
பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் தேர்வில் வெற்றிபெற முயலும்போது பெற்றோர்கள் வழிபாட்டின் மூலம் அவர்களுக்கு மானசிகமாக உதவலாம்.
தேர்வுகள் தொடங்கிவிட்டன. பிள்ளைகள் படிப்பில் மும்முரமாக இருப்பார்கள். இந்த நிலையில் அவர்களை மனதளவில் தாங்கிப் பிடித்து நல்வழி காட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. பிள்ளைகளை உற்சாகமூட்டிப் படிப்பில் கவனம் செலுத்தப் பெற்றோர்கள் உதவுவதோடு அவர்களின் மனபலமும் சமயோஜித புத்தியும் வலுப்பட பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் தேர்வில் வெற்றிபெற முயலும்போது பெற்றோர்கள் வழிபாட்டின் மூலம் அவர்களுக்கு மானசிகமாக உதவலாம். இந்தக் காலங்களில் செய்யும் வழிபாடு என்பது பூஜை புனஸ்காரங்கள் என்ற சடங்குகளோடு செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக அமைதியாக சிவ வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.
`ஒருவருக்கு ஆரோக்கியம் தேவைப்படுகிறதென்றால் கண்டிப்பாக சூரியனை வழிபட வேண்டும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் தேவைப்படுகிறவர்கள் அக்னிதேவனை வழிபட வேண்டும். வித்யை எனப்படும் ஞானத்தைப் பெற விரும்புகிறவர்கள் ஈஸ்வரனை சரணடைய வேண்டும். மோட்சம் எனப்படும் வீடுபேறு தேவைப்படுகிறவர்கள் மகாவிஷ்ணுவைப் பற்றிக்கொள்ள வேண்டும்' என்கிறது ஸ்ருதி வாக்கியம்.

இதில் வித்யை எனப்படுவது கல்வியை, அறிவை, ஞானத்தைக் குறிக்கும். இதை நமக்கு வழங்கும் தேவனாக பரமேஸ்வரன் சுட்டப்படுகிறார். பரமேஸ்வரனின் 64 வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவம் சிறப்புவாய்ந்தது. ஞானத்தை உபதேசிக்கும் வடிவம் தட்சிணாமூர்த்தியுடையது.

Also Read
கல்வி வரம் அருளும் எண்கண் முருகன்
தட்சிணாமூர்த்திக்கு முன்பாக சனகாதி முனிவர்கள் அமர்ந்து பாடம் கேட்பார்கள். அவர்களுக்கு ஈஸ்வரன் மலர்ந்து உபதேசம் அளிப்பதில்லை. மாறாக அவர் மௌனத்தில் இருப்பார். அப்போது உபதேசம் மானசிகமாக சனகாதி முனிவர்களுக்கு நடைபெறும். இதில் சொல்லப்படுவது என்னவென்றால், அமைதியாக இறைவனை வேண்டிக்கொண்டாலும் மனதில் ஈஸ்வரனின் குரல் வழிகாட்டும் என்பதுதான்.

தேர்வு எழுதும் பிள்ளைகளும் பெற்றோர்களும் சொல்லிப் பயனடைய எளிய ஸ்லோகங்கள் உள்ளனவா... என்று குருவாயூரில் வேதபாடசாலை நடத்திவரும் வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகளிடம் கேட்டோம்.
"வித்யைகளுக்கு அதிபதி தட்சிணாமூர்த்தி.
`ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தையே மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் பிரயச்ச ஸ்வாகா'
என்பது தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரம். இதன் பொருள், தட்சிணாமூர்த்தியே எங்களுக்கு மேதைமையையும் பிரக்ஞாம் எனப்படும் சமயோஜிதமான புத்தியையும் அருள்வாயாக என்பதாகும். குழந்தைகளுக்குத் தேர்வு எழுதக் கற்ற கல்வியில் மேதைமை தேவை. மேலும் சமயோஜிதமான புத்தியும் தேவை.

கற்ற கல்வியில் நல்ல மேதைமை வேண்டும். மேலும் தேர்வுகளில் பல நேரங்களில் கேள்விகளைக் குழப்பும் வகையில் வழக்கமான முறையிலிருந்து மாற்றிக் கேட்பார்கள். அந்தக் கேள்விக்கு விடை நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அந்த நேரத்தில் நினைவுக்கு வராது. அப்போது நினைவுக்கு வர இறையருள் அவசியம். இறையருளை வேண்டுதலின் மூலமே பெற முடியும்.
தேர்வு நாளன்று பிள்ளைகள் 1 நிமிடம் சுவாமிப் படம் முன்பாக அமைதியாக நின்று சிவனை வணங்க வேண்டும். மேலே சொன்ன தட்சிணாமூர்த்தி ஸ்லோகத்தை முடிந்தவர்கள் மனப்பாடம் செய்து 11 முறை சொல்லலாம். இயலாதவர்கள் ஒரு காகிதத்தில் எழுதிவைத்துக்கொண்டு பார்த்து வாசிக்கலாம். இதற்கு 1 நிமிடத்துக்கு மேல் செலவாகாது. மனம் அமைதியடையும். அடுத்து பெற்றோர்களின் கால்களில் விழுந்து வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெற வேண்டும். பெற்றவர்கள் வாழ்த்தினால் அனைத்து தெய்வங்களும் வாழ்த்தியதற்குச் சமம். தட்சிணாமூர்த்தியை வழிபட்டு நல்லருளைப் பெற்று தேர்வு எழுதும் பிள்ளைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கிறேன்" என்றார்.

பிள்ளைகள் தேர்வுக்குச் சென்றதும் நேரமிருக்கும் தாயோ தந்தையோ அமைதியாக அமர்ந்து சிவ நாம ஜபம் செய்துகொண்டிருக்கலாம். அன்னை சரஸ்வதியின் சுலோகங்களை வீட்டில் ஒலிக்க விடலாம். மேலும், ஹயக்ரீவர் மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம். அதிகாலையில் எழுந்ததும் குழந்தைகளை ஒரு முறை
"ஜ்ஞானானந்த மயம் தேவம்
நிர்மல ஸ்ப்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யா நாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே"
என்ற ஸ்லோகத்தை சொல்லச் சொல்லலாம்.

அல்லது அழகு தமிழில்,
"வசையில் நான்மறை கெடுத்த
அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய்
இசைகொள் வேத நூலென்றிவை
பயந்தவனே! எனக்கருள் புரியே!
உயர்கொள் மாதவிப் போதொடுலாவிய
மாருதம் வீதியின் வாய்
திசையெல்லாம் கமழும் பொழில்
சூழ் திருவெள்ளறை நின்றானே."
என்னும் பிரபந்தத்தைப் பாடச் சொல்லலாம்.
இவற்றைச் சொல்ல ஒரு நிமிடத்துக்குமேல் ஆகாது. பிள்ளைகள் ஒருமுறை சொன்னால், பெற்றவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்ல வேண்டும். 'பெற்றவர்கள் சேர்க்கும் புண்ணியம் பிள்ளைகளையே சேரும்' என்பது ஆன்றோர் வாக்கு.

கூடுமானவரை எளிமையாக ஜீரணமாகும் உணவுகளைச் சமைத்து அவற்றை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பின் சாப்பிடத் தரலாம். மனோபலத்தால் நாம் பிள்ளைகளைத் தாங்குவதுபோல இறைவழிபாட்டின் மூலம் ஆன்ம பலத்தாலும் தாங்கலாம்.

Also Read
ஹயக்ரீவர் எதிரில் கலைமகள்!
எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தைகளின் நலனில் நாம் அக்கறை காட்டுகிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தி, தேர்வு என்பது வாழ்வில் ஒரு சிறு பகுதிதான் என்றும் அதில் பயப்பட ஒன்றுமில்லை என்பதையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.