மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

நம் முயற்சி ஒருநிலையை அடைவதற்குத் தாமதமாகலாம். ஆனால் தொடர்ந்து முழு மனத்துடன் முயற்சியைத் தொடரும்போது, நிச்சயம் மனம் உங்கள் வசப்படும்.

? நான் பூஜை செய்யும்போதும் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் போதும் என் மனம் அலைபாய்கிறது. இங்ஙனம் அலைபாயும் மனத்தை ஒருமுகப்படுத்துவது எப்படி?

-காந்திமதி, சென்னை-12

மனம் அலைபாய்வது இயற்கையானது. அதை நிலைநிறுத்தி எல்லாம்வல்ல பரம்பொருளை நம்முள் அறிந்து அனுபவிப்பதற்கே பூஜை முறைகள் உதவுகின்றன. இவை ஒருவருக்கு உடனே ஸித்தியாவதில்லை. அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்பவே முயற்சிகள் அமைகின்றன.

நீங்கள், `தூய பக்தியுடன் நம்மால் ஒருமுகப்பட்ட மனத்துடன் பூஜை செய்யமுடியும்’ எனும் திடமான நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள். சலனத்தை விடுத்து, தியானிக்கும் கடவுளின் ரூபத்தை உற்றுநோக்கி, நான் பரம்பொருளை இந்த உருவில் தியானிக்கிறேன் எனும் சிந்தையோடு தொடர்ந்து தியான முயற்சியில் ஈடுபடுவோமேயானால், மனம் ஒருமுகப்படுவது எளிதாகும்.

நம் முயற்சி ஒருநிலையை அடைவதற்குத் தாமதமாகலாம். ஆனால் தொடர்ந்து முழு மனத்துடன் முயற்சியைத் தொடரும்போது, நிச்சயம் மனம் உங்கள் வசப்படும்.

முறையாக பிராணாயாம பயிற்சி, தாரனை, தியானம் போன்ற யோக அங்கங்களை கற்று பயிற்சி செய்யும்போது, இன்னும் எளிதில் மனத்தை ஒருமுகப்படுத்தலாம். நம் ரிஷிகள் அருளிய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், மனம் ஒருமுகப்படுவதை எளிதில் சாத்தியப்படுத்தலாம்.

? மந்திரங்களைச் சொல்லும்போது `ஓம்’ என்று சொல்லித் தொடங்குவது ஏன்?

- எஸ்.செல்வரங்கம், காஞ்சிபுரம்

`ஓம்’. எப்படி நம் உடலுக்குத் தலையே முக்கியமானதாக இருக்கிறதோ, அப்படியே அனைத்து மந்திரங்களுக்கும் சிரசாக விளங்குவது `ஓம்’ எனும் மஹாமந்திரம்.

`ஓம் இதிதகும் சர்வம்’. ஓம் என்பது அனைத்துமாக விளங்குகிறது என்கிறது வேதம். நான் எழுதுவது, நீங்கள் படித்துக்கொண்டிருப்பது என்று உலகிலுள்ள அனைத்து காரியங்களுக்கும் காரணமாக இருப்பது ஓம்காரம். நம்மைப் பரம்பொருளிடம் அழைத்துச் செல்லக்கூடிய சக்தி படைத்ததால் அது ப்ரணவம் என்று போற்றப் படுகிறது. எனவே, மந்திர சாஸ்திரங்களில் அனைத்து மந்திரங்களுக்கும் மூலமாக உள்ள ஓம்காரத்தை உச்சரித்தபிறகே, மற்றவற்றைச் சொல்ல வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. வேர் இருந்தால்தானே மரம் வளரும்.

கேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை?

? கோயில்களில் எத்தனை முறை நாம் பிரதக்ஷிணம் செய்யவேண்டும். எத்தனை முறை நமஸ்காரம் செய்யவேண்டும்?

- கே.கிருஷ்ணமூர்த்தி, பெங்களூரு

`பிரதக்ஷிணம்’ - நாம் கடவுளை வேண்டி, இரு கரங்களையும் கூப்பிக்கொண்டு, மிகுந்த பக்தியுடனும், அதீத நம்பிக்கையுடனும், ஒருமித்த மனத்துடனும் வலம் வருவது; நமக்கு மிகுந்த ஆற்றலை தரவல்லது. குறைந்தது ஒன்று என்ற எண்ணிக்கையில் வலம் வருவது என்று வைத்துக்கொண்டு, 9, 18, 27 என்ற எண்ணிக்கையிலும், அதிகமாக 108 முறை வரையிலும் வலம் வந்து வழிபடலாம்.

மருத்துவர்கள் நாம் நடைப்பயிற்சி மேற்கொண்டால், உடலில் உள்ள கொழுப்பு குறைந்து புத்துணர்ச்சி அடைவோம் என்று கூறுவதைக் கவனித்திருப்பீர்கள். ஆலயத்தில் வலம் வருவது நம் தேகத்துக்கு மட்டுமல்ல உள்ளத்துக்கும் உவப்பானது. ஆலயங்களில் கடவுளை நாம் இருப்பதற்கு மூலகாரணமான அந்தப் பரம்பொருளை வலம் வந்து வழிபட்டால், நம் முன்வினைகள் நசுக்கப்பட்டு, இவ்வுலகில் வேண்டிய நன்மைகளையும், பிறவா நிலை என்று போற்றப்படக்கூடிய மோட்சநிலையையும் அடையலாம்.

எனவே, தாங்கள் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கு பிரதக்ஷிணம் செய்யும் அமைப்பு இருப்பின், தவறாமல் செய்து விடுங்கள். அப்போது உங்கள் கவலைகள் கரைந்துசெல்வதை உணரலாம்.

