Published:Updated:

"அப்பா அம்மாவுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே அந்த சாமிதான்!" -சமுத்திரக்கனி #WhatSpiritualityMeansToMe

அமீஷ் எழுதிய `மெலுகாவின் அமரர்கள்' ங்கிற நாவலை, (Immortals of Meluha எனும் நூலின் தமிழாக்கம்) படிச்சேன். அதுல அவர் சிவனை பூமியில் வாழ்ந்து, மகத்தான சாதனை படைத்து மறைந்த மனிதராகச் சித்திரித்துச் சிறப்பாக எழுதியிருப்பார்.

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

இயக்குநர், நடிகர், சமூகப் போராளி எனப் பல்வேறு தளங்களிலும் இயங்கக்கூடியவர் சமுத்திரக்கனி. எளிய நிலையிலிருந்து பல்வேறு தடைகளையும் துன்பங்களையும் கடந்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தைப் பெற்றவர். தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்களைத் தேடித்தேடி அறிந்து பாதுகாக்கும் போர்க்குணம் மிக்கவர்.

சமுத்திரக்கனியின் ஆன்மிகம் எப்படியானது?

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

``எனக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் பக்கத்துல சேட்டூர். இப்போதான் பேரு வைக்கிறதுனா பெரிய அளவுல விழா நடத்திப் பேரு வைக்கிறோம். பள்ளிக்கூடத்துல ஒண்ணாம் வகுப்பு சேரப் போனப்போதான் எங்க ஐயா எனக்கு `சமுத்திரக்கனி'னு அவருடைய ஃப்ரெண்டு பேரை வெச்சார். அதுக்கு முன்னாடி என் பேர் தங்கப்பவுனு. பள்ளிக்கூடத்துல சேர்க்கும்போது `பவுனுனு பேரு வெச்சிட்டா, பின்னால பையனைக் கூப்பிடும்போது வருத்தப்படுவான்'னு வேற பேரு வைக்கச்சொல்லியிருக்கார் வாத்தியார். அப்படி வெச்சபேருதான் சமுத்திரக்கனி. என்ன அர்த்தம்பான்னு கேட்டேன். சமுத்திரத்தில விளையுற கனி, `முத்து'னு சொன்னார்.

சின்ன வயசிலேருந்து நான் கும்பிட்டு வளர்ந்தது எங்க மூதாதையர், எங்க முப்பாட்டன் அய்யனாரைத்தான். அவர்தான் எங்க குடும்பத்துக்குக் குலதெய்வம். அப்பா அம்மாவுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே அய்யனார்தான். காட்டுல காணாமப் போன மாடு கிடைக்கணும்னாலும் கடைச்சங்காட்டுல சாகுபடி நல்லா வரணும்னாலும் அம்மா மொதல்ல வேண்டுறது அய்யனாரைத்தான். அவரு மனசுக்குள்ளயே எப்பவும் இருக்குற ஓர் ஆள் மாதிரி. நல்லது, கெட்டது எது நடந்தாலும் முதல்ல அவர் ஞாபகம்தான் வரும். வாழ்ற வாழ்க்கைக்கைக்கு நன்றி சொல்றதுக்கும் ஒரு விஷயத்தைச் செய்யலாமா வேணாமானு முடிவெடுக்கிறதுக்கும் அய்யனார்தான் பக்கத் துணை.

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

அய்யனாருக்கு அடுத்துச் சொல்லணும்னா சிவன்தான். சிவனைப் பற்றிய செய்திகளைத் தெரிஞ்சுக்கிறதுல ஓர் ஆர்வம், பன்னெண்டு பதிமுணு வயசிலேயே வந்திருச்சு. சிவன் கோயிலுக்கு அடிக்கடிப் போவேன். சிவன் தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். படிக்கப் படிக்க பக்தியைத் தாண்டி ஆன்மிகத்தை அறிவியலாகத்தான் பார்க்கமுடிஞ்சுது. பொதுவா சிவன் மீதான ஆர்வம் தலைமுறை தலைமுறையாக ஒருவருக்குக் கடத்தப்படக்கூடிய ஒண்ணாத்தான் நினைக்கிறேன்.

அமீஷ் எழுதிய `மெலுகாவின் அமரர்கள்' ங்கிற நாவலை, (Immortals of Meluha எனும் நூலின் தமிழாக்கம்) படிச்சேன். அதுல அவர் சிவனை பூமியில் வாழ்ந்து, மகத்தான சாதனை படைத்து மறைந்த மனிதராகச் சித்திரித்துச் சிறப்பாக எழுதியிருப்பார்.

கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சைப் பெரிய கோயில் இதெல்லாம் மிகப்பெரிய அறிவியல் ஆச்சர்யங்கள். தமிழ்நாட்டுல இருக்கிற சிவன் கோயில்கள் பலவற்றுக்கும் பயணம் போயிருக்கேன். எங்க சதுரகிரி மலையிலயே ஏராளமான விஷயங்கள் புதைஞ்சுக் கிடக்குது.

இருதாயலீஸ்வரர் கோயில், மனசுல ஒருவர் கட்டிய கோயில் வடிவத்தைக் கொண்டு அப்படியே நிஜத்தில் கட்டப்பட்ட கோயில். அங்கு போனாலே பலருக்கு இதயநோய் குணமாகுறதாக ஒரு நம்பிக்கை உண்டு. அந்த அளவு அங்கு ஒரு வைப்ரேஷன் இருக்குது.

ஒவ்வொரு சிவாலயத்துக்குப் பின்னாலும் அறிவியலுடன் கூடிய ஒரு கதை இருக்கும். பட வேலைகள் முடிஞ்சு ஓய்வா இருந்தோம்னா கோயில்களைப் பார்க்கக் கிளம்பிடுவோம்.

சிவாலயம்
சிவாலயம்

சிவனுடைய சொரூபம், சிவ தத்துவம் இதெல்லாமே எனக்குள்ள ஓர் ஆச்சர்யத்தை ஏற்படுத்துது. இவை முழுக்க முழுக்க அறிவியலுடனும் பஞ்சபூதங்களுடனும் தொடர்புடையதா இருக்கு.

தொடக்கத்துல பக்தியில்தான் கோயில்களுக்குப் போனேன். இப்போ அதுக்குள்ள இருக்குற அறிவியல் ரொம்ப ஆச்சர்யமாயிருக்கு. தஞ்சைப் பெரியகோயிலுக்குக்கூட சமீபத்துல போனப்போ ஒவ்வோர் இடத்துலயும் ரொம்பநேரம் செலவு பண்ணி ஒருநாள் முழுக்கப் பார்த்துட்டு வந்தேன். அங்கேயே சில இடங்களைக் கட்டாமல்கூட விட்டிருக்காங்க. அப்படி கட்டாமல் விட்டதுக்கும் சொல்கிற காரணங்கள் நமக்கு ஆச்சர்யமா இருக்கு. அவற்றின் வரலாற்றுச் செய்திகள் நமக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்குது. ஒரு இயற்கைசக்தி அவங்க கூடவே பயணப்பட்டிருக்கிறதை நம்மால் உணர முடியும்.

நான் பி.எஸ்ஸி மேக்ஸ்தான் படிச்சேன். ஆனா, வரலாறு பாடத்தின் மீது எப்பவும் ஆர்வம் உண்டு. குறிப்பாக நம் மூதாதையர்களின் வரலாறுகளைப் படிக்கும்போது நம்முடைய கலைகள், கோயில்கள், சிற்பங்கள் இவற்றைப் பார்க்கின்ற கண்ணோட்டமே மாறிப் போயிச்சு. நம்ம மூதாதையர்களின் வாழ்க்கைமுறை அறிவியல் கண்ணோட்டத்துடன் கூடியதாகவே இருந்திருக்கு. ஆனா, அவங்க அறிவியலைப் பின்னுக்கு வெச்சு, வாழ்வியலை முன்னுக்கு வெச்சாங்க.

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

இந்திராசௌந்தரராஜன் `சிவம்' னு ஒரு நாவல் எழுதியிருந்தார். அது எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது. பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே அதை ஸ்கிரிப்ட்டா பண்ணி வெச்சிருக்கேன். விஷால்கிட்ட அதைப் பத்தி எப்பவோ ஓரிமுறை சொன்னேன். நிச்சயம் நாம அதை பண்ணும்வோம்னு சொன்னார். இப்போ அதுக்கான நேரம் கூடி வந்திருக்கு. அந்தப்படம் தமிழில் ஆன்மிகம் அறிவியல் இரண்டும் கலந்த சிறப்பான பயணமா இருக்கும்.

என்னைப் பொறுத்தவரைக் கோயிலுக்குப் போய் சாமிக்கிட்டே `எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு'னு கேட்கிற பக்தியோகம்லாம் கிடையாது. நம்மால யாருக்கும் எந்தக் கெடுதலும் வந்துடக் கூடாது. நம்மால எந்த அளவு முடியுமோ அந்த அளவு உதவி பண்ணணும்ங்கிறதுதான் ஆன்மிகம்'' என்றார் இயக்குநர் சமுத்திரக்கனி