Published:Updated:

இறைவிக்கு நன்றி சொல்லும் நிறைபணி விழா!

நிறைபணி விழா
பிரீமியம் ஸ்டோரி
News
நிறைபணி விழா

அம்பிகையின் ஆலயங்களைப் பொறுத்தவரை ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த வைபவம் நடைபெறுவது உண்டு.

நிறைபணி வைபவம் என்பது, நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான உணவுகளை அருளிய தெய்வத்துக்குச் செலுத்தும் நன்றிக் காணிக்கை ஆகும்.

முற்காலங்களில் கிராமப்புறங்களில் குறிப்பிட்ட தினத்தில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரவர் வீடுகளில் இருந்து கொண்டு வந்த உணவு வகைகளை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வழிபட்டு, அனைவரும் பகிர்ந்துகொள்வார்கள். கோயில்களிலும் வருடம்தோறும் ஒருநாள் இந்த வைபவம் நடைபெறுவது உண்டு.

அம்பிகையின் ஆலயங்களைப் பொறுத்தவரை ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த வைபவம் நடைபெறுவது உண்டு. கிராமப்புறங்களில் இந்த வைபவத்தை, ‘பொதுப் படையல்’ என்று குறிப்பிடுவர். இந்த வருடம் 24.7.2020 (ஆடி-9) வெள்ளிக்கிழமையன்று ஆடிப்பூரம்.

நிறைபணி விழா
நிறைபணி விழா

அம்பாளுக்கு உகந்த ஆடிப் பூரம் நன்னாளில், செங்கல்பட்டு மாவட் டம், திருவடிசூலம் - அருள்மிகு ஆதிபரமேஸ்வரி தேவி கருமாரி அம்மன் மகா ஆரண்ய க்ஷேத்திரத்தில். ‘பொதுப் படையல்’ என்ற பெயரில் நிறைபணி வைபவம் நடைபெறுகிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய தேவி ஶ்ரீகுகயோகி மதுரைமுத்து ஸ்வாமிகள், ‘`தட்சிணாயன காலத்தின் தொடக்க மாதமான ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில்தான் விவசாயிகள் விவசாயம் செய்யத் தொடங்குவார்கள். அதையொட்டியே, ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழி ஏற்பட்டது.

அற்புதமான இந்த மாதத்தில் பூரம் நட்சத்திர நாளில், `அம்பாளின் அருளால் தங்கள் வயல்களில் விளைச்சல் பெருகவேண்டும்’ என்ற பிரார்த்தனையுடன், விவசாயிகள் தங்களுக்குக் கிடைத்த உணவு தானியங்களை நன்றிக் காணிக்கையாக அவளுக்குப் படைத்து வழிபட்டு, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். இன்றைக்கு அரிதாகிவிட்ட இந்த வைபவம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த பல வருடங்களாக ஆடிப்பூரம் தினத்தில் நமது ஆலயத்தில் நிறைபணி வைபவம் நடத்தி வருகிறோம்.

நிறைபணி விழா
நிறைபணி விழா

அன்றைய தினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொண்டு வரும் காய் கனிகள், உணவுப் பண்டங்கள், இனிப்பு வகைகள் அனைத்தையும் தேவியின் சந்நிதிக்கு முன்புள்ள விசாலமான மண்டபத்தில் அழகாக அடுக்கி வைத்து, தேவிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். பின்னர் அவை கோயிலில் இருக்கும் பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப் படுவதுடன், கோயிலைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் வழங்கப்படும்

கொரொனா பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக இந்த வருடம் சூழ்நிலை சரியாக இல்லைதான். என்றாலும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிறைபணி வைபவம் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஆடிப்பூரத்தன்று ஆலயத்தில் ஊரடங்கு விதிகளை மீறாதவகையில், மிக எளிமையான முறையில் நிறைபணி வைபவம் நடைபெற உள்ளது’ என்றார்.

ஆடிப்பூரத்தன்று நாமும் வீட்டில் அம்ம்பாளுக்கு காய்-கனிகள், இனிப்பு வைகைகள் என்று நம்மால் இயன்றதைப் படைத்து மனமுருக வழிபடுவோம். அவளின் அருளால் இன்னல்களும் பெரும்பிணி பாதிப்பும் நீங்கி உலக மக்கள் நலம் பெறட்டும் என்று வேண்டிக்கொள்வோம்.