Election bannerElection banner
Published:Updated:

தொல்லைகள் தீர்க்கும் தோரணமலையில் தைப்பூசத் திருவிழா... சிறப்பு வழிபாடு... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

தோரணமலை
தோரணமலை

ஈசனின் ஆணைப்படி தென்னகம் வந்த அகத்தியர், பொதிகை மலைக்குச் செல்லும் வழியில், தோரணமலையின் மூலிகை மகத்துவங்களை அறிந்து சில காலம் இங்கே தங்கி பல அற்புத ஒளஷதங்களை உருவாக்கினாராம்.

முத்தமிழ் தலைவனாம் முருகப்பெருமானைக் கொண்டாடும் விழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இந்நாளில் ஈசனையும், ஈசனின் திருமகனையும் தரிசித்து வரங்கள் பெறுவது தொன்றுதொட்ட ஐதிகம். பிறவிப்பிணியையும் உடல் பிணியையும் ஒருசேரத் தீர்க்கும் அற்புத நன்னாள் தைப்பூசம். வேண்டிய வரங்களை வேண்டிய வண்ணமே அருளும் இத்திருநாளில் வாசகர்களுக்காக ஓர் அற்புதத் தலத்தில் சிறப்பு சங்கல்ப பூஜையை நடத்த இருக்கிறோம்.
தோரணமலை முருகன்
தோரணமலை முருகன்

ஆம், மேற்கு தொடர்ச்சி மலையின் ஆரம்ப மலையாக தோரண வாயிலாக அமைந்து இருக்கும் தோரண மலையில் அருளும் முருகப்பெருமானை ஆராதிக்கும் விழாவாக இந்த தைப்பூசம் அமைய உள்ளது. தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. இதன் உச்சியிலும் அடிவாரத்திலும் என இரண்டு இடங்களிலும் முருகன் கோயில் கொண்டிருக்கிறான். யானை அமர்ந்து இருப்பதைப்போல காட்சியளிப்பதால் ‘வாரண மலை’ என்றும் சித்தர் பெருமக்கள் பலர் கூடி நோய்களுக்கான காரணங்களை அலசி மருந்துகள் தயாரித்த மலை என்பதால் இது 'காரண மலை' என்றும் அழைக்கப்படுகிறது.

ஓங்கி உயர்ந்த இந்த அழகிய மலையின் அடிவாரத்தில் இருக்கும் கோயிலில் ஸ்ரீ வல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, ஸ்ரீ குருபகவான், ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, சப்த கன்னிமார்கள், ஸ்ரீ கன்னிமாரம்மன், நாகர்கள் ஆகிய சந்நிதிகளை தரிசிக்கலாம். அடிவாரக் கோயிலை கடந்து சுமார் 1,000 படிகள் கடந்து மேலே சென்றால் உச்சியில் உள்ள குகைக்கோயிலை அடையலாம். மலையெங்கும் அபூர்வ மூலிகைகள் காணப்படுவதால் இங்கு வீசும்காற்றை சுவாசித்தாலே போதும், உடல் பிணிகள் யாவும் நீங்கிவிடும் எனலாம்.

ஈசனின் ஆணைப்படி தென்னகம் வந்த அகத்தியர், பொதிகை மலைக்குச் செல்லும் வழியில், தோரணமலையின் மூலிகை மகத்துவங்களை அறிந்து சில காலம் இங்கே தங்கி பல அற்புத ஒளஷதங்களை உருவாக்கினாராம். அகத்தியரின் சீடரான தேரையர் ஜீவ சமாதி அடைந்ததும் தோரணமலையில்தான் என்கிறார்கள். இன்றும் பல சித்தர்கள் அரூபமாக வந்திருந்து முருகனை வழிபடும் தெய்வ மலை இது என்கிறார்கள். ராமபிரான் இங்கு வந்து அகத்தியரை தரிசித்து சிவ தீட்சை பெற்றார் என்றும் சொல்கிறார்கள் அடியவர்கள். ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று மகாகவி பாரதி வியந்து பாடிய முருகப்பெருமானும் இந்த தோரணமலை வாசனைத்தான் எனப்படுகிறது.

தோரணமலை அழகனை வணங்கினால், தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும்; மழலை பாக்கியம், வேலை, வியாபார விருத்தி, வெளிநாட்டு யோகம், மன நிம்மதி யாவும் ஸித்திக்கும் என்பது இங்கு வந்து பலன் பெற்றோர் கூறும் சத்திய சாட்சி எனலாம்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தோரணமலை திருத்தலத்தில் வாசகர்களின் நல்வாழ்வை எண்ணி உங்கள் சக்தி விகடன் குழுமம் சிறப்பு தைப்பூச சங்கல்ப பூஜையை நடத்தவுள்ளது. அதன்படி 28.1.2021 அன்று விசேஷ பூஜைகளும் அபிஷேகமும் நடைபெறவுள்ளது. தைப்பூச நாளில் காலை 5 மணிக்கே தொடங்கும் சிறப்பு வைபவங்களில் நீங்களும் வீட்டில் இருந்தே கலந்து கொள்ளலாம். கோயிலின் நிர்வாகம் அன்று முழுக்க பல விசேஷ பூஜைகளை நடத்தவுள்ளது. அதிகாலை நடைபெறும் கணபதி ஹோமம், 8 மணிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பிறகு உச்சி கால பூஜை, அன்னதானம், மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கும் சரவண ஜோதி விளக்கு பூஜை போன்றவற்றை முடிந்தவர்கள் நேரில் சென்று தரிசிக்கலாம். இயலாதவர்கள் சக்தி விகடன் வழியே சிறப்பு சங்கல்பத்தில் கலந்து கொள்ளலாம்.

தோரணமலை
தோரணமலை
உங்கள் வசதிக்காக இலவசமாக நடத்தப்படவுள்ள இந்த வைபவத்தில் நீங்களும் கலந்து கொண்டு உங்கள் குடும்ப மற்றும் நண்பர்களின் நலன் வேண்டி சிறப்பு சங்கல்பம் செய்து தோரணமலை முருகனை வழிபடலாம்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு