Published:Updated:

கேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா ?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

மறுபிறவி என்பதை நாம் ஏற்று உணர்ந்தால்தான் இப்படியான பல அபூர்வ நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்.

கேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா ?

மறுபிறவி என்பதை நாம் ஏற்று உணர்ந்தால்தான் இப்படியான பல அபூர்வ நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்.

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

? விதிவிட்ட வழிப்படிதான் எல்லாம் நடக்கும் என்றால் இறைவனை வழிபடுவது எதற்காக?

- கே.ரம்யா முருகன், சென்னை-87

இறை வழிபாடு நமது கடமையாக இருக்க வேண்டும் என்று நம் மதம் போதிக்கிறது. `காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி...' என்பார்கள் பெரியோர்கள். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவன் மேல் அன்புகொள்வதே பக்தி. அவர்மீது அப்படி நாம் அன்பு கொண்டால் நம்மை நாம் இழந்து, நம்முள் இறைவனை உணர்வோம். நம் உள்ளம் கசிந்துருகும்; கண்ணீர் பெருகும். நம் ரிஷிகளும் முன்னோர்களும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனை ஆராதித்து மகிழ்ந்தனர்.

பலனை எதிர்பார்த்து வழிபடுவதென்பது ஒரு நிலை. ஆனால், அதுவே முடிவானதல்ல. அப்படி நாம் வழிபடும் நிலையில், அழிக்கப்பட வேண்டிய நம் வினைகள் யாவும் அழிக்கப்பட்டு நாம் நன்மை அடைவோம். அதில் சந்தேகம் இல்லை. சில வினைகள், அனுபவித்தால்தான் அழியும். சில வினைகள், நம்முடைய பூஜைகளாலும் நாம் செய்யும் தர்ம காரியங்களாலும் நீங்கும். இந்த இருவகையான வினைகளையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோர் பல சோதனைகளுக்கு உட்பட்டாலும், நம்பிக்கை இழக்காமல் அவர்கள் இறைவன்மீது கொண்ட ஆழ்ந்த பக்தியால் இன்றும் போற்றப்படுகிறார்கள். எனவே, இறைவனை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பக்தி செய்ய வேண்டும். அவர் எதை அளித்தாலும் ஏற்றுக்கொள்ளுதலே 'பிரஸாத புத்தி' என்று போற்றப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? கடவுள் நம்பிக்கையாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். இது எப்படி நியாயமாகும்?

- பி.கிருஷ்ணசாமி, சென்னை-80

கஷ்டம், சந்தோஷம் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரியவில்லை. ஒரே வங்கியில் இரு வேறு நபர்கள் கணக்கு வைத்திருப்பார்கள். எனினும் அவர்களில் ஒருவர் பல கோடிகள் வைத்திருப்பார். இன்னொருவர் சில ஆயிரங்கள் வைத்திருப்பார். இதற்கு வங்கி பொறுப்பு ஆகாது. அவரவரின் உழைப்பின் மூலம் ஈட்டப்பட்டதை பத்திரமாகப் பராமரித்து வைப்பதே வங்கியின் கடமை. சில ஆயிரங்கள் மட்டுமே வைத்திருப்பவர், தன்னுடைய கடுமையான உழைப்பினாலும் முன் செய்த புண்ணிய செயல்களினாலும் பல கோடி ரூபாய்க்கு அதிபதியாகலாம். முன்சொன்ன கோடீஸ் வரர் சாதாரண நிலையை அடையலாம். நாம் இந்த இரண்டு உண்மைகளையும் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது.

கேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா ?

அதுபோல், கடவுள் அவரவர் கர்மவினை களுக்கேற்ப பலன்களைத் தருவார். ஒருவர் இப்பிறவியில் நல்லவராக இருப்பினும் முற்பிறவியில் செய்த தீய வினைகளின் பலன்களை அனுபவித்தே தீர்க்க முடியும். இப்போது அவர் செய்துவரும் நல் வினைகள் சில வருடங்கள் கழித்தோ அல்லது அடுத்து அமையும் பிறவிகளிலோ நல்ல நிலையைத் தரும். இதில் சந்தேகமே வேண்டாம். பொறுமை மற்றும் தெய்வத்தின் மீது சலனமில்லாத பக்தி மிக முக்கியம்.

