகத்தை அடகுவைக்க முடியுமா? தமிழகத்தில் அதுவும் நிகழ்ந்திருக்கிறது.

சரபோஜி மன்னர் காலத்தில் நரசையர் என்ற வித்வான் இருந்தார். ஒருநாள் இசை நிகழ்வில் அவர் சங்கராபரண ராகத்தை விரிவான ஆலாபனையுடன் பாடிட, அனைவரும் மெய்ம்மறந்துபோனார்கள். சரபோஜி மகாராஜா அந்த இசைக்கலைஞருக்குப் பரிசுகள் வழங்கி, `சங்கராபரணம் நரசையர்’ என்ற சிறப்புப் பெயரையும் சூட்டினார்.

ஒரு முறை, நரசையருக்குக் கடும் நிதி நெருக்கடி. தஞ்சை - பாபநாசம் அருகிலிருக் கும் கபிஸ்தலத்தில் இருந்த இராம பத்திர மூப்பனாரைத் தேடிப் போனார். அவரிடம் கடன் கேட்டார். இராமபத்திரருக்கு வியப்பு.

``கடனா... எவ்வளவு வேண்டும்?’’

``எண்பது பொன்.’’

``எதையாவது அடகுவைப்பீர்களா?’’

ஒரு கணம் யோசித்த நரசையர் சொன்னார்: ``உண்டு. அது எந்த ஆபரணத்தையும்விட உயர்ந்தது. சங்கராபரண ராகம். அதை அடகுவைக்கிறேன். பொன்னைத் திருப்பிக் கொடுக்கும்வரை அதை எங்கும் பாட மாட்டேன்.’’ இராமபத்திரரிடம் சொன்னதை, கடன் பத்திரமாக எழுதிக் கொடுத்துவிட்டுத் திரும்பினார். அன்றிலிருந்து இசை நிகழ்வு களில் சங்கராபரண ராகத்தைப் பாடுவதை விட்டுவிட்டார்.

ராகமாக மாறிய நாகம்!
VSanandhakrishna

கும்பகோணத்தில் அப்புராயர் என்ற செல்வந்தர்... அன்றைய கிழக்கிந்திய கம்பெனியில் பெரிய பதவியில் இருந்தார். அவர் வீட்டில் ஒரு திருமணம். அதில் இசை நிகழ்ச்சி நடத்த நரசையரை அழைத்திருந்தார் அப்புராயர்.

நிகழ்வின்போது பல ராகங்களைப் பாடினார் நரசையர். ராயர், ``உங்களுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த சங்கராபரணம் ராகத்தைப் பாடுங்களேன்’’ என்று கோரிக்கைவைத்தார். நரசையர் தயக்கத்தோடு தான் ராகத்தை அடகுவைத்த விவரத்தைச் சொன்னார். அதைக் கேட்டு அதிர்ந்துபோன அப்புராயர், ஒருவரை அழைத்து எண்பது பொன்னையும் அதற்குரிய வட்டியையும் கொடுத்து சங்கராபரணத்தை மீட்டுவரச் சொல்லி கபிஸ்தலத்துக்கு அனுப்பினார்.

ராயரிடமிருந்து ஆள் வந்திருக்கும் சேதி கேட்டு இராமபத்திரர் மிரண்டு போனார். உடனே கிளம்பி கும்பகோணத்துக்கு வந்தார். அப்புராயரிடம் தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.

``நரசையர் பணம் வேண்டுமென்று கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன். கடனாக வேண்டும் என்று கேட்டதால் விளையாட்டாக அடகுப் பொருள் கேட்டேன். அவரும் ராகத்தை அடகுவைத்துவிட்டார். அதன் பிறகு எந்த அரங்கிலும் அவர் சங்கராபரண ராகத்தைப் பாடாதது அவருடைய உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது. இந்தப் பொன் எனக்கு உரியதல்ல. அவருடையது. அவரிடமே ஒப்படைத்துவிடுங்கள். அதோடு சங்கராபரண ராகத்தை அடகுவைத்ததற்கு அபராதமாக நான் மேலும் கொடுக்கும் இந்தத் தொகையையும் அவர் பெற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று இன்னும் கொஞ்சம் பொன் கொடுத்தார் இராமபத்திரர்.

இந்த நிகழ்வை உ.வே.சாமிநாதையர் ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். பிரபஞ்ச மேடையில் இறைவன் நடத்தும் நாடகத்துக்கு எல்லை ஏது? ஈசனின் திருவிளையாடல் எனும் கடலில் சங்கராபரணம் சிறு துளி!

அர்ச்சனையில் பூக்கள்!

`பூ மென்மை. நினது திருப்பாதங்களும் மென்மை, எனது இதயம் மென்மை. விருப்பம்- பக்தி கலந்த மென்மையான இதயத்தை பூக்களின் வாயிலாக தங்களது பாதத்தில் சேர்த்து விட்டேன்!' என்ற எண்ணத்துடன் இறைவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்கின்றன ஞானநூல்கள்.

ராகமாக மாறிய நாகம்!
subodhsathe

சாமந்தி, துளிர்க்கும் சாமந்தி, சங்க புஷ்பம், தெச்சிப்பூ, பாரிஜாதம்- போன்ற மலர்களை இதழ்களைக் கிள்ளாமல் அர்ச்சனையில் பயன்படுத்த வேண்டும்

பூக்கள் தட்டுப்பாடாக இருக்கும் சூழ்நிலையில், அவற்றைப் பிய்த்துப் பயன்படுத்தத் தோன்றும். தாமரை, செம்பருத்தி, தாழம்பூ ஆகியவற்றில் இதழ்களைப் பிய்த்து பயன்படுத்தலாம் தவறில்லை.

பூக்கள் தீர்ந்து போனால் அட்சதையைப் பயன்படுத்தலாம். அதுவும் தீர்ந்துவிட்டால், குங்குமம் பயன் படுத்தலாம். எதுவும் இல்லையெனில், பக்தியுடன் பகவான் நாமத்தை மட்டும் கூறி அர்ச்சிக்கலாம்.

- கே.வைதேகி, கோவை