Published:Updated:

கேரளக் கதைகள் - 12 - சக்தன் தம்புரான்!

கேரளக் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கேரளக் கதைகள்

`சாஸ்தா வியாசர்’ வி.அரவிந்த் சுப்ரமணியம், ஓவியங்கள்: ஜெயசூர்யா

கேரளக் கதைகள் - 12 - சக்தன் தம்புரான்!

`சாஸ்தா வியாசர்’ வி.அரவிந்த் சுப்ரமணியம், ஓவியங்கள்: ஜெயசூர்யா

Published:Updated:
கேரளக் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கேரளக் கதைகள்

கேரள வரலாற்றைக் கூறும்போது, மகாராஜனாக விளங்கிய சக்தன் தம்புரா னைப் பற்றிக் கூறாமல் இருக்க முடியாது.
கேரளத்தின் பிரபலமான ராஜ குடும்பங்களில் கொச்சி ராஜ வம்சம் தனிப்பெருமை கொண்டது. அந்தக் கொச்சி ராஜ வம்சத்தைச் சேர்ந்த அம்மா தம்புராட்டி என்றழைக்கப்பட்ட இளவரசிக்கு ஒரு குழந்தை பிறந்தது.


ஜாதகம் கணித்தபோது, பிறந்த தினத்தில் கிரகநிலை மோசமாக இருப்பதையும் அதனால் அவனுக்கும் குலத் துக்கும் கேடு வரும் என்றும் ஜோதிடர் எடுத்துரைத்தார்.

தம்புராட்டி கலங்கினாள்.அருகே ஒரு கோயிலிலிருந்த துறவியிடம் விஷயத்தைக் கூறி பரிகார வழிகளைக் கேட்டு வரும்படி பிரதிநிதி ஒருவரை அனுப்பினாள்.

விஷயத்தை அறிந்த துறவி, சிறிது நேரம் தியானத்தில் இருந்துவிட்டு பதில் சொன் னார்: “இறைவனின் சக்தி நம் கணக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. நான் சில புஷ்பங்களைத் தருகிறேன். அவற்றை எடுத்துச் சென்று குழந்தையின் தொட்டிலில் போட்டு வையுங்கள். ஒரு நாள் முழுவதும் அப்படியே இருக்கட்டும். கிரக நிலைகள் அவனுக்கு அனுகூலமாக மாறும். உங்கள் கவலையும் தீரும். அந்தக் குழந்தை உங்கள் குலத்திலேயே மிகவும் சக்தியுள்ள மன்னனாகப் போற்றப்படுவான்!” என்று ஆசீர்வதித்து அனுப்பினார்.

துறவி கூறியபடியே அவர்கள் செய்தார்கள். அத்துடன், குடும்ப வழக்கப்படி குழந்தைக்கு `ராம வர்மா' என்று பெயர் சூட்டப்பட்டது. ராமவர்மா இளம் வயதிலிருந்தே மிகுந்த நுண்ணறிவும், போர்க் கலையில் வல்லமையும் பெற்று, 12-வது வயதிலேயே சகலகலா வல்லவனாக விளங்கினான்.

`இராம வர்மா குஞ்ஞி பிள்ளை தம்புரான்' என்று அழைக்கப்பட்ட அந்தச் சிறுவன், சக்தன் (மிகுந்த சக்தியுள்ளவன்) என்ற பட்டம் பெற்ற காரணம் சுவாரஸ்யமானது.

அந்த காலத்தில் கொச்சி அரசக் குடும்பம், திருப்புணித்துறை எனும் ஊரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தது. அப்போது, ஒருமுறை நம்பூதிரி ஒருவர் எர்ணாகுளம் அருகில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அந்தப் பகுதியில் `மோப்ளா' என்ற இனத்தவர், முரட்டுத்தனமாக மக்களை துன்புறுத்தி வந்தனர். நம்பூதிரியும் தாக்கப்பட்டார்.அவரின் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

நம்பூதிரி அரண்மனையை அடைந்து மன்னரிடம் புகார் அளித்தார். மன்னரும் தன் மருமகனான குஞ்ஞி பிள்ளை ராம வர்மாவை அழைத்து, நம்பூதிரி விஷயத்தை விசாரித்து தீர்வு காணும்படி கட்டளை இட்டார்.

