Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 42

ஆறு மனமே ஆறு
பிரீமியம் ஸ்டோரி
ஆறு மனமே ஆறு

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆறு மனமே ஆறு! - 42

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

Published:Updated:
ஆறு மனமே ஆறு
பிரீமியம் ஸ்டோரி
ஆறு மனமே ஆறு

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

மதம் என்பது தேவையா, மதத்திற்கு மதம் பிடித்தால் என்னவாகும் என்றெல்லாம் பார்த்தோம். மனிதனுக்குக் கடவுள் வழிபாட்டை கற்றுக்கொடுப்பது மதம் என்பது பொதுவான கருத்து. `கடவுள் இருக்கிறார்’ என்பதில் மதங்கள் அனைத்துமே மிகவும் உறுதியாக இருக்கின்றன.

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி


குலம், மதம் சார்ந்த வழக்கப்படி மனித குலம் அனுதினமும் ஏதோ ஒரு விதத்தில் வழிபாடுகள் சடங்குகள் அனைத்திலும் ஈடுபடுகிறது. ஒவ்வொரு மதமும் தத்தமது நம்பிக்கையின் அடிப்படையில் கடவுள் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். சிலர், கடவுளைப் பற்பல வடிவங்களில் வழிபடுகிறார்கள். சிலர் உருவமற்ற வழிபாட்டு முறையைக் கடைப் பிடிப்பார்கள். சிலர் புனிதத் தலம் இருக்கும் திசையை நோக்கி வழிபடு வது வழக்கம்.

கடவுள்தான் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் ஆயிற்றே. பிறகு எதற்கு குறிப்பிட்ட திசையை நோக்கிய வழிபாடு என்று கேட்பவர்களும் உண்டு! இன்னும் சிலர் சூரியன், சந்திரன் என்று இயற்கையைத் தெய்வ மாக வழிபடுவார்கள்.

ஒவ்வொரு வழிபாட்டு முறை யும் அவரவர் வழக்கப்படி அமையும். எது எப்படியோ... கடவுள் வழிபாடு என்பது மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது ஆகிறது அல்லவா?

நம்மில் பெரும்பாலும், சனாதன தர்மத்தை அல்லது அதற்கு இந்து மதம் எனப் பெயரிட்டு... அது வழிகாட்டியுள்ள முறையைப் பின்பற்றி வருகிறோம். குடிசையில் வாழ்பவராக இருப்பினும், அந்தக் குடிசையில் ஓரிடத்தில் கடவுளின் சிலை அல்லது திருவுருவப் படத்தை அலங்கரித்து, காலை மாலை இருவேளையும் தீபமேற்றி வழிபடுவது வழக்கம்.

சிலர், தங்கள் வீடுகளில் அலங்கரிக்கப்பட்ட - ஆடம்பரமான பூஜை அறைகளில், பிரகாசமான மின்விளக்குகளின் ஒளியில் குலதெய்வம், இஷ்டதெய்வம் எனும் வகையில் பல தெய்வப் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இந்த வீடுகளிலும் தீபம் ஏற்றுவது வழக்கம். ஆம், விளக்கேற்றுவது மட்டும் பெரும்பாலான இல்லங்களில் தடைப்படவில்லை மக்களே!

மட்டுமன்றி, பெரும்பாலானோரின் இல்லங்களில் துளசிமாடம் அமைத்தும் வழிபடுகிறார்கள். அதேபோல் வேப்பமரத்தை வணங்குவதும் அரச மரத்தை வலம் வருவதும் கூட தெய்விக வழிபாடு முறைகளாக வழக்கத் தில் உள்ளன. ஆக இயற்கையும் இறை வழிபாட் டின் அங்கமாகிறது அல்லவா?

வீட்டில் நந்தவனம் அமைத்து பூச்செடிகளை வளர்த்து மலர்களைக் கொய்து ஆலயத்துக்குக் கொண்டு சென்று இறைவனுக்குச் சமர்ப்பிக்கும் வழக்கத்தையும் சில இடங்களில் காணலாம். ஆலயம் சென்று வழிபடுவது, தினசரிக் கடமைகளில் ஒன்றாக இருந்தது என்பதையும் அறிவோம். இதன் பயன் என்ன தெரியுமா?

