திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

களத்திர தோஷத்துக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

கேள்வி - பதில்

? துதிப்பாடல் ஒன்றில் `தக்ஷிண காளீ’ என்ற பதத்தைப் பார்த்தேன். தக்ஷிண காளீ என்பது காளிதேவியின் திருநாமங்களில் ஒன்றா அல்லது காளியின் அம்சத்தில் திகழும் தனித்த தெய்வமா?

- வே.கார்த்திகேயன், விருதுநகர்

சிவம்-சக்தி இரண்டும் ஒன்றே; பிரிக்க முடியாதவை; நித்தியமானவை. காளிதேவி நித்தியமானவள். மகா மாயா ஸ்வரூபிணி. அவளுக்கு ரூபம் என்பது கிடையாது. ஒளிமயமானவளும் காலத்தை நடத்துபவளுமாகிய பராசக்தி, தீய சக்திகளை அழித்து நல்லோர்களைக் காப்பதற்காகவே தாமஸ, ராஜஸ, ஸாத்வீகக் குணங்களுக்கும் தாம் செய்ய வேண்டிய காரியங்களுக்கும் உகந்தவாறு ரூபங்களை ஏற்று அருள்பாலிக்கிறாள்.

அரூபாயா: காளிகாயா: காலமாது: மஹாத்யுதே:
குண க்ரியானுரூபேண க்ரியதே ரூப கல்பனா

என்று வர்ணிக்கிறது மகா நிர்வாண தந்த்ரம் எனும் நூல்.

அனைத்து பூதங்களையும் அழிப்பதால் `காளி’ எனப் போற்றப்படுகிறாள் அம்பிகை. அதேபோல், காலம் அவளின் கைகளில் என்பதாலும் `காளி’ என்று அறியப்படுகிறாள். நமக்கு நன்மையையே அளிப்பதால் `பத்ரகாளீ’ (பத்ரம் - நன்மை) என்றும் போற்றப்படுகிறாள்.

`தக்ஷிண காளீ’ குறித்து கேட்டுள்ளீர்கள். தெற்கில் இருக்கும் யமன் காளிதேவியின் திருப்பெயரைக் கேட்க பயம் கொள்வான் என்பதால் `தக்ஷிணகாளி’ எனப்படுகிறாள். வலம் (தக்ஷிணம்) சிவபெருமானின் நிலையாகவும், இடது (வாமம்) சக்தியின் நிலையாகவும் போற்றப்படும் உருவத்தில், அவளே சிவபெருமானின் ஆற்றலாகவும் உள்ளதாலும் அவளை `தக்ஷிண காளீ’ என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள்.

அதேபோல், மோக்ஷத்தை அளிக்கக்கூடிய சிவஞானத்தை அருளும் ‘சிவஞான ப்ரதாயினியாக’ விளங்குவதாலும் அவள் `தக்ஷிண காளீ’ எனப் போற்றப்படுகிறாள் என்கின்றன ஞானநூல்கள். இந்த அன்னையை அனுதினமும் மனத்தில் தியானித்து வழிபடுவதால், உள்ளம் கோயிலாகும். சகல பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் வல்லமையும் ஆற்றலும் கிடைக்கும்; சகல நன்மைகளும் உண்டாகும்.

களத்திர தோஷத்துக்கு எளிய பரிகாரங்கள் உண்டா?
triloks

? ருத்ரம், சமகம் போன்ற மந்திரங் களைக் கோயிலில் மட்டும்தான் ஜபிக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். இதுபோன்ற மந்திரங் களை வீட்டில் வீட்டில் படித்தும் கேட்டும் வழிபடலாமா?

- மு,சிவகுமார், சேலம்

அந்தக் காலத்தில், அனைவரும் தங்களுடைய வீடுகளை பெரும்பாலும் ஆலயங்கள் இருக்கும் பகுதிகளிலேயே அமைத்திருப்பார்கள். அனுதினமும் கோயிலுக்கு நேரிலேயே சென்று, இறைவனை தரிசித்தும், கோயில்களில் ஒலிக்கும் இறைநாமாக்களைக் கேட்டும் மகிழ்ந்து, ஆலயத்தின் தெய்விகச் சக்தியை அனுபவித்து வந்தனர்.

தற்போது நம் வாழ்க்கைமுறையில் பல மாறுதல்கள் உண்டாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் வரும் மந்திரங்களை - பாடல்களை பார்த்தும் கேட்டும் மகிழ்கிறோம். இன்னும் சிலர் சிடி, ட்ரைவ் முதலான டிவைஸ் களில் பதிவு செய்து வைத்து, தேவைப்படும்போது ஒலிக்கச் செய்து செவிமடுக்கிறார்கள். இதனால் பலன் கிடைக்காதா, இப்படிச் செய்வது தவறா என கேட்கலாம்... தவறில்லை... ஆனால், அதுவே முழுமையானது; அது போதும் என்று இருந்துவிடக்கூடாது.

ஓர் ஆலயத்துக்குச் சென்று, அங்கு நடைபெறும் உபசாரங்களின்போது, ஓதுவாமூர்த்திகளின் மூலமாக பாடல் களைக் கேட்டு மகிழும் அனுபவம் அலாதியானது; அற்புதமானது. ஆகவே, சிடி போன்றவற்றின் மூலம் துதிப்பாடல்கள், வேத மந்திரங்களைச் செவிமடுத்து மகிழும் வழக்கம் இருந்தாலும், இயன்றபோதெல்லாம் வேதவித்வான்களின் மூலமாக பாராயணங்கள் நடக்கும் இடத்துக்குச் சென்று இறையனுபூதியை அனுபவித்து வாருங்கள். அது விசேஷமான பலன்களைக் கொடுக்கும்.

? ஸ்ரீசரபேஸ்வரரை வழிபட விரும்பு கிறேன். அவரை எளிய முறையில் வழிபடுவதற்கு ஏற்ற நியதிகள் மற்றும் ஸ்தோத்திர பாடல் குறித்து வழிகாட்டுங் களேன்.

- சி.ராமச்சந்திரன், சென்னை-65

ஞானநூல்கள் பலவும் போகத்தையும் மோக்ஷத்தையும் அருளும் தெய்வம் ஸ்ரீசரபேஸ்வரர் என்று விளக்குகின்றன. லிங்க புராணம், ஸ்ரீஆகாச பைரவ கல்பம் முதலான நூல்களிலும், பல தந்த்ர நூல்களிலும் சரபேஸ்வரர் ஆராதனை குறித்து மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.

மாதப்பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாள்களில் அவரை வழிபடுவதால், மிகுந்த பலன்கள் கிடைக்கும்; அவரையே உபாசனை மூர்த்தியாகக் கொண்டவர்கள் எல்லா காலங் களிலும் வழிபடலாம் என்றும் கூறுகின்றன, ஞானநூல்கள்.

இந்தத் தெய்வத்தின் ஆற்றலை நாம் பெற்று பலனடையும் விதம், பல மூல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றைத் தகுந்த குருவிடமிருந்து உபதேசம் பெற்றே உபாசிக்க வேண்டும். எனினும் சரபமூர்த்தியின் ஸ்தோத்திரத்தை அனைவரும் கூறி வழிபடலாம்.

ஸ்ரீசரப சாந்தி ஸ்தோத்ரம் எனும் தொகுப்பில் வரும் ஸ்தோத்திரம் ஒன்றை கீழே அளித்துள்ளேன். பாராயணம் செய்து அருள் பெறலாம்.

ருத்ர: சங்கர் ஈச்வர:
புரஹர: ஸ்தாணு: கபர்தீ சிவ:
வாகீசோ வ்ருஷயத்வஜ:
ஸ்மரஹரோ பக்தப்ரியஸ்த்ரயம்பக:
பூதேசோ ஜகதீச்வரஸ்ச சரபோ
ம்ருத்யுஞ்ஜய: ஸ்ரீபதி:
அஸ்மாந் காலகலோ அவதாத் பசுபதி:
சம்பு: பினாகீ ஹர:

அல்லது `ஓம் சரபேச்வராய நம:’ என்று கூறியும் வணங்கி வழிபட்டு வரம் பெறலாம்.

சரபமூர்த்தி
சரபமூர்த்தி

? களத்திர தோஷத்துக்குப் பரிகாரமாகச் சொல்லப்படும் பெரியளவிலான வழிபாடுகளைச் செய்ய இயலாத சூழலில், எளிய வகையில் செய்வ தற்கான வழிபாடுகள் குறித்து வழிகாட்டுங்களேன்.

- கே.ரம்யா, கரூர்


செவ்வாய்க்கிழமைகளில் துர்கை வழிபடுவது விசேஷம். அதேபோல், வெள்ளிக் கிழமைகளிலும் அம்பிகையை வழிபடுவதால், தீய விளைவுகள் குறைந்து நன்மை பெருகும்.

நமது சநாதன தர்மத்தில், பல ஆயிரம் நூல்கள் ஜோதிடங்களின் பலா பலன்களைச் சொல்வதுடன், உரிய பரிகாரங்களையும் அவரவர் செய்யத் தக்க வகையில் அளித்துள்ளன. எனவே, தோஷ நிவர்த்தி வேண்டுவோர், தங்களின் குடும்ப ஜோதிடரின் வழிகாட்டுதலின்படி பரிகாரங்களைச் செய்வது சிறப்பு. அதேநேரம், விரிவான முறையில் வழிபாடுகளைச் செய்ய சூழல் இடம்கொடுக்கவில்லையே என்ற கவலை தேவையில்லை.

எளிய வகையில் நமக்குக் கிடைக்கும் இலைகளைக் கொண்டும் இறை வனை பூஜிக்கலாம்; மனதில் பக்தியும் அன்புமே பிரதானமாக இருக்க வேண்டும் என்பது நம் தர்மம் நமக்குச் சொல்லும் வழிகாட்டல். தூய பக்தியுடன் ஒரு தளம் அல்லது தீர்த்தம் அர்ப்பணித்தாலே இறையருள் பூரணமாகக் கிடைக்கும்.

‘யதா விபவ விஸ்தரம்’ என்று சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறபடி, நமது பொருளாதார சக்திக்கு ஏற்ப பூஜைகள் செய்யலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்கிச் செய்வது கூடாது.

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்பானது. பெரியளவிலான பரிகாரங்களைச் செய்ய முடியவில்லையே என்று கலங்க வேண்டாம். நீங்கள், உங்களின் குலதெய்வந்தை வணங்கி வழிபட்டு, குறைகளைச் சொல்லி முறையிடுங்கள். குலதெய்வம் உங்களது நிலைமையைப் புரிந்து கொள்ளும்.

மேலும், தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். ஆலயங்கள், நந்தவனங்கள், மாட்டுத் தொழுவம், நீர்நிலைகள் ஆகியவற்றை முடிந்த போதெல்லாம் சுத்தம் செய்யுங்கள். இயன்றால் ஆலய உழவாரப் பணிக ளிலும் கலந்துகொண்டு தொண்டாற்றலாம். இவற்றின் மூலம் உங்களுடைய பூர்வ ஜன்ம வினைகளால் ஏற்படக் கூடிய தோஷங்களும் நீங்கி விடும். கவலைவேண்டாம்.