Published:Updated:

பயம் வேண்டாம் நான் இருக்கின்றேன்

சாயி பாபா
பிரீமியம் ஸ்டோரி
சாயி பாபா

சாயிபாபா சிறப்புக் கட்டுரைப் போட்டி

பயம் வேண்டாம் நான் இருக்கின்றேன்

சாயிபாபா சிறப்புக் கட்டுரைப் போட்டி

Published:Updated:
சாயி பாபா
பிரீமியம் ஸ்டோரி
சாயி பாபா

அற்புதம் நிகழ்த்தினார் சாயி!

- சுபாஷினி சக்திகுமார் -

சில வருடங்களுக்கு முன்னர், என் அன்னைக்கு இருதய அறுவை சிகிச்சை நடப்பதாக இருந்தது. ஆனால், குறிப்பிட்ட நாளில் வேறொரு நோயாளிக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டதால், என் அம்மாவுக்கான அறுவை சிகிச்சை மறுநாள் தள்ளிவைக்கப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு முன்னதாக நோயாளியின் சார்பாக ஐந்து யூனிட் ரத்தம் மருத்துவமனையின் ரத்த வங்கியில் செலுத்தவேண்டும். இந்த விஷயத்தை குறிப்பிட்ட அலுவலர் தெரிவித்ததும் ரத்தம் சேகரிப்பதற்கான முயற்சியில் இறங்கினோம். ஆனாலும் கால அவகாசம் மிகவும் குறைவு. அப்போது அங்கே அருகிலிருந்த ஒருவர், ``சாயிபாபா சேவை மையத்தைத் தொடர்புகொண்டால் உடனடியாக ரத்தம் கொடுக்க ஆள்களை அனுப்புவார்கள்’’ என்று கூறி, அலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

என் தந்தையார் உடனடியாக அந்த எண்ணுக்கு அழைத்து விவரத்தைக் கூறி, மருத்துவமனையின் முகவரியையும் கொடுத்தார். ஆனால், வெகுநேரம் ஆகியும் எவரும் வரவில்லை. மீண்டும் ஒருமுறை அலைபேசியில் தொடர்புகொண்டோம். அப்போது பேசியவர் ``உங்களின் பெயர், முகவரி விவரங்கள் பதிவேட்டில் இல்லையே... ஆகவே. யாரையும் நாங்கள் அனுப்பவில்லை!’’ என்றார்.

குறிப்பிட்ட தொலைபேசியில் முதன்முறை எங்களுடன் பேசியவர், பெயர்-முகவரி விவரத்தைப் பதிவேட்டில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார் போலும். நாங்கள் பதற்றத்துக்கு ஆளானோம். எங்கெங்கெல்லாமோ சென்று தேடியும் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பிக்கொண்டிருந்தோம்.

`எப்படியேனும் நாளை அறுவை சிகிச்சை நடந்தாகவேண்டும். மறுபடியும் மாரடைப்பு வந்துவிட்டால் என்ன செய்வது...’ என்ற கவலையும் பயமும் ஒருபுறம் எங்களை வாட்டினாலும் மறுபுறம் `சாயிநாதன் கைவிட மாட்டார்’ என்று திடமாக நம்பிக்கைக் கொண்டிருந்தோம்.

சாயிநாதனை மனதில் வேண்டியபடியே மருத்துவமனைக்குள் நுழைந்தால், அங்கே ஒரே கூட்டம். தலைவரின் பிறந்தநாளையொட்டி ரத்த தானம் செய்வதற்காக கட்சித் தொண்டர்கள் வந்திருந்தார்கள். எங்களைக் கண்ட ரத்த வங்கி அலுவலர், “நீங்கள் யாரையும் அழைத்து வரவேண்டாம்; நிறையபேர் ரத்த தானம் வழங்கியிருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சாயிபாபாவுக்கு மனதார நன்றி சொன்னோம். மறுநாள் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடைபெற்று, அபாய கட்டத்தைத் தாண்டினார் என் அன்னை. அன்று இரவு , சாயிபாபா சேவை மையத்திலிருந்து அலைபேசியில் அழைத்து நடந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்தனர்.

அதற்கு என் தந்தை, ``என் பிரார்த்தனை வீண்போகவில்லை. எங்களுக்கு 5 யூனிட் ரத்தம் தேவையாக இருந்தது. சாயிநாதரோ 500 யூனிட் ரத்தம் வழங்கும்படி ஆள்களை அனுப்பிவைத்துவிட்டார். எல்லாம் அவரின் திருவருள்...’’ என்று கூறி, அவர்களை ஆற்றுப்படுத்தினார். இப்படிச் சாயி எங்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம்!`

சாயிபாபா
சாயிபாபா

பயம் வேண்டாம் நான் இருக்கிறேன்’

- பாபு கிருஷ்ணராஜ் ஆர். -

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, பாபாவின் உருவம் கண் களில் படும்போதும், அவரது திருக்கோயிலைக் கடக்கும்போதும், அவரது நாமத்தை மற்றவர்கள் உச்சரிப்பதைக் கேட்கும்போதும், ஏதோ வடநாட்டு மகான் எனக் கடந்துசென்று உள்ளேன்.

என் சகோதரி பணியாற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷீர்டி சென்று வந்தார். அவர், பெரிய சைஸ் பாபாவின் உருவப் படத்தைப் பரிசாகத் தர, முதன்முறையாக பாபாவின் திருவுருவம் எமது இல்லத்திற்குள் பிரவேசித்தது. ஆனாலும் அவரை உணராத மூடனாக, பரிசாக வந்த பாபாவின் திருவுருவப் படத்தைப் பெட்டியில் வைத்து மூடினேன். யாருக்காவது பரிசளிக்கும்போது இப்புகைப்படத்தை தந்து விடுவோம் என்றுகூட நினைத்தது உண்டு.

இந்த நிலையில் முனைவர் பட்டத்துக்கான இறுதிக்கட்ட ஆய்வைச் சமர்ப்பிக்கும் நாள் நெருங்கியது. இறுதிக்கட்ட பதற்றம், மனச் சோர்வு, பயம் என்று அல்லாடிக்கொண்டிருந்தேன். மனம் அமைதியற்று இருந்தது. அதுவரையிலும் எப்போதாவது என் கண்ணில் படும் பாபா படம், நான் பதற்றத்திலும் பயத்திலும் இருந்த நாள்களில் அடிக்கடி என் கண்ணில் பட்டது. என் மனம் என்னையுமறியாமல் மெள்ள மெள்ள பாபாவை நாடியது. அவரின் கனிவான பார்வை, புன்முறுவல், அருள்பொங்கும் முகம் என் மனக்கண்ணில் தோன்றி `நான் இருக்கிறேன்; எதற்கும் சோர்வைடையாதே. பயம் வேண்டாம்’ என்று உணர்த்தியது போன்ற அனுபவத்தை வார்த்தையாக்க முடியாது.

எனக்குள் ஒரு நெருப்பு அனல் பற்றிக்கொண்டது போன்று உணர்ந் தேன். என்னையும் அறியாமல் துடிப்புப் பெற்றேன். அடுத்தகட்ட பணிகள் மளமளவென நகர்வதை உணர முடிந்தது. ஆம்! சாயிநாதரின் முழு அருளோடு ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தேன். அது தேர்வுக் குழுவின் ஒப்புதலுக்குப் பின், வாய்மொழி தேர்விலும் வெற்றி பெற்று முனைவர் பட்டமும் பெற்றேன்.

இது, பாபா என் வாழ்வில் வந்ததால் கிடைத்த பரிசு என்பதைப் பரிபூரணமாக உணர்ந்தேன். இந்த அனுபவம் ஆரம்பம்தான். அதன் பிறகு இன்று வரையிலும் எனது ஒவ்வோர் அசைவிலும் பாபாவின் அருள் தொடர்வதை உணர்கிறேன்!