Published:Updated:

சங்கடங்கள் தீர்க்கும் சனி மஹாபிரதோஷம்... பிரச்னைகள் தீர்க்கும் எளிய பரிகாரங்கள்!

அரிதினும் அரிதான ஐப்பசிமாத உத்தம மஹாபிரதோஷம் இன்று வாய்த்துள்ளது. இந்த நாளில் சிவவழிபாடு செய்து நம் சங்கடங்களை தீர்க்கலாம்.

பிரதோஷம்
பிரதோஷம்

மாலை, பகலும் இரவும் சந்தித்துக்கொள்ளும் வேளை. ஒளி மறைந்து இருள் சூழத்தொடங்கும் நேரம். இருள் முழுமையாகச் சூழ்ந்துவிட்டால் நம்மால் எதையும் காண இயலாது. அப்போது உதவியாக நாம் விளக்கேற்றிக்கொள்கிறோம்.

கோயில் கருவறைகளில் எப்போதும் விளக்கு எரிந்துகொண்டிருக்கும். அதேபோல வீடுகளில் அல்லது பிற இடங்களில் எப்போதும் விளக்கு எரியவேண்டிய அவசியமில்லை. இருள் சூழ்வதற்கு முன்பாக விளக்கேற்றி வைத்துக்கொண்டால் போதுமானது. அதேபோன்றுதான் ஞானமும்.

சிவபெருமான்
சிவபெருமான்

இறைவன் நம்முள் இருந்தால் ஞானம் என்னும் நிரந்தர விளக்கு நம்முள் எரிந்துகொண்டேயிருக்கும். ஆனால், இல்லறத்தில் சமூக வாழ்வில் இருப்பவர்களுக்கு அது சாத்தியமில்லாதபோது குறைந்தபட்சம் பிரதோஷ வேளைகளிலாவது இறைச் சிந்தனை என்னும் விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை அஞ்ஞான இருளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கமுடியும் என்பதை உணர்த்துவதே பிரதோஷ வழிபாடு.

தோஷங்கள் அனைத்தும் நீக்கும் வழிபாடு பிரதோஷ வழிபாடு. தினமுமே பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்வது நல்லது. இயலாதவர்கள் ஒவ்வொருமாதமும் இருமுறை வரும் திரயோதசி திதி அன்று பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும். திரயோதசி தினமே பிரதோஷ தினமாக அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரதோஷ தினமும் தனித்துவம் வாய்ந்தவை என்றபோதும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. அதனால்தான் அதை மஹா பிரதோஷம் என்று அழைக்கிறோம்.

மஹா பிரதோஷம்
மஹா பிரதோஷம்

மஹா என்கிற உரிச்சொல்லே அந்த தினத்தின் பன்மடங்கு மகிமைகளைச் சொல்லும். தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது சிவபெருமான் விஷம் உண்டு தேவர்களின் துயர்தீர்த்தது ஒரு சனிக்கிழமை திரயோதசி தினத்தன்றுதான் என்கின்றன புராணங்கள். அமிர்தம் வேண்டிக் கடைந்தவர்கள் ஆலகாலம் கண்டு அலறி ஓடினர். அந்த மகாதேவனைத் துதித்தனர். அப்போது மகாதேவன் தோன்றி அவர்களின் துயர்தீர்த்தார். அதேபோன்று நம் வாழ்வில் துன்பங்கள் சூழும் காலத்தில் அதிலிருந்து தப்ப அந்த சிவபெருமானைத் தொழ வேண்டியது அவசியம்.

நவகயிலாய திருத்தலங்களைக் காட்டும் 360 டிகிரி வரைபடம் #VikatanInteractive

சனிக்கிழமை பிரதோஷ தினம் வாய்ப்பது அரிது. அதனால்தான் அதை மஹா பிரதோஷம் என்கிறோம். மஹா பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட வேண்டியது அவசியம். சிவபெருமான் அபிஷேகப் பிரியன். லிங்க ரூபமான அந்த ஆண்டவனுக்கு எவ்வளவு அபிஷேகங்கள் செய்கிறோமோ அவ்வளவு வரங்கள் கிடைக்கும். ஒவ்வொரு அபிஷேகமும் ஒவ்வொரு பலன் கொடுக்கும்.

சிவபெருமான்
சிவபெருமான்

10 அபிஷேகங்கள் -  பத்து பலன்கள்

1. குழந்தை வரம் கிடைக்க தயிரால் அபிஷேகம் செய்ய வேண்டும். 

2. சந்தனத்தால் அபிஷேகம் செய்ய அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் பெருகும்.

3. கடன் தொல்லைகள் தீர அரிசி மாவால் அபிஷேகம் செய்யலாம்.

4. வேலைவாய்ப்பு கிடைக்க விபூதி அபிஷேகம் உகந்தது.

5. சர்க்கரை அபிஷேகம் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை அழிக்கும்.

6. குடும்ப நலன் காக்க இளநீர் அபிஷேகம் செய்ய வேண்டும்

7. மரண பயம் நீங்க எலுமிச்சை சாற்றால் அபிஷேகம் செய்யலாம்.

8. ஆரோக்கியம் காக்கப் பாலால் அபிஷேகம் செய்யலாம்.

9. சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பஞ்சாமிர்த அபிஷேகம் சிறந்தது

10. வாழ்வில் முக்தி கிடைக்க நெய் அபிஷேகம் செய்யலாம்.

வில்வ மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

பிரதோஷ காலத்தில் சிவாலயம் சென்று வழிபடுவது மிகவும் விசேஷம். பிரதோஷ வேளையில் அனைத்து தேவர்களும் சிவபெருமான் சந்நிதியில் எழுந்தருளியிருப்பர் என்பது ஐதிகம். எனவே, அந்த வேளையில் சிவன் சந்நிதியில் வைக்கப்படும் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். சிவாலயத்துக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளை தரிசித்து வணங்க வேண்டும். பிரதோஷ தினத்தன்று சோம சூக்த பிரதட்சிணம் எனப்படும் முறையில் பிரதட்சிணம் செய்து வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதிகம்.

நந்தி
நந்தி

சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு உகந்தது. சனியின் பார்வையால் நிகழும் கெடுபலன்கள் மாற பிரதோஷ வழிபாடு மிகவும் உகந்தது. சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபட சனிதோஷங்கள் முற்றிலும் நீங்கும். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட, வில்வமாலை அணிவிக்க, சனிபகவான் தன் அருள்பார்வையைக் காட்டியருள்வார்.

அரிதினும் அரிதான ஐப்பசிமாத உத்தம மஹாபிரதோஷம் இன்று வாய்த்துள்ளது. இந்த நாளில் சிவவழிபாடு செய்து நம் சங்கடங்களை தீர்க்கலாம்.