
ஓவியங்கள்: மகேஸ்
குருக்ஷேத்திரம். எதிரெதிரே களம் காணக் காத்திருந்தன பாண்டவர் சேனையும் கெளரவர் சேனையும். எப்போது வேண்டுமானாலும் சங்கநாதம் எழும்பலாம் யுத்தம் தொடங்கலாம் என்ற நிலை. சாரதியாய் வீற்றிருந்த கண்ணன் பார்த்தனை நோக்கினார்.
எப்போதும் வீரக்களை பொலியும் பார்த்தனின் திருமுகம் களையிழந்து பாதம்நோக்கிக் குனிந்திருந்தது. `விஜயா’ என்று கண்ணன் அழைத்ததும் சோர்வுடன் அவரை நோக்கினான். `என்ன நேர்ந்தது உனக்கு?’ பார்வையாலேயே கேட்டார் பகவான்.
இப்போது பார்த்தனின் கண்களில் நீர் ததும்பியிருந்தது. குரல் தழுதழுக்கச் சொன்னான், ``கண்ணா! பேசவும் இயலாமல் தவிக்கிறேன் நான். என் வீரம், கம்பீரம், வலிமையெல்லாம் அடியோடு தொலைந்துவிட்டது போல் உணர்கிறேன். என் உடல் நடுங்குகிறது; உரோமங்கள் சிலிர்க்கின்றன; வியர்த்துக் கொட்டுகிறது; கையிலிருந்து காண்டீபம் நழுவுகிறது...’’ என்றெல்லாம் பிதற்றினான்.
கண்ணனுக்குப் புரிந்தது... ‘எதிரே நிற்கும் உற்றார், உறவினர்களை எல்லாம் கொன்றுவிட்டா ராஜ்ஜியத்தை வெல்ல வேண்டும்’ என்ற சிந்தனை பெரும் கவலையாகப் பரிணமித்து விஜயனை ஆட்கொண்டுவிட்டது. உள்ளத்தில் தோன்றிய கவலை அவன் உடலையும் சேர்த்து வாட்டுகிறது. அவன் உள்ளச்சோர்வை அழிக்கத் தீர்மானித்தார் பகவான். அங்கே கீதை உபதேசமானது.
சிறு பிரச்னைகளையும் பெரிதாக்கிப் புலம்பும் போக்கு தவறா னது. சவால்களையும் பிரச்னைகளையும் நினைத்து நாம் கொள்ளும் கவலை, நம்மை பலவீனர்களாக்கிவிடும். அவற்றைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நாம் எதன் பொருட்டும் மனக்கலக்கம் கொள்ளக்கூடாது.

விதுரநீதி, `கங்கையின் மடுவைப்போல் எவன் கலக்கம் அடையாமல் இருக்கிறானோ, அவனே அறிவாளியாகச் சொல்லப்படுவான்’ என்கிறது. `விதுரநீதி’ என்றதும் மாண்டவ்யரின் கதை நினைவுக்கு வருகிறது.
மாண்டவ்யர் என்றொரு முனிவர் தவத்தில் ஆழ்ந்திருந்தார். அரண்மனைப் பொருளைத் திருடிய கள்வர்கள் சிலர், காவலர்கள் துரத்தி வர, மாண்டவ்யரின் ஆசிரமத்துக்கு ஓடி வந்தனர். பொருள்களை அங்கே பதுக்கி வைத்துச் சென்றனர். நடந்தது தெரியாமல் தவத்தில் ஆழ்ந்திருந்த மாண்டவ்யரைக் கள்வன் எனக் காவலர்கள் பிடித்துச் சென்றனர். அவரைக் கழுவிலேற்ற உத்தரவிட்டான் மன்னன்.
இரும்பாலாகிய சூலத்தால் செய்த கழுவில் ஏற்றப்பட்டார் அவர். சூலம் அவரைத் துளைத்துச் சென்றது. ஆனால், பல நாள்களாகியும் அவர் சாகவில்லை. கடும் வேதனையைப் பொறுத்துக்கொண்டு, இறைநாமத்தை உச்சரித்தபடி இருந்தார். அவர் சாகாதது அறிந்து மன்னன் பதறினான். அவர் உண்மையான துறவி என்பதை உணர்ந்து, ஓடோடி வந்து வணங்கினான். அவரைக் கழுவில் இருந்து விடுவித்து மன்னிப்பு வேண்டினான்.
மலர்ந்து சிரித்தவாறே அவனுக்கு ஆசி கூறினார் மாண்டவ்யர்.தனக்கு இந்த வேதனை முன்ஜன்ம வினையால் வந்ததாகத்தான் இருக்கவேண்டும்; இதற்கு மன்னனைக் கோபித்துப் பயன் இல்லை என்று அவரது பக்குவப்பட்ட மனம் நினைத்தது.
சூலத்தை அவர் உடலிலிருந்து பிடுங்கியும், சூலம் முழுதும் வெளி வராமல் உடைந்து, கால் பகுதி உடலின் உள்ளேயே தங்கி, அதன் தொடர்ச்சியாக இன்னொரு கால் பகுதி வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அதன்பொருட்டும் மாண்டவ்யருக்கு மகிழ்ச்சி தான். வெளியே நீட்டிக் கொண்டிருந்த இரும்புப் பகுதியில், தாம் வைத்திருந்த பூக்குடலையை மாட்டிக்கொள்ள அது வசதியாக இருந்தது. `அணீ’ என்றால் சூலத்தின் முனை; அதோடு வாழ்ந்ததால், அவர் அணீமாண்டவ்யர் எனப்பட்டார்.