வேறொருவர், முற்பிறவியில் செய்த நல்ல பலன்களினால் இப்போது நல்லபடியாக வாழலாம். அவர் கடவுளை வழிபடாதவராக இருப்பினும் முன்வினை நற்பலன் களை அனுபவிப்பார். அவற்றின் பலன் முடிந்தபிறகு உரிய தண்டனைகளுக்கு ஆளாவார். இதில் மாற்றம் இல்லை. நம் புராணங்களில் எவ்வளவோ எடுத்துக்காட்டுகள் உள்ளன. எனவே, கடவுளை இடைவிடாது வழிபட்டு வருதல் முக்கியம். தன்னலமற்ற அன்புதான் பக்தி. எனவே, நாம் சொல்லும் சுகம் - துக்கம் என்பவையெல்லாம் நம் பார்வையைப் பொறுத்தவையே.

கேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா ?

? ராமாயணத்தில் சுந்தரகாண்டம் மட்டும் சிறப்பாகச் சொல்லப்படுகிறதே... சுந்தர காண்டத்துக்கு அப்படியென்ன தனிச்சிறப்பு?

- பி.சந்தானகிருஷ்ணன், சென்னை 116

எல்லாம்வல்ல உலக அன்னையைத் தேட, ஶ்ரீராமசந்திர மூர்த்தியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு சொல்லின் செல்வன் ஶ்ரீஆஞ்சநேயர் இலங்கைக்குச் சென்றுவரும் பகுதியைக் கொண்டதால் சுந்தரகாண்டத் துக்குச் சிறப்பு. நமது மதத்தில் அனைத்து தெய்வங்களும் தங்களின் அருளை அளிப்பது பெண் தெய்வத்தின் வழியில்தான். அவ்வகையில், சிரஞ்ஜீவியான ஹனுமனுக்கு அருளும் பகுதியாக சுந்தரகாண்டம் விளங்குகிறது. சுந்தர காண்டம் பாராயணம் செய்வது மேலான பலன்களைக் கைமேல் தரும் என்பது அனுபவ உண்மை.

`நாம் யார்' என்றுதானே அனைவரும் தேடிக்கொண்டிருக்கிறோம்!

இவ்வுலகில் பல இன்னல்களால் சூழப்பட்டிருந்தாலும், ஒருவன் விமானத்தில் பறக்கும்போது அவன் கீழே பூமியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட மாட்டான் அல்லவா! அதுபோல, சுந்தரகாண்டம் பாராயணம் செய்யும் அன்பர்களை, அனுமன் தன் குருபக்தியின் மூலம் பூமியின் பிரச்னை கள் பாதிக்காதவண்ணம்... வானில் பறப்பது போல் மிக பத்திரமாக வழிநடத்துவார். இது சத்தியம்.

ராமாயணம் எங்கெல்லாம் படிக்கப் படுகிறதோ, அங்கெல்லாம் ஶ்ரீஆஞ்சநேயர் எழுந்தருளி அவரும் ராமாயணக் கதையைக் கேட்டுக்கொண்டிருப்பார். இதை அனுபூதி மான்கள் அறிவார்கள். சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்ய, பல வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அவரவர் தங்களுக்கு ஏற்றவாறு துதித்து பயன் பெறலாம்.

கேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா ?

?.மறுபிறவி தத்துவம் நம் மதத்தில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. மறுபிறவி என்பது உண்மையா?

- எஸ்.சிவகுமார், சென்னை-100

மறுபிறவி என்பது நிச்சயமாக உள்ளது. பல பிறவிகள் பிறந்த பிறகே மிக அரிதான இந்த மனிதப் பிறவியை அடைந்துள்ளோம் என்று மாணிக்கவாசகர் கூறுகிறார். இறை அருளாளர்கள் கூறினார்கள் எனில், அதை நாம் ஏற்றுக்கொள்ளுதல் அவசியம். வேதங்களிலும் `கர்மவினைகளைப் போக்கிக் கொள்வதற்காகவே இந்தச் சரீரமானது ஆத்மாவுக்கு அமைகிறது' என்று தெளிவுபட கூறப்பட்டுள்ளது. சிறு வயதிலேயே பெரிய காரியங்களைச் சாதித்துக் காட்டும் பல நல்ல உள்ளங்களை இன்றும் நாம் காண்கிறோம். மறுபிறவி என்பதை நாம் ஏற்று உணர்ந்தால்தான் இப்படியான பல அபூர்வ நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்.

கேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா ?

? இறைவனின் படைப்பில் அனைத்தும் சமம் என்கிறோம். ஆனாலும் பூஜைகளில் சிலவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்?

- எம்.குமரேசன், செய்யாறு

பூஜை முறைகள் என்பவை, அந்த இறைவன் மனிதர்கள் தன்னை அடைவதற்குக் கூறிய வழிகள். `ப்ரீயந்தே ஸர்வ கர்மாணி...', `ஜாயதே ந்ஜானம் ஆத்மனி...' இவற்றின் முதல் இரண்டு எழுத்துகளே `பூஜா' என்று போற்றப்படுகின்றன. அதையே தமிழில் நாம் பூஜை என்று கூறுகிறோம். பூக்களை வைத்து செய்வது பூஜை என்று சிலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். பூஜை என்பது, தனி மனிதன் ஒழுக்கத்துடனிருந்து கடவுளை எப்படி வழிபடுவது என்று விளக்கும் பாடம்; அதன் மூலம் நமக்கும் இறைவனுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் உன்னத கிரியை ஆகும்.

ஒருவர் ஒருமுறை பூஜையைச் சரியாக செய்துவிட்டால்... அந்த அனுபவத்தால் வாய்க்கும் ஆனந்தத்தின் காரணமாக அவரால் அதன்பிறகு பூஜை செய்யாமல் இருக்க முடியாது. இவற்றில் மந்திரங்கள், பாவனை, திரவியங்கள் என்று ஒவ்வொரு கடவுளின் ரூபத்துக்கும் ஏற்ப வேறு வேறு வழிமுறைகளை நம்முடைய ஆகமங்கள் தெரிவிக்கின்றன. எப்படி அனைத்து நதிகளும் கடலை நோக்கிச் செல்கின்றனவோ, அப்படியே அனைத்து வழிபாடுகளும் இறைவனையே சென்றடைகின்றன.

எனினும் ஒவ்வொரு காரியத்துக்கேற்ப உரிய திருவடிவங்களை எடுத்து அருளும் கடவுளை, அந்த வடிவத்துக்கேற்ப உரிய முறையில் வழிபடுவது அவசியம். அதுவே முழுப்பலனை அளிக்கும். ஒரே உடம்பாக இருப்பினும் ஒவ்வோர் அங்கத்துக்கும் உரிய குணம் வேறுபடுவதுபோல, ஒரே பரம்பொருள் பல வடிவங்களில் அருளும்போது, பல வகை யான வழிபாட்டு முறைகளை ஏற்றுக்கொள்கிறார்.

எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு எதுவுமே தேவையில்லை. ஆனால், நாம் அவரை உணர்வதற்கும், பயன் பெறுவதற்கும் விதிக்கப் பட்ட நடைமுறைகளைக் கடைப்பிடித்தல் அவசியம். ஆகமங்களில் கூறப்பட்டதை அப்படியே விதியாக ஏற்றுக்கொண்டு வழிபட்டு பயன் அடைதலையே நம் முன்னோர்கள் காண்பித்து இருக்கிறார்கள்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஶ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002