Published:Updated:

ஸ்ரீகாமாக்ஷி தந்த வரம்!

ஸ்ரீகாமாக்ஷி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீகாமாக்ஷி

வரம்வாரி வழங்கும் பஞ்ச காமாக்ஷி தேவியர்

ஸ்ரீகாமாக்ஷி தந்த வரம்!

வரம்வாரி வழங்கும் பஞ்ச காமாக்ஷி தேவியர்

Published:Updated:
ஸ்ரீகாமாக்ஷி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீகாமாக்ஷி

ஸூதி: ஸ்வேதிம கந்தளஸ்ய வஸதி: ச்ருங்கார ஸாரச்ரிய:

பூர்தி: ஸூக்திஜரீரஸஸ்ய லஹரீ காருண்யபாதோநிதே:

வாடீ காசந கௌஸுமீ மதுரிமஸ்வாராஜ்யலக்ஷ்ம்யாஸ் தவ

ஸ்ரீகாமாக்ஷி மமாஸ்து மங்களகரீஹாஸப்ரபாசாதுரீ

- மூகபஞ்சசதீ

காஞ்சியின் மகத்துவத்தை அறியாதவர் அரிது. பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரம், தொண்டை நாட்டின் கோயில் நகரம் என்றெல்லாம் புகழ்பெற்ற காஞ்சியம்பதிக்கு மேலும் புகழ் சேர்ப்பது, அன்னை காமாக்ஷியின் திருக்கோயில்.

சக்தி பீடங்களில் காஞ்சியை ஒட்டியாண பீடமாகக்கொண்டு ஆட்சி செய்து வருகிறாள் அன்னை காமாக்ஷி. அந்த அன்னையின் மகிமையைப் பாடுவதையும் அவளின் பேரருள் கதைகளைப் பரப்புவதையுமே பெரும் வரங்களாகக் கருதி வாழ்ந்திருக்கிறார்கள் மகான்கள் பலரும். அவர்களில் ஒருவர் பாடியருளிய ஸ்தோத்திரப் பாடலில் ஒன்றுதான் தொடக்கத்தில் நீங்கள் கண்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தப் பாடலில் காமாக்ஷி அன்னையை அவர் எப்படியெல்லாம் வர்ணித்துப் பாடுகிறார் பாருங்கள்... `அம்மா காமாக்ஷி தாயே! உன் புன்சிரிப்பின் அழகு, வெண்மை துளிர்க்கும் இடம்; சிருங்கார ரஸமான அழகின் இருப்பிடம். அதுமட்டுமா? அழகிய பேச்சின் இனிமைக்கு பூர்ணத்துவம் தரும் இடம்; கருணைக்கடல் அலைபாயும் இடம்’ என்று சிலாகித்துப் பாடியிருக்கிறார். மேலும், `இனிமை என்னும் பேரரசியாகிய லட்சுமிதேவி உலாவும் சிறந்த பூஞ்சோலை உன் புன்சிரிப்பு. அந்தப் புன்னகை எனக்கு மங்கலம் அருளட்டும்’ என்றும் போற்றுகிறார்.

எவ்வளவு அற்புதமான வரிகள். உள்ளக் கோயிலில் அன்னையைக் கொலுவீற்றிருக்கச் செய்து, அனவரதமும் அவளைத் துதித்துக்கொண்டிருக்கும் ஒருவரால்தான் இப்படியான துதியைச் செய்ய இயலும். ஆம்! இந்தப் பாடலைப் பாடிய மகானும் அப்படியானவர்தான். அவரின் திருப்பெயர் ஸ்ரீமூக சங்கரேந்திர சரஸ்வதி சுவாமிகள். காஞ்சி ஸ்ரீசங்கரமட பீடத்தை அலங்கரித்த இந்த சுவாமிகளை ஸ்ரீமூக கவி என்றே அருளாளர்கள் போற்றுவார்கள்.

