கட்டுரைகள்
Published:Updated:

அனுபவம் புதுமை!

அனுபவம் புதுமை!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவம் புதுமை!

ஓவியம்: மகேஸ்

அனுமனுக்கு சிரஞ்சீவியாக வாழும் வரமளித்தார் அன்னை சீதாதேவி. இந்த வரம் குறித்து ஜாம்பவானிடம் பகிர்ந்துகொண்ட அனுமன், ``அதன் சிறப்புத்தன்மை என்ன?’’ என்று கேட்டார்.

ஜாம்பவான் பெருமிதத்துடன் சொன்னார்: ‘`நெடுங்காலம் உயிர் வாழ்வதால் நம் அனுபவ அறிவு அதிகமாகிக்கொண்டேயிருக்கும். கல்வியால் கிடைக்கும் அறிவின் நுட்பத்தைவிடவும், அனுபவத்தால் கிடைக்கும் ஞானத்தின் நுட்பம் அதிக அளவு பலன்தரக்கூடியது. மற்றவர்கள் சிரமப்பட்டும் உணர இயலாத மாபெரும் உண்மைகளை, நம் மனம் அனுபவ ஞானத்தின் மூலம் ஒரே கணத்தில் உணர்ந்துகொள்ளும்’’ என்றார்.

உண்மைதான். ஞானம் வேறு; அறிவு வேறு. புத்தகங்களாலும் படிப்பாலும் வருவது அறிவு; அனுபவத்தால் கிடைப்பது ஞானம். ஆகவேதான், குருமார்கள் தங்களின் சீடர்களுக்கு அனுபவங்களால் பாடம் புகட்டினார்கள்.

இளைஞர்கள் சிலர், ஞானி ஒருவரைச் சந்தித்தார்கள். ‘`வாழ்வின் சவால்களை எதிர்கொள்வது எப்படி... பிரச்னைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?’’ என்று அவரிடம் கேட்டார்கள். ‘`தியானம் செய்வதன் மூலம் உணர்வுகளை நெறிப்படுத்தலாம். அப்போது நம் சிந்தனைகள் சிறக்கும்; செயல்கள் வெற்றிபெறும். பிரச்னைகளைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும்’’ என்றார் அவர்.

அனுபவம் புதுமை!

இளைஞர்களில் ஒருவன் மீண்டும் கேட்டான். ``ஐயா! எங்கும் நிறைந்த பிரம்மத்தை, தெய்விகத்தை நமக்குள் நிரப்புவது எப்படி?’’

இதற்கான பதிலை வெறும் வார்த்தைகளால் விளங்கவைக்க முடியாது என்று தீர்மானித்த ஞானி, அவர்களிடம் ஒரு சல்லடையையும் கோப்பையையும் கொடுத்தார். அருகிலுள்ள குளத்துக்குச் சென்று, சல்லடையில் நீர் நிரப்பும்படி குறிப்பிட்டார்.

இளைஞர்கள் புறப்பட்டார்கள். ஆனாலும் `சல்லடையை நீரால் நிரப்புவது சாத்தியமா?’ எனும் கேள்வி அவர்களுக்குள் எழாமல் இல்லை. `இது போகாத ஊருக்கு வழியைச் சொல்வதுபோல’ என்று சலித்துக்கொண்டார்கள். ஆயினும், உபதேச நூல்களைப் படித்து, அவற்றிலிருந்து இதற்கு ஏதேனும் வழியைக் கண்டுபிடிக்க முடியுமா என்றும் பார்த்தார்கள். ஒன்றும் புலப்படவில்லை.

அவர்களில் ஒருவன் மட்டும் மறுபடியும் ஞானியைச் சந்தித்து, இது குறித்து விளக்கம் கேட்டான். ஞானி அந்த இளைஞனிடம், ‘`சல்லடையை எப்படி நீரால் நிரப்புவாய்?’’ என்று கேட்டார். ‘`அதுதானே விளங்கவில்லை. சல்லடையில் நீர் தங்காதே’’ என்றான்.

ஞானி புன்னகையுடன் கூறினார்: ‘`ஆன்மிகப் பயிற்சியும் இப்படிப்பட்டதுதான். `நான்’ என்கிற எண்ணத்துடன் தெய்விக உணர்வைத் தேட முயன்றால், அது முடியாமல் போய்விடும். நாம் தெய்விகத்தில் இரண்டறக் கலக்க வேண்டும். அது சல்லடையைத் தண்ணீரால் நிரப்புவதுபோல! புரிகிறதா?’’ என்ற ஞானி, அந்தச் சல்லடையை அவனிடமிருந்து வாங்கிக் குளத்துக்குள் எறிந்தார். அது கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீருக்குள் மூழ்கியது.

அனுபவம் புதுமை!

‘`இப்போது பார்... சல்லடை தண்ணீரால் நிறைந்திருக்கிறது. அதேபோல், தெய்விகத்திடம் உன்னை முற்றிலுமாக ஒப்படைத்துவிட வேண்டும். முழுவதுமாக ஒப்படைப்பவர்களிடம் அந்தச் சக்தி இறங்கிவிடும்!’’ இளைஞனுக்கு உண்மை புரிந்தது.

மாதவதாஸ் என்ற பக்தருக்கும் ஓர் அனுபவப் பாடத்தால் ஞான உபதேசம் கிடைத்தது. பாபா பாஸ்கரானந்தர் என்றொரு மகான். ஞான, வேதாந்தங்களில் கரைகண்டவர். ஒருநாள் மாதவதாஸ் என்ற பக்தர் அவரிடம் வந்து, ‘`குருநாதா! ஜீவன் எப்படி பிரம்மம் ஆகிறது?’’ என்று கேட்டார். அரிய கேள்வி இது. இதற்கான விடையை ஓர் அனுபவத்தால் தர விழைந்தார் பாபா பாஸ்கரானந்தர்.

‘‘மாதவதாஸ்... உள்ளே அறைக்குள் ஓர் இரும்புப்பெட்டி வைத்திருக்கிறேன். அதைக் கொண்டு வா’’ என்றார். மாதவதாஸ் போய் இரும்புப்பெட்டியை எடுத்துவந்தார். ‘‘இதற்குள் என்ன இருக்கிறது?’’ எனக் கேட்டார். ‘‘ஸ்பரிச வேதிக்கல் இருக்கிறது’’ என்றார் குருஜி.

தூக்கிவாரிப் போட்டது மாதவதாஸுக்கு. காரணம், ஸ்பரிச வேதிக்கல் பட்டால் இரும்பு, தங்கமாக மாறிவிடும். ‘ஆனால் இந்த இரும்புப் பெட்டி மாறவில்லையே’ என்று சந்தேகம் எழுந்தது.

குருநாதர் புரிந்துகொண்டார். `’பெட்டியைத் திறந்து பார்’’ என்று கட்டளை இட்டார். மாதவதாஸ் பெட்டியைத் திறந்து பார்த்தார். உள்ளே, காகிதத்தில் சுற்றப்பட்டு ஒரு ஸ்பரிச வேதிக்கல் இருந்தது. காகிதத்தை நீக்கிவிட்டு, ஸ்பரிச வேதிக்கல்லை இரும்புப்பெட்டியில் வைத்ததும், இரும்புப்பெட்டி தங்கப்பெட்டியாக மாறியது!

மாதவதாஸ் வியக்க, ‘`மாதவதாஸ்! ஸ்பரிச வேதிக்கல் காகிதத்தில் சுற்றப்பட்டு இருந்ததால்தான், இரும்புப் பெட்டி தங்கமாக மாறவில்லை. அந்தக் காகிதத்தை நீக்கியதும், இரும்புப்பெட்டி தங்கமாக மாறிவிட்டது. அதுபோல, மாயை நம்மை பிரம்மம் ஆகாதபடி சுற்றிச் சூழ்ந்திருக்கிறது. அந்த மாயையை நீக்கிவிட்டால், பிரம்மம் ஆகலாம்’’ என்றார் குருநாதர்.

இப்படித்தான் அனுபவங்கள் நல்ல ஞானத்தை எளிதில் விளங்கவைத்துவிடும். சிலர் இருக்கிறார்கள்... அனுபவங்களின் தன்மையை அவர்களால் புரிந்துகொள்ள இயலாது; ஞானம் பெறவும் இயலாது.

நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத முற்காலத்தில் கிராமவாசி ஒருவனுக்கு ஓர் ஆசை எழுந்தது. `எப்படியாவது பெரிய தொரு நகரத்தைப் பார்க்க வேண்டும்; அங்கேயே வசிக்க வேண்டும்’ என்று விரும்பினான். ஒருநாள் குடும்பத்தை கிராமத்திலேயே விட்டுவிட்டுப் புறப்பட்டான்.

அனுபவம் புதுமை!

முதல்நாள், வழியில் ஒரு சத்திரத்தில் தங்கினான். நகரம் இருக்கும் திசையை நோக்கியவாறு தன் காலணிகளை வைத்துவிட்டுப் படுத்தான். அப்போதுதான் பாதை மறக்காமல் இருக்குமாம். இதை அறிந்த சத்திரத்தின் நிர்வாகி, கிராமத்தானுக்கு வேடிக்கை காட்டலாம் என்று நினைத்து, அவன் தூங்கும்போது காலணிகளை கிராமத்தை நோக்கியவாறு திருப்பி வைத்துவிட்டார்.

மறுநாள், கிராமத்து ஆசாமி எழுந்தான். செருப்பின் முனை சுட்டிய திசையை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவன் வந்த இடம் அவனுடைய சொந்த ஊரைப்போலவே இருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும், அவன் வசித்த தெருவைப்போலவே தோன்றியது.

அந்தத் தெருவில் அவனது குடும்பத்தைப் போலவே ஒரு குடும்பம் இருக்கிற வீடு தென்பட்டது. அதில் அவனுடைய குடும்பத்து மனிதர்கள் மாதிரியே சிலர் வசிப்பதாக அவனுக்குத் தோன்றியது. தானும் அங்கேயே, அவர்களுடனேயே வாழ்வது என்று முடிவுசெய்து, வாழ்நாள் முழுவதும் அங்கேயே கழித்தானாம்!

நம்மில் பலரும் இந்த ஆசாமியைப்போலவே உண்மையைத் தொலைத்துவிட்டு கற்பனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அனுபவங்கள் தரும் பாடங்களைப் புரிந்துகொள்ள முயல்வதில்லை. அதேநேரம், நமக்குக் கிடைக்கும் சில அனுபவங்கள் பாடங்கள்தானா என்பதையும் அறிய முற்படுவதில்லை. சமீபத்தில் இணையதளத்தில் ரசித்த ஜோக் ஒன்று...

இரவு, வெளியூரிலிருந்து வந்த நண்பனை ஓட்டலில் தங்கவைத்திருந்தான் ஒருவன். விடிந்ததும் ஓட்டலுக்குச் சென்றான். மேலாளர் அறைக்கு முன்பு ஒரே களேபரம். என்னவென்று விசாரித்தான். டாய்லெட்டில் தண்ணீர் வராததால் பிரச்னை செய்கிறார்கள் என்று பதில் கிடைத்தது.

நண்பனைத் தேடினான். ஒரு மூலையில் ஓட்டல் ஊழியர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து அவனை நையப் புடைத்துக்கொண்டிருந்தார்கள். இவன் ஓடோடிச் சென்று அவர்களைத் தடுத்து விலக்கி, ``ஏன் அடிக்கிறீர்கள்?’’ என்று கேட்டான்.

``ஓவரா பிரச்னை பண்றான்’’ என்றார்கள்.

பதிலுக்கு இவன் ``எல்லோரும்தானே பிரச்னை செய்கிறார்கள். இவனை மட்டும் ஏன் அடிக்கிறீர்கள்?’’ என்று கோபத்துடன் கேட்டான்.

அதற்கு ஊழியர்கள் கடுப்புடன் பதில் சொன்னார்கள்: ``எல்லோரும் டாய்லெட்டில் தண்ணீர் வரலைன்னு பிரச்னை பண்றாங்க சரி... இவன் `எனக்கு டாய்லெட்டே வரலை’ன்னு பிரச்னை பண்றான்!’’