மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: ‘மனநிம்மதி பெற என்ன சுலோகம் சொல்லலாம்?’

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

நாம ஸங்கீர்த்தனம் என்பது இறைவனின் நாமாவை - பெயரை உச்சரிப்பது.

? ஆன்மிக ஆன்றோர்கள் பலரும் நாம ஸங்கீர்த்தனத்தைச் சிறப்பாகக் கூறி யுள்ளனர். மற்ற வழிபாடுகளைவிட நாம ஸங்கீர்த்தனத்துக்கு மகிமை அதிகமா? விளக்குங்களேன்.

- தி.ஹரிகிருஷ்ணன், சென்னை-44

அனைத்து வழிபாட்டு முறைகளும் சிறந்தவையே. இவற்றில் ஒன்றைப் பற்றிக் கூறும் போது, அதன் பெருமையை ஏற்றிக்கூறுவது வழக்கமானதே.

ஆக, அவரவர் முயற்சியின் பலன், அறிந்து கொள்ளுதல், அனுசரிக்கக் கூடிய அமைப்பு எனப் போன்ற அம்சங்களுக்கு ஏற்ப, ஒருவருக்கு ஒரு வழக்கத்தின் மீது ஈடுபாடு வருதல் முறை.

நாம ஸங்கீர்த்தனம் என்பது இறைவனின் நாமாவை - பெயரை உச்சரிப்பது. இதைக் கடைப்பிடிக்க, தங்களுக்கு இன்னின்ன விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேறு பொருளும் தேவை இல்லை. நல்ல குருவின் வழிகாட்டுதலின்படி,

அவர் கூறியவற்றை, அப்படியே எப்போ தெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் கடைப்பிடிக்கலாம்.

அனைத்து வழிபாடுகளிலும் எளிமையான தாக அமைந்திருப்பதால், இதனைப் பெரியவர் முதல் குழந்தைகள் வரை கடைப்பிடித்து இன்புறலாம்.

கேள்வி - பதில்: ‘மனநிம்மதி பெற என்ன சுலோகம் சொல்லலாம்?’

? இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில், மன அமைதி பெறுவது எப்படி? அதற்கென்று ஏதேனும் பயிற்சிகள் உள்ளனவா அல்லது குறிப்பிட்ட சுலோகம் ஏதேனும் உள்ளதா?

- ஆர்.பாலகிருஷ்ணன், சென்னை-10

கடவுளின்மீது சஞ்சலமற்ற பக்தியும் அவருடைய பேராற்றலின் மீதான தீவிர விசுவா

சமும்தான் நமக்கு, நம் மனத்துக்கு வேண்டிய தைரியத்தை அளித்து, செய்யக் கூடிய காரியங்களில் உரிய அறிவை உணரச் செய்து, செயல்படுத்தக் கூடிய ஆற்றலை நமக்கு அளிக்கின்றன.

`யா தேவி ஸர்வ பூதேஷு சாந்தி ரூபேண ஸம்ஸ்திதா நமஸ் தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:' என்ற வரிகளுக்கு ஏற்ப, எல்லாம்வல்ல பராசக்தியானவள் அனைத்து உயிர்களிலும், இயற்கையிலும் அமைதியின் வடிவாக விளங்குகிறாள்.

தாங்கள் மேற்கூறிய மந்திரத்தை நம்பிக்கை யுடன் ஜபம் செய்து வாருங்கள். அப்போது தங்களிடம் மட்டுமல்லாமல் தங்களைச் சுற்றி இருப்பவர்களிடத்தும் அமைதியைக் காண்பீர்கள். மேலும், மூச்சுப் பயிற்சி செய்து வருவதாலும் நல்ல வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதாலும் மனத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

கேள்வி - பதில்: ‘மனநிம்மதி பெற என்ன சுலோகம் சொல்லலாம்?’

? அவதார புருஷர்களில் ராமனுக்கு மட்டும் அப்படி என்ன தனிச் சிறப்பு? ராமாயணத்தை எல்லா பிரிவினரும் சிறந்த இதிகாசமாகப் போற்றுவது ஏன்?

-எம். முரளிதரன், மும்பை

எல்லாம் வல்ல பரம்பொருள் மனித உருவில் வந்து, இன்பம் துன்பம் இரண்டையும் நாம் அனுபவிப்பதுபோல தானும் அனுபவிப்பதாக உணர்த்தி, இல் வாழ்க்கையில் நாம் எப்படி நடக்கவேண்டும் என்பதை எளிய வழியில் காண்பித்த அவதாரம் ஸ்ரீராமரின் அவதாரம்.

`தர்மம் எனில் ஸ்ரீராமர்' என்று நமக்கு நினைவில் எழும் அவதார புருஷர் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி. தன் தந்தையின் பேச்சைக் கேட்டு ராஜ்யத்தை விட்டுக் கொடுத்தது, கானகம் சென்றது, குஹனுடன் நட்பு, சபரியின் அன்பைப் பெற்றது, வானர சேனையின் தலைவரையும் அவருடன் இருக்கும் மற்ற வானரங்களையும் தர்மப் பணிக்கு ஈடுபடுத்திக் கொண்டது, தன் மனைவி சீதாதேவியின் மீது அவர் கொண்டிருந்த அன்பு, தம்பிகள் மீது தந்தையைப் போன்று கருணை காட்டியது, சொல்லின் செல்வன் ஸ்ரீஆஞ்சநேயரின் மீது குருகடாக்ஷத்தைப் பதித்தது, ராவண வதம், ராஜ்ய பரிபாலனம்... என்று ஒவ்வொன்றிலும் உதாரணமாகத் திகழ்ந்து, வாழ்வில் நாம் எப்படி நடக்கவேண்டும் என்பதற்கான உதாரண புருஷராக திகழ்கிறார் ஸ்ரீராமபிரான்.

‘ ராம’ என்ற நாமமும் எளிமையில் சொல்லக் கூடியதாகவும், தன்னுடைய மிகப்பெரிய ஆற்றலினால் நன் கர்மவினைகளை அழித்து ஆனந்தம் தரக் கூடியதாகவும் விளங்குகிறது.

இப்படி இன்னும் பல உயர்ந்த தன்மை உடையதும், உலகில் உள்ள பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அனைத்து மக்களும் எளிய முறையில் தெரிந்து மகிழ்ச்சி அடையும் விதமாகத் திகழும் ஞானநூலாகவும் ஸ்ரீராம பிரானின் சரிதம் அமைந்துள்ளது.

? குழந்தைகளை வளர்க்க நம் சாஸ்திரங்களில் எத்தகைய விதிகள் கூறப்பட்டுள்ளன? அவற்றின் தாத்பர்யம் என்ன?

- எஸ். விஸ்வநாதன், திருச்சி - 1

`குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தே' என்றபடி, தெய்வ விஷயங்களிலும் குழந்தை சம்பந்தமான விஷயங்களிலும் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தோமானால், அவர்களுடைய அன்புக்குப் பாத்திரர்களாக நாம் விளங்குவோம்.

`ஆத்மாவைப் புத்ர நாம ஆசீ' என்ற வரிக்கு ஏற்ப, நாமே நம் குழந்தைகளாகப் பிறக்கிறோம். எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளை அடிப்பதும் கொடுமையான சொற்களினால் திட்டுவதும் கூடாது. தினமும் கடவுளிடம் `என் குழந்தைகள் நன்றாக இருக்கவேண்டும்' என்று மன நிறைவுடன் வேண்டிக்கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்கள் குழந்தைகளை நல்வழிப் படுத்தும்.

கர்மவினைகளால் சில நேரங்களில் அவர்கள் வேறு பாதைகளில் பயணித்தாலும், நம் வேண்டுதலை கடவுளானவர் நிறைவேற்றி அவர்களை நல்வழிப்படுத்துவார்.

`சுத: லாலநாத்' - அதிகமாக செல்லம் கொடுப்பதும் குழந்தைகளுக்குத் தீமையே.

அன்பும் அளித்து அதேநேரத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டிய தருணங்களில் அப்படி நடந்து நம் குழந்தைகளை நல்வழிப் படுத்த வேண்டும். அவர்கள் தவறு செய்தார்கள் எனில், அவர்களுக்கு அதை உணர வைப்பதும் நம் கடமை.

நம் மகன்தானே - மகள்தானே என்று கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பது, அவர் களிடம் மூர்க்கத்தனத்தை உண்டு பண்ணும். அதேபோல், எந்தக் குழந்தையுடனும் ஒப்பிடாமல், அவரவர் திறமைகளை அறிந்து அதனை வெளிக்கொணர்ந்து, அதன் மூலம் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் நன்மைகளையும் மகிழ்ச்சியையும் அளிப்பவர்களாக நம் குழந்தைகளை உருவாக்கு வது நம் கடமை.

நாம் எல்லா விஷயங்களிலும் அவர்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டும். அவர்கள் எப்படி உருவாக வேண்டும் என்று நினைக் கிறோமோ, அதுபோன்று நாமும் இருத்தல் அவசியம். நல்ல எண்ணங்கள் நல்ல மனிதர் களை உருவாக்கும்.

? நாம் அன்றாடம் பின்பற்றும் சடங்குகளால் இந்தச் சமூகத்துக்கு என்ன பலன்?

- கே. செல்வநாயகம், கரூர்

இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம் சடங்குகளே. இதைப் பற்றி அறியாதவர்களும் தவறாகப் புரிந்துகொண்டவர் களும் இந்த உண்மையை உணர முடியாது.

உலக இயக்கங்களுக்குச் செயற்கைக்கோள் (சாட்டிலைட்) போன்று நம் பாரத நாட்டில் கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பயனைத் தருகின்றன. `ஏன் நம் நாட்டில் மட்டும் இவ்வளவு சடங்குகள்' என்று கேட்காமல், நாம் உலகத்தில் உள்ள அனைவருக்குமாக வேண்டி வருகிறோம் என்பதில் பெருமைகொள்ளல் வேண்டும். எல்லாம்வல்ல சிவபெருமானும் பராசக்தியும் அறிவும், ஆற்றலாகவும் விளங்கு கிறார்கள் என்கின்றன ஆகமங்கள். நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு சடங்கிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்துள்ளன.

ஆகவே, பொருள் தெரியவில்லை என்று விட்டுவிடாதீர்கள். நாம் இவ்வுலகத்திற்கு நம் சடங்குகள் மூலமாக பல நன்மைகளை அளித்து இன்பம் பெறுவோமாக!

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002