Published:Updated:

வெட்டவெளியில் மஞ்சள் தோன்றிய அதிசயம்; கலா மாஸ்டர் பகிரும் ஆன்மிக அனுபவம்! #Video

கலா மாஸ்டர்

சதாசிவம் சாருக்கு அந்தப் பையன் சொன்னது விநாயகரே சொன்னதுபோல் தோன்ற அந்த விநாயகரை எனக்கே கொடுத்துவிட்டார். அன்று வந்தவர்தான் இன்றும் என்னோடே இருக்கிறார்

வெட்டவெளியில் மஞ்சள் தோன்றிய அதிசயம்; கலா மாஸ்டர் பகிரும் ஆன்மிக அனுபவம்! #Video

சதாசிவம் சாருக்கு அந்தப் பையன் சொன்னது விநாயகரே சொன்னதுபோல் தோன்ற அந்த விநாயகரை எனக்கே கொடுத்துவிட்டார். அன்று வந்தவர்தான் இன்றும் என்னோடே இருக்கிறார்

Published:Updated:
கலா மாஸ்டர்

கலாமாஸ்டர், தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலம். நடன உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர். 'தன் வாழ்வில் நடந்த பெரிய விபத்தில் தான் தப்பிப் பிழைத்ததே இறைவன் புரிந்த கருணைதான்' என்று சொல்லும் கலாமாஸ்டர், 'ஆன்மிக நம்பிக்கை இல்லை என்றால் எனக்கு வாழ்க்கையே இல்லை' என்று நம்பிக்கையோடு பேசுகிறார். அவரின் குலதெய்வம், இஷ்ட தெய்வம், அடிக்கடி செல்லும் கோயில், அவர்கள் வீட்டில் இருக்கும் பெரிய விநாயகர் திருமேனி என்று பல செய்திகளோடு பல சிலிர்ப்பூட்டும் அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார். அந்த அற்புதமான அனுபவங்கள் இதோ உங்களுக்காக....

கலா மாஸ்டர்
கலா மாஸ்டர்

குலதெய்வம்

எங்கள் குலதெய்வம் தத்தமங்கலம் என்னும் ஊரில் இருக்கும் முருகப்பெருமான்தான் எங்கள் குலதெய்வம். அங்கே ஆண்டுக்கு ஒரு முறை குடும்பத்தோடு சென்று வழிபாடு செய்வோம். மே மாதம் குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த ஊரைச் சேர்ந்த எங்கள் உறவினர்கள் அனைவருமே அங்கு கூடுவோம். அன்றைய நாள் முழுவதுமே வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். காலையில் முருகனுக்கு வழிபாடு நடைபெறும் மாலையில் லட்சுமிக்கு வழிபாடு நடைபெறும். இந்த வழிபாட்டில் தவறாமல் கலந்துகொள்வோம். ஆனால் கொரோனாவால் இந்த இரண்டு ஆண்டுகளாகச் சென்று வர இயலவில்லை. அப்பா வழியில் குலதெய்வம் பராசக்தி. அவர் சொந்த ஊர் வைக்கம். அங்குள்ள பராசக்தியை அனுதினமும் பிராத்தனை செய்வோம்.

வீட்டுக்குவந்த விநாயகப்பெருமான்

நான் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபடும் வழக்கம் உண்டு. 2001-ம் ஆண்டு நவராத்திரி காலத்தில் அப்படி ஒரு முறை நான் சென்றபோது அங்கே ஒரு பெரிய அம்மன் திருமேனியை வைத்து பூஜைகள் செய்துவந்தனர். அங்கே இருந்த சதாசிவம் சார் என்னோட குருநாதர் மாதிரி. அவர் தினமும் வந்து வழிபாடு செய் என்று சொன்னதால் நவராத்திரி ஒன்பது நாள்களும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தேன். சூட்டிங் இருந்தாலும் மாலை எட்டு மணிக்குள் எப்படியாவது கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தேன்.

vinayagar
vinayagar

அங்கே ஒரு எண்ணெய் பாத்திரத்துக்குள் ஒரு விநாயகர் சிலையை வைத்திருந்தார்கள். கடைசி நாளில் இந்த விநாயகர் எங்கு பிரதிஷ்டை ஆகப் போகிறார் என்று கேட்டபோது, "ஒரு பெரிய சினிமா ஸ்டார் கட்டியிருக்கும் கல்யாண மண்டபத்தை அலங்கரிக்கப் போகிறார்" என்று சொன்னார்கள். நான் சரி என்று எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டேன். அப்போது அங்கு வந்த ஒரு சின்னப்பையன் சதாசிவம் சாரைப் பார்த்து, "என்ன மாமா எங்க போகுது இந்த விநாயகர் சிலை..." என்று கேட்க, சதாசிவம் சார் அவனிடம், "எங்க போகணும்னு நீ நினைக்கிற" என்று கேட்க, அந்தப் பையன் யோசிக்காமல், "கலாமாஸ்டர் வீட்டுக்குப் போகுதா..." என்று கேட்டுவிட்டுப் போய்விட்டான். நான் எதுவும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் தரிசனம் முடித்துக் காருக்கு வந்தபோது அந்த விநாயகர் என் காரின் பின் சீட்டில் இருந்தார். சதாசிவம் சாருக்கு அந்தப் பையன் சொன்னது விநாயகரே சொன்னதுபோல் தோன்ற அந்த விக்ரகத்தை எனக்கே கொடுத்துவிட்டார். அன்று வந்தவர்தான் இன்றும் என்னோடே இருக்கிறார் இந்த விநாயகர். இன்றும் என் குடும்பத்தில் ஒருவராக என்னோடு இருந்து அருள் செய்துகொண்டிருக்கிறார் அந்த விநாயகர். இவர் என் வீட்டுக்கு வந்தபின் என் வாழ்க்கையே மாறிவிட்டது.

எங்கிருந்து வந்தது மஞ்சள்?

ஆண்டுக்கு ஒரு முறை ஆற்றுக்கால் பகவதி மேல் எனக்கும் என் கணவரும் பக்தி அதிகம். அந்த அம்மன் மிகவும் சக்தியுள்ள கடவுள். ஆண்டுக்கொருமுறை நடைபெறும் பொங்கல் வைக்கும் அந்தத் திருவிழாவுக்கு நான் செல்வது வழக்கம். ஒருமுறை நானும் என் கணவரும் அங்கு சென்றோம். அங்கு நடந்த நிகழ்வு மறக்கமுடியாதது. என் கணவர் அப்போதுதான் புதிய கார் வாங்கியிருந்தார். அந்தக் காரில்தான் சென்றிருந்தோம். அங்கிருந்த பூசாரியிடம் காருக்குப் பூஜை செய்யச் சொன்னோம். கோயிலுக்கு வெளியே மரங்கள்கூட இல்லாத வெட்டவெளியில் காரை நிறுத்தி பூஜைபோட போடச் சொன்னோம். அவரும் செய்தார். பூஜையில் ஐயர் காருக்கு மஞ்சள் வைக்கப் போனார். உடனே என் கணவர், 'ஐயா, வெள்ளைக்கார், மஞ்சள் வைத்தால் மஞ்சள் கலர் தேங்கிட வாய்ப்புண்டு. அதனால் வைப்பதுபோன்று பாவனை செய்யுங்கள், போதும்' என்றார்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா
File Photo

அந்த பூசாரி பூஜையை முடித்துக் கற்பூரத்தோடு காரை மூன்று சுற்று சுற்றி வரும்போது எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்கு மஞ்சள் கார் மீது வந்து விழுந்தது. என் கணவர் அப்படியே ஆடிப்போனார். எங்கிருந்து வந்து விழுந்தது என்பது யாருக்கும் தெரியவேயில்லை. ஆனால் அம்மனின் விருப்பம்தான் நடக்கும். அதை மறுத்து நாம் எதுவும் செய்யமுடியாது செய்யவும் கூடாது என்று நாங்கள் தெரிந்துகொண்ட தினம் அன்று.

இதேபோன்று சாய்பாபா மீதான நம்பிக்கை, விபத்திலிருந்து தப்பவைத்த குருகிருபை என, கலாமாஸ்டர் பகிரும் பல ஆன்மிக அனுபவங்களைக் காண கீழே உள்ள வீடியோவில் காணுங்கள்.