ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

சிவமயம் - 23

சிவமயம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமயம்

திருவாசகச் சித்தர் சிவதாமோதரன் ஐயா

வணக்கம். வாழிய நலம்!

எல்லோருக்கும் ஏதோ ஒரு வேண்டுதல் எப்போதும் இருந்து வருகிறது... `இது இருந்தால் அது இல்லை... அது இருந்தால் இது இல்லை’ என்று! எப்போது, யார் யாருக்கு எதைத் தரவேண்டும் என்பதை உணர்ந்தவன் சிவன் ஒருவன் மட்டுமே. அவனிடம் தஞ்சம் அடைந்தபிறகு புலம்புவது வீண்.

சிவமயம்
சிவமயம்
சிவ பக்தர்கள்
சிவ பக்தர்கள்

நிச்சயம் உங்களுக்கானதை உங்களிடம் கொண்டு வந்து கொடுத்துவிடுவான் என்று நம்பி சிவ வழியைப் பின்பற்றுங்கள்! நலமே விளையும். நமசிவாய.

`இன்றைய கல்வி முறை குழந்தைகளை அறிவுள்ளவர்களாக மாற்றுகிறது. ஆனால், அன்புள்ளவர்களாக மாற்றவில்லையே’ என்று வருத்தத்தோடு கேட்டுள்ளார் ஓர் அன்பர்.

அன்பும் பண்பும் கொண்ட மாண்புமிக்க மாணவர்களை உருவாக்கிய கல்வித் திட்டம் காலாவதியாகி பல காலம் ஆகி விட்டது. நல்லொழுக்கக் கல்வி என்ற பாடமுறைகள் இப்போது இல்லை. வெறும் ஏட்டுப் படிப்பு ஒருவனை நல்லவனாக்காது. உபதேசமும் அறபோதனையும் மட்டுமே ஒருவனைச் சான்றோனாக்க உதவாது.

அப்போதெல்லாம் குழந்தைகள் கூடி கூட்டாஞ்சோறு பொங்கி, அதை எல்லா குழந்தைகளுக்கும் பரிமாறி அன்போடு விளையாடுவார்கள். அங்கு விளையாட்டும் அன்பும் அறுசுவையை மிஞ்சி நிற்கும். சிறுவயதிலேயே பங்கிட்டு உண்ண வேண்டும் என்ற மனப்பாங்கு உருவாகிவிடும். இப்போது குழந்தைகளின் ஒரே விளையாட்டு கைப்பேசி மட்டுமே. இப்போதைய பிள்ளைகளுக்குக் கூட்டாஞ்சோறும் தெரியவில்லை; அதனால் பிற்காலத்தில் கூடி வாழவும் தெரியவில்லை.

அன்புகொண்ட ஓர் இதயம் உலகில் உள்ள எல்லா அறநூல்களையும் விடவும் உயர்ந்தது என்கிறார் வள்ளுவர்.

‘பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை’

அனைத்தையும் கற்றுவிட்டதாகக் குருவிடம் வந்து சொன்னான் சீடன் ஒருவன். அவனை உற்றுநோக்கிய குரு, ‘உன்னிலும் சிறந்த கல்வியாளனை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன் வா!’ என்று கூறி அழைத்துச் சென்றார்.

அவர்களின் ஊருக்கு அருகிலுள்ள ஓர் ஊரில் ஒரு யாசகன் இருந்தான். ஐந்து நாளாக பட்டினி. அவன் வரும் வழியில் ஒரு செல்வந்தரின் வீட்டில் இருந்து அறுசுவை உணவுகளின் வாசம் கமகமவென்று புறப்பட்டு வந்தது. பட்டினியால் சோர்ந்தவனுக்கு அந்த வாசனையே பெரும் ஏக்கத்தை உருவாக்கியது. ‘ஆஹா நெய்யும் வெல்லமும் இன்னும் பிற உணவுகளின் வாசமும் என்னை மயக்குகிறதே, இப்படியொரு அறுசுவை உணவை ஒரே ஒருவேளை உண்டுவிட்டால் என் ஜன்மம் சாபல்யம் அடைந்துவிடாதோ!’ என்று நாவுக்கு அடிமையாகிப் போன அவன் உள்ளம் ஏங்கியது.