அப்போது ராமவர்மாவுக்கு 16 வயதுதான். ``ஓரிரு நாளில் நல்ல செய்தியுடன் வருகிறேன்'' என்று கிளம்பி னார் ராமவர்மா.

எர்ணாகுளம் மாளிகையை அடைந்தவர், மோப்ளா கூட்டத்தினர் அனைவரையும் வாசலில் கூடும்படி உத்தரவு இட்டார். அவர்களும் வந்தனர். இந்தச் சிறுவனால் என்ன பண்ண முடியும் என்ற அலட்சியம் தெரிந்தது அவர்களிடம்.

மாடத்தில் தோன்றிய ராமவர்மா ஒரு அறிவிப்பு செய்தார்:

“என் மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் சமூக விரோதிகள் சிலர், இந்தக் கூட்டத்தில் உள்ளனர் என்பதை அறிவேன். நம்பூதிரி ஒருவரின் பணத்தையும் கொள்ளையடித்துள்ளீர்கள்.

குற்றவாளிகள் தாமே முன் வந்து சரணடைய வேண்டும். குற்றவாளிகளை மற்றவர்கள் பாதுகாக்க நினைத்தால், மறைக்க நினைத்தால் நீங்கள் அனைவருமே தண்டிக்கப் படுவீர்கள் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.”

அவரது கட்டளையை தொடர்ந்து மயான அமைதி நிலவியது. எவரும் முன் வந்து குற்றத்தை ஏற்கவில்லை. மற்றவர்களும் குற்றவாளிகளைக் காட்டிக்கொடுக்க முன்வர வில்லை.

சிறிது நேரம் கழித்து ராமவர்மா பேசினார்.

“நான் உங்களுக்குப் போதுமான நேரம் கொடுத்தேன். ஆனால் நீங்கள் பதிலளிக்கவில்லை. ஆகவே, குற்றவாளிகளும் அவர்களைப் பாதுகாத் தவர்களும் உப்புக் கடலில் மூழ்கட்டும்” என்று தன் சேவர்களை நோக்கி கையை அசைத்தார்.

அப்போதே அந்தக் கட்டளை நிறைவேற் றப்பட்டது. ஊரே நடுநடுங்கிப் போனது. அந்த வேளையில், தண்டனையில் தப்பிய எர்ணாகுளத்தின் மோப்ளாக்கள் பயந்து நடுங்கி, மொத்தமாக ஓடிவந்து மன்னரிடம் சரணடைந்தனர். தாங்கள் கொள்ளையடித்த ஒட்டுமொத்த ஆபரணங்களையும் பணத்தையும் அவரது காலடியில் வைத்து மன்றாடினர்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அந்தப் பகுதியில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் போனது. இந்தக் கடுமையான அணுகுமுறையே, ராம வர்மா குஞ்ஞி பிள்ளை தம்புரானுக்குச் சக்தன் என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. சக்தன் என்றல் சக்தி வாய்ந்தவர் எனப் பொருள்.

விரைவில் சக்தன் தம்புரானை கொச்சி ராஜாவாக அறிவித்தார் மன்னர். சக்தன் தம்புரான் பெண்களை உயர்வாக மதித்தார். அவர்களுக்குக் கல்வியறிவை கொடுக்க வேண்டும் என்பதையும் நடைமுறைப்படுத்தினார். பெண்களை இழிவாக நடத்தியவர் எவரையும் அவர் விட்டுவைக்கவில்லை.

காலப்போக்கில் திருச்சூருக்கு இடம்பெயர்ந்த சக்தன் தம்புரான், வடக்குநாதர் கோயிலைப் பார்த்தபடி தன் அரண்மனையை உருவாக்கினார்.

பெரும்பாலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் அரண்மனைக் கோட்டை வழியாகவே வந்து சென்றார்கள். அந்த வழியில் சென்றால் தூரம் சற்று குறையும். சுபத்ரா என்ற பெண்ணும் தினமும் கோட்டை வழியே சென்று இறைவனை வழிபட்டு வந்தாள்.

அவள் மீது தண்டன் என்ற காவலாளி மோகம் கொண்டான். தன் ஆசைக்கு இணங்கும்படி அவளை வற்புறுத்தினான். மறுத்தால் திருட்டுப் பட்டம் கட்டி விடுவதாக மிரட்டினான். மேலும் ``மன்னனின் நன்மதிப்பைப் பெற்றவன் நான். ஆகவே, நான் சொல்வதே எடுபடும்'' என்றும் அதட்டினான்.

