Published:Updated:

`உயிரில் கலந்தவர் எங்கள் குலசாமி உருமநாதர்!'

செந்தில்கணேஷ் - ராஜலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
செந்தில்கணேஷ் - ராஜலட்சுமி

வி.ஐ.பி ஆன்மிகம் பிரேமாநாராயணன்

`உயிரில் கலந்தவர் எங்கள் குலசாமி உருமநாதர்!'

வி.ஐ.பி ஆன்மிகம் பிரேமாநாராயணன்

Published:Updated:
செந்தில்கணேஷ் - ராஜலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
செந்தில்கணேஷ் - ராஜலட்சுமி

`அங்கே இடி முழங்குதுது...
கருப்பசாமி தங்கக் கலசம் மின்னுது...
ஏ மலையாம் மலையழகன்
மாமதுரை கல்லழகன்...’

கோடை இடி முழக்கம் போல ‘கணீர்’ என்று ஒலிக்கிறது மக்களிசைக் கலைஞர் செந்தில்கணேஷின் குரல். அதற்கு இசைவாக, மாலைத் தென்றல் போல மனதை வருடுகிறது அவரின் மனைவி ராஜலெட்சுமியின் இனிய குரல்!

`உயிரில் கலந்தவர் 
எங்கள் குலசாமி உருமநாதர்!'

கோயில், திருமணக் கச்சேரிகள், தொலைக்காட்சிப் படப்பிடிப்புகள் என இருந்தபோதிலும் ‘சக்தி விகடனு’க்காக மகிழ்ச்சியுடன் நேரம் ஒதுக்கினார்கள் இருவரும்.

இருவருமே ஆன்மிகத்தில் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பது பேட்டி தொடங்கியதுமே புரிந்தது.

``கடவுள் பக்தி மனதில் அரும்பியது எப்போது?’’

என்றதும் ராஜலெட்சுமி பேச ஆரம்பித்தார்:

``பக்தியில் ஊறிப்போன குடும்பம் எங்களுடையது. எங்கள் தாத்தா லெட்சுமண ஐயர் கர்னாடக சங்கீத வித்வான். தோளில் ஆர்மோனியத்தை மாட்டிக்கிட்டு, ஆவணி ஞாயிறு, புரட்டாசி சனிக் கிழமை, மார்கழி மாத பஜனைன்னு நிறைய இடங்களுக்குப் போவார். நாங்களும் கூடவே போய் பாடுவோம்.

இன்னும் சொல்லப்போனால், வீடு மாற்றி வேற வீட்டுக்குக் குடி போனால்கூட, அங்கே முதலில் பஜனைதான் பாடுவோம். அதனால என்னால குறிப்பிட்டுச் சொல்ல முடியல... எப்போ மனசில் பக்தி வந்ததுன்னு. அது கருவிலேயே வளர்ந்ததுன்னுதான் சொல்லணும்..’’ என்று சிரித்தபடியே அவர் செந்திலை நோக்க, அவர் தொடர்கிறார்.

``எங்கள் வீட்டில் இதுக்கு நேர்மாறுதான். தினமும் பூஜை பண்ற மாதிரியான விஷயங்கள் எல்லாம் இல்லை. வாராவாரம் வெள்ளிக்கிழமை வீட்டில் சாம்பிராணி போடுவாங்க. அது தவிர தீபாவளி, பொங்கல், ஆடிப் பதினெட்டு, ஆயுத பூஜை மாதிரியான விசேஷங்களுக்குத்தான் எல்லாரும் சேர்ந்து சாமி கும்பிடுவோம்.

கொஞ்சம் பெரியவனான பிறகு எனக்குள் வந்த பக்தி... சபரி மலைக்கும் பழநி மலைக்கும் மாலை போட்டுப் போறவங்களைப் பார்த்து வந்ததுன்னு சொல்லலாம். 17, 18 வயசுக்கு அப்புறம், நாமும் மாலை போடணும் என்கிற எண்ணம்தான் முதலில் வந்தது! அதுதான் என்னை ஆன்மிகத்துக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்தது.

11 வருஷங்கள் சபரிமலைக்குப் போயிருக்கேன். கிராமத்திலிருந்து கிளம்பி மலைக்குப் போறப்போ பல கோயில்களுக்குப் போவோம். அப்படிப் போகும்போதுதான் பக்தியை ரொம்ப உள்வாங்கி, உணர்ந்த தருணங்கள் வாய்ச்சது. அதேபோல், குலதெய்வத்தின் மேல மிகப் பெரிய பக்தி உண்டு. எல்லா காரியங்களிலும் குலதெய்வம்தான் கூட இருந்து வழிநடத்துறதா எப்போதுமே நம்புவோம்!’’

``குலதெய்வம் கோயிலுக்கு அடிக்கடி போவதுண்டா?’’

``எங்க குலதெய்வம் புதுக்கோட்டைக்குப் பக்கத்தில், பெருங்களூரில் இருக்கும் உரும நாதர். அது ஒரு காட்டுக்கோயில்.விநாயகர், உருமநாதர், மங்களநாயகி அம்மன், பிடாரி அம்மன், மலையாண்டின்னு அஞ்சு சாமி இருக்கும். எப்போ போனாலும் இவங்க அஞ்சு பேரையும் வழிபடுவோம். அதேபோல நான் பிறந்த ஊரான கலபத்தில், வீட்டுக் காவல்தெய்வங்களாக, காளியம்மனும், நொண்டி அப்பச்சியும் இருக்காங்க.

கிராமங்களில் ‘வகை’ன்னு சொல்வாங்க இல்லையா! எங்க வகைக்கு நாங்க காளியம்மன், நொண்டி அப்பச்சியைக் கும்பிடுவோம். பொங்கல் சமயத்தில் ரொம்ப சிறப்பாக இருக்கும். எங்க வழிபாடுன்னு கேட்டால்... இப்போ வரைக்கும் நாங்க எந்த ஒரு காரியத் தைத் தொடங்கினாலும், முதலில் குலதெய்வம் கோயிலுக்குப் போயி, ஒரு பெரிய மாலை வாங்கிச் சார்த்திட்டு, சாஷ்டாங்கமா விழுந்து கும்பிட்டு வந்தால்தான் எங்களுக்கு ஒரு நிறைவு. ஆரம்பிச்ச பணியும் சிறப்பாக முடியும்...’’ என்ற செந்தில், ‘உங்க குலதெய்வம் பற்றிச் சொல்லு’ என்பது போல மனைவியைப் பார்த்தார்.

``மணப்பாறைக்குப் பக்கத்தில் இருக்கிற வையம்பட்டி எல்லையம்மன்தான் கல்யாணத் துக்கு முன்னால எங்க குலதெய்வம். எல்லை அம்மனிடம் என்ன ஒரு ஸ்பெஷல்னா, அவங்களுக்கு இந்த சத்தமே பிடிக்காதாம். பொதுவாகவே நாங்க பாட்டுப் பாடுற குடும்பம். எல்லையம்மன் கோயிலுக்குப் போனா அபிஷேகம் எல்லாம் பண்ணிட்டு, உட்கார்ந்து ரெண்டு பாட்டு பாடிட்டு வரலாமே தவிர, கச்சேரியெல்லாம் பண்ணக் கூடாது.

ஆனாலும், எந்த இசைக் கருவியும் இல்லாம அம்மன் முன்னால் உட்கார்ந்து பாடிட்டு வர்றது ஒரு ஆத்மார்த்தமான அனுபவம்! கல்யாணத்துக்குப் பிறகு எனக்கும் எல்லாமே உருமநாதர்தான். இவர் சொன்ன மாதிரி, எங்கள் உயிரில் கலந்த தெய்வம் அவர். எங்களின் எல்லா தொடக்கத்திலும் அவர் இருப்பார்!’’

`உயிரில் கலந்தவர் 
எங்கள் குலசாமி உருமநாதர்!'

``கிராமப்புறம்னாலே திருவிழாக்களுக்குக் குறைச்சல் இருக்காது.. உங்கள் ஊர் திருவிழாக்களைப் பற்றிச் சொல்லுங்களேன்..!’’

``எங்க ஊரைச் சுற்றி நிறைய திருவிழாக்கள் நடக்கும். அப்போவெல்லாம் மார்ச் மாதம் பரீட்சை முடிஞ்சிட்டா, அதுக்கப்புறம் வரிசையா திருவிழாக்கள்தான். புதுக்கோட்டை யில் முதல் திருவிழாவாக திருவப்பூர் மாரியம்மன் பூச்சொரிதல் தொடங்கும். அதன் பிறகுதான் சுற்றியிருக்கும் நார்த்தாமலை, கொன்னையூர் இப்படி ஆறு கோயில்களிலும் பூச்சொரிதல் நடக்கும். அடுத்தடுத்து திருவிழாவும் வரிசையா வைப்பாங்க.

திருவிழா என்றாலே கலைநிகழ்ச்சிகள் இல்லா மலா? அதுவும் களைகட்டும். உற்சாகத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் கேட்கவா வேணும்!’’ என்று செந்தில் சொல்லியதும் ராஜலெட்சுமி, தங்கள் பகுதியில் நடைபெறும் ஒரு வித்தியாச மான விழா பற்றி விவரித்தார்.

``அதைத் திருவிழான்னு சொல்ல முடியாட் டாலும் ஒரு முக்கியமான விழான்னு சொல்லலாம். எங்க ஊர் திண்டுக்கல் பகுதியில் மழை இல்லாத காலகட்டங்களில் முச்சந்தி பூஜைன்னு ஒண்ணு செய்வாங்க.குடமும் தேங்காயும் வெச்சு, அதில் அம்மன் அலங்காரம் செய்து, மழை வேண்டி கும்பிடுவாங்க.

அந்த நேரத்தில் ‘மாரியம்மன் தாலாட்டு’ன்னு ஒண்ணு பாடுவாங்க. நான் 7, 8 வயசாக இருந்தப்ப எங்கம்மா சொல்வாங்க... ‘அங்கே முச்சந்தி பூஜை நடக்குது... நீ போய் மாரியம்மன் தாலாட்டு பாடிட்டு வா’ன்னு..

‘ஐயோ இவ்வளவு பெரிய புக்கைப் படிக்கணுமா’ன்னு இருக்கும். ஆனாலும் போய்ட்டு வருவேன். ஒரு சமயம், அந்தப் பாட்டு பாடறவர் வரல. அதனால என்கிட்ட புக்கைக் கொடுத்துப் பாடச்சொன்னாங்க. அதெல்லாம் ஒரு ‘பிளெஸ்ஸிங்’ மாதிரி நடந்தது’’ என்றவர், அந்தப் பாடலின் சில வரிகளையும் பாடிக் காட்டினார். அவர் பாடி முடிக்கவும் செந்திலிடம் கேட்டோம்: ‘

``நீங்கள் விரும்பிச் செல்லும் கோயில்?’’

``சபரிமலை! இந்த ரெண்டு வருஷமா கொரோனாவால் அவரைப் போய் தரிசிக்க முடியல. 2022-ல் கண்டிப்பாக அவர் அழைப்பார். அடுத்தது பழநி, திருச்செந்தூர் ரெண்டு கோயிலுக்கும் எப்படியாவது போயிடுவேன். நாங்க கலைஞர்களாக இருப்பதால் நிறைய கோயில்களில் பாடக்கூடிய வாய்ப்பு கிடைப்ப தால், சுவாமியை பக்கத்தில் நின்னு கும்பிடும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி அமையும்.

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கின்போது, பிரகதீஸ்வரருக்கு மிக அருகில் நின்னு தரிசனம் செய்ததை மறக்கவே முடியாது. அப்போ எனக்குள் ஒண்ணு தோணுச்சு.

‘இந்தக் கோயிலுக்கு முதல் முறை குடமுழுக்கு நடந்தபோது மாமன்னர் ராஜராஜ சோழன் இப்படி இந்த இடத்தில்தானே நின்னு சிவனைக் கும்பிட்டிருப்பார்’னு ஒருவிதமான சிலிர்ப்பு மனசுக்குள்!

`உயிரில் கலந்தவர் 
எங்கள் குலசாமி உருமநாதர்!'

வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வு! பொதுவாகவே எந்த ஒரு நல்லதுன்னாலும் அல்லது மனசுக்கு ஏதாவது சரியில்லன்னாலும் கோயிலுக்குப் போறதை நான் வழக்கமாகவே வச்சிருக்கேன்!’’ என்றார்.

கணவரை ஆமோதிக்கும் ராஜலெட்சுமி, ``பொதுவாக நாம எதுக்காக கோயிலுக்குப் போவோம்.. ‘எனக்கு இந்தப் பிரச்னை... இதைத் தீர்த்துவை’ன்னு கேக்கத்தானே போவோம்! அதை வீட்டிலேயே வேண்டிடுவோம். அதேபோல், எங்களுக்கு ஏதாவது ஒரு நல்லது நடந்தால், கண்டிப்பாக நன்றி சொல்லக் கோயிலுக்குப் போறதை ஒரு கொள்கையாவே வெச்சிருக்கோம். அதனாலேயோ என்னவோ... எங்க உருமநாதர், நிறைய நன்றி சொல்லத்தான் எங்களை அழைச்சுக்கிட்டே இருப்பார்’’ - என்று சிரித்தபடியே கூற, செந்திலும் புன்னகைக்கிறார்.

நிறைய கோயில்களை தரிசித்திருக்கும் இருவரும் போக விரும்பும் தலமாக திருப்பதியைக் குறிப்பிடுகிறார்கள். ``ஷீர்டிக்கும் ஒருமுறை போகணும்’’ என்றார் செந்தில்.

``குரு வழிபாட்டில் நம்பிக்கை உண்டா... உங்கள் குருநாதர்..?''

``நிச்சயம் உண்டு... ஷீர்டி சாயி நாங்கள் வணங்கும் மகான்’’ என்று மனைவி கூறி நிறுத்த, கணவர் தொடர்கிறார். ‘`எப்படி சுவாமி நம்மைக் கோயிலுக்கு அழைக்கிறாரோ, அதே மாதிரி குருவும் அவரேதான் நம்மை அழைப்பார் என்ற நம்பிக்கை உண்டு. இப்போகூட ஒரு கோயிலுக்குப் போகணும்னு நினைச் சிருக்கோம். அதைச் செயல்படுத்துறது அவன் கையில்தான் இருக்கு!’’ என்று மேலே பார்த்து விரல் உயர்த்துகிறார்.

இயற்கையை வணங்கும் பழக்கம் கொண்டவர் செந்தில். காலையில் எழுந்ததும் சூரியனை, வானத்தை, பஞ்ச பூதங் களை வணங்குவது உண்டாம். ‘`அதுதான் நமக்கு முதல் தெய்வம். முதலில் நேசிப்பதும் இயற்கையைத்தான். அதனால் எப்போதுமே இயற்கை வழிபாடு செய்வேன்’’ என்றவர் தொடர்ந்து பேசினார்... ‘`கருப்பசாமி பாடலைக் கேட்டுட்டு நிறைய பேர் சொல்வாங்க.. ‘உங்களுக்குள் கருப்பசாமியே இருக்கார்’னு. அது உண்மையா என்னன்னு தெரியாது. ஆனால் ஏதோ ஒரு சக்தி என்னை இயக்கி வழிநடத்துவதை நான் பல சமயங்களில் கண்கூடாக உணர்ந்திருக்கேன்.’’ என்றார்.

``உங்கள் வீட்டுப் பூஜையறைப் பொக்கிஷம்?’’

``ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருக்கும்போது, அவங்க சால்வைக் குப் பதிலாக செம்பில் செய்த கோமாதா சிலை ஒண்ணு நினைவுப் பரிசாகக் கொடுத்தாங்க. எங்க அம்மா ரொம்ப வருசமா சொல்லிட்டிருந்தாங்க.. ‘வீட்டு பூஜையறையில் ஒரு கோமாதா இருந்தால், எல்லா தெய்வங்களும் இருந்த மாதிரி.. வாய்ப்பிருந்தா வாங்கி வை’ன்னு. எங்க அலைச்சலில் அது ஞாபகமே இல்ல. அதுவே பரிசாகக் கிடைச்சப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. அதைப் பொக்கிஷமாக வச்சிருக்கோம். 24 மணி நேரமும் எரிவது போல விளக்கு ஒண்ணும் இருக்கு.சலனமே இல்லாமல் கண்ணாடிக்குள் அந்தச் சுடரைப் பார்ப்பதே அழகு!’’

``கடவுளுக்கு எப்போ என் பின்னாடி வரணும்னும் எப்போ என்னைச் சுமந்து நடக்கணும்னும் தெரியும். இதை எங்க வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் செய்துக்கிட்டே இருக்கார்!’’ மனமுருகிக் கூறுகிறார் ராஜலெட்சுமி.

இறையின் துணையொடு இந்தத் தம்பதியின் வெற்றிப் பயணம் தொடரட்டும்.