அடுத்து நமஸ்காரம் குறித்து பார்ப்போம்.ஆலயத்தில் உள்ள கொடிமரம் அருகில் வடக்கு நோக்கி ஒருமுறை நமஸ்காரம் செய்வது நலம். சில சம்பிரதாயங்களில் மாறுதல் இருக்கலாம்.

பரிவார ஆலயங்களில் ஒன்று முதல் மூன்று முறை பிரதக்ஷிணம் செய்யலாம். நவகிரக தேவதைகளை ஒன்பது முறை வலம் வருவது சிறந்தது. ராகு-கேது கிரகங்களையும் வலமாகவே சுற்றவேண்டும்; எதிர் திசையில் சுற்றக் கூடாது. பிரதோஷ காலத்தில் சிவபெருமானை சோமசூக்த பிரதக்ஷிணம் என்ற முறையில் வலம் வருவது சிறந்தது.

தாங்கள் உங்கள் பகுதியிலிருக்கும் ஆசார்யர்களை அணுகி, அங்கு சிறப்பான முறைகள் ஏதெனும் இருப்பின், அதுகுறித்து கேட்டறிந்து அதன்படிச் செயல்படுவதும் நன்மையே.

? பகவானிடம் விசுவாசம் இல்லாமல், வெறுமனே நாம ஜபம் செய்வதால் மட்டும் பலன் கிடைத்துவிடுமா?

-ஆர்.ராஜகோபால், சென்னை-5

எப்படி ஒரு வகுப்பில் பலதரப்பட்ட மாணவர்கள் அவரவர் புரிதலுக்கு ஏற்ப ஆசிரியரின் வார்த்தைகளைப் புரிந்து கொள்கிறார்களோ, அப்படியே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை அவரவர் புரிந்துகொண்ட அளவுக்குதான் அவரை வர்ணிக்கவோ, அனுபவிக்கவோ முடியும். அதுபோன்று பக்தர்களின் நிலையிலும் கடவுளை அவரவர் எப்படி நோக்குகிறார்களோ அப்படியே அனுபவிப்பர்.

நாம ஜபம் செய்வது பலனைத் தரும்; சந்தேகமே வேண்டாம். ஒருவர் கடவுள்மீது பரிபூரண அன்பு கொண்டு வழிபட்டாலும், `குரு சொல்கிறார் செய்வோம்’ என்று வழிபாடு செய்தாலும், நம்பிக்கையுடன் செய்தாலும், நம்பிக்கை இல்லாமல் செய்தாலும்... ஏதெனும் ஒரு பலனை நிச்சயம் அளிக்கும் சக்தி படைத்தது நாம ஜபம்.

வால்மீகி முனிவர் அவருடைய பூர்வாச்ரமத்தில் நாரத முனிவர் கூறியபடி `மரா’ என்று கூற, அந்த நாமம் `ராம’ என்று ஒலித்து ராமாயணம் எழுதும் சாமர்த்தியத்தை அடைந்ததை நாமறிவோம். எனவே, நாம ஜபம் செய்யுங்கள். அந்தச் சக்தியானது நாம் எங்கு செல்லவேண்டுமோ அங்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

கேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை?

? கோயில் மூடியிருக்கும்போது வெளியே நின்று நமஸ்காரம் செய்யக் கூடாது என்று சொல்வது ஏன்?

-எம் வந்தனா, திருச்சி-3

`விதி’, `நிஷேதம்’ என்று ஆலயங்களில் நாம் செய்யவேண்டியவை - செய்யக்கூடாதவை குறித்து ஆகமங்கள் கட்டளையிட்டு இருக்கின்றன. அவற்றை அப்படியே கடைப்பிடிப்பதே சிறந்தது.சிலவற்றுக்கு நம் காரணங்கள் கூறப்பட்டிருப்பதை நாம் கவனிக்கலாம். சிலவற்றுக்கு காரணங்கள் நேரிடையாகக் கூறப்பட்டிருக்காது.

ஆலயங்கள் மூடியிருக்கும்போது அனைத்து சக்திகளும் ஓரிடத்தில் ஒடுங்கி இருப்பதால், மறுநாள் பூஜைகள் செய்து அந்த நாளைத் தொடங்கும்போதுதான் நாம் நம் வழிபாட்டைத் தொடரலாம் என்ற வழிமுறையை நம் முன்னோர் கடைப்பிடித்து நன்மைகள் அடைந்தனர். நாமும் அதைப் பின்பற்றி நன்மை அடைவது சிறப்பு.

கடவுளை அனைத்து நேரங்களிலும் அனைத்து இடங்களிலும் வழிபடுவதில் தவறு ஏதும் இல்லை என்ற வாதம், இங்கு ஆலயம் என்ற இடத்தில் ஒத்துவராது. நமது இல்லத்தில் பயன்படுத்தும் தொலைபேசிக்கும், எங்கு சென்றாலும் நம்முடன் எடுத்துச் செல்லும் செல்போனுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.

ஆலயம் நம் ஒருவருக்கு மட்டுமோ, நம் மனித இனத்துக்கு மட்டுமோ உரித்தானது அல்ல. அங்கு செய்யப்படும் பூஜைகள் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உரித்தானவை. ஆகமங்களில் சொல்லப்பட்டிருப்பவை எவையோ அவற்றைக் கடைப்பிடித்து, நன்மை கிடைக்கச் செய்வதே சிறப்பாகும்.

- பதில்கள் தொடரும்...