Published:Updated:

சிவப் பேறு அருளும் சதாசிவம்

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவபெருமான்

சிந்தை மகிழும் சிவ வடிவம் திருப்பூர் மணிவண்ணன்

சிவப் பேறு அருளும் சிவ வடிவங்களுள் சதாசிவ மூர்த்தமும் ஒன்று. சிவ ஆகமத்தை உபதேசிக்கும் பொருட்டு, பெருமான் ஐந்து முகங்களுடன் சதாசிவனாகக் காட்சியளிக்கிறார்.

சிவப் பேறு அருளும் சதாசிவம்

கிழக்கு நோக்கிய திருமுகம்-தத்புருஷம். இது ஈஸ்வரனுக்கு உரியது. தெற்கு நோக்கியது-அகோர முகம்; ருத்ரனுக்கு உரியது. மேற்கு நோக்கியது-சத்யோ ஜாதம்; பிரம்மனுக்கு உரியது. வடக்கு நோக்கியது-வாமதேவ முகம்; விஷ்ணுவுக்கு உரியது. சதாசிவனின் உச்சியில் விளங்கும் முகம்- ஈசானம்.

`சிவபெருமான், உயிர் வர்க்கங்களை ஈடேற்றும் பொருட்டு ஐந்து தொழில்களைப் புரிகிறார். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் ஐந்து மந்திரங்களைக் கொண்டது சிவபிரானின் உடல்’ என்று மிருகேந்திர ஆகமம் கூறுகிறது.

கூடிய பாதம் இரண்டும் படிமிசை

பாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும்

தேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து

நாடும் சதாசிவ நல்ஒளி முத்தே

- என்று இந்தத் திருவடிவை திருமந்திரம் போற்றுகிறது.

கோயில்களில் பெரும்பாலும் சுதை வடிவில் மட்டுமே சதாசிவ மூர்த்தி அமைந்துள்ளதைக் காணலாம்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மேலைக் கோபுரத்தின் முதல் நிலை- மேற்புறத்தில் வலப் பக்கம் சதாசிவ வடிவம் உள்ளது. மேலும், இங்குள்ள கிழக்குக் கோபுரத்தின் கிழக்குப் பகுதியின் முதல் நிலையிலும், 2-ம் கோபுர வடப் பக்கம் கீழ் வரிசையிலும், சந்நிதி நுழைவாயிலில் உள்ள துவாரபாலகர்களுக்குப் பின்புறத்திலும் இந்த வடிவைக் காணலாம். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் மேலைக் கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் சதாசிவரை தரிசிக்கலாம்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில், 2-ம் கோபுரத்தில் சதாசிவ திருவடிவம் உள்ளது. சதாசிவ மூர்த்தி வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட ராஜராஜ சோழன், தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் விமானத்தின் பல நிலைகளிலும் சதாசிவ மூர்த்தி சிலைகளை அமைத்து மகிழ்ந்தான் என்பர்.

எலிபெண்டா குகையில் ஐந்து முகங்கள், பத்து திருக்கரங்களுடன் நிற்கும் நிலையில் சதாசிவ மூர்த்தியின் வடிவம் காணப்படுகிறது.

-மணிவண்ணன், திருப்பூர்-4