Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 45

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆறு மனமே ஆறு! - 45

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

Published:Updated:
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

மனதின் திறவுகோல் உன்னிடமே உண்டு. `மனம் திறந்து பேசு; அப்போது மலையும் உன் கைக்குள் அடங்கிவிடும்’ என்பார்கள் பெரியோர்கள். இன்று நம்மில் எத்தனைபேர் அப்படி இருக்கிறோம்?

ஆறு மனமே ஆறு!
ஆறு மனமே ஆறு!


கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தைகள், நண்பர்கள் என அனைத்துத் தரப்பிலும் அவரவர் வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள். எதையும் எவரிடமும் மனம் திறந்து பேசுவதில்லை. பலரும் சாதாரண பிரச்னைகளையும் இடியாப்ப சிக்கலாக்கி, வாழ்வையே தொலைத்துவிட்டு நிற்கும் நிலையையே காண்கிறோம்.

இரண்டு வகை உண்டு. அதாவது நிலையான மனம், சுயநலவாதியின் மனம் என்று வைத்துக்கொள்ளலாம். நிலையான மனம் என்றால்... உறுதியான அன்பு மிகுந்த மனம் என்று அர்த்தம். இதைத் தெளிவாக உணர்ந்துகொண்டால், மற்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ள அவசியம் ஏதும் இருக்காது.

நிலையான மனம்...

அன்புகொண்ட நிலையான மனமானது மற்றவரின் துன்பத்தைக் கண்டதும், அவர்களுக்குக் கைகொடுத்து உதவும்; அவர்களைத் தூக்கிவிடுமேயன்றி, ஒருபோதும் பள்ளத்துக்குள் தள்ளிவிடாது. இன்றைய சூழலில் ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடக்கும் ஒருவருக்கு உதவ வழியில்லாமல் செல்லும் நிலையும் உண்டு. `நமக்கு ஏன் வம்பு’ என்று சிலர் கண்டும் காணாததுபோல் போய்விடுவார்கள். சிலருக்கோ உதவும் சூழல் இருக்காது; உதவும் வாய்ப்பு கிடைத்தும் ஒருசிலர் மட்டுமே குறைந்தபட்சம் அவசர ஊர்திக்காவது தகவல் சொல்வார்கள்!

இந்த நிலை வருந்தத்தக்கது என் செல்லங்களே! நீங்கள் அனைவரும் உறுதியான மனம் கொண்டவராக வாழவேண்டும் என்பது தான் அம்மாவின் விருப்பம்.

ஒரு நகரத்தில் இரண்டு நாள் மாநாடு நடந்து முடிந்தது. வந்தவர்கள் எல்லோரும் புறப்பட்டனர். அவர்களில் ஒரு குழுவினர் ஐவராக வந்திருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் நடைபாதையில் மேஜையில் பழங்கள் பரப்பி விற்பனை செய்துகொண்டிருந்தாள் சிறுமி ஒருத்தி. வேகவேகமாக சென்றவர்களில் ஒருவர் அந்த மேஜையின் விளிம்பைத் தட்டிவிட, பழங்கள் யாவும் சாலையில் சிதறின. எவருக்கும் அதைக் கவனிக்கும் எண்ணம்கூட இல்லை.

நண்பர்களில் கடைசியில் வந்த இளைஞன் மட்டும் நிதானித்தான். சிறுமியைக் கவனித்தான். அவள் பார்வையற்றவளாக இருந்தாள். பழங்கள் சாலையில் சிதறியதை அறிந்தவளாகக் கலங்கி நின்றாள். அவளால் அவற்றைப் பொறுக்கவும் முடியாது.

உடனே அந்த இளைஞன், தான் அடுத்த பேருந்தில் செல்வது என முடிவெடுத்தான். சாலையில் சிதறிக்கிடந்த பழங்களை எடுத்து மேஜையில் அடுக்கிவைத்து உதவினான். சேதமுற்ற பழங்களுக்கான தொகையையும் சிறுமியிடம் ஒப்படைத்தான். அவள் கைகூப்பி வணங்கினாள். ``நீங்கள் என்ன கடவுளா?’’ எனக் கேட்டாள்.

“நிச்சயமாக இல்லையம்மா. கடவுள் கருணாமூர்த்தி; எங்களைப் போல பழக்கூடையைத் தட்டிவிட்டுச் செல்பவர் இல்லை” என்றான் அந்த இளைஞன். நிலையான மனமானது தலைக்கனம் கொள்வது இல்லை அல்லவா?!

சுய நலம் கூடாது!

கடும் குளிர் நிறைந்த இரவு அது. வேறு ஆளரவம் இல்லாத பாதையில் நான்குபேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரிடமும் குளிர்காய்வதற்குத் தேவையான சுள்ளிகளும், நெருப்புப் பற்ற வைப்பதற்கான பொருள்களும் இருந்தன. ஆனால், தன்னிடம் மட்டும்தான் அவை உண்டு; மற்றவர்களிடம் இல்லை என்றே ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

சுய நலம் கூடாது!
சுய நலம் கூடாது!
Jean-Claude FRANCOLON


சற்று நேரத்துக்கெல்லாம் குளிர் மேலும் அதிகமானது. ஆனால் எவரும் மூட்டையைப் பிரித்து சுள்ளிகளை வெளியே எடுக்கவில்லை. `நால்வரில் ஒருவன் வேற்று மதத்தவன். நான் சுள்ளிகளை அடுக்கி தீ மூட்டினால் அவனும் அல்லவா குளிர் காய்வான்’ என்று எண்ணினான் ஒருவன்.

வேறொருவனுக்கோ, நால்வரில் கருப்பாக இருந்தவனைக் கண்டாலே பிடிக்காது. அவன் குளிர்காய உதவக்கூடாது என்ற எண்ணத்தில் அவனும் சுள்ளிகளை வெளியே எடுக்கவில்லை. இப்படியே நால்வரும் வேறு வேறு காரணங்களைக் கருதி, சுயநலத்தோடு செயல்பட்டனர். நிறைவில் அனைவருமே குளிரில் உறைந்து மாண்டனர். இப்படியொரு கதை உண்டு.

தேசம், மதம், சாதி பாகுபாடுகளைக் கடந்து நிற்பதுதான் மனிதம். அதுவே நல்ல மனதின் வெளிப்பாடு. மனதில் எவ்வித கலங்கமும் இல்லாமல் சுயநலமற்று நல்ல காரியங்களைச் செய்தாலே, நாம் எல்லோருமே சுகமாய் வாழ முடியும். ஆகவே, மனமுவந்து கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி அனைவரையும் சகோதரர்களாக பாவித்து, மற்றவர்களுக்கு கைகொடுத்து உதவுவது மிகவும் சிறப்பாகும்.

பிரதான வீதி ஒன்றில் தொழுநோயாளி ஒருவர் விழுந்துகிடந்தார். அவரின் உடம்பில் நோய் முற்றி பல பாகங்களில் ரத்தமும் சீழும் வடிந்தன. எவரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. முகம் சுளித்தபடியே அவரைக் கடந்து சென்றனர்.

இளம் வயது பெண்ணொருத்தி மட்டும் அருகில் சென்று, அவரின் உடம்பைச் சுத்தம் செய்து, மருந்து வாங்கி வந்து காயங் களுக்கு மருந்திட்டு உதவி செய்தாள். அந்தப் பெண்ணே, பிற்காலத்தில் அனைவராலும் போற்றப்பட்ட அன்னை தெரசா.

இதுபோன்ற சம்பவங்கள், மனதின் மகத்துவத்தை எடுத்துச் சொல்லும் உதாரணங்கள். இவற்றைப் பாடங்களாகக் கொண்டு, இன்றைய சூழலில் நாம் ஒவ்வொருவரும் மனிதநேயத்துடன் வாழ சங்கல்பம் ஏற்கவேண்டும்.

நல்லது செய்ய காரணங்கள் தேவையில்லையே என் செல்லங்களே... நல்ல மனம் இருந்தாலே போதும் அல்லவா!

மனிதன் என்றாலே ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகள் பலவும் மனதில் எழவே செய்யும். அம்மாவிடம் பக்தர்கள் பலரும் பல கேள்விகளைக் கேட்பது வழக்கம். அவற்றில் ஓரிரு கேள்விகளும் அம்மா சொன்ன பதில்களும் உங்களுக்காக...

மாதா அமிர்தானந்தமயி
மாதா அமிர்தானந்தமயி


கேள்வி: நீங்கள் வணக்கத்திற்குரிய தெய்வமா, குருவா அல்லது அம்மாவா?

அம்மா: நீங்கள் எல்லோரும் இப்படியெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. அம்மாவும் உங்களைப்போலத்தான். அம்மா உங்களுடனேயே வாழ்பவள். இறைவனை அடையும் ஆன்மிகப் பாதையில் பயணித்து, மற்றவரும் அதில் பயணிப்பதை உறுதிசெய்யும் சேவையைச் செய்து வருகிறேன். ஆகவே, என்னை ஒரு சேவகி என்று கருதினாலே போதும்; நான் மகிழ்வேன். மேலும், நீங்கள் எல்லோரும் அம்மா என்று அழைப்பதால், ஒரு நல்ல தாயாகவும் இருக்கும் பாக்கியத்தை இறைவன் எனக்கு அளித்துள்ளான்... அவ்வளவுதான். இறைவனுக்கு நன்றி!

கேள்வி: மிகப் பெரிய ஆன்மிக சமஸ்தானம். உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் - பக்தர்கள். `இப்படியான சமஸ்தானத்தை உருவாக்கியது நான்’ என்ற எண்ணம் எப்போதாவது ஏற்பட்டது உண்டா?

அம்மா: உண்மை அதுவல்லவே! ஊர் கூடி இழுத்தால்தான் தேர் அசையும். அதுசரி... அம்மாவை ‘நான்’ என்ற வட்டத்திற்குள் ஏன் அடக்கிவிடுகிறீர்கள்? `நான்’ என்றாலே அகந்தை எனும் குணம் அல்லவா? அகந்தை எந்தவொரு வெற்றியையும் தேடித் தந்ததாக சரித்திரம் இல்லை. ஆன்மிகம், அறிவியல்... என சகல துறைகளிலும் சாதனைகள் மற்றும் வெற்றிக்குக் காரணம் திடமான மனமும் முயற்சியும்தான். அதற்கும் மேலான ஒரு சக்தி இருக்கிறது என்பதை யும் நாம் உணரவேண்டும். நல்லதொரு முயற்சியில் இறங்கும்போது `நான்’ எனும் அகந்தையைத் துறந்தால்தான், அந்த முயற்சிக்கான பலன் கிடைக்கும்!

அன்பு கொண்ட நிலையான மனதில் `நான்’ எனும் எண்ணம் எப்போதும் இருக்காது.

ஒரு நாட்டில் உள்ள எல்லோருமே ராஜாவாக இருக்கவே விரும்புகிறார்கள்; பிரஜையாக இருக்க விரும்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். நிலைமை என்னவாகும்... கற்பனை செய்துபாருங்கள்! அங்கு எடுப்பவர்கள் மட்டும் இருப்பார்கள்; கொடுப்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். வாழ்க்கை என்பது சகிக்க முடியாத போராட்ட களமாக மாறிவிடும்.

நாம் அன்பு மிகுந்த மனதோடு வாழ்வோம்!

- மலரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism