பிரீமியம் ஸ்டோரி

ரகுண பாண்டியனின் ஆட்சிக் காலம் அது. திருவிடைமருதூர் சிவாலத்துக்காக விளைந்த எள்ளினை, திருக்கோயிலின் எதிரில் காய வைத்திருந்தனர்.

ஒருவன், கைப்பிடி எள்ளை எடுத்து வாயில் போட்டான். மிகச் சரியாக அந்த வேளையில் அங்கு வந்து சேர்ந்த மன்னர் அதைப் பார்த்துவிட்டார்.

அவனை அழைத்து, ``சிவாலயத்தின் எள்ளைச் சாப்பிட்டால் தண்டனை உண்டு தெரியுமா?’’ எனக் கேட்டார்.

``தெரியும்!’’ என்றான் அவன்.

தண்டனையை அனுபவிக்கத் தயாராக இருப்பவனைப் போல், சலனம் இல்லாமல் நின்றவனிடம், ``உனக்கான தண்டனை என்னவென்று தெரியுமா?’’ என்று மீண்டும் கேட்டார் மன்னர். ``அதுவும் தெரியும்... அடுத்தப் பிறவியில் எருதுவாகப் பிறந்து, இந்த ஆலயத்தில் வேலை செய்யவேண்டும்’’ என்றான் மகிழ்ச்சியாக.

உடனே ``வாயைத் திற’’ என்று அதட்டலுடன் கட்டளையிட்டார் மன்னர். அவனும் சற்றுப் பயத்துடன் வாயைத் திறந்தான்.

சட்டென்று அவன் வாய்க்குள் விரலைவிட்டு நான்கு எள்ளை எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டு, ``நீ எருதுவாகப் பிறந்து ஆலயத் துக்கு உழைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதைப் பார்த்து மகிழ்கிறேன். நானும் உன் வாயிலிருந்த எள்ளை முழு மனத்தோடு எடுத்துத் தின்றேன். ஆகவே, நானும் எருதாகப் பிறப்பேன். நாம் இருவரும் இணைந்து சிவாலயத் தொண்டு செய்து மகிழலாம்’’ என்றார்.

மாமன்னரின் சிவபக்தியைக் கண்டு அனைவரும் வியந்தனர்!

- அ.யாழினி பர்வதம், சென்னை-78

வாரியார் வாக்கு!

வருவதும் போவதும் இன்பமும் துன்பமும்.

வந்தால் போகாதவை புகழும் பழியும்.

தானாக வருபவை இளமையும் மூப்பும்.

நம்முடன் வருபவை பாவமும் புண்ணியமும்.

அடக்க முடியாதவை ஆசையும் துக்கமும்.

தவிர்க்க முடியாதவை பசியும் தாகமும்.

பிரிக்க முடியாதவை பந்தமும் பாசமும்.

அழிவைத் தருபவை கோபமும் பொறாமையும்.

அனைவருக்கும் உள்ளவை பிறப்பும் இறப்பும்!

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு