கட்டுரைகள்
Published:Updated:

`கல் கண்ணாடி ஆகுமா?’

`கல் கண்ணாடி ஆகுமா?’
பிரீமியம் ஸ்டோரி
News
`கல் கண்ணாடி ஆகுமா?’

அடுத்தவர்களுக்கு உதவினால், ஆண்டவன் உங்களுக்கு உதவுவார்'' என்று கூட்டத்தில் எடுத்துச் சொன்னார். உபதேசம் கேட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் மூவர் அவரின் சொற்படியே நடக்க சித்தம் கொண்டனர்

பெரும் தவசீலரின் மைந்தன் அவன். ஒருநாள் தந்தையிடம் சென்றான். தவமிருந்து இறைவனை தரிசிக்கப்போகிறேன் என்றான். ``தவப்பயன் கைகூடி இறையை தரிசிக்க நேர்ந்தால், அவருக்குக் காணிக்கையாக என்ன கொடுப்பாய் மகனே'' எனக் கேட்டார் தந்தை. மகன் சொன்னான் ``அவரிடம் இல்லாத ஒன்று என்னிடம் உண்டு. அதைக் கொடுப்பேன்'' என்றான்.

``கடவுளிடம் இல்லாதது என ஒன்றுண்டா என்ன?'' வியப்பும் திகைப்புமாய்க் கேட்டார் அவன் தந்தை.

``உண்டு தந்தையே. அனைத்தும் அவரின் படைப்புதான் என்றபோதும், மனிதன் படைத்தது ஒன்று உண்டு. அதுதான் அகங்காரம். எனக்குள் இருக்கும் அகங்காரத்தையே அர்ப்பணிப்பேன்!'' என்றான் மகன்.

தவசீலர் பெரிதும் மகிழ்ந்து மகனை ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார். அவருக்குத் தெரிந்துவிட்டது... அவனுக்கு இப்போதே ஞானம் கைகூடிவிட்டது என்று. ஆம்! அகங்காரத்தைக் களைந்தால் ஆன்மபலம் கிட்டிவிடும்; உள்ளுக்குள் ஒளிரும் இறைவனையும் கண்டுகொள்ளலாம்.

`கல் கண்ணாடி ஆகுமா?’

பாரதப் போர் நிறைவுற்றது. சக்ராயுதத்துக்குப் பதிலாகத் தமது மதியூகத்தையே ஆயுதமாக்கி பாண்டவர்களுக்கு வெற்றியும் தர்மத்துக்கு வாழ்வும் கொடுத்துவிட்டார் கிருஷ்ண பரமாத்மா. பாண்டவர்கள் பாசறைக்குத் திரும்பினார்கள். விஜயனின் ரதத்தை ஓட்டிவந்த பரமாத்மா, அதை நிறுத்திவிட்டு அர்ஜுனனை முதலில் இறங்கும்படி கேட்டுக்கொண்டார்.

அர்ஜுனனுக்குள் இப்போது அகங்காரம் தலைதூக்கியது. `நானே போர் புரிந்து வெற்றிபெற்றிருக்கிறேன். கண்ணனோ எனக்குச் சாரதியாக மட்டுமே இருந்தார். ஆக, அவர் முதலில் இறங்கவேண்டும்; சாரதி இறங்கியபிறகே எஜமானன் இறங்க வேண்டும் என்பதுதானே மரபு' என்றெல்லாம் எண்ணினான். சில கணங்கள் அகம்பாவம் அவனை ஆட்டிப்படைத்தது. ஆனால் கண்ணன் விடவில்லை. அவனையே முதலில் இறங்கும்படி பணித்தார். வேறு வழியின்றி பார்த்தன் இறங்கினான். பிறகு கண்ணன் இறங்கினார். அவர் இறங்கிய மறுநொடி பெருத்த ஓசையுடன் ரதம் வெடித்து எரிந்தது. பாண்டவர்கள் அதிர்ந்தனர்.

போரில் எதிரிகள் ஏவிய பல மாய அஸ்திரங்கள் ரதத்தைத் தாக்கியிருந்தன. ஆனால், பகவான் சாரதியாக வீற்றிருந்ததால், அவரின் சக்திக்குக் கட்டுப்பட்டு அவை செயல்படவில்லை. அவர் இறங்கியதும் அவற்றின் வல்லமை ரதத்தை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது. `தான் கொண்ட அகங்காரம் தன்னையே அழித்திருக்கும்' என்ற உண்மையைப் புரிந்துகொண்ட அர்ஜுனன், பகவானின் பாதகமலங்களில் விழுந்தான்; அவனுடைய அகங்காரமும் பொசுங்கிப்போனது.

`கல் கண்ணாடி ஆகுமா?’

ஆம், அகங்காரம் நம் அறிவுப்புலன்களை முடக்கிப்போட்டுவிடும். ராவணேசுவரன் தன் பலத்தின் காரணமாக எழுந்த அகம்பாவத்தால் அல்லவா ஈசன் அமர்ந்திருக்கும் திருக்கயிலை மலையையே அசைக்க முற்பட்டான். விளைவு, பரமன் தன் பெருவிரலால் சிறிது அழுத்தம் கொடுக்க, பலவானான ராவணன் அதன் அடியில் சிக்கிக்கொண்டு அழுந்தினான். பிறகு தவறுணர்ந்து சாம கானம் இசைத்து, இறைவனின் மன்னிப்பைப் பெற்று மீண்டான் என்கின்றன திருக்கதைகள்.

அதனாலேயே பெரியவர்கள் பலரும் `அகங்காரத்தைத் தொலைத்துவிடுங்கள். இல்லையேல் அது உங்கள் வாழ்க்கைப் பயணத்துக்குப் பெரிதும் தடையாகிவிடும்’ என்று சொல்லிவைத்திருக்கிறார்கள்.

ஜென் குரு ஒருவருக்குச் சீடர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவன் சலனமற்ற மனத்தை அடையும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அவனைக் காணப் பலரும் வந்தனர். பல காரியங்கள் தொட்டு மற்ற சீடர்களும் வந்தனர். ஆனால் சீடனோ எவரையும் கண் திறந்து பார்க்கவில்லை. நிறைவில், வெளியே சென்றிருந்த குரு வந்தார். அவன் அருகில் சென்று நின்றார். அப்போதும் அவன் கண் திறக்கவில்லை.

குரு ஒரு செங்கல்லை எடுத்துவந்து தரையில் வைத்துத் தேய்க்க ஆரம்பித்தார். அந்த சத்தத்தால் சீடன் விழிக்க நேரிட்டது. குருவிடம் ``என்ன செய்கிறீர்கள்'' எனக் கேட்டான். ``செங்கல்லைக் கண்ணாடியாக்க முயற்சி செய்கிறேன்'' என்றார் குரு. சீடனுக்கு எரிச்சல் எழுந்தது. ``செங்கல் எப்படிக் கண்ணாடியாகும்'' என்று இரைந்தான்.

குரு புன்னகையுடன் கேட்டார்: ‘‘செங்கல் கண்ணாடி ஆகாது எனில் உன் மனம் மட்டும் கண்ணாடி ஆகிவிடுமா?''

சீடனுக்கு உண்மை புரிந்தது. சலனமற்ற மனத்தைப் பெறுவது என்பது வெறும் பயிற்சியால் நிகழாது என்ற உண்மை நமக்கும் புரியவேண்டும். அகங்காரம் இருக்கும்வரையில் மனம் சலனத்தின் ஆளுகையில்தான் இருக்கும். சரி, அகங்காரத்தைப் போக்க என்ன செய்வது?

`கல் கண்ணாடி ஆகுமா?’

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா இப்படி போதிக்கிறார்... `கண்டாலும் கேட்டாலும் தொட்டாலும் முகர்ந்தாலும், உண்டாலும் சென்றாலும் தூங்கினாலும் மூச்சு விட்டாலும்... ஒன்றையும் தான் செய்யவில்லை; தன்னைக் கருவியாகக் கொண்டு இறைவனே இயக்குகிறான் என யோகியானவர் நினைக்கவேண்டும்.'

யோகிகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் இது பொருந்தும். `அனைத்தும் இறைவனால் நடப்பவை; நாம் கருவிகளே' எனும் நினைப்பு மேலோங்கும் போது அகங்காரம் நம்மிடமிருந்து அகலும். இப்படியான நினைப்பை உருவாக்கவே, ஆன்மிகத்தில் பல நிலைகளை வகுத்து நமக்கு நல்வழிகாட்டுகின்றன ஞானநூல்கள். அவற்றில் ஒரு நிலை, உபகார மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது. எல்லோரிடத்திலும் இறையைக் கண்டு அவர்களுக்கு உபகாரம் செய்பவன் பக்தியில் லயிக்கிறான்; ஆன்மிகப் பயணத்தில் வேகமான முன்னேற்றத்தை அடைகிறான்.

மகான் ஒருவரும் இதையே உபதேசித்துக்கொண்டிருந்தார். ``அடுத்தவர்களுக்கு உதவினால், ஆண்டவன் உங்களுக்கு உதவுவார்'' என்று கூட்டத்தில் எடுத்துச் சொன்னார். உபதேசம் கேட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் மூவர் அவரின் சொற்படியே நடக்க சித்தம் கொண்டனர். அதற்கு தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடமே கேட்டனர். ``எது வேண்டுமானாலும் செய்யலாம். உதாரணத்துக்கு, முதியவர் ஒருவர் சாலையைக் கடப்பதற்குக்கூட நீங்கள் உதவி செய்யலாம்'' என்றார் மகான். நண்பர்களுக்குப் புரிந்தது. விடைபெற்றுக்கொண்டார்கள்.

அடுத்த வாரம் மீண்டும் வந்தார்கள். மகானுக்கு மகிழ்ச்சி. அவர்களிடம் ``என்ன, யாருக்கேனும் உதவி செய்தீர்களா?'' எனக் கேட்டார். ``ஆமாம்... முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க உதவினேன்'' என்றான் ஒருவன். இரண்டாமவனும் முதியவர் சாலையைக் கடக்க உதவியதாகச் சொன்னான். மூன்றாவனும் அதையே சொன்னான். மகானுக்குக் குழப்பம். ``மூன்று பேருக்கும் மூன்று பெரியவர்கள் கிடைத்தார்களா?'' எனக் கேட்டார்.

``அப்படியெல்லாம் இல்லை. ஒருவர்தான். அவருக்கு நாங்கள் மூவரும் உதவினோம்'' என்றனர்.

மகானுக்குக் குழப்பம் அதிகரித்தது. ``என்ன... ஒருவர் சாலையைக் கடக்க நீங்கள் மூவர் தேவைப்பட்டீர்களா?''

``மூன்று பேர் இருந்தும் முடியலை, சிரமம்தான்!''

''என்ன சொல்றீங்க?''

``அந்தப் பெரியவர் சாலையைக் கடக்க விரும்பலே... இருந்தாலும் வலுக்கட்டாயமா நாங்க அவரைத் தூக்கிக்கொண்டு போய் அடுத்த பக்கம் விட்டோம்!''

உபகாரம் உன்னதமானதுதான். ஆனாலும் அதுவே உபத்திரவம் ஆகிவிடக்கூடாது; தேவையறிந்து தக்க நேரத்தில் செய்யும் உதவிதான் கடவுளின் அணுக்கத்தைப் பெற்றுத் தரும்!