கட்டுரைகள்
Published:Updated:

`இறைவா இதயத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்!’

`இறைவா இதயத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்!’
பிரீமியம் ஸ்டோரி
News
`இறைவா இதயத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்!’

‘சில மனிதர்கள் ஒரு மாந்தோப்பில் நுழைந்தனர். அங்குள்ள மரங்களின் இலைகள், தளிர்கள், கிளைகள் என்று ஒவ்வொன்றாக ஆராய்ந்தனர்.

வாழ்க்கைக்குப் பொருள் அவசியம். நம் வாழ்க்கை பொருளுடன் திகழ்வது மிக மிக அவசியம். அவ்வகையில் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி, நமக்குள் நம்மை மலரவைப்பது இறை நம்பிக்கை.

இறை நம்பிக்கை பற்றிப் புகழ்பெற்ற ஒரு பொன்மொழி உண்டு. `உங்களது வேண்டுதல் உடனே பலித்தால் இறைவன் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கிறார் என்று அர்த்தம். உங்களது எண்ணம் நிறைவேறுவது தாமதமானால், அவர் உங்களது பொறுமை உணர்ச்சியை அதிகரிக்கிறார் என்று அர்த்தம். நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால், புரிந்துகொள்ளுங்கள்... இந்த விஷயத்தை இறைவனின் உதவியின்றிச் சமாளிக்க உங்களால் முடியும் என்று அவர் நம்புகிறார்!’

ஆனால் அன்பர்கள் சிலர் உண்டு. விரும்பியது விரும்பியபடி நடக்கவில்லை என்றாலோ, காரிய தாமதம் ஆனாலோ பொறுமை இழந்துவிடுவார்கள். அவர்களின் நம்பிக்கையும் சிதைவுற்றுவிடும்.

இவர்கள் இப்படியென்றால், இறை நம்பிக்கையையே சிதைத்துப் பேசுவோரும் உண்டு. தங்களுக்கு வசப்பட்ட அறிவுப் புலனால் எல்லை வகுத்து, அதற்குள் உழன்றுகொண்டு `இல்லை’ என்று தர்க்கம் புரிந்துகொண்டிருப்பார்கள்.

பரமஹம்சரின் அழகான கதையொன்று உண்டு.

`இறைவா இதயத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்!’

‘சில மனிதர்கள் ஒரு மாந்தோப்பில் நுழைந்தனர். அங்குள்ள மரங்களின் இலைகள், தளிர்கள், கிளைகள் என்று ஒவ்வொன்றாக ஆராய்ந்தனர். அப்போது அங்கு வந்த வேறொருவன், எதுகுறித்தும் யோசிக்காமல், பழத்தைப் பறித்துச் சுவைத்தான். அவனல்லவா புத்திசாலி.

நீ ஒரு பக்தனாக இருக்க விரும்பினால், கண்ணன் பிறந்தது மதுராபுரியா, பிருந்தாவனமா என்ற கேள்வி தேவையில்லை. கீதையில் உள்ள கடமையைப் பற்றியும், அன்பைப் பற்றியும் அறிந்தால் போதும்’ என்றார் அந்த அவதார புருஷர். ஆம், இறைவனை அறிவால் ஆராய்வதைவிட, அன்பால் உணர்வதே விவேகம்! இதை உணர்ந்துகொண்டால், `உண்டு - இல்லை’ என்ற தர்க்கமோ வாதமோ எழத் தேவை இருக்காது.

ரஷ்ய எழுத்தாளர் துர்கனேவ் எழுதிய ஒரு சிறுகதை... அந்த ஊரில் மூடன் ஒருவன் இருந்தான். ஒரு நாள், புகழ்பெற்ற ஞானி ஒருவரிடம் வந்து, ‘நான், புத்திசாலியாக மாற என்ன வழி?’ என்று கேட்டான். ‘நீ உண்மையில் புத்திசாலியாக வேண்டுமா? அல்லது புத்திசாலிபோல் தோற்றம் தந்தால் போதுமா?’ எனக் கேட்டர் ஞானி.

உடனே அவன், ‘எல்லோருக்கும் நான் புத்திசாலி போல் தோன்றினால் போதும்’ என்றான். அவன் செவிகளில், எதையோ ரகசியமாகக் கூறினார் ஞானி. அன்று முதல் அவனை, புத்திசாலியென்று ஊரே கொண்டாடியது. ஞானியிடம் ஒருவர் சென்று, ‘அந்த மூடனை ஒரே நிமிடத்தில் எப்படி புத்திசாலியாக்கினீர்கள்?’ என்று கேட்டார்.

‘யார் என்ன சொன்னாலும், அதைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாமல்போனாலும் அதை மறுத்துப் பேசு என்றேன்; அவ்வளவுதான்! உண்டு என்று நிரூபிக்கத்தான் அறிவு தேவை. இல்லை என்று மறுக்க எதுவும் தேவையில்லை’ என்றார் புன்முறுவலுடன் அந்த ஞானி.

`இறைவா இதயத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்!’

இன்னும் சிலர் உண்டு. ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு தெய்வத்தைத் தேடி ஓடுவார்கள். அவர்களுக்குப் புரியவில்லை... தெய்வம் எதுவாக இருப்பினும் தெய்விக சக்தி ஒன்றுதான்!

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... எங்கும் நிறைந்த பரம்பொருள் உங்களை விட்டு வெகு தொலைவில் இல்லை. அவர் உங்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் குடியிருக்கிறார். உங்கள் இதயத்தின் மொழிகளை அவர் அறிந்திருக்கிறார். சுவாரஸ்யமான உவமைக் கதை ஒன்றுண்டு.

அண்ட பகிரண்ட கோடியையும் படைத்த இறைவன், அவற்றைக் குறித்து மகிழ்வும் பெருமிதமும் கொண்டார். அப்படியே மனிதனையும் படைத்தார். அதன்பிறகுதான் ஆரம்பித்தது தொல்லை!

எந்த நேரமும் மனிதர்கள் இறைவனிடம் ஏதாவது புகார் செய்தபடி இருந்தனர். இறைவன் உண்ணும்போதும், உறங்கும்போதும் அவரது அரண்மனைக் கதவை மனிதர்கள் தட்டியபடி இருந்தனர்.

கடவுளால் தாங்க முடியவில்லை. தன் ஆலோசகர்களைக் கூப்பிட்டார்: ‘‘மனிதர்கள் தொட முடியாத ஓர் இடத்தைச் சொல் லுங்கள். நான் போய் அங்கு ஒளிந்து கொள்கிறேன்!’’ என்றார்.

‘‘பனி மூடிய இமயத்தின் உயரமான சிகரங்களுக்குச் சென்றுவிடுங்கள்...’’ என ஆலோசனை கூறினார் ஒருவர்.

‘‘என்றாவது ஒரு நாள் அந்த சிகரத்தின் உயரத்தை அளக்க மனிதன் அங்கு வருவான்!’’ என்று அதை நிராகரித்தார் இறைவன்.

‘‘கடலின் அடி ஆழத்தில் சென்று தங்கி விடுங்கள்!’’ என்றார் இன்னொருவர். ‘‘மனிதர்கள் வருங்காலத்தில் நீர்மூழ்கிக் கலன்களைக் கண்டறிவார்கள். அவற்றின் உதவியோடு அங்கும் வந்துவிடுவார்கள்!’’ என்றார் இறைவன்.

‘‘அப்படியானால் நிலவு...’’ சொல்லிமுடிக்குமுன் இறைவன் இடைமறித்தார். ‘‘நண்பர்களே! வருங்காலம் எனக்குத் தெரியும். வருங்காலத்தில் விஞ்ஞானம் மேம்படும். விண்ணை அளக்க வரும் மனிதர்கள் நிலவிலும் காலடி வைப்பார்கள்... அதுவும் ஏற்ற இடம் அல்ல’’ என்றார். இதைக் கேட்டு எல்லோரும் மௌனமாக, மூத்த ஆலோசகர் எழுந்தார்.

`இறைவா இதயத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்!’

‘‘இறைவா! தனக்கு வெளியே இருக்கும் எல்லாவற்றையும் ஆராயும் குணமுள்ள மனிதன், தனக்குள் எதையும் தேட மாட்டான். அவன் இதயத்துக்குள் சென்று ஒளிந்துகொள்ளுங்கள். மனிதன் தன் இதயத்துக்குள் இறைவன் குடியிருப்பதை உணர மாட்டான். எனவே, உங்களுக்குத் தொந்தரவு இருக்காது!’’ என்றார்.

அதை இறைவன் முகம் மலர ஏற்றார். ஆம், நம் ஒவ்வொருவரின் இதயத்தின் அடி ஆழத்திலும் இறைவன் குடியிருக்கும் கோயில் இருக்கிறது! தூய்மையான பேரன்பு, கருணை, கள்ளங்கபடமற்ற குணம் ஆகிய வடிவங்களில் அவர் இருக்கிறார்.

ஆனால், அந்தக் கோயிலை தற்பெருமை, சுயநலம், அகங்கார எண்ணம் போன்ற பல பூட்டுகள் மூடி வைத்திருக்கின்றன. அந்தப் பூட்டுகளை அகற்றுங்கள். இறைவனின் பல வடிவங்களை உங்கள் குணங்களில் காட்டுங்கள்! இறைவன் அதையே உங்களிடமும் எதிர்பார்க்கிறார்.

உங்கள் உறவினர்கள், நண்பர்கள், முன்பின் அறிமுகமில்லாத அந்நியர்கள், ஏழைகள், விரோதம் பாராட்டும் எதிரிகள், பசுக்கள், நாய்கள் என சகல ஜீவராசிகளிடமும் நீங்கள் அன்பு செலுத்துங்கள். அப்படிச் செலுத்தும் அன்பு இறைவனைச் சென்றடைகிறது.

மனிதன் ஒருவன், கடவுளுக்கு முன்னே நின்றான். “கடவுளே, இந்த உலகத்தைப் பார்; நீ படைத்த மனிதர்களைப் பார்; எவ்வளவு துயரங்கள், வேதனைகள்... உதவிக்கு எவரையேனும் இங்கு அனுப்பக் கூடாதா?!” - ஆதங்கத்துடன் கேட்டான்.

“உதவி செய்வதற்காகத்தான் அனுப்பி வைத்திருக்கிறேனே...” அமைதியாக பதில் சொன்னார் இறைவன்.

“யாரை?” ஆர்வத்துடன் கேட்டான் மனிதன்.

புன்னகைத்த இறைவன் பதில் சொன்னார்:

“உன்னைத்தான்!”