ஸ்ரீகாமாக்ஷி
ஸ்ரீகாமாக்ஷி
ஸ்ரீமூக கவிக்குக் கிடைத்த வரம்

வித்யாவதி தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவருக்குச் சிறுவயதில் பேச்சு வரவில்லையாம். பிற்காலத்திலேயே கவி பாடும் அளவுக்குச் சொல்வன்மை பெற்றார். காரணம், அம்பாள் காமாக்ஷி தந்த வரம். ஆம், அம்பாள் `தாம்பூல உச்சிஷ்டம்’ தந்து மூகனுக்கு சகல ஞானமும் அளித்து அருள்பாலித்தாளாம். இது ஸ்ரீமூக கவிக்குக் கிடைத்த வரம் எனில், அவர் மூலம் ஸ்ரீமூகபஞ்சசதி எனும் அற்புத ஸ்தோத்திர நூலை நமக்கெல்லாம் வரமாகத் தந்துவிட்டாள் காமாக்ஷியம்பாள்.

ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் அம்பாளின் திருவடிவைச் சிறப்பித்து 100 பாடல்களாலான ஸ்ரீசெளந்தர்ய லஹரி எனும் ஞானநூலை அருளினார் எனில், ஸ்ரீமூக கவி 500 பாடல்களாலான ஸ்ரீமூகபஞ்ச சதியை அருளியுள்ளார். அன்னையின் திருவடிவம், திருநாமம் முதலானவற்றின் பெருமையைச் சிறப்பிக்கும் ஆர்யா சதகம், அவளின் அருள்கடாக்ஷத்தை விவரிக்கும் கடாக்ஷ சதகம், அம்பாளின் திருவடிகளின் மகிமையைச் சொல்லும் பாதார விந்த சதகம், அம்மையின் புன்னகைக்கான சாந்நித்தியத்தைச் சொல்லும் மந்தஸ்மித சதகம், அம்பாளைப் போற்றிப்பாடும் ஸ்துதி சதகம் ஆகிய ஐந்து சதகங்களாலானது ஸ்ரீமூகபஞ்சசதி. இந்த ஞானநூலின் பாடல்களில் ஒன்றையேனும் அனுதினமும் படித்து ஸ்ரீகாமாக்ஷி தேவியை தியானித்து வழிபட்டு வந்தால், நம் வாழ்வை வரமாக்கித் தருவாள் அந்த அன்னை.

அம்பிகையிடம் மேலும் என்னென்ன வரங்களை நாம் எதிர்பார்க்கலாம்?! அவள் குடியிருக்கும் திருக்கோயிலும் அதன் சிறப்பம்சங்களுமே இந்தக் கலியுகத்தில் நமக்குக் கிடைத்த வரங்கள்தாம்!

தங்க மழை பொழிந்தாள்!

சக்தி பீடங்களில் அம்பிகையின் ஒட்டியாண பீடமாக காஞ்சியம்பதி திகழ, அங்கே திருக்கோயில் கொண்டு காயத்ரீ மண்டபத்தில்... பக்தர்களின் விருப்பங்களையெல்லாம் விருப்பத்தோடு நிறைவேற்றிவைக்கும் கற்பக விருட்சமாய் அருள்கிறாள் அன்னை காமாக்ஷி.

அது கிருதயுக ஆரம்பம். தேவர்களது பிரார்த்தனைக்கு இணங்க, பண்டாசுரனை அழிக்க பிலத் துவாரத்தில் (அம்பிகையின் கருவறை) இருந்து தோன்றினாள் காமாக்ஷிதேவி, என்கிறது தல புராணம். பண்டாசுரன் வதத்துக்குப் பின், அம்பாளின் கட்டளைப்படி, காயத்ரீ மண்டபத்தை நிர்மாணித்து, அம்பாளின் கன்யா ரூபமாகிய பிம்பத்தை பிரதிஷ்டை செய்தனர் தேவர்கள்.

பிறகு அந்த மண்டபத்தை அடைத்து, இரவு முழுவதும் அம்பிகையை ஸ்தோத்தரித்தனர். அருணோதய காலத்தில் கதவைத் திறந்த தேவர்கள், கன்யா ரூபமான, பிம்பத்துக்குப் பதில், அம்பிகை சகலாபரண பூஷிதையாக, மலர்ந்த முகம் மற்றும் சதுர்புஜங்களுடன் பத்மாசினியாக அமர்ந்திருப்பதைக் கண்டனர். இன்று நாம் தரிசிக்கும் காமாக்ஷிதேவி, இப்படித் தோன்றியவளே!

ஸ்ரீ காமாக்ஷி
ஸ்ரீ காமாக்ஷி

ஆதிசக்தியை ராஜராஜேஸ்வரியாக, காஞ்சியில் ஸ்தாபித்து பூஜித்தவன் பிரம்மன். கும்பாபிஷேகம் முடிந்ததும் மகிழ்ச்சியில் தாமரைப்பூ ஒன்றை வான் நோக்கி எறிந்தான். அது மானுடனாகியது. அனுக்கு ‘ஆகாச பூபதி’ என்று பெயரிட்டான் பிரம்மன்.

அவனிடம் காஞ்சி மாநகர ஆட்சியைக் கொடுத்தான்.

அவன் குழந்தைப் பேறுக்காக வேண்ட, விநாயகரை அவனுக்கு மகவாக அளித்தாளாம் காமாக்ஷியம்மை. அந்தக் குழந்தையின் தற்போதைய பெயர் துண்டீரன். அவனது நாமகரண விழாவின்போது சுமங்கலி போஜனத்தில் தேவியும் வந்து உணவு உண்டாள். விநாயகர் அவளை நோக்கித் தவழ அன்னை மறைந்தாள். ஆனால், பிரசாதமாகக் காஞ்சி நகர் முழுவதும் தங்க மழை பெய்வித்தாள்.

காரணம், ஆகாசபூபதியின் மனைவி விருந்துக்கான பொருள்களின் தரத்தைச் சோதித்தபோது பயத்தம் பருப்பில் கை நுழைத்துத் துழாவினாள். அப்போது அவள் கை விரல் மோதிரத்தில் இருந்த ஒரு தங்க முத்து உள்ளே விழுந்து விட்டது. அது பயத்தம் பருப்பு மோதகத்தில் தங்கி, பராசக்தியின் வயிற்றில் போய் விட்டது. தனக்குத் தங்க முத்துக் கொடுத்த காஞ்சிக்கு தங்க மழை கொடுத்தாள் காமாக்ஷி என்றொரு திருக்கதை உண்டு.

துண்டீரன் ஆட்சி புரிந்தமையால், இந்தப் பகுதி தொண்டை மண்டலம் எனப்பட்டது. இந்தக் கோயிலில் உற்சவ காமாக்ஷி சந்நிதிக்கு எதிரே அவளைத் தொழுதபடி நின்ற கோலத்தில் துண்டீர மகாராஜா இடம்பெற்றுள்ளார். உற்சவ காமாக்ஷி சந்நிதியில் இருந்து துண்டீர மகாராஜா சந்நிதி வரை மௌனமாகச் செல்லா விட்டால் துண்டீரரின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்பது ஐதிகம்.

குழந்தைப்பேறு வாய்க்கும்

அயோத்தி மன்னன் தசரத சக்ரவர்த்தி புத்திர பாக்கியம் வேண்டி, தீர்த்த யாத்திரை வரும்போது காஞ்சி காமாக்ஷியை வழிபட்டார். அப்போது இங்குள்ள சந்தான ஸ்தம்பத்திலிருந்து, அசரீரியாக ‘உனக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்’ என்று அம்பாள் கூறினாளாம். இந்த சந்தான ஸ்தம்பத்தை பிரதட்சணம் செய்தால், வம்சம் தழைக்கும்.

இங்கு வந்த அகத்தியர், ஸ்ரீஹயக்ரீவரை குருவாக ஏற்றார். அகத்தியருக்கு ஸ்ரீலலிதாம்பிகை மந்திரத்தை உபதேசித்தார் ஸ்ரீஹயக்ரீவர்.

அன்னபூரணிக்கு ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம்

உணவு பஞ்சம் வராது

காயத்ரீ மண்டபத்துக்குச் செல்லும் வழியில் சந்நிதிகொண்டிருக்கும் அன்னபூரணிக்கு ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். இந்தச் சந்நிதியில் தர்ம துவாரம், பிக்ஷத் துவாரம் ஆகியன உள்ளன. அன்னபூரணியை வணங்கி பிக்ஷத் துவாரத்தின் வழியாக ‘பகவதி பிக்ஷம் தேஹி’ என்று கையேந்திப் பிச்சை கேட்டு வழிபட்டால், உணவுப் பஞ்சம் வராது.

வரம்வாரி வழங்கும் பஞ்ச காமாக்ஷி தேவியர்

ங்கு பஞ்ச காமாக்ஷிகள் இருப்பதாக ஐதிகம்.

கருவறையில் அருளும் பிரதான நாயகி மூலஸ்தான காமாக்ஷி. அருகிலேயே அருள்கிறாள் தபசு காமாக்ஷி. சிவபெருமானை வேண்டி பஞ்சாக்னியின் நடுவில் அன்னை காமாக்ஷி தவம் செய்த இடம் இது என்பர். அடுத்தது பிலாகாஸ காமாட்சி. இந்த வடிவத்துக்கு முன்பு காமாக்ஷி, ஆகாயத்தில் பிலாகாஸமாக - பொந்து ஒன்றில் இருந்ததாகக் கூறுவர். அடுத்தது உற்சவ காமாட்சி. இந்த விக்கிர கத்துக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அடுத்தது, பங்காரு காமாக்ஷி (பாத தரிசனம்).

காமாக்ஷியம்பாள் சந்நிதியில், ஐந்து காமாக்ஷி தேவியருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்வது இங்கு பிரசித்தம். வாரத்தில் ஏதேனும் ஒரு கிழமையைத் தேர்வுசெய்துகொள்ள வேண்டும். அன்று ஐந்து தேங்காய், ஐந்து விதமான பழங்கள், ஐந்து விதமான மலர்கள், வெற்றிலை - பாக்கு ஐந்து செட் என்று வழங்கி, அர்ச்சித்து வணங்கி, வேண்டும் வரங்களை அன்னையிடம் சொல்லிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அடுத்து ஐந்து முறை பிராகார வலம் வந்து வழிபடவேண்டும். எந்தக் கிழமையில் தரிசித்தோமோ, அதே கிழமையில் அடுத்தடுத்த வாரங்களில் வந்து காமாட்சி அம்பாளை தரிசித்து, ஐந்து அம்பிகையருக்கும் அதேபோல் ஐந்து அர்ச்சனைகள் செய்து வேண்டிக்கொள்ளலாம்.

வசதி வாய்ப்பு இருந்தால், ஐந்து அர்ச்சனைகள் செய்யும்போது, ஐந்து விதமான பழங்களுடன் ஐந்து வித இனிப்புகளும் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, சம்பா மிளகு சாதம், தயிர் சாதம் என ஐந்து வகைச் சித்ரான்னங்களும் படைத்துப் பிரார்த்திக்கலாம்.

இதன் மூலம் பித்ருக்களின் சாபத்தில் இருந்து முற்றாக விடுபடுவீர்கள். அவர்கள் குளிர்ந்து, உங்களையும் உங்கள் வம்சத்தையும் ஆசீர்வதிப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, காமாட்சித் தாயின் பேரருள் கிடைத்து, பெருவாழ்வு வாழ்வீர்கள். உங்கள் காரியங்களில் இருந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். நினைத்த காரியங்கள் யாவிலும் தேவி துணை நின்று காத்தருள்வாள்.