இங்ஙனம் ஏங்கிய அவனது உணர்வு தூண்டியதோ என்னமோ, அந்தச் செல்வந்தர் வாசலுக்கு வந்து `என்ன வேண்டும்?’ என்று யாசகனைக் கேட்டார். அவன் வேறென்ன கேட்பான்... ‘ஐயா! உங்கள் வீட்டில் தயாராகும் அறுசுவை உணவு வேண்டும்’ என்று கேட்டான். அதேநேரத்தில் செல்வந்தர் வீட்டு வேலையாள் கஞ்சியைக் கொண்டு வந்து யாசகனிடம் நீட்டினார். யாசகனோ அறுசுவை உணவே வேண்டும் என்று மீண்டும் கேட்டான். ஆசை வெட்கம் அறியாது இல்லையா!

அவனுடைய கோரிக்கை செல்வந்தருக்குக் கோபத்தைத் தந்தது. ‘`அடேய்! அரச உணவுக்கு நிகரான என் வீட்டு விருந்துக்கு நீ ஆசைப்படலாமா? இந்தக் கஞ்சியைக் குடித்துவிட்டுப் போ! அரச போக உணவுதான் வேண்டும் என்றால், என் வீட்டுத் தொழுவத்தில் தங்கியிருந்து ஒரு வருடம் முழுக்க வேலை செய். அப்படி இருந்தால், ஒரு வருடம் கழித்து இந்த விருந்தை உனக்கு இடுவேன்’ என்றார் செல்வந்தர்.

யாசகனும் அங்கு வேலை செய்ய ஒப்புக்கொண்டான். ஒரு ஆண்டு மாடாக உழைத்தான். இரண்டு வேளை கஞ்சியைக் குடிக்கும்போதெல்லாம் அறுசுவை விருந்தை எண்ணி எண்ணி மகிழ்ந்துபோவான். ஒரு வருடம் முடிந்தது. குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது. செல்வந்தர் சொன்னவாறே விருந்து கொடுக்கவும் தயாரானார்.

குளித்து முடித்து, செல்வந்தர் கொடுத்தப் புத்தாடையை அணிந்துகொண்டு சாப்பிட அமர்ந்தான். அவன் முன் பரிமாறப் பட்டிருந்தவற்றைக் கண்டான். `பட்சணங்கள், காய்கறி உணவுகள், பதார்த்தங்களில் இத்தனை ரகங்களா’ என்று வியந்தான். மகிழ்ச்சியில் திளைத்தான். அவன் சாப்பிட முனைந்தபோது, வாசலில் வயதான யாசகன் ஒருவன் நின்று குரல் எழுப்பினான்.

செல்வந்தரும் இவனும் எழுந்து வெளியே சென்று விசாரிக்க, அவனும் அந்த அறுசுவை உணவைத் தனக்கு இடுமாறு வேண்டினான். செல்வந்தருக்கு ‘அடடே! இன்னொரு வேலைக்காரன் ஒரு ஆண்டுக்குக் கிடைத்துவிட்டான்’ என்று தோன்றியது.ஆனால் ஏற்கெனவே ஓராண்டு வேலை செய்த முதல் யாசகன், ``ஐயா! எனக்கான விருந்தை இந்த முதியவருக்கு அளித்து விடுங்கள். நான் மீண்டும் தொழுவத்துக்கு வேலைக்குப் போகிறேன்’’ என்றான். செல்வந்தர் திகைத்தார். ``ஏனப்பா... இதற்காகத்தானே நீ ஒரு வருடம் பாடுபட்டாய்?’’ என்று கேட்டார்.

அதற்கு அவன் ``ஐயா! என்னால் இன்னும் ஓர் ஆண்டு உழைக்க முடியும். ஆனால் இவரால் முடியாது. நான் இந்த விருந்தை ருசித்ததில்லை. ஆனால் இந்த விருந்தை ருசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எப்படியானது என்பதை உணர்ந்திருக்கிறேன். அந்த ஏக்கம் இவருக்கு வேண்டாம். விருந்தை இவருக்கே அளியுங்கள்’’ என்றான்.

