Published:Updated:

ஆறு மனமே ஆறு - 39

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

கடவுளும் கருணையும்!

அன்பு மகனே! இந்தப் பிரபஞ்சம் இறைவனின் அற்புதமான படைப்பு. செடிகொடிகளும் மரங்களும் மலைகளும் நிறைந்த - சமுத்திரத்தால் சூழப்பட்ட இந்த உலகில், ஒவ்வோர் உயிரிலும் ஆண்டவனையே பார்.

அப்போது உன் மனதுக்குள் பயமோ, சோர்வோ இருக்காது. ஆம், அனைத்து உயிர்களிடத்தும் நீ செலுத்தும் அன்பு மிக அவசியமானது. அதேபோல், கடவுளிடமிருந்து உன்னைப் பிரிக்க நினைக்கும் சக்திகள் உன்னைவிட்டு தள்ளியே இருக்கட்டும். அதுவே கடவுளை அடையும் வழியாகும்.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு மனிதர்களிடையே இருவேறு கருத்து கள் எப்போதும் உண்டு. `இருக்கிறார்’ எனச் சொல்பவர்கள் பெருமளவு எனில், `இல்லை’ எனச் சொல்பவர்களும் கணிசமாக உண்டு. அப்படி யானவர்கள், தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்வார்கள். கடவுள் நம்பிக்கையை மூடநம்பிக்கை எனச் சொல்லும் வாதம் அவர்களுடையது. அதையே கடவுள் நம்பிக்கையாளர்களை எதிர்க்கும் ஆயுதமாகவும் பயன்படுத்துவர்.

உண்மையான பகுத்தறிவு என்பது கடவுள் நம்பிக்கையுடனான பகுத்தறிவுதான். தாழ்ந்தவர்- உயர்ந்தவர் எனும் பேதம், `எனக்கு நிகர் எவரும் இல்லை’ எனும் எண்ணம் போன்றவை இல்லாமல் அனைவரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்ப்பதே ஆன்மிகம்.

அதில் உருவம், அருவம், அருவுருவம் எனப் பல நிலைகள், பற்பல அவதாரங்களைப் போற்றும் - வெவ்வேறு நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் பற்பல வழிபாடுகள், திருமுறைகள், புராணங்கள் எனப் பலவகை நூல்கள் என எல்லாமும் உண்டு. என்றாலும் அவை அனைத்தும் கடவுள் இருக்கிறார் என்பதையே உறுதிப்படுத்துகின்றன... சரிதானே?!

இதில் என்ன தவறு இருக்க முடியும்? பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும் நடிகர் ஒருவராகவே இருப்பார். அதுபோன்று பெயர்கள், உருவங்கள் பல இருப்பினும் தெய்வசக்தி என்பது ஒன்றே ஒன்றுதான். அதையே கடவுள் என்கிறொம்; வழிபடுகிறோம்.

`கடவுள் இல்லை’ என்பது எப்படி இருக்கிறது என்றால், தன் நாக்கைக் கொண்டே தனக்கு நாக்கு இல்லை என்று சொல்வதுபோல் இருக்கிறது.

நம்பிக்கையும்-முயற்சியும்

கடவுள் நம் அருகில்தான் இருக்கிறார். நம்முள்தான் இருக்கிறார். அவரை அடையாளம் காண்பதுதான் நமது கடமை. அதற்கான மார்க்கமே கடவுள் வழிபாடு.

சிலருக்குக் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் முயற்சி காணாமல் போய்விடும். வேறு சிலருக்கோ நம்பிக்கை என்பது அறவே இருக்காது ஆனால் முயற்சி மிகுதியாக இருக்கும். இந்த இரண்டில் ஒன்று இருந்து மற்றொன்று இல்லாவிடில் பயனேதும் இல்லை. ஆக, நம்பிக்கையுடன் முயற்சியும் இருக்க வேண்டும்!

கடவுள் இருக்கிறார் என்பதற் காக எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று இருக்க முடியுமா?

ஏரியில் ஒரு படகு. அதில் இரண்டு துடுப்புகள் இருந்தன. ஒன்றின் மீது நம்பிக்கை என்றும் மற்றொன்றின் மீது முயற்சி என்றும் எழுதப்பட்டிருந்தது. படகில் ஏறியவன், முதலில் நம்பிக்கை எனும் துடுப்பை மட்டுமே பயன்படுத்திப் படகைச் செலுத்த முனைந்தான். ஆனால் படகு வட்டமடித்துக் கொண்டிருந்ததே தவிர, முன்னே நகரவில்லை.

அடுத்து வந்தவன் இந்தத் துடுப்பை விட்டுவிட்டு, முயற்சி எனும் துடுப்பை மட்டுமே பயன்படுத்தினான். அவனுக்கும் வெற்றி கிடைக்கவில்லை. மூன்றாமவன் நம்பிக்கை, முயற்சி ஆகிய இரண்டையும் ஒருசேர பயன்படுத்தினான். அப்போது படகு எளிதாக முன்னேறியது. நமக்கும் நம்பிக்கை, முயற்சி ஆகிய இரண்டும் தேவை என்பதை எல்லோரும் உணரவேண்டும்.

உடலநலம் சரியில்லை. நம்பிக்கையோடு மருத்துவரிடம் செல்கிறோம். அவருடன் உரையாடிவிட்டு வந்தாலே போதுமா... உடல் குணமாகிவிடுமா? ஆகாது! மருத்துவர் எழுதித் தரும் மருந்து மாத்திரைகளை முறைப்படி சாப்பிட்டு, அவரின் பரிந்துரைகளைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். நம்பிக்கையும் முயற்சியும் இப்படித்தான்.

வேண்டுதல் எப்படி இருக்கவேண்டும்?

இந்த விஷயம் நிறைவேற வேண்டும், இன்னின்ன பிரச்னைகள் தீர வேண்டும் என்றும் இன்னும் என்னன்னவோ வேண்டும் என்றும் விண்ணப்பம் வைத்து தீபம் ஏற்றி, பரிகார பூஜைகள் செய்கிறோம். சிறப்பு வழிபாடுகளுக்குப் பணமும் செலுத்துகிறோம்.

இவை அனைத்தும் எவரோ சிலருக்கு வாழ்வாதாரத்தைக் கொடுப்பதென்னவோ நல்ல விஷயம்தான். வழிபாடுகள் தொடரட்டும்... அதேநேரம், இவை எல்லாவற்றையும் கடந்து, `என் வாக்கு, மனசு, செயல்கள் அனைத்தும் சிறக்கவேண்டும். அடுத்தவருக்குக் கெடுதல் விளைவிக்காமல் நற்செயல்களில் ஈடபட வைக்கும் நல்ல எண்ணம் வேண்டும்’ என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். அதுவே உண்மையான கடவுள் வழிபாடு.

அகங்காரம் இல்லாத முயற்சிகளில் கடவுளின் கருணை பிரவாகமாக வழிந்தோடும்.

பாறையின் மீது விழும் விதையானது முளை விடாது. அலைபாயும் மனதும் சில தருணங் களில் பாறையாகிவிடுகிறது. இதயத்தில் கருணை எனும் நீர் சுரந்தால்தான் நல்ல எண்ணங்கள் முளைவிடும். அன்பு, அக்கறை, சரணாகதி தத்துவம் ஆகிய உரம் சேர்த்து பக்தி விதையை உள்ளுக்குள் விதைக்கும்போது, இறைவனின் கருணையாகிய கனியை நாம் பெற்று மகிழலாம்.

பிரபஞ்சமே கருணையின் அடிப் படையில் அமைந்ததுதான். ஆகவே உயிர் ஒவ்வொன்றிலும் கடவுளைக் காண கற்றுக் கொள்ளுங்கள்.

புறாவுக்காக சதையை அரிந்து கொடுத்த சிபிச் சக்ர வர்த்தியின் கதை தெரியும். அவன் புறாவுக்கு ஈடாக தன் வலதுபாகத்தில் சதையை அரிந்துகொடுத்ததால், `இடது பாகத்துக்கு அந்தப் பாக்கியம் கிட்டவில்லையே’ என்று மன்னனின் இடது கண், நீர் உகுத்ததாம். எல்லாமும் ஒன்றுக்குள் ஒன்று அடக்கம் எனும் தத்துவத்தை உணர்த்துவது கருணை. அற்புதமான இந்தக் குணமே நம் கலாசாரத்தின் ஆதாரம்!

- மலரும்...

மீன் மட்டும் மாட்டிக்கொள்வது ஏன்?

தண்ணீரில் நண்டு, ஆமை, தவளை முதலானவை வாழ்கின்றன. அதே நீரில் மீனும் இருக்கிறது. தூண்டிலில் ஆமை, தவளை எதுவும் மாட்டிக் கொள்வது இல்லை. ஆனால் மீன் மட்டும் மாட்டிக் கொள்கிறது. ஏன் அவை நாக்கு ருசியில் அலைந்து கொண்டிருக்கின்றன. அதனால் மாற்றுகின்றன. அதேபோல் நாமும் நாக்கு ருசியோடு அலையக்கூடாது.

நாக்கு ருசிக்கே நாம் மாட்டிக் கொள்வோம் என்றால், அதோடு கண், காது முதலான ருசிகளும் சேர்ந்து கொண்டால் நம் பாடு என்னவாவது! புலனடக்கம் மிகவும் அவசியம்.

கே.ராமன், மதுரை - 3