சுபத்ரா மனம் வாடினாள். வடக்குநாதரிடம் முறையிட்டுப் பிரார்த்தனை செய்தாள். அப்போது, `மன்னரிடம் செல். அனைத்தையும் சொல்' என்றொரு குரல் ஒலிக்கக் கேட்டாள்.

அதை, இறைவனின் கட்டளையாகவே எண்ணிய சுபத்ரா, சக்தன் தம்புரானிடம் சென்று முறையிட்டாள். சக்தன் தம்புரானின் முகம் இறுகியது. ஐந்து நிமிடம் கண் மூடி மெளனமாக அமர்ந்திருந்த மன்னர் திடீரென எழுந்து, “அவன் சொல்வதை நீ கேட்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை. இன்று நள்ளிரவு அவனை உன் வீட்டுக்கு ரகசியமாக வரச்சொல்” என்றார்.

சுபத்ரா அதிர்ந்தாள். கண்ணீர் விட்டு அழுதாள். ``அழுது பயன் இல்லை. சொல்வதைச் செய்'' என்று உத்தரவிட்டார் தம்புரான். மன்னனும் கை விட்டுவிட்டாரே என்ற கலக்கத்துடன், வேறு வழியில்லாமல் தண்டனிடம் சென்று, ``நள்ளிரவு வீட்டுக்கு வா'' என்று கூறினாள்.

“நான் சொன்னேன் இல்லையா... மன்னன் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர். என்னை மீறி எதுவும் செய்ய மாட்டார்” என்று தண்டன் பெருமைப்பட்டுக் கொண்டான்.

அதேநேரம், சக்தன் தம்புரானின் உளவாளி கள் சுபத்ரா குறித்தும், தண்டன் குறித்தும் விஷயங்களைச் சேகரித்து, அவற்றை தம்புரானி டம் அளித்தனர். தம்புரான் இரவு உணவை முடித்துக்கொண்டு, இரண்டு மூட்டை நிறைய துணிகளையும் இரண்டு ஜாடி நிறைய எண்ணெய் யையும் தயார்படுத்தச் சொன்னார்.

தன் மெய்காவலர்களிடம் முரசு முதலான வாத்தியங்களை எடுத்துக்கொண்டு, தன்னைப் பின்தொடரும்படி பணித்தார். சுபத்ராவின் வீடு அருகில் சென்று பதுங்கிக் கொண்டார்.

நள்ளிரவில் தண்டன் சுபத்ராவின் வீட்டை அடைந்தான். வீட்டுக்குள் அவன் காலடி வைக்கும் நேரம், தம்புரான் அவனை இறுக்கிப் பிடித்துக்கொண்டார்.

கேரளக் கதைகள் - 12 - சக்தன் தம்புரான்!

“இவனை துணிகளால் சுற்றி மூடுங்கள்; பிறகு ஜாடிகளில் இருக்கும் எண்ணெய்யை இவன் மீது ஊற்றுங்கள்'' என்று கட்டளையிட்டார். கட்டளை நிறைவேற்றப்பட்டது.

அதற்குள் கூட்டம் கூடியது. என்ன நடக்கிறது என்பதை மற்றவர்கள் அனுமானிப்பதற்குள், முரசுகளை பலமாக முழங்கச் செய்தார் தம்புரான். தண்டன் மீது தீ வைத்துக் கொளுத்தினார்.

``என் ஆட்சியில்... அதுவும் அரசுப்பணியில் இருக்கும் அதிகாரத்தை வைத்து அபலைப் பெண்ணை பெண்டாள நினைப்பதா... இவன் கதி மற்றவர்களுக்குப் பாடமாகட்டும்” என்று கர்ஜனை செய்தார்.

நிமிட நேரத்தில் பிடிசாம்பலானான் தண்டன்!

இன்று கேரளத்தின் மிகப்பெரும் விழாவாக உள்ள திருச்சூர் பூரத்தை உருவாக்கியவரும் சக்தன் தம்புரானே !

சக்தன் தம்புரான் திருச்சூர் நகரைச் செப்பனிட்டு, தனது தலை நகரைத் திருப்பூணித்துறையிலிருந்து திருச்சூருக்கு மாற்றினார். அந்த நேரத்தில், ஆறாட்டுப்புழை பூரம் கேரளாவின் மிகப்பெரிய கோயில் திருவிழாவாக இருந்தது. திருச்சூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கோயில்கள் இந்த ஆறாட்டுப் புழா பூரத்தில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டிருந்தன.

ஒருமுறை, கடும் மழை பெய்த காரணத்தால், திருச்சூர் கோயில் யானைகளின் ஊர்வலம் தொடங்க தாமதமாகிவிட்டது. இவர்கள் தாமதமாகச் சென்றதால் ஆறாட்டு வைபவத்தில் அனுமதி மறுக்கப் பட்டது. இவர்களைப் போன்று தாமதத்தின் காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட மற்ற கோயிலைச் சார்ந்தவர்களும் சக்தனிடம் வந்து முறையிட்டனர்.

“அவர்கள் என்ன நமக்கு அனுமதி மறுப்பது? நாமே நமக்கு ஒரு பூரத்தை நடத்துவோம்” என்று அறிவித்தார் சக்தன் தம்புரான்.

அப்போது வடக்குநாதன் ஆலயம் காட்டின் நடுவே இருந்தது. கோயிலைச் சுற்றியுள்ள 60 ஏக்கர் தேக்குக் காடுகளை அகற்றி (இப்போது நகரின் மையத்தில் இருக்கும்) தெக்கின்காடு மைதானத்தை சக்தன் உருவாக்கினார்.  சுற்றுப்பகுதியுள்ள அனைத்து கோயில்களையும் திருச்சூர் விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார். பலரும் அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டனர்.

தம்புரான், பங்கேற்பாளர்களை மேற்கு மற்றும் கிழக்கு என இரண்டு குழுக்களாக வகைப்படுத்தினார். திருவம்பாடி, பாரமேக்காவு ஆகிய ஊர்களில் அருளும் பகவதிதேவியரையும் சாஸ்தாவையும் உற்சவமாக அழைத்து வரச் செய்து, கம்பீரமாக அலங்கரிக்கப்பட்ட 36 யானைகளின் மீது ஏற்றி... குடை மாற்றுதலும் வாண வேடிக்கைகளுமாக திருச்சூர் பூரத்தை பிரமாண்டமான திருவிழாவாக மாற்றினார் சாக்தன் தம்புரான்.

பூரத்தின்போது நிகழும் வாணவேடிக்கையைக் காண எங்கிருந் தெல்லாமோ மக்கள் வரத் தொடங்கினார்கள். திருச்சூரின் புகழ் உலகெங்கும் பரவியது. திருச்சூர் என்ற நகரத்தை உருவாக்கி, அதைத் தனது தலைநகராக்கி, நகரத்துக்கு ஓர்அணிகலனாக பூரம் விழாவையும் ஏற்படுத்திய சக்தன் தம்புரான் மங்கா புகழ் பெற்றார்!

- தொடரும்...

*****

மோதகப் பிரசாதம்!

விநாயகர்
விநாயகர்
DipakShelare

ஆதிசங்கரர் அருளியது `ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம்’. அதில், `முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்’ எனப் பாடுகிறார் ஆதிசங்கரர்.

மோதகம் படைத்தால் முக்தி அருள்வார் விநாயகர். `போதகம்’ என்றால் தமிழில் `யானை’ என்று பொருள். போதகம் முன்பு மோதகம் எனும் கொழுக்கட்டையை நிவேதித்தால், பாதகம் அனைத்தும் நீங்கி சாதகம் ஆகும் என்கிறது சாஸ்திரம்.

கொழுக்கட்டையிலேயே அந்தக் குறிப்பு இருக்கிறது. அரிசி மாவில் சொப்புபோல செய்கிறோமே, அது உடம்பைக் குறிக்கிறது.

உள்ளே வெல்லத்தில் பூரணம் வைக்கிறோமே, அது ஆத்மாவை குறிக்கிறது. இப்படிச் செய்த மோதகத்தைப் படைத்து அவரைச் சரண் அடைவது பரிபூரணமாக நம்மை அவரிடம் ஒப்படைக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

- சி.கீர்த்தனா, கரூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism