பட்டினத்தாரும் காமாட்சியும் கையில் கரும்பு வைத்திருப்பது ஏன்?
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
கரும்பு நம் மனதைக் குறிக்கும். காஞ்சியில் வீற்றிருந்து அருள்புரியும் காமாக்ஷி, ‘கா’ என்ற சரஸ்வதியையும், ‘மா’ என்ற லக்ஷ்மியையும் தன் இரு கண்களாகக் கொண்டவள். அரவிந்தம், அசோகம், சூதம், நவமல்லிகா, நீலோத்பலம் ஆகிய ஐந்து புஷ்ப பாணங்களை தன் வலக் கரங்களில் வைத்துக்கொண்டு, இடக் கரத்திலுள்ள வில்லின் மூலம் அந்த பாணங்களை நம் மனங்களில் செலுத்தி, நம்மை வழிநடத்துபவள். நமக்கு வேண்டிய அனைத்தையும் அளித்து, இவ்வாழ்வில் இன்பம் அளித்து, கர்மவினைகளுக்கு ஏற்ப நமக்குப் பிறவிகளைத் தந்து, முடிவில் பேரானந்தம் என்னும் முக்தியைத் தருபவள் காமாட்சி. பட்டினத்தார் போன்ற கடவுளை உணர்ந்த ஞானிகள், தங்கள் மனம் பக்குவம் அடைந்துள்ளது என்பதை வெளிப்படுத்த இது போன்று கரும்பை வைத்திருக்கலாம். இன்றும் சிலர் அறுபது வயது முடிந்துவிட்ட நிலையில், கரும்பு வில் வைத்து அம்பு விடுவதைக் காணலாம். இதுவும் மனதை அடக்கி, இறைவனை நோக்கி நம் பயணம் தொடரவேண்டும் என்பதற்காகவே இருக்கலாம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவாழ்க்கையில் முன்னேறுவதற்குக் கடவுள் நம்பிக்கை அவசியமா?
- கி.ராம்நாராயணன், சென்னை - 80
ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்குக் கடவுள் நம்பிக்கை கண்டிப்பாகத் தேவை. நம்மைப் படைத்தும் காத்தும் வழிநடத்தும் கடவுளையே நாம் நம்பவில்லை என்றால், நாம் மற்றவர்களிடம் எப்படி உண்மையாக இருக்கமுடியும்? உண்மையான பக்தியுடன் கடவுளை வழிபடுபவர்கள் தவறு செய்யமாட்டார்கள். சிலருக்கு பக்தி இருந்தும் மனிதாபிமானம் இல்லையென்றால், அவர்களின் பக்தி முழுமையடையவில்லை என்றே பொருள். எடுத்த உடனேயே அவர்களுக்கு பக்குவம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. பல பிறவிகள் எடுத்த பிறகே நம்மால் நம்முடைய உண்மையான தன்மையை அறிய முடியும்.

கடவுள் நம்பிக்கை இருந்தால், நம்மை கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் ஏற்பட்டு, நாம் தவறு செய்யக்கூடாது என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். நாம் மனம் தளர்ச்சியுற்று இருக்கும்போது உறவினர்களோ நண்பர்களே தர முடியாத மன உறுதியை, தைரியத்தை கடவுள் நம்பிக்கை நமக்கு அளிக்கும். நம் ரிஷிகளும் முன்னோர்களும் கடவுள் வழிபாடு செய்துதான் பயன் அடைந்தனர். எனவே, நாம் வேரிலிருந்து விலகக்கூடாது.
அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒருவர் கடவுளிடம் பக்தி செலுத்தினால், அவர் கடவுளைக் குறை கூறமாட்டார். ‘எல்லாம் அவன் அருள்’; ‘நன்மையும் தீதும் பிறர் தர வாரா’ என்ற வாக்கியங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல. அவை அனுபவ மொழிகள். எனவே, கடவுள் பக்தியை எந்தக் காலத்திலும் விட்டுவிடாமல், சரணாகதி மனப்பான்மையுடன் பக்தி செலுத்துவது அவசியம். தீய வழியில் செல்வோரும், தீய எண்ணங்கள் உள்ளவர்களும் தெய்வ நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். எனினும் அனைத்து ஜீவராசிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை நாம் அனுதினமும் வேண்டிக்கொண்டால் உலகம் முழுவதும் நன்மை அடையும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வீட்டில் நீண்டகாலமாக வைத்திருந்த நிலைக்கண்ணாடி உடைந்துவிட்டது. இது ஏதேனும் அபசகுனத்தைக் குறிப்பிடுகிறதா என்றும் ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா என்றும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
- கார்த்திகா ஹரிஹரன், பெங்களூரு
உலகிலுள்ள அனைத்துமே காலத்துக்குக் கட்டுப்பட்டது. சைவ ஆகமங்களில் முப்பத்தி ஆறு தத்துவங்கள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ‘கால தத்துவம்’, ‘நியதி தத்துவம்’ என்று இரண்டு தத்துவங்கள் உள்ளன. இவையிவை இன்னின்ன அமைப்புடன் இருக்கவேண்டும் என்பது நியதி தத்துவம். அப்படிப் பார்த்தால் உயிருள்ள நமக்கு மட்டுமல்லாமல், ஜடப் பொருள்களுக்கும் காலம் என்பது உள்ளது.
சில பொருள்கள் எவ்வளவு விலையுயர்ந்ததாக இருந்தாலும், அதனுடைய காலம் முடிந்து விட்டது என்றால் நம்மால் பாதுகாக்க முடியாது. இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, நாம் எப்படி இருந்தால் என்ன, எல்லாம் அதனதன் விதிப்படித்தான் நடக்கும் என்று விட்டுவிடாமல், நம்மால் இயன்ற அளவு முயற்சி செய்ய வேண்டும். அதன் பிறகு எது நடக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

தங்கள் வீட்டில் நிலைக்கண்ணாடி உடைந்து விட்டது, அதற்கு உரியகாலம் முடிந்துவிட்டது என்பதற்கான அடையாளம்தான். அதற்கு மேல் அதைப் பற்றி யோசிக்கவேண்டியதில்லை. நாம் ஏதேனும் சகுனம் பார்க்கும் நேரத்தில் உடைந்திருந்தால், கடவுளை பிரார்த்தித்துக் கொண்டு வேறு கண்ணாடி மாற்றிவிடவேண்டும். கவலைப்படத் தேவையில்லை.
பிராப்தம், அதிர்ஷ்டம் இரண்டும் ஒன்றா அல்லது வேறுபாடு உள்ளதா?
- எஸ்.மகாலக்ஷ்மி, காரைக்கால்
‘பிராப்தம்’ எனில் தங்களுக்கு எவை கிடைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அவை மட்டுமே கிடைக்கும் என்று அறியவேண்டும்.
‘த்ருஷ்’ என்றால் பார்த்தல் என்று அர்த்தம். ‘அ’ என்னும் எழுத்தை ஒரு சொல்லுக்கு முன்பாகச் சேர்த்தால், வடமொழியில் எதிர்மறை அர்த்தம் கிடைக்கும். ‘அத்ருஷ்டம்’ என்றால் பார்க்கமுடி யாதது என்று அர்த்தம். அதையே நாம் தமிழில் அதிர்ஷ்டம் என்று கூறுகிறோம். நாம் செய்யும் நல்வினை மற்றும் தீவினைகளுக்கான பலன்கள் இந்த அதிர்ஷ்டம் என்பதில் அடங்கிவிடும். எனவே, நாம் அனுபவிக்கும் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டுமே ‘அத்ருஷ்டம்’ என்றே நாம் அறியவேண்டும்.
எனவே, அதிர்ஷ்டம் என்பதும் பிராப்தம் என்பது ஒன்றையே குறிக்கும். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது ஆன்றோர் வாக்கு. இதை அறிந்தே நம் முன்னோர்கள் பக்குவமாக வாழ்ந்து வந்தனர்.
- பதில்கள் தொடரும்...
வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.
கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002