தான் தண்டனை பெற்றதற்குக் காரணமான முன்வினை என்ன என்பதை அறிய ஆவல் கொண்டார் அவர். தருமதேவனாம் எமனைச் சந்தித்துக் காரணம் கேட்டார். ‘நீங்கள் குழந்தைப் பருவத்தில் விளையாட்டுத் தனமாக தும்பிகளின் உடலுக்குப் பின்னால் முள்ளால் குத்தி அவற்றை வேதனைப்படுத்தினீர்களே... அதற்கான தண்டனைதான் இது!’ என்றான் எமன்.
விளையாட்டுப் பருவத்தில் அறியாமல் செய்த தவற்றுக்கு இந்தத் தண்டனை மிகக் கடுமையானது அல்லவா? ‘நீ மனிதனாகப் பிறக்கக் கடவாய்!’ என்று சபித்தார் மாண்டவ்யர். எமன் மகாபாரத காலத்தில் விதுரராகப் பிறந்தான் என்பது கூடுதல் தகவல்.
இரும்புச் சூலம் உடலைத் துளைத்தபோதும், இரும்பைவிட வலிமையான மன உறுதியால் கடும் வேதனையைத் தாங்கினார் முனிவர். அவரை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். எவ்வித பிரச்னைகள் வந்தாலும் மனவலிமையை இழந்துவிடக் கூடாது.
`துன்பங்களும் பிரச்னைகளும் குரங்குகளைப் போன்றவை. பயந்து ஓடினால் நம்மைத் துரத்தும். திரும்பி எதிர்கொண்டால், ஓடியே போய்விடும். இளைஞர்களே, பிரச்னைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். அவற்றை எதிர்கொள்ளுங்கள்!’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
வேலையிலும், குடும்ப விஷயங்களில் நாம் சந்திக்கும் எல்லாமே பிரச்னைகள் அல்ல; அவற்றில் பல நாம் அவசியம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்தான் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
பிரச்னைகளோ சவால்களோ எதிர்கொள்ளத் தயங்கி அஞ்சினால், நம் மனம் கலங்கும்; சிந்தனையும் திறமையும் முடங்கும்; செயல்கள் தோல்வியுறும். சிறிய பிரச்னைகளும் பெரிதாக உருவெடுத்துவிடும். எதிர்மறை எண்ணங்களின் தாக்கமே அதிகமாகும். மன அழுத்தமும் அதிகரிக்கும். இது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லதல்ல.
வெள்ளம்போன்று பெரிய துன்பம் வந்தாலும், நினைத்த மாத்திரத்தில் அதனை அழிக்கக்கூடிய ஆற்றல் அறிவுடையவனுக்கு உண்டு. எவ்விதச் சூழலையும் எளிதில் சமாளிக்கும் சாமர்த்தியம் உடையவர்கள் அவர்கள்.
நண்பர்கள் சிலர் தங்களுக்கு இன்னின்ன மொழிகள், இத்தனை மொழிகள் தெரியும் என்று பெருமை பேசிக்கொண்டிருக்க, தத்துவமேதை பெர்னாட்ஷா தனக்கு 25 மொழிகள் தெரியும் என்றார் பெருமிதத்தோடு! மற்றவர்கள் எப்படி என்று விசாரிக்க, ‘ஆமாம், என்னால் 25 மொழிகளில் மௌனமாக இருக்கமுடியும்!’ என்றார் அவர் குறும்பாக.

வேடிக்கையான மனிதர்கள் சிலர் உண்டு. அவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளும் விதமே அலாதியானது. அவ்விதமான அன்பர் ஒருவர் வெளிநாடு சென்றார். கடற்கரையில் சூரியக் குளியல் செய்துகொண்டிருந்தார்.
நீச்சலை முடித்துவிட்டு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் இவரிடம் ``ஆர் யூ ரிலாக்ஸிங்’’ என்று கேட்டார். இவர் சொன்னார், ``இல்லை, நான் பக்கிரிசாமி.’’
சற்று நேரத்தில் இன்னொருவர் வந்தார். அவரும் புன்னகையோடு கேட்டார், ``ஆர் யூ ரிலாக்ஸிங்?’’ பக்கிரி அவரிடமும் பதில் சொன்னார், ``இல்லை... நான் பக்கிரிசாமி.’’
மூன்றாவதாகவும் ஒருவர் வந்து கேட்க எரிச்சலுடன் பதில் சொல்லிவிட்டு, மேலும் அங்கிருந்தால் பிரச்னை என்று வேறொரு இடத்துக்குச் சென்றார் பக்கிரி.
அங்கே வெளிநாட்டுக்காரர் ஒருவர் படுத்திருந்தார். அவரை எழுப்ப முயன்ற பக்கிரி கேட்டார், ``ஆர் யூ ரிலாக்ஸிங்?’’
``யெஸ், ஐயாம் ரிலாக்ஸிங்!’’
அவ்ளோதான், பக்கிரிக்கு வந்ததே கோபம். அந்த வெளிநாட்டுக்காரரின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டுச் சொன்னார், ``முட்டாள்! உன்னத்தான் அங்கே எல்லாரும் தேடிக்கிட்டிருக்காங்க. நீ இங்கே படுத்துக் கிடக்கே!’’