செல்வந்தர் அதிர்ந்துபோனார். `ஒருவன் இப்படியும் சக மனிதன்மீது அன்புகொள்ள முடியுமா? இந்த அன்பு உள்ளம் எனக்கு இல்லாமல் போனதே! கேட்டவுனே விருந்து அளிக்கும் உயர்ந்த உள்ளம் எனக்கு இல்லையே. நானல்லவோ பிச்சைக்காரன். இந்த விருந்தை பிறருக்கு அளித்த இவனல்லவா செல்வந்தன்’ என்று எண்ணினார்.

அந்த வேளையில் குருவானவர் தன் சீடனுடன் அங்கு வந்து சேர்ந்தார். முதல் யாசகனைச் சீடனிடம் காட்டி, ‘இதோ இவரே உன்னிலும் அறிவில் உயர்ந்தவர்; பிற உயிரின் ஏக்கத்தை உணர்ந்த இவரே அனைத்து அறங்களையும் கற்ற மாபெரும் அறிவாளி!’ என்றார். அவரின் பெருமையை உணர்ந்த சீடன் வெட்கித் தலை குனிந்தான். அந்தச் செல்வந்தர் அனைவருக்கும் விருந்து அளித்து மகிழ்ந்தார். அதுமட்டுமல்ல, தினமும் வறியவர்களுக்கு விருந்து அளித்து நீங்காத புகழ்கொண்டார்.

ஆம், ஒரு கல்வி முறை என்பது ஒரு குழந்தைக்குள் இருக்கும் அன்பை, ஆற்றலை, திறனை வெளிக்கொண்டு வருவதாக இருக்க வேண்டும். மாறாக வெளியே இருக்கும் தகவல்களைத் திரட்டி அதை குழந்தைக்குள் திணிப்பதாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. அன்பையும் கருணையையும் வெளிப்படுத்தும் கல்வியே நிலையான கல்வி என்பதை மறந்துவிடக் கூடாது. அப்படியான கல்வியைத் தருவதில் இனியும் நீங்கள் தாமதிக்காதீர்கள்.

அறிவியலும் கணிதமும் இருக்கட்டும். கூடவே மகான்களின், தியாகிகளின், நமது தர்மத்தைக் காப்பாற்றிய நல்லவர்களின் கதைகளையும் சொல்லித் தாருங்கள். அது உங்கள் பிள்ளைகளின் மனவளத்தை மேம்படுத்தி பொறுப்பான குடிமக்களாக அவர்களை உருவாக்கும்.

‘ஊழிமலி திருவாதவூரார் திருத்தாள் போற்றி போற்றி... சிவாயநம!

- பேசுவோம்.

`எல்லோரிடமும் அன்பு!’

அன்னை சாராதாதேவியார் ஓர் ஊரில் சில நாள்கள் தங்கியிருந்தார். அந்த நாள்களில் சிறுமி ஒருத்தி தினமும் அவரைச் சந்திப்பதை வழக்கமாக்கி இருந்தாள். சாராதாதேவி அங்கிருந்து புறப்படும் நாள் வந்தது. சிறுமியை அழைத்து ``நான் ஊருக்குச் சென்றாலும் நீ என் மீது இதேபோன்று அன்பு செலுத்துவாயா?’’ எனக் கேட்டார்.

சிறுமி `ஆம்’ என்பது போல் தலையசைத்தாள்.

``நீ உன் வீட்டில் உள்ளவர்கள் மீது அன்பு செலுத்தினால், அதுவே என் மீது அன்பு செலுத்தியதாகும். நீ எல்லோரிடமும் சமமாக அன்பு செலுத்தவேண்டும்’’ என்றார் சாரதாதேவியார்.

இப்போது சிறுமி கேட்டாள்: ``அதெப்படி எல்லோர் மீதும் சமமாக அன்பு செலுத்தமுடியும்?’’

``அது சுலபம். நீ யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதே. எதையும் அவர்களிடம் கேட்காதே. அப்படிக் கேட்டால், உனக்குக் குறைவாக தருபவர்கள் மீது குறைவாகவும் அதிகமாகத் தருபவர்கள் மீது அதிகமாகவும் பாசம் வைப்பாய். எனவே, நீ நேசிக்கிற எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால்தான் எல்லோரிடமும் சமமாக அன்பு செலுத்த முடியும்’’ என்றார் சாரதாதேவி!

- சி.மகேஷ், உக்கடம்