திருக்கதைகள்
Published:Updated:

லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி கடாட்சம்

பிரேமா நாராயணன்

என் தந்தை வழி குலதெய்வம் திருப்பதி வேங்கடேசப் பெருமாள். திருமணமாகி 10 வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை என்பதால், என் பெற்றோர் பெருமாளை வேண்டி வேண்டிப் பிறந்த பிள்ளை நான். அதனால்தான் எனக்கு `வெங்கடலக்ஷ்மி’ என்று பெயர் வைத்தனர். ‘வேங்கடவன்’ என்றால் துக்கத்தை அறுப்பவன் என்று பொருள்.

லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்


என் தாய் ஏதாவது திட்டினால்கூட, உடனே நான், “நான் உன் துக்கத்தை அறுக்கறதுக்கு வந்திருக்கேன். என்னைத் திட்டாதம்மா. வேண்டி வேண்டிப் பொறந்திருக்கேன்” என்பேன் நான்.

சிறிய வயதில் அடியெல்லாம் வாங்கியிருக்கிறேன். அம்மாவிடம் அடி வாங்காதவர்கள் நம்மில் யார்?! ஆனா ஊன்னா ‘இதோ கரண்டி போட்டிருக்கேன் அடுப்புல’ என்று மிரட்டுவார் அம்மா.

“நான் பெருமாளோட பிரசாதம். நீ கரண்டியெல்லாம் காய வச்சு வச்சேன்னா, பிரசாதம் கருகிப்போயிடும்” என்று நான் திருப்பி மிரட்டுவேன்.

இதை என் சிறு வயதில் என் தந்தையும் சொல்வாராம். ‘இந்தக் குழந்தை நமக்குப் பிரசாதம். இதை மிரட்டக் கூடாதென்று சொல் வார்’ என அம்மா அடிக்கடி கூறுவதுண்டு.

அப்பா சிறந்த பக்திமான். தினமும் பூஜை செய்வார். பூஜைக்கென சின்னதாக ஒரு நாராயணன், லக்ஷ்மி, தவழும் கிருஷ்ணர் மற்றும் ஒரு பிள்ளையார் விக்கிரகங்களை நீண்ட காலமாக வைத்திருந்தார்.

என் தாத்தவிடமிருந்து வந்தவை அவை. தினமும் அவற்றுக்கு அபிஷேகம் செய்வார். இதெல்லாம் தலைமுறை தலைமுறையாகச் செய்து வந்ததுதான். அந்த மகாலக்ஷ்மியையும் நாராயணனை யும் அம்மாவிடம் கொடுத்து, பின்னர் என்னிடம் வந்தன. பிள்ளையாரும் கிருஷ்ண ரும் கூட எனக்குத்தான் கொடுத்தார் அப்பா. ஒரு குறிப்பிட்ட காலம் வரை அம்மா அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். நான் சினிமாவுக்கு வந்தபிறகு, எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அபிஷேகம், பூஜை எல்லாமே செய்துகொண்டிருந்தேன்.

ஆனால் அம்மா அபிஷேகம் செய்யும்போது நான் கேட்பேன், “இதெல்லாம் கோயிலில்தானே செய்யணும்?” என்று.

“இதன் மேல் தியானம் வரணும்கிறதுக்காகத்தான் உனக்குக் கொடுத்திருக்கு. இதெல்லாம் செய்தால்தான் அந்த ஸ்மரணை வரும்” என்பார் அம்மா. ஆனாலும் என் சந்தேகம் தீரவில்லை.

‘இதய வீணை’ படத் தயாரிப்பாளர் வித்வான் வே.லெட்சுமணன். தமிழ் வித்வான் அவர். ஜாதகம், ஜோசியம் எல்லாம் பார்க்கத் தெரிந்தவர். மிகவும் தெய்விகமாக பூஜை, புனஸ்காரங்கள் செய்யக் கூடியவர். 1971-72ல் ‘இதய வீணை’ படத்தில் நடிக்கும்போது, என் பூஜை பற்றியும், அப்பா கொடுத்த விக்கிரகங்கள் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அப்போது அவர், “அம்மா... எந்த விக்கிரகம் ஆனாலும் அளவு கைப் பிடிக்குள்தான் இருக்கவேண்டும். அதைத்தான் நாம் பூஜை செய்யணும். ஒரு கைப்பிடிக்கு மேல் அளவு இருக்கும் விக்கிரகத்தை கிரஹஸ்தர்கள் வீட்டில் பூஜை செய்யக் கூடாது. அதிலும் நீ சின்னப் பொண்ணு. எதுக்கும் நீ எல்லா விக்கிரகங்களையும் என்னிடம் காட்டு. நான் பார்த்துட்டுச் சொல்றேன்!” என்றார்.

ஒருநாள் வீட்டுக்கும் வந்து பார்த்தார். “இந்த மகாவிஷ்ணு, மகாலக்ஷ்மி எல்லாம் எங்காணும் கோயில்ல கொண்டு போய் கொடுத்துடலாம். அர்ச்சகர் யாராவது வச்சு பூஜை பண்ணுவா. அல்லது உண்டியலில் போட்டுடலாம்’’ என்றார்.

நான் “மாமா... நீங்களே வச்சுக்கோங்களேன். நீங்கதான் பூஜை எல்லாம் பண்றேள்” என்றேன் சடாரென.

“சரி... ஒருநாள் எடுத்துண்டு வா” என்றார். தி.நகரில் அவருடைய வீடு. ஒருநாள் அவற்றை ஒரு வெள்ளிப் பெட்டியில் வைத்துக் கொண்டு போய் அவரிடம் கொடுத்தும் விட்டேன்.

அவர் எனக்குச் சிறியதாக ஒரு தவழும் கிருஷ்ணரையும் பிள்ளை யாரையும் கொடுத்து, ‘`நீ இது ரெண்டையும் வச்சுப் பூஜை பண்ணு. எதுவுமே இந்த உயரத்துக்கு மேல் போகக் கூடாது” என்றார். கிட்டத்தட்ட 50 வருடங்கள் ஓடிவிட்டன. அவர் கொடுத்த விக்கிரகங்கள் மட்டுமே இப்போது என்னிடம் இருக்கின்றன.

எது எங்கே போய்ச் சேரவேண்டும், எதை எந்தெந்தக் காலகட்டத் துக்கு, யார் பூஜிக்க வேண்டும்... எல்லாவற்றையுமே கண்டிப்பாக அந்த இறைவன்தான் தீர்மானிக்கிறான் என்பது என் நம்பிக்கை. இன்று நான் இதைப் பேசுகிறேன் என்றால், அதுகூட இறைவன் என் மூலமாக ‘இதைச் செய், அதைச் செய்’ என்று செய்யவைக்கிறான் என்றுதான் நினைக்கிறேன்.

`நாம் எல்லோருமே வாக்கி டாக்கி ரோபோட்டுகளோ’ என்றுகூடத் தோன்றும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கடமை யைக் கொடுத்திருக்கிறானோ அந்த இறைவன்?!

`நான் பட்டினி கிடக்கவேண்டும்’ என்று நான் நினைத்தால் மட்டும் பட்டினியாகக் கிடந்துவிட முடியாது. நான் பட்டினியாக இருக்கவேண்டும் என்பதுகூட அவன் நினைத்தால்தான் நான் கிடக்க முடியும்.

பல வருஷங்களாக ஏகாதசி விரதம் இருந் திருக்கிறேன். அதைப் பற்றிக்கூட நான் உங்களிடம் ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் விரதம் விட்டுப் போய்விட்டது.

2007-ல் ஒரு ஏகாதசி தினத்தன்று, ஏதோ ஒரு விமானப் பயணத்தில் இருந்தேன். அதிகமாகப் பசித்தது. ஏகாதசி என்பதையும் மறந்து, விமானப் பணிப்பெண் கொடுத்த சாண்ட்விச்சைச் சாப்பிட்டுவிட்டேன். நன்கு வெங்காயம் எல்லாம் போட்டு சூப்பராக இருந்தது. (நான் பூண்டு சாப்பிடமாட்டேன். அதன் மணம் பிடிக்காது. வெங்காயம் சேர்த்துக்கொள்வேன்).

கர்நாடகாவில் அன்று ஒரு வீட்டில் ஷூட்டிங். பெங்களூருவிலிருந்து சிறிது தூரம் போகவேண்டும். அவர்கள் கர்நாடக ‘ஷெட்டி’ என்னும் வகுப்பினர். அவங்க வீடெல்லாம் மிகவும் அலங்காரமாக இருக்கும். சாதாரண வீடாக இருக்கும்... ஆனால் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்தால் அதில் ஒரு கலை நயம் இருக்கும்; ஓர் அழகும், தெய்விகமும் பளிச்சிடும். அவர்களிடம் பணம் நிறையச் சேரும். காரணம், பணத்தை அவர்கள் தெய்விகமாக நினைக்கின்றனர். அதை இறைவன் கொடுத்த பிரசாதமாக எண்ணிக் கையாளுகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு சிறிய வீட்டில்தான் ஷூட்டிங். அந்த வீட்டில் பல தடவை ஷூட்டிங் நடந்திருக்கிறது. ஆனால் இந்த ஒரு கவனம் இல்லாமல் போய்விட்டது... ஏதோ ஒரு ஷாட் எடுப்பதற் காக பூஜை அறைக்குள் போகப் போனபோது, அந்த வீட்டு அம்மா என்னை நிறுத்தினார்.

“இன்னிக்கு ஏகாதசி. நீங்க சாப்பிட்டிருந்தா உள்ளே வரவேணாம்” என்றார்.

“அம்மா... தயவுசெஞ்சு தப்பா நினைக் காதீங்க. நான் ஏகாதசி விரதம் இருக்கிறவதான். இன்னிக்கு விடியக்காத்தால ஃப்ளைட் ஏறின தால, ரொம்பப் பசிச்சுதுன்னு சாப்டுட்டேன்’’ என்றேன்.

‘`சுவாமியை நினைச்சிண்டு, ‘கிருஷ்ணா, நாராயணா’ன்னு கொஞ்சம் தண்ணி குடிச்சிருந்தா பசி தானாக அடங்கிப் போயிருக் குமே” என்ற அந்த அம்மாவுக்கு 70 வயது இருக்கும். ஆனால் படுசுறுசுறுப்பாக எல்லா வேலைகளையும் செய்வார்.

அவர் சொன்னது உண்மைதானே! ஒரு வாய் தண்ணீர் குடித்திருந்தால் பசி அடங்கியிருக்கும். ஏன் நாம் உணவுக்காக அலைந்து சாப்பிட்டோம். அந்த வாசனை... சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் நம்மைக் கடந்துபோகும்போது வந்த வாசனை... நம்ம ஜன்ம வாசனை... அன்றைய தினம் என் விரதம் அந்த வாசனை யால் உடையவேண்டும் என்று இருந்திருக்கிறது.

மனசுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ‘தப்புப் பண்ணிட்டோமே!’ என்று. `‘சரி இன்னொரு நாள் அந்த ஷாட்டை எடுத்துக் கொள்ளலாமா’’ என்று இயக்குநரிடம் கேட்டேன்.

அகஸ்மாத்தாக எனக்கு மருமகளாக நடித்த சங்கவி, பூஜை அறைக்குள் போகும் நிலையில் இல்லாததால், அன்றைய ஷூட்டிங் சனிக்கிழமைக்குத் தள்ளிப்போடப்பட்டது.

சனிக்கிழமைகளில் நான் உப்பு இல்லாமல் சாப்பிடுவேன். பல பேருக்கான பிரார்த்தனை அது. அந்த அம்மா பூஜை அறையில் இருக்கும் அத்தனை விக்கிரகங்களையும் விளக்குகளையும் தினசரி தேய்ப்பாராம். தேய்த்துக் கழுவி, பொட்டு, பூ வைத்து, பெரியவர் பூஜை செய்வார். அபிஷேகம் முடிந்தபின், விக்கிரகங்களை அலம்பியபின்... எப்படி திருப்பதியில் துடைப்பார்களோ, அதேபோல் அவர் துடைப்பார்.

ஏன் இதைப் பிரத்யேகமாகச் சொல்கிறேன் என்றால், திருப்பதியில் அபிஷேகம் முடிந்ததும் பெருமாளுக்குக் குறிப்பிட்ட ஒரு வஸ்திரத்தால் துடைத்துவிடுவார்கள். அதுவும் குறிப்பிட்ட ஒரு பிராண்டு நல்லெண்ணெய் வைத்துத் துடைப்பார்கள். (அந்த நல்லெண்ணெய்க்கான விளம்பரப் படத்தில் நான் சமீபத்தில்தான் நடித்தேன் என்பது கொசுறுச் செய்தி). அது 100 வருஷத்துக் கம்பெனி.

அந்த நல்லெண்ணெயில் ஒரு சொட்டு விட்டுத்தான் அந்த வீட்டு அம்மா விக்கிரகங் களைப் பளபளவெனத் துடைப்பார். எல்லா விக்கிரகங்களும் சின்னச் சின்னதாய், ஒரு இன்ச், ஒன்றரை இன்ச் அளவில்தான் இருக்கும். எல்லாவற்றையும் எண்ணெய் விட்டு சுத்தமாகத் துடைத்தபின், மீண்டும் ஒரு துணி போட்டுத் துடைத்துவிட்டு, அந்தத் துணியைத் தூக்கிப் போட்டுவிடுவார். அந்தச் சிரத்தையும் சுத்தமும் இருக்கிறதே... அற்புதம்!

அபிஷேகம் முடிந்தபிறகு, இதுபோல துடைத்து கோலம் போடுவார். அந்த அறையிலிருந்து ரேழி வரை சுவாமியின் இடம். யாரும் அந்த இடத்தில் அப்படி இப்படி நடக்கக் கூடாது என்பதற்காக, அங்கிருந்து துளசி மாடம் வரை குட்டியூண்டு பாதங்கள் வரைந்து வைத்திருப்பார் பாருங்கள்!

நான்கூட கிருஷ்ணரின் பாதங்களை அச்சு எடுத்திருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் அத்தனையும் அவர் வரைந்தவை! அவ்வளவு நேர்த்தியாக மாக்கோலத்தில் போட்டிருப்பார். அதுவும் தினமும் சோம்பலின்றி போடுவாராம். காலையில் பாதம் போட்டு, துளசிக்குத் தண்ணீர் விட்டுப் பூஜை செய்து, விளக்கு ஏற்றிப் பாதத்தை வணங்கி, ஒரு பூவை வைத்து விட்டுப் போவது வழக்கம்.

மூன்று தலைமுறைகளாக அங்கே வாழும் அந்தக் குடும்பத்தில் லக்ஷ்மி கடாட்சத்துக்குக் குறைவே இல்லை. அந்த ஒரு சுத்தம், அந்த ஒரு அழகைப் பார்த்ததும்தான் நான் நினைத்தேன்... சுத்தம் சோறு போடும் என்று சான்றோர்கள் சொன்னது சரிதான் என்று.

சிறிய வீடாக இருந்தாலும்கூட, மகாலக்ஷ்மி கடாட்சம் இருந்தால் அந்த வீட்டில் அனைவருக்கும் கண்டிப்பாக எந்நாளும் சோறு கிடைக்கும்; அன்னத்துக்குப் பஞ்சமே இருக்காது.

-கடாட்சம் பெருகும்...

மாதவா மதுசூதனா!

மகாவிஷ்ணுவைப் போற்றுவதற்கு எண்ணிலடங்கா திருநாமங்கள் உள்ளன. அவற்றில் சில திருப் பெயர்களை எதெதற்குச் சொல்ல வேண்டும் என்பதை நாம் அறிவது அவசியம்.

விஷ்ணு - மருந்து உட்கொள்ளும்போது

ஜனார்த்தனன் - உணவு உண்ணும்போது

பத்மநாபன் - படுக்கச்செல்லுமுன்

பிரஜாபதி - திருமணத்தின்போது

சக்ரதாரி - யுத்தம் வரும்போது

திரிவிக்ரமன் - வெளியே கிளம்பும்போது

தரன் - நண்பர்களைச் சந்திக்கும்போது

கோவிந்தன் - கெட்ட கனவுகளைக் கண்டால்

மதுசூதனா - துன்பம் வரும்போது

நரசிம்மன் - வனப் பயணங்களின்போது

மகாவிஷ்ணு - நெருப்பால் துன்பம் வரும்போது

வராகர் - தண்ணீரால் துன்பம் வரும் போது

ராமன் - மலை ஏறும்போது

வாமனன் - நடக்கும்போது

நாராயணன் - உயிர் பிரியும்போது

மாதவன் - சகல நேரங்களிலும்

- கே.துளசி, கடலூர்