Published:Updated:

கோதையை வணங்குவோம்!

கோதை
பிரீமியம் ஸ்டோரி
News
கோதை

ஜூலை-24 : ஆடிப்பூரம்

துரையிலிருந்து சுமார் 74 கி.மீ. தூரத்திலும், விருதுநகரிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது ஶ்ரீவில்லிப்புத்தூர். இவ்வூரின் பெருமைகள் வராக புராணம்- ரகஸ்ய காண்டத்தில் 9 அத்தியாயங் களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீவராக அவதாரம் நிகழ்ந்த தலமாகக் கருதப் படுவதால், இதை ‘வராக க்ஷேத்திரம்’ என்பர். ஆண்டாள் அவதரித்ததால் மேலும் சிறப்புற்றது.

நள வருஷம், ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தசியில் பூரம் நட்சத்திரத் தில், செவ்வாய்க் கிழமை அன்று இங்கு அவதரித்தவள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள். பெரியாழ்வார் புஷ்ப கைங்கரியம் செய்யும் தனது நந்தவனத்தில் துளசி பாத்திக்கு அருகில், சர்வ லட்சணங்களும் பொருந்திய குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார். குழந்தைக்குக் கோதை என்று பெயர் சூட்டினார்.

பெருமாள் வழிபாட்டுக்காக தினமும் பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மலர் மாலையை முதலில் கோதை சூடி மகிழ்வது வழக்கம். ஒரு முறை அதைக் கண்டு கோபம் கொண்ட ஆழ்வார், மகளைக் கடிந்து கொண்டார். அன்று இரவில் அவர் கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே எமக்கு உகந்தது!’ என்றருளினார். அது முதல் கோதைக்கு, ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!’ என்று பெயர் உண்டாயிற்று.

திருமண வயதடைந்த ஆண்டாள், ‘அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்!’ என்றாள். பெரியாழ்வார் குழம்பினார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் தெய்வப் பிறவி. அவளை ஶ்ரீரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று அருளி மறைந்தார்.

கோதை
கோதை

அதன்படி ஶ்ரீரங்கம் வந்த கோதை, காவிரிக் கரையை அடைந்ததும் காணாமல் போனாள். பெரியாழ்வார் கலங்கினார். கோதை தனக்குத் திருவடிச் சேவை செய்வதைப் பெரியாழ்வாருக்குக் காட்டினார் பெருமாள். ஆனால், ஶ்ரீவில்லிப்புத்தூர் வந்துதான் கோதையை மணம் முடிக்க வேண்டுமென்று பெரியாழ்வார் வேண்டினார். அதன்படி ஶ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி, ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை திருமணம் செய்து கொண்டார் பெருமாள் என்கிறது தல புராணம்.

வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில் ஶ்ரீரங்கம், ஆண்டாளின் புகுந்த வீடு; ஶ்ரீவில்லிப்புத்தூர் அவளது தாய் வீடு. ‘108 திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவள்’ என்ற பெருமை ஆண்டாளுக்கு உண்டு.

மு.ராகவையங்கார், ஆண்டாளது காலத்தைக் கணிக்க உதவும் அபூர்வ மான வானியல் நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளி எழுதலும், அதே நேரம் வியாழன் உறங்குதலும் அபூர்வ நிகழ்ச்சி. 8-ஆம் நூற்றாண்டில் இம்மாதிரி நிகழ்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆண்டாளின் திருப்பாவையில் `வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று...' என்ற வரிகள் உண்டு. கி.பி.716 ஆம் ஆண்டு திரு ஆடிப்பூரத்தில் ஆண்டாள் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. தன் பதினைந்தாம் வயதில் (கி.பி.731) ஆண்டாள் திருப்பாவை இயற்றினாள் என்பர். திருப்பாவை தெய்வக் கடாட்சம் மிகுந்தது.

ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் உள்ள வாரணமாயிரம் என்று தொடங்கும் முதல் பாடல் உட்பட 11 பாடல்களையும் கன்னியர் தினமும் பக்தியுடன் பாடினால் விரைவில் திருமணம் நிகழும். வரும் ஆடிப்பூரத் திருநாளில் நாமும் ஆண்டாளை வணங்கி வரம் பெறுவோம்.

- எஸ்.புவனா, சென்னை-2