தினசரி ஆலய தரிசனம் என்பது, நம் மனத்தில் எழும் கெட்ட எண்ணங்களை அகற்றும்; மனத்தூய்மைக்கு வழிகாட்டும். நம் ஆயுளும் ஆரோக்கியமும் சீராக இருக்கும். இது அனுபவித்து அறிந்தவர்களின் வாக்கு.

நம் பாரதத்தில், எளிய வழிபாட்டு முறை களைக் காலம் காலமாகவே பின்பற்றி வந்துள்ளோம். விளக்கு, தீபம், கற்பூரம் என்றெல்லாம் கிடைக்காத இடங்களில், சூழலில் இருப்போர் என்ன செய்வது?, அவையெல்லாம் இருந்தால்தானே வழிபாடு என்றெல்லாம் எவரும் கேள்வி எழுப்பவில்லை. இருப்பவற்றைக்கொண்டு வழிபாட்டைத் தொடர்ந்தனர் நம் முன்னோர்.

கையில் ஓர் இலை கிடைத்தாலும் அதுவும் இறைவனை அர்ச்சிக்கும் பொருளாகிவிடும் என்பார்கள். `யாவர்க்குமாம் இறைவற் கொரு பச்சிலை’ என்கிறது திருமந்திரப் பாடல். உள் மனதில் இறை சிந்தனையும், பக்தியும் நிறைந்திருக்க வேண்டும். அதுபோதும் வழிபாட்டுக்கு!

இறை சிந்தனை
இறை சிந்தனை
subodhsathe


இன்றைய சூழல் எப்படி?

இன்றைய நவீன உலகில், அடுக்குமாடிக் குடியிருப்பு வாசம், காலத்தின் கட்டாயம், மாறிவரும் வாழ்க்கை முறை ஆகியவற்றை எல்லாம் காரணம் காட்டி `பழைமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க முடிய வில்லை’ எனும் புலம்புவோர் அதிகம்.

எது எப்படியோ அது அப்படியே இருக்கட்டும். அந்தக் கால வழக்கத்தை முழுமை யாகப் பின்பற்ற முடியவில்லை என்றால் என்ன? இயன்றவற்றை இடைவிடாமல் கடைப் பிடிக்கலாம் அல்லவா? அதுவே ஆன்மிக வாழ்க்கைக்கு நல்ல அடிப்படையாகும்!

இடமில்லை என்று காரணம் சொல்லி கடவுளை மாடிப்படிக்குக் கீழே ஒதுக்கிவைக்க வேண்டாம். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள் முன்னோர்கள். மற்றவற்றை வைப்பதற்கு இடம் இருக்கும்படி ஏற்பாடு செய்வது போல் தெய்வம் குடியிருக்கவும் தக்க ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

தினமும் தெய்வத்தைத் தொழும் பழக்கமும் அன்பும் நம்பிக்கையும் நிறைந்த வழிபாடும் நம் சிந்தையைச் சிறப்பாக்கும்; வாழ்வை வளமாக்கும் என் செல்லங்களே.

இனி, பூஜை - புனஸ்காரம், தியானம் ஆகியவை குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

- மலரும்...

பேரொளி தரிசனம்!

நீல் ராஸ்னர் – சிகாகோவில் 1949-ம் ஆண்டு பிறந்தவர். கல்லூரி பருவத்தில், இவரின் சம வயது நண்பர்கள் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்கத் திணறியபோது, பாரதத்தின் ஆன்மிக தத்துவப் பாதையில் ஈர்ப்பு கொண்டார் நீல்ராஸ்னர்.

ஆகவே அந்தப் பாதையில் பயணிக்கும் சங்கல்பத்துடன் இந்தியா, நேபாளத்தில் நீண்ட பயணம் மேற்கொண்டார். 1968-ல் திருவண்ணாமலை ஆசிரமத்தில் தொடங்கிய இவரின் பணி இன்றுவரை தொடர்கிறது. தியானம்... அதுவே இவரின் உயிர்மூச்சு!

1979-ல் அம்மாவின் பக்தர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. வள்ளிக்காவு நோக்கி பயணித்தார். அவர் வந்து சேர்ந்த அன்று எவ்வித அனுபவமும் வாய்க்கவில்லை. மறுநாள் அம்மாவின் கிருஷ்ண பாவ தரிசனத்தின்போது, அங்கு நடந்த யாவையும் தமக்குள் ஒருவித பரவசத்தை ஏற்படுத்தியதை உணர்ந்தார்.

ஒருமுறை பக்தியைத் தனக்கு வரமாக அளிக்கும்படி அம்மாவிடம் வேண்டினார். அம்மாவோ மழலைச் சிரிப்பு சிரித்துவிட்டு ``நானே ஒரு பித்தன். நான் என்ன செய்யமுடியும்?’’ என்று கூறிவிட்டார்.

ஆனால், அதற்கும் அடுத்தநாள் நிகழ்ந்த தேவி பாவ தரிசனம் அவருக்கு விடையளித்தது. அப்போது அம்மாவின் முகம் பூரண ஒளி வடிவாகக் காட்சியளித்தது. அந்த ஒளி நான்குபுறமும் பிரகாசமாக நிறைந்திருந்தது. போகப் போக அந்த ஒளி சுருங்கி ஒரு புள்ளியாக மாறியது. அப்போது, முதல் நாள் அம்மாவிடம் தான் கேட்ட கேள்விக்குச் சூட்சுமமாகப் பதில் கிடைத்ததாக எண்ணிப் பேரானந்தம் அடைந்தார் நீல் ராஸ்னர்.

அவருக்கு அவ்வப்போது உடல் சோர்வு அடையும். பசி எடுக்காது; நோய் வயப்படும். அப்படியோர் உடல் நிலை. அம்மாவின் அருளால் நோய்கள் அனைத்தும் நீங்கின. சாதாரணமாக அம்மாவைக் கண்டால் மகிமை அனைத்தும் அவருள் மறைந்திருப்பது போலவும், பாவங்களின்போது அவை வெளிப்பட்டு பரவசமூட்டுவதாகவும் கண்டுணர்ந்தார் அவர்.

அந்தக் காலத்தில், அம்மாவைச் சுற்றி ஆசிரமம் ஏதும் இல்லை. அவருடன், கல்லூரி மாணவப் பருவ வயதில் சிலர் ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வளவே!

அத்தகைய சூழலைக் கண்டவர், அம்மா வுடன் இருக்கும்போது மற்றவை எதற்கு? தூங்குவதற்கு சிறு இடமும், ஒரு குவளையும், கட்டிக்கொள்ள துணியும் இருந்தால் போதுமே என்று எண்ணினார்.

சில காலம் கலிஃபோர்னியாவில் சான்ரமோன் நகரின் எம்.ஏ. மையத்தில் தங்கியிருந்து ஆன்மிகப் பணியாற்றினார்.

தொடக்கக் காலம் அல்லவா? வள்ளிக்காவில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது! அப்போது மற்றவர்கள் “ பணத்திற்கு என்ன செய்வது?” என்றனர். அதற்கு அம்மா “நீங்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம். அதையெல்லாம் சரி செய்ய ஒருவன் வருவான்” என்றார்.

கலிஃபோர்னியாவிலிருந்து வள்ளிக்காவு திரும்பினார் நீல்ராஸ்னர். வந்தவர், நிதிப் பொறுப்பேற்று ஆசிரமத்தின் சின்னச் சின்ன விஷயங்களிலும் அக்கறை செலுத்தினார். நிலைமை சீரானது. காலம் கனிந்தது... அம்மாவின் ஆசியுடன், நீல் ராஸ்னர் (நீலு) ஸ்வாமி பரமாத்மானந்தபுரி எனும் திவ்ய நாமத்துடன் சந்நியாச தீக்ஷை பெற்றார். இன்றளவும், பகல் இரவு பாராமல் அம்மாவின் பாதாரவிந்தங்களில் தொண்டாற்றி வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism