திருத்தலங்கள்
ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

`பள்ளிக்கட்டு சபரிமலைக்கு!'

மகனுடன் வீரமணிராஜூ
பிரீமியம் ஸ்டோரி
News
மகனுடன் வீரமணிராஜூ

பாடலின் பொன்விழா ஆண்டில் ‘ஹரிவராசனம்’ விருது!

இசை, வழிபாட்டில் ஓர் அங்கம். பக்தி இசையைக் கேட்டாலே மனம் பரவசம் கொள்ளும். அதிலும் சில குரல்கள், கண்மூடிக் கேட்கும் தருணத்தில் சிலிர்ப்பையும் சந்நிதானத்தில் நிற்கும் உணர்வையும் தரவல்லவை. அப்படிப்பட்ட ஒரு குரலுக்குச் சொந்தக்காரர் வீரமணி ராஜூ. ஐம்பது ஆண்டுகளாக இறை இசைப் பாடல்களைப் பாடி வருபவர்.

ஐயப்ப பாடல்கள் என்றாலே நினைவுக்கு வரும் வீரமணி சாமியைப் பெரியப்பாவாகவும் குருவாகவும் அடையும் பாக்கியம் பெற்றவர். அதன் அடையாளமாக வீரமணி சாமியின் பெயரோடு இணைத்து அறியப்படுபவர். இவரது இசை உலகின் சாதனையைப் பாராட்டி கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றின் மகுடமாக ‘ஹரிவராசனம்’ விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மார்கழியின் ஒரு மாலைப் பொழுதில் வாழ்த்துகளோடு அவரின் இல்லத்தில் சந்தித்தோம்.

நம் சார்பாக வீரமணி ராஜுவின் மகனும் பாடகருமான அபிஷேக ராஜூ வினாக்களைத் தொடுக்க, மலரும் நினைவுகளோடு பதில் பகிர்ந்தார் வீரமணிராஜூ. மிக அற்புதமாக அமைந்தது அந்த உரையாடல்!

``ஹரிவராசனம் விருது கிடைத்திருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?’’

``ஹரிவராசனம் விருது மிகவும் சிறப்பானது. காரணம் இதைச் சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகமான திருவிதாங்கூர் தேவசம்போர்டும் கேரளா அரசாங் கமும் இணைந்து வழங்குகிறார்கள். எந்த ஐயப்பனைக் காலமெல்லாம் பாடி வந்தேனோ அந்த ஐயப்பனின் சந்நிதானத்திலிருந்தே வரும் விருது இது. இதற்கு முன்பு பெரிய பெரிய லெஜன்ட்கள் எல்லாம் இந்த விருதை வாங்கியிருக்கிறார்கள்.

சபரிமலையில் ஐயப்பனை எழுப்பவும் தூங்கவும் வைக்கும் பாடல்களைப் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்-க்கு இந்த விருது 2012-ல் முதன்முதலில் வழங்கப்பட்டது. அதன்பின் ஜெயன், பி.ஜெயச்சந்திரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எம்.ஜி.குமார், கங்கை அமரன், கே.எஸ். சித்ரா, பி.சுசிலா, நம் இசைஞானி இளையராஜா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த வரிசையில் நானும் இணைவது அந்த ஐயப்பனின் அருளால் கிடைத்த பரிசு. இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த கேரளா அரசுக்கும் தேவசம்போர்டு உறுப்பினர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.''

``உங்கள் இசைப்பயணம் எப்போது தொடங்கியது? வீரமணி சாமி உங்களுக்குக் கற்றுக்கொடுத்த விஷயங்களில் ஏதேனும் பகிர முடியுமா?’’

``ஏழு வயது முதல் பாடிவருகிறேன். வீரமணி சாமி என்னைத் தன்னோடு கச்சேரிகளுக்கு அழைத்துச் செல்வார். வீரமணி சாமி எனக்குப் பாடச் சொல்லிக்கொடுத்ததைவிட வாழ்வில் பார்க்கச் சொல்லிக்கொடுத்தது அதிகம். அதாவது அனைத்துக் கச்சேரிகளுக்கும் செல்ல வேண்டும்.

மக்கள் எதை ரசிக்கிறார்கள், எதை வரவேற் கிறார்கள், எந்த வகைப் பார்வையாளர்களுக்கு என்ன பாட்டு பிடிக்கும்? இப்படிப் பாடலைத் தாண்டி பார்வையாளர்களிடம் நுட்பமான கவனிப்புகளைச் செய்யக் கற்றுக்கொடுத்தார். அனைத்தையும் அனுபவத்தின் மூலம் தெரிந்துகொள்ளும்படிச் செய்தார். பல முன்னணிப் பாடகர்கள் பாடிய கச்சேரிகளுக்கு என்னை அழைத்துச் சென்று கவனிக்கச் சொல்வார். அந்த அனுபவம்தான் இன்று என்னை ஹரிவராசனம் விருது வரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.''

``வீரமணி சாமி பாடிய பல பாடல்கள் அமரத்துவம் பெற்றவை. அந்தப் பாடல்கள் எப்படி உருவாயின?’’

வீரமணிராஜூ
வீரமணிராஜூ

``இந்தக் காலம் போல அந்தக் காலத்தில் பாடல் பதிவு எளிதானதல்ல. ஒத்திகை எல்லாம் முடிந்து பதிவுக்குப் போகும்போது, இசைத் தட்டுகள் வெளியிடும் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் கேட்டுவிட்டு அதை நிராகரிப் பது உண்டு. வீரமணி சாமி ஒரு வழியைப் பின்பற்றுவார். புதிதாகப் பாடல்கள் எழுதி இசை அமைத்ததும் அதை அடுத்து வரும் கச்சேரிகளில் பாடுவார். அதில் எந்தப் பாடல் வரவேற்பைப் பெறுகிறதோ அந்தப் பாடல்கள் நல்ல பிரபலமாகும் என்பதைப் புரிந்துகொள்வார்.

பல பாடல்கள் கச்சேரிகளில் பிரபலமான பின்புதான் பதிவு செய்யப்பட்டன. ரேடியோக் களிலோ அல்லது வேறு நிகழ்ச்சிகளிலோ அந்தப் பாடல் மீண்டும் ஒலிபரப்பப்படும்போது மக்கள் அதைக் கொண்டாடத் தொடங்கிவிடுவார்கள். இப்படித்தான் பெரும்பான்மையான பாடல்கள் பதிவு செய்யப்பட்டன.

வீரமணி மட்டுமல்ல, டி.எம்.எஸ், சீர்காழி போன்ற பல பாடகர்களும் இந்த உத்தியைக் கடைப்பிடித்தனர். மக்களின் வரவேற்பைப் பெற்ற பாடல்கள் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதோடு ஒருவிஷயம் சேர்த்துச் சொல் கிறேன். ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் ஐயப்ப சாமிமாரின் தேசிய கீதம்’ என்று சொல்லுவார் வில்லுப்பாட்டு இசைக் கலைஞர் ஐயா சுப்பு ஆறுமுகம். அந்தப் பாடல் பதியப்பட்டு இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் நிறைவாகிறது. ஒருவகையில் அந்தப் பாடலின் பொன்விழா ஆண்டில் ஹரிவராசனம் விருது கிடைப்பது மிக்க மகிழ்ச்சி.

பள்ளிக்கட்டு சபரிமலைக்குப் பாடல் பதிவான விதம் குறித்து இங்கு சொல்ல விரும்புகிறேன். அப்போதெல்லாம் ஐயப்பன் குறித்துத் தமிழகத்தில் நிறைய பேருக்குத் தெரியாது. ரொம்பக் குறைவான நபர்கள்தான் இருமுடி கட்டிச் செல்வது வழக்கம்.

அப்போது ஆடியோ நிறுவனம் ஒன்றிலிருந்து அழைத்து ஐயப்பன் பற்றி ஒரு பாடல் பதிவு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். எங்கள் தாத்தா சோமு 1957 முதலே சபரிமலைக்குச் சென்று வருபவர். அவரிடம் பாடல் மற்றும் ஐயப்ப வழிபாடு குறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் பேசினார். சாமிமார்கள் எல்லோரும், ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... கள்ளும் முள்ளும் காலுக்கு மெத்தை.... சாமியே, ஐயப்போ சாமி சரணம் ஐயப்ப சரணம்...’ என்று சரண கோஷம் போடுவார்கள் என்று சொன்னார் தாத்தா.

உடனே, `இதையே பல்லவியாக வைத்துக்கொள்ளுங்கள். எப்படி விரதம் இருக்கவேண்டும், எப்படி சபரிமலைக்குச் செல்லவேண்டும் என்று ஐயப்ப விரதம் இருப்பவர்களுக்கு வழிகாட்டும்விதமாக இந்தப் பாடல் அமைய வேண்டும்' என்று சொன்னார். அப்படித்தான் அந்தப் பாடல் உருவானது. பாடல் எழுதி மெட்டமைத்ததும் அடுத்த கச்சேரியில் அதைப் பாடினார் வீரமணி சாமி.

கச்சேரி முடிந்ததும் அனைவரும் சூழ்ந்துகொண்டு சபரிமலை குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். வீரமணிசாமி எல்லோருக்கும் பொறுமை யாகப் பதில் சொன்னார். அந்தப் பாடல் பாடும் இடங்களிலெல்லாம் ஐயப்ப மகிமை பரவியது. அதன்பின் 1969-ல் அந்தப் பாடலைப் பதிவு செய்தோம். பட்டிதொட்டி எங்கும் பாடல் பரவிப் புகழ்பெற்றது.''

``இதுவரையிலும் நீங்கள் கலந்துகொண்ட கச்சேரிகளில் நடந்த மறக்க முடியாத அனுபவம் ஒன்றைப் பகிருங்களேன்...''

மகனுடன் வீரமணிராஜூ
மகனுடன் வீரமணிராஜூ

``ஒருமுறை சித்திரைவிஷு தினத்தன்று பந்தள ராஜா அரண்மனையில் ஒரு கச்சேரி. பந்தள ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு மகாராணியைப் பார்த்தோம். அப்போது அவர்கள் ஒரு நாணயம் கொடுத்தார்கள். புத்தாண்டு நாளில் அனைவருக்கும் ஒரு நாணயம் வழங்குவது கேரளாவில் வழக்கம்.

மகாராணி கொடுத்த நாணயத்தைப் பெற்றுக்கொண்டு கச்சேரிக்குச் சென்றோம். ராஜாவும் ராணியும் வந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.

இரண்டரை மணி நேரம் கச்சேரி நடந்தது. கச்சேரி முடியும்போது ‘பள்ளிக் கட்டு சபரிமலைக்கு...’ பாடலைப் பாடு வது வழக்கம். நான் அந்தப் பாடலைப் பாடத் தொடங்குகிறேன். மேடைக்குக்கீழ் அமர்ந்திருந்த மூவாயிரம் பேரும் எழுந்து நின்று மேலே பார்த்தனர். பின்பும் அவர்கள் அமரவேயில்லை. மேலேயே பார்த்துக்கொண்டிருந்தனர். அவ்வப்போது வணங்கினர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பாடலைப் பாடி முடித்து மங்களமும் பாடி கச்சேரியை நிறைவு செய்துவிட்டுக் கீழ் இறங்கிவந்தேன்.

அப்போது பந்தள ராஜாவும் ராணியும் என்னை நோக்கி வந்தார்கள்.

`ஞங்கள் இன்னு ஐயப்பனைக் கண்டு’ என்று சொன்னார்கள். எனக்குப் புரியவில்லை. என்ன நடந்தது என்று விரிவாகச் சொல்லுங்கள் என்றேன். ராணி விளக்க ஆரம்பித்தார்.

`பொதுவாக பந்தள அரண்மனையிலிருந்து மகர ஜோதிக்கு முன்பாக திருவாபரணங்கள் சபரிமலைக்குச் செல்லும். அதற்காக திருவாபரணப் பெட்டி ஊர்வலமாகப் புறப்படும்போது, ஒரு கிருஷ்ண பருந்து வந்து வட்டமிடும். பின்பு அந்தப் பருந்து ஊர்வலப் பாதை எங்கும் தொடர்ந்து பறந்துவரும். சபரிமலை சந்நிதானத்தில் ஆபரணம் சாத்தி தீபாராதனை காட்டும்வரை சந்நிதிக்கு மேலே வட்டமிடும். பின்பு மறைந்துபோகும். ஐயப்பன் வாழும் தெய்வம் என்பதற்கு சாட்சியாக இன்றும் இந்த நிகழ்வு நடந்துவருகிறது.

`பள்ளிக்கட்டு சபரிமலைக்கு!'

அதேபோல், இன்று நீங்கள் பள்ளிக்கட்டு பாடலைப் பாட ஆரம்பித்ததும் மேடைக்கு மேலே கிருஷ்ண பருந்து ஒன்று பறந்தது. நீங்கள் பாடி முடிக்கும்வரை மேடையையே வட்டமிட்டது’ என்றார்கள்.

எனக்குப் புரியவில்லை. ‘இதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கேட்டேன். அப்போது அவர்கள்

‘பந்தளத்தில் அந்தப் பறவைகளே கிடையாது. திருவாபரணப் பெட்டி யாத்திரை தொடங்கும்போது அன்று மட்டும் வரும். சந்நிதானம் வரை சென்று பின் மறையும். அதன்பின் ஓராண்டுகளுக்கு இந்தப் பகுதியில் எங்கும் அவற்றைப் பார்க்க முடியாது.

நாங்களும் இத்தனை ஆண்டுகளாக சித்திரை விஷு பூஜை செய்துவருகிறோம். ஒரு நாளும் கிருஷ்ணப் பருந்து தரிசனம் கொடுத்ததே இல்லை. இன்று நீங்கள் கச்சேரி நிறைவு செய்யும் முன் வருகிறதென்றால் என்ன அர்த்தம்... அந்த ஐயப்பனே நேரில் வந்து ஆசீர்வதித்திருக்கிறான் என்று அல்லவா பொருள்’ என்று மகாராணி சொன்னபோது என் மேனி எல்லாம் சிலிர்த்துவிட்டது. இதைவிட வாழ்வில் என்ன பாக்கியம் வேண்டும்...” என்று நெகிழ்ந்தார் வீரமணி ராஜூ.

இன்னும் பல கேள்விகள் தொடர்ந்தன...

நம்பியார் சாமியின் ஐயப்ப பக்தி, மறக்க முடியாத சபரி யாத்திரை அனுபவங்கள், கச்சேரியில் தவறாமல் இடம் பெறும் பாடல்கள், யாத்திரையில் பக்தர்களின் தற்போதைய நிலை... என நீண்ட அந்த உரையாடலின் தொகுப்பை வீடியோ வடிவில் சக்தி விகடன் யூடியூப் ( https://bit.ly/2Xlh5Zc ) சேனலில் காணலாம்.