மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: 'நெற்றியில் குங்குமப் பொட்டுதான் வைக்க வேண்டுமா?'

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

நாம் எல்லோரும் திருமண், விபூதி, குங்குமம் என்று நெற்றியில் வைப்பது வழக்கம்.

? சொந்த ஊரைவிட்டு வேலூருக்கு வந்து வெகுகாலம் ஆகிவிட்டது. எங்கள் மூதாதையர் வழிபட்ட குலதெய்வம் எதுவென்று எங்களுக்குத் தெரியவில்லை. குல தெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்?

-சி.காஞ்சனா, வேலூர்

நம்முடைய குலத்தைக் காக்கக்கூடிய குலதெய்வ வழிபாடு மிக முக்கியமானது. வீட்டுக்கு அடித்தளம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல நம் வழிபாடுகளில் குல தெய்வ வழிபாடு முக்கியமானது. எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் குலதெய்வத்தை வழிபட்ட பிறகே தொடங்குவது அவசியம். அப்போது அந்தக் காரியம் வெற்றி பெறும்.

பெரும்பாலும் கிராம தேவதைகளே குல தெய்வங்களாக இருக்கும். எனவே, குலதெய்வம் தெரியாதவர்கள் உங்கள் சொந்த ஊருக்குச் சென்று விசாரியுங்கள். அங்கிருக்கும் தெய்வங்களை அறிந்து, அந்தத் தெய்வங்களில் உங்கள் குலதெய்வத்தை அடையாளம் காண வாய்ப்பு கிடைக்கலாம். அப்படியும் தெரியவில்லை என்றால், உங்கள் குலத்தைச் சேர்ந்த பெரியவர்களைத் தேடிப் போய் விசாரியுங்கள். அவர்கள் மூலம் குலதெய்வம் பற்றிய விவரத்தை அறிய வாய்ப்பு உண்டு.

அதுவும் பலனளிக்கவில்லை எனில், நீங்கள் எந்தத் தெய்வத்தை விரும்பி வணங்கு கிறீர்களோ, எந்தத் தெய்வத்தை தரிசித்ததும் உள்ளுக்குள் சிலிர்ப்பும் பரவசமும் எழுகிறதோ, அதையே குலதெய்வமாக ஏற்றுக் கொள்ளலாம்.

சகல தெய்வங்களையும் வணங்குகிறேன், எல்லா தெய்வங்களின் மீதும் ஈர்ப்பும் பக்தியும் உண்டு; ஆகவே, குறிப்பிட்ட தெய்வம் இதுதான் என்று கருத இயலாதே என்று தவிக்கிறீர்களா? கவலையே வேண்டாம். நீங்கள் வழக்கம்போல் உங்கள் வழிபாடுகளைச் செய்யுங்கள். உங்கள் வழிபாட்டில் தினமும் ‘ஓம் குலதேவதாய நமஹ’ என்று சொல்லி வணங்குங்கள் போதும். உங்கள் குலதெய்வம் எங்கிருந்தாலும் நீங்கள் அந்தத் தெய்வத்தை அறிந்திராத நிலையிலும், நிச்சயம் அந்த தெய்வம் உங்களைக் காத்து நிற்கும். நாளடைவில் அந்த தெய்வமே தன்னை உங்களுக்கு அடையாளம் காட்டும்.

கேள்வி - பதில்: 'நெற்றியில் குங்குமப் பொட்டுதான் வைக்க வேண்டுமா?'

? குங்குமத்துக்கு மாற்றாக பலவிதமான பொட்டுகளைப் பெண்கள் பலரும் நெற்றியில் வைத்துக்கொள்கிறார்களே... இது சரியா, சாஸ்திரம் என்ன சொல்கிறது?

-எம்.பவித்ரா, செங்கல்பட்டு

நாம் எல்லோரும் திருமண், விபூதி, குங்குமம் என்று நெற்றியில் வைப்பது வழக்கம். அவற்றை எப்படி வைப்பது, எப்போது வைப்பது, எதை வைப்பது என்றெல்லாம் நம் சாஸ்திரம் மிக அருமையாக வகுத்துக் கொடுத்துள்ளது.

குங்குமத்துக்கு மாற்றாக வேறுவகை பொட்டுகளை இட்டுக் கொள்ள லாமா என்று கேட்கிறீர்கள். டாக்டர் உங்களை ஒரு மாத்திரை சாப்பிடச் சொல்கிறார். அப்போது தான் உங்கள் நோய் குணமாகும் என்கிறார். நீங்கள், குறிப்பிட்ட அந்த மாத்திரையைதானே எடுத்துக்கொள்வீர்கள். அதற்குப் பதிலாக வேறு எதுவும் எடுக்க மாட்டீர்கள்தானே.

அப்படித்தான் நம் சாஸ்திரங்கள் எல்லா செயல்களுக்கும் ஆதாரத்தோடும் அர்த்தத்தோடும் பல வழிகாட்டுதல்களைக் கொடுத்துள்ளன. அதன்படியே நடந்தால் தான் நமக்கு மோட்சம் கிட்டும் என்று சொல்லியுள்ளன. சாஸ்திர வழிகாட்டல்களைக் கடைப்பிடித்தால் நமக்குத்தான் நன்மை.

குங்குமத்தை மோதிர விரலில் பவ்யமாக எடுத்து நம் இரு புருவங்களுக்கு இடையே உள்ள ஆக்ஞா சக்கரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எல்லா சக்திகளும் ஒன்று இணையும் இந்த ஆக்ஞா சக்கரத்தைத் திலகம் வைத்துத் தூண்டுவதன் மூலம் நம் உடலெங்கும் ஒரு அதீத சக்தி பரவும் என்று ஆன்மிகம் சொல்கிறது.

உடலுக்கு அதிக யோக பலமும் ஞான பலமும் அளிக்கக் கூடிய இந்த புருவ மத்தியில் திலகம் வைப்பதே நல்லது. ஆக்ஞாவுக்கு நேர் மேலாகக் கூட சற்று தள்ளி திலகம் வைக்கலாம். குங்குமம்தான் வைக்கவேண்டும்.

குங்குமம் என்பது மஞ்சளால் உருவாவது. மஞ்சளுக்கு இயற்கையாகவே தீயசக்திகளைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. நமக்கு நேரெதிராக வரக்கூடிய தீய அதிர்வுகளை அப்படியே நிறுத்தக்கூடிய ‘ஸ்தம்பனம்’ செய்யக்கூடிய மகிமைகொண்டது மஞ்சள். அதுமட்டுமன்றி, சிவப்பு நிறம் கொண்ட குங்குமத்தால் பல மகிமைகள் உருவாகின்றன. சிவப்பு நிறத்துக்கென அதிர்வலை உண்டு. அது எதிரே உள்ளவரின் தீய எண்ணங்களைத் தடுக்க வல்லது. எனவே, எப்போதும் குங்குமத் திலகத்தையே இட்டுக்கொள்ளுங்கள்; நன்மைகள் உண்டாகும்.

? என் பேத்திக்கு ஜாதகம் கணிக்க வுள்ளோம். அவள் சிசேரியன் மூலம் பிறந்த குழந்தை. சிசேரியன் குழந்தை களுக்கு ஜாதகம் பலிக்குமா?

- கே.பரமேஸ்வரன், குளக்குடி

ஒரு மனிதன் பிறக்கும்போது அவன் பிறக்கக்கூடிய நாள், நேரம் ஆகியவை மிக முக்கியமானவை. அவையே ராசி, நட்சத்திரம் போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன. அதன்படியே வாழ்க்கை அமைகிறது என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

கிரகங்களின் அமைப்பின்படிதான் ஒருவரின் வாழ்க்கை அமைகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கிரகங்களின் அமைப்பையும் அதன் வழியே நம்முடைய வாழ்க்கையின் அமைப்பையும் கணித்துக் கூறியுள்ளார்கள்.

ஒருவர் பிறக்கும்போது அவருடைய பூர்வ புண்ணிய கணக்குகளும் இந்த பிறவியில் சேர்ந்து விடுகின்றன. எப்படி புது பாஸ் புக் வாங்கும்போது பழைய சேமிப்பும் புதிய புக்கில் வரவு வைக்கப்படுகிறதோ, அதுபோல நம் பாவ புண்ணியங்களும் இந்த பிறப்பில் சேர்ந்துவிடுகின்றன. இந்த வாழ்க்கை என்பதே பல ஜன்மங்களின் கூட்டாக நிகழ்வதுதான்.

எனவே சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளும்கூட ஆண்டவன் விரும்பியபடி, விதி வகுத்தபடிதான் குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் என்பதே உண்மை. இயற்கையாகப் பிறந்தாலும் சரி, சிசேரியன் என்ற நிலை வரும்போது... இந்த நேரத்தில் பிறந்தால் இந்த பலன் என்று கருதி பிரசவ நேரம் அமைந்தாலும் சரி, எல்லாமே விதிப்படியே நடக்கின்றன. ஆகவே, சிசேரியன் குழந்தைகளுக்கும் ஜாதகம் பலிக்கும் என்பதே உண்மை.

? நெருங்கிய உறவினர் இறந்து விட்டால், எத்தனை நாள்கள் கழித்து சுப காரியங்களில் கலந்து கொள்ளலாம்?

- வ. கிரிஜா, திருநெல்வேலி

ஒரு குழந்தை பிறக்கும்போது, அந்த வீட்டில் அந்த வீட்டைச் சேர்ந்த உறவுகளுக்கு ‘விருத்தி’ தீட்டு எனும் சடங்கு உள்ளது. அதுபோல் ஒருவர் இறக்கும்போதும் அந்த வீடு மற்றும் நெருங்கிய உறவுகளுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குத் தீட்டு உண்டாகிறது. தீட்டு என்பது நோயல்ல; அதுவொரு தற்காப்புச் சடங்கு. தீட்டுக்கான நாள்களில் இதைச் செய்யக்கூடாது என்று ஒரு நியதி வகுக்கப்பட்டுள்ளது. இது சுத்தத்தின் காரணமாகவே நம் பெரியோர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. மனம் சுத்தமாகும் வரை சில சுபகாரியங்களில் ஈடுபடக் கூடாது என்ற வரைமுறை உள்ளது.

தீட்டு நியதிகளில் ஒருவரின் குலம், வழக்கம் பொறுத்து நாள்களின் எண்ணிக்கை மாறுபடுகின்றன. 10 நாள்கள், 11 நாள்கள், 13 நாள்கள், 16 நாள்கள்... ஏன் ஒரு மாத காலம் என்றுகூட குடும்ப முன்னோர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

சில குடும்பங்களில் சில உறவுகளுக்கு ஒன்றரை நாளில் இந்தத் தீட்டு முடிந்துவிடுகிறது. இது குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. துக்கத்தில் வழிபாடுகள், சுப காரியங்களில் ஈடுபட முடியாது என்பதால் இது உருவானது. எனவே குலவழக்கத்தை உங்கள் வீட்டுப் பